சர்வதேசியவாதி நூலில் இருந்து
நேரு கூறிய கருத்துகளில் முக்கியமானவை...
நாம், ஒன்றை அழிப்பதை விட உருவாக்குவதில் பெரிது்ம் கவனம் செலுத்தவேண்டும் என நினைக்கிறேன்.
இந்தியாவில் எதிர்காலத்தில் மதரீதியான வன்முறைகள் நடக்காமல் இருப்பது முக்கியம். இப்படி நடைபெற்றால் நான் மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன்.
மத ரீதியான வன்முறைகளுக்கு எப்போதும் மக்கள் பேச்சு அல்லது வேறு வகையில் வாய்ப்பளித்துவிடக் கூடாது.
ஹைதராபாத் மக்கள் அவர்கள் இந்துக்களாக முஸ்லீம்களாக எப்படி இருந்தாலும் அவர்களை பிற கிரகத்தைச் சேர்ந்தவர்களாக கருதமாட்டோம். அவர்களை நமது நாட்டு மக்களாகவே கலாசார தொன்மை கொண்ட இந்தியாவின் மக்களாகவே கருதுவோம்.
காஷ்மீர் மாநில மக்கள் அங்கீகாரமற்ற அத்துமீறல்களால் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். கடுமையான வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றி, அவர்களுக்கு சுதந்திரம் அளிப்பது நமது கடமை என்பதை மறந்துவிடக்கூடாது.
உலகில் நடைபெறும் போர்களில் ஒரு நாடு நடுநிலையாக இருப்பது கடினம். வெளியுறவு விவகாரங்கள் தெரிந்த யாருக்குமே இந்த விஷயம் தெரிந்து இருக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஆசிய நாடுகள் அனைத்தும் சுதந்திரம் பெற்றவையாகவும், அமைதியை விரும்பும்படியாகவும் இருக்கவேண்டுமென விரும்புகிறது.
ஒருவர் வாழ்க்கையின் எதார்த்தங்களை நேரடியாக எதிர்கொள்ளாமல் எப்படி கருத்தியல் கொள்கைகளை பின்பற்றிக்கொண்டே செயல்படமுடியும்?
ஒரு நாடு சோசலிசம், முடியாட்சி, கம்யூனிசம் என பின்பற்றப்படும் தத்துவம் எதுவாக இருந்தாலும், அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நாட்டுக்கான நலன்களைக் கருதியே செயல்படவேண்டும்.
நாட்டின் திட்டங்களின் அடிப்படை, அமைதி என்பதாகவே இருக்கவேண்டும். போர் ஒன்று ஏற்பட்டால் அனைவரும் அதனால் பாதிக்கப்படுவார்கள். எனவே, நீண்டகால நோக்கத்திலும் கூட்டுறவு, ஒற்றுமை, பிற நாடுகளின் மீது நம்பிக்கை ஆகிய வெளியுறவு கொள்கைகளில் அமைந்திருக்க வேண்டும்.
இன்று பல்வேறு நாளிதழ்களில் வரும் செய்திகள் பலவும் பொய்களை அடிப்படையாக கொண்டே எழுதப்படுகின்றன. இப்படித்தான் இந்தியாவில் ஊடகங்களின் இதழியல் வளருமா என்றும் தெரியவில்லை.
சரியான முடிவை, நாம் எடுக்கும்போது அதைத்தொடரும் மாற்றங்களும் சரியாகவும் முறையாகவும் அமையும்.
இந்தியாவிற்கான நீண்ட காலசேவையில் நான் பல்வேறு தவறுகளை, பிழைகளை செய்திருக்கலாம். ஆனால் எப்போதும் இந்தியாவின் பெருமைக்கும் சுயமரியாதைக்கும் அதன் மக்களுக்கும் எதிரான காரியங்களை செய்ததில்லை.
இந்தியாவின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் பேணுமாறு நமது தேசத்தந்தை காந்தி கூறியுள்ளார். பிற நாடுகளுடன் அமைதியைப் பேணி அவர்களை நண்பர்களாக்கிக்கொள்ள அவர் வலியுறுத்தினார்.
இன்று உலகில் பல்வேறு பெரும் பிரச்னைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றின் பின்னணி உளவியல் சார்ந்த பயம், பிற நாடுகளின் மீதான பயம்தான் காரணம்.
வந்தே மாதரம் பாடல், சுதந்திரப் போராட்டத்தையும் அதற்கு மக்கள் செய்த போராட்டங்களையும் தியாகங்களையும் குறிக்கிறதுதான். ஆனால் ஜனகணமன போல இசைக்குப் பொருத்தமாக அமையவில்லை.
தேசிய கீதத்திற்கு பாடல் வரிகளை விட இசையே முக்கியம் என்று எண்ணுகிறேன்.
நான் நவீன அறிவியலில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அறிவியலின் பக்தனாக இங்கு கூறிக்கொள்வதெல்லாம் கற்றலை எந்த வகையில் பெற்றாலும் அதன் அடிப்படை வலுவாக இருக்கவேண்டும்
இந்தியாவின் கடந்தகால வரலாற்றில் நிறைந்த தொன்மை கலாசாரமும், பெருமையும் எங்கே போய்விட்டன? இன்று இந்தியர்களின் மனதில் வெறுப்பும் கோபமும்தான் நிறைந்துள்ளன.
நம்மை விட்டு வெளிச்சம் சென்றுவிட்டது என நினைக்கத் தோன்றும் நிலைமைதான் உள்ளது.இந்தியாவில் உள்ள குறுகிய மனப்பான்மை, சகிப்பின்மை, உணர்ச்சியின்மை என்பது எனக்கு பயமூட்டுகிறது.
இந்தியாவை, குறிப்பிட்ட மதம் சார்ந்த நாடாக மாற்ற நினைக்கிறார்கள். இதன் காரணமாக, கலாசாரமும் பிற அம்சங்களும் கூட குறுகிய நோக்கத்துடனே அமையக்கூடும்.
இந்தியாவின் நீண்டகால வரலாற்றை கவனித்தால், அதில் தேசத்திற்கு உழைத்த முன்னோடிகள் தங்களது மனத்தை பல்வேறு கருத்துகளுக்காக திறந்து வைத்து உலகோடு உரையாடியதை அறியலாம். ஆனால், அதற்குப் பிறகான காலங்களில் குறுகிய மனப்பான்மை அதிகரித்து விட்டதால் நாட்டில் பல்வேறு மோசமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆக்கப்பூர்வமான, அழிவை ஏற்படுத்தக்கூடிய என இருவகை சக்திகள் உலகம் முழுக்க உள்ளன. இதில் நாம் எந்தப்பக்கம் நிற்பது என்பதைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
இந்தியா எந்த மாதிரியான கனவுகளுக்காக உழைக்கவேண்டும்? எந்த மாதிரியான உலகம் இதற்கு தேவைப்படும் என்பதை யோசிக்கவேண்டும். வன்முறை, மதவாதம், பிராந்தியவாதம், வன்முறை, பயம், வேதனை என்பது நாட்டின் எதிர்காலம் ஆகிவிடுமா?
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஜனநாயகம், சகிப்புத்தன்மை, சாகசத்தன்மை நிரம்பிய சிந்தனைகள், வளர்ச்சிக்கான சிந்தனைகள் ஆகியவற்றை பெறுவதற்கான முனைப்பை பெற்றிருக்கவேண்டும். அப்போதுதான் நாடு சிறந்த முறையில் வளர்ச்சி பெறமுடியும்.
மதவாதம், பிரிவினைவாதம், தனிமைப்படுத்துதல், தீண்டாமை ஆகியவை களையப்பட்டு இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ, சீக்கிய என அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் ஒன்றுபோலவே மதிக்கப்படுவார்கள். இந்த வகையில் நாம் அனைத்து மக்களும் இணைந்து வாழும் பாதுகாப்பான நாட்டை உருவாக்க முடியும்.
நமது நாட்டின் வரலாற்றையும், தலைவர்களையும் மறந்துவிட்டு தவறான திசையில் பயணிப்பவர்களை மீட்கும் வேலை உள்ளது. நாம் அனைவரும் இப்பணியை கையில் எடுத்து இந்தியாவை காப்பாற்றத் தயாராகுவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக