திரைப்பட பாடலாசிரியர், ஆன்மிக பாடல்களை இயற்றிய பூவை செங்குட்டுவனுக்கு அஞ்சலி

 திரைப்பட பாடலாசிரியர், ஆன்மிக பாடல்களை இயற்றிய பூவை செங்குட்டுவனுக்கு அஞ்சலி


காங்கேயத்திற்கு அதிகாலையில் தனியார் பேருந்தைப் பிடித்து சென்றுகொண்டிருந்தேன். எப்போதும் துள்ளிசை பாடல்களைப் போடும் ஓட்டுநர், அன்று பொழுது விடியவில்லை என்று நினைத்தாரோ என்னவோ, பாடல்கள் ஆன்மிகத்தில் முழுகியிருந்தன. ஷண்முகா ஷண்முகா என புஷ்பவனம் குப்புசாமி குழுவினர் பாடிக்கொண்டிருந்தனர். அடுத்து பாடியவரும், முருகன் பாடலையே பாடினார். அப்போது என் மனதில் பல்வேறு எண்ணங்கள் அலையடித்துக் கொண்டிருந்தன. ஒருவரிடம் உதவி கோரிப்பெற சென்று கொண்டிருந்தேன். அங்கு உதவி கிடைக்கலாம். கிடைக்காமல் போகலாம். இரண்டாவதற்கே அதிக வாய்ப்புகள் உண்டு. 


மனக்கலக்கமடைந்த நேரத்தில், திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்ற பாடல் தொடங்கியது. அப்பாடலைக் கேட்க கேட்க மனதிலுள்ள கலக்க எண்ணங்கள் குறைந்தது. அந்தப் பாடலின் வரிகளைக் கவனிக்க தொடங்கினான். முருகனுக்கு எண்ணற்ற மனக்கோயில்கள் உண்டு, அதில் அன்புக்கோ பஞ்சமில்லை என பெண் குரல் பாடியது. நிதானமாக குரலை உயர்த்தாமல் பாடியவிதம்தான் முக்கியமானது. 

அந்தப் பாடலை எழுதியவர் இதை எப்படியான மனநிலையில் எழுதியிருப்பார். அவரும் மனதில் பல்வேறு குறைகளை மறைத்துக்கொண்டு இறைவனின் அருளை வேண்டி பாடலை எழுதியிருப்பாரோ என்று நினைத்தேன். 


பிறகு, அந்த வேலை இரண்டாவது வகையில்தான் முடிந்தது. பத்தில் ஒன்பது காரிய சித்தி அடைவதில்லை. பத்தாவதையும் நிறைவடைய பெரும் போராட்டத்தை செய்ய வேண்டியிருக்கிறது. அதனால்தான், அந்த காரியம் சுமாராக முடிகிறது. எனவே, இந்த கோட்பாடு அடிப்படையில் பெரிய வேறுபாடு இன்றி காரியம் தோல்வியுற்றது. உடனே அந்த நகரத்தை விட்டு அரசு பேருந்து பிடித்து வெளியேறினேன். காங்கேயத்திறகு வந்தால் ஊருக்கு செல்லும் பேருந்து ஐந்து நிமிட வேறுபாட்டில் புறப்பட்டு சென்றிருந்தது. அடுத்து வந்த தனியார் பேருந்து பள்ளி மாணவர்களின் கூட்டத்தால் நிறைந்துவிட்டது. நாளைய இந்திய தூண்களான மாணவர்கள், சக வகுப்பு மாணவிகள் மீது காகிதத்தை சுருட்டி எறிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். முதல்நாள் ஆன்மிக சாகரகத்தில் மூழ்கடித்த ஓட்டுநர், இன்று வட இந்தியாவுக்கு ஆதரவாக மாறி, வடமொழி காதல் பாடலொன்றை ஓட விட்டிருந்தார். எப்படியோ அந்த சூழலில் இருந்து விடுவித்துக்கொண்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டபிறகே மனதில் நிம்மதி பரவியது. 


வீட்டுக்கு வந்து விகடனைப் பிரித்து படித்த பிறகுதான் தெரிந்தது. அன்று காங்கேயத்திற்கு சென்றபோது, கேட்ட முருகன் பாடல் பூவை செங்குட்டுவன் என்பவர் எழுதியது என்று. வார இதழில் அஞ்சலியை கவிஞர் அறிவுமதி எழுதியிருந்தார். அவருடைய வாழ்க்கையை மேடேற்றியவர் பூவை செங்குட்டுவன் என்று நெகிழ்ச்சியாக விளக்கியிருந்தார்.  இக்கவிஞர், சிவகங்கையில் பிறந்தவர். ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள், தனி ஆன்மிகப் பாடல்களை எழுதியிருக்கிறார். நாடகம், திரைப்படங்களுக்கான கதை, திரைக்கதைகளை எழுதிக் கொடுத்திருக்கிறார் என்று விக்கிப்பீடியா தகவல் சொல்கிறது. விகடனில் இக்கட்டுரையை எழுதியவர், வெ.நீலகண்டன் என்ற செய்தியாளர். இப்போது அந்த இதழின் நிர்வாக ஆசிரியர். மகிழ்ச்சி. பூவை செங்குட்டுவன் பற்றிய செய்தி வேறு எந்த வார இதழ்களிலும் வரவில்லை. அதற்கு காரணம், அவர் ஆணாக பிறந்து தொலைத்ததே காரணமாக இருக்கலாம். 


இணையத்தில் திருப்பரங்குன்றத்தில் என்ற பாடலை எழுதியது கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் என்று இருவரையும் குறிப்பிடுகிறார்கள். விகடனில் பாடலை எழுதியவர் என பூவை செங்குட்டுவன் ஒருவரையே குறிப்பிடுகிறார்கள். சரி, விகடன் கூறுவதையே எடுத்துக்கொள்ளலாம். 

அந்த ஆன்மிகப்பாடலில் பெரிய மிகையுணர்ச்சி ஏதும் இல்லை. பாடுபவரும் குரலை பெரிதாக மேலே உயர்த்தாமல் பாடுகிறார். சூலமங்கலம் ராஜலட்சுமி, பி சுசீலா என இரு பாடகிகள் பாடியுள்ளனர். பாடல் இடம்பெற்ற திரைப்படம் கந்தன் கருணை. இப்பாடலை கேவி மகாதேவன் இசையமைத்து இருக்கிறார். மனதில் அமைதியை ஏற்படுத்துவதில் இசைக்கும் முக்கியப் பங்குண்டு. வரிகள் எளிமையானவை. அமைதியின்றி அலையும் மனதை அமைதியாக்கும் திறன் பெற்றவையாக இசையும், பாடல் வரிகளும் உள்ளன. வானொலியில் பாடல்களை ஒலிபரப்பும்போது, யாரும் பாடலாசிரியர் பெயர், இசையமைப்பாளர் பெயர், பாடியவர்களைப் பற்றிய குறிப்புகளை கூறுவதில்லை. பிறருக்கு அதை தெரிந்துகொள்ள உரிமை இல்லையென நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. மனித மனங்கள் என்றுமே வினோதமானது. வாய்ப்பு கிடைத்தால் பூவை செங்குட்டுவன் ஆன்மிக பாடல்களைக் கேட்கலாம். அவரின் கவித்திறனை அடையாளம் காண முயலலாம்.  


குறிப்பு -  இளமை புதுமை முதன்மை என இயங்கும் வார பத்திரிகையில் கூட முருகனைப் பற்றிய தொடர் ஒன்றை தொடங்கவிருக்கிறார்கள். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!