தமிழ் முருகன் என்பவன் யார்?
தமிழ் முருகன்
கவிஞர் அறிவுமதி
தர்மலிங்கம் அறக்கட்டளை பதிப்பகம்
இந்த நூலுக்கான விமர்சனத்தை வெளியிடும்போது அநேகமாக ஒரு வார இதழில் அதன் ஆசிரியர் முருகன் தொடரை சில வாரங்கள் எழுதியிருப்பார் என நினைக்கிறேன். பதிலுக்கு போட்டியாக இன்னொரு வார இதழின் ஆசிரியர் கருப்பண்ணசாமியின் வரலாற்றை எழுதியிருப்பார்.. போட்டி மக்களுக்கு ஏதாவதொரு வகையில் நல்ல விஷயத்தைக் கொண்டு வரக்கூடும். இதெல்லாம் ஒருவித நம்பிக்கை அவ்வளவுதான்.
அறிவுமதி, நூலில் ஓரிடத்தில் தமிழ் முருகன் தொடரில் கூறும் விஷயத்தை தனிப்பட்ட சாதி, மதம் சார்ந்து பயன்படுத்தவேண்டாம் என்று கூறுகிறார். ஆனால், அப்படி பயன்படுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது.
நூலைப் பார்ப்போம். நூலில், முருகன் என்பது முருகன் என்பது மட்டுமே, அவன் போர்வீரன், அரசாண்ட மன்னன் என்று கூறப்படுகிறது. இதற்கான இடைச்செருகலையும் விளக்குகிறது. சிவன், பார்வதியின் பிள்ளை கந்தன் என்ற புனைகதைகளை நூல் ஏற்கவில்லை. முருகன் வேறு, கந்தன் வேறு என்று நூலாசிரியர் தெளிவாக கூறுகிறார். தமிழ் இனத்தின் அடையாளமாக ஒற்றை கடவுளாக முருகனை கூறுவதோடு, அர்த்தமற்ற நெல் தூவுதல் தமிழர் சடங்குகளோ, மரியாதை செலுத்தும் மரபோ அல்லவே என்று கூறுகிறார். இறந்தாருக்கு மரியாதை என்பது நடுகல் வைப்பது மட்டுமே.
பொதுவாக சமூகத்தில் புழங்கும் மூடநம்பிக்கைகளை கேள்விகளாக கேட்டு அதற்கு பதில் கூறுவது போலவே நூல் எழுதப்பட்டுள்ளது. எனவே, கவிஞர் எழுதியிருக்கிறார். கவிதை வடிவில் நூல் இருக்கும் என யாரும் ஏமாறவேண்டாம். கவிதையை எதிர்பார்க்கவும் கூட வேண்டாம். நூலினுள் சங்க கால பாடல்கள் நிறைய இருக்கின்றன. அவற்றைப் படித்து இன்புறலாம்.
தமிழ் இனத்தின் அடையாளமான ழ என்ற எழுத்தை முருகனின் வேலில் இணைத்து இருப்பது முக்கியமான அடையாளம். இன்று மதவாத கலவர கட்சி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்க சில தெய்வங்களை பிடித்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தேடிப்பார்த்ததில் கிடைத்தது முருகன் மட்டுமே. அதை வைத்து கோவில்களை மீண்டும் சாமியார் மடங்களின் கீழ் கொண்டு வந்து சொத்துக்களை கொள்ளையடிக்க முயற்சி செய்து வருகிறார்கள். இதை பகிரங்கமாகவும் அரசியல் மற்றும் ஊடக பிழைப்புவாதிகள் பேசி வருகிறார்கள்.
அழகுத்தமிழையும் முருகனையும் இணைக்கும் இடம்தான் நூலில் சிறப்பாக நினைக்கிறேன். ஓரிடத்தில் ஆள்பவர்கள்தான் ஆண்டவர்களாக இருக்க முடியும் என எளிதாக நூலாசிரியர் சொல்லிவிடுகிறார். சரிதானே? யோசித்துப் பார்த்தால் அப்படி வழிபடக்கூடியவர்கள் பலரும் உண்டே? அப்படியான வரலாற்றில் வாழ்ந்து மறைந்த போர்வீரன், மன்னன் முருகன். அனைத்து கோயில்களிலும் வடமொழியாக்கம் நடைபெற்று வருகையில் தமிழ் இன அடையாளம் கூர்மையடைவது அவற்றை மீட்கவும், தமிழ் மொழி இலக்கியங்களை மீண்டும் வாசிக்கவும் திருத்தங்கள் செய்யவும் கூட உதவலாம்.
வடக்கு நாட்டில் உள்ள நிறுவனங்கள் வடமொழியில் பெயர்களை, அடையாளங்களை வைத்துக்கொள்வது போல திராவிட நாடான தமிழ்நாட்டில் ழ என்ற எழுத்து தனி அடையாளமாக மாறினாலும் தவறு கிடையாது. சுயமரியாதை, தன்மானத்தை இழந்து வயிற்று சோற்றுக்கு மண்டியிடாதவரை தமிழ்நாடு தன்னுடைய தனித்துவ அடையாளங்களை பேணமுடியும். எதிர்காலம் எப்படியிருக்குமோ யார் கண்டது?
-கோமாளிமேடை குழு
#முருகன் #தமிழ் #கடவுள் #பார்ப்பனர் #போர்வீரன் #கட்டுக்கதை #வடமொழி #அறிவுமதி #நூல் விமர்சனம் #தமிழ் இனம் #அறுபடை வீடுகள் #வரகு #குமரி #மேலாதிக்கம் #சைவம் #வைணவம் #நாட்டார் தெய்வங்கள் #மதவாதம்
#tamizh murugan #tamil #riot #communalism #violence #hindu #tribe #language #book review #tamilnadu #hegimony #brahmin #lie #dravida nadu #kaala
கருத்துகள்
கருத்துரையிடுக