மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைப் பயணம்!
சென்னைப் பயணம் - மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு...
மாணவர் நாளிதழில் வேலை செய்து அதைவிட்டு விலகிய பிறகு, நேர்காணல் ஒன்றுக்கு ஒருமுறை சென்னைக்கு சென்றதோடு சரி. அதற்குப்பிறகு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஒருமுறை, பாத்திரங்களை எடுக்கச் சென்றபோது மெட்ரோ ரயில் காரணமாக மயிலாப்பூர் குதறப்பட்டிருந்தது. அப்போது, பேருந்துகள் எங்கே சென்று எங்கே திரும்புகின்றன, எது பேருந்து நிறுத்தம் என்றே தெரியவில்லை. அப்படியான நிலையில்தான் மயிலாப்பூர் அன்றைக்கு இருந்தது.அன்று அறையில் உள்ள அத்தனை பாத்திரங்களையும் முழுக்க எடுக்கமுடியவில்லை. பாதி பாத்திரங்களை அய்யங்கார் எங்கே உள்ளது என மறந்துவிட்டார். பிறகு, நாங்கள் ஊருக்கு வந்தபிறகு பாத்திரங்கள் தன்னுடைய அறையில்தான் உள்ளன என்று பொறுப்போடு தெரிவித்தார். அந்த முறை பயணத்தில் அம்மாவும் உடன் பயணித்தார். இருவருக்கும் சேர்த்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகியது. ஓரியண்ட் ஃபேனை எல்லாம் ஒருவழியாக சரக்கு கட்டணம் கொடுத்து கொண்டு வந்துவிட்டோம். ஆனால் சென்னையில் மிச்சமுள்ள பாத்திரங்களை போய் எடுத்துவா என்று அம்மா, சொல்லிக்கொண்டே இருந்தார். அவருக்கு சில பாத்திரங்கள் பிடித்திருந்தன. அவற்றை உறுதியாக தான் பெற்றே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வார இதழின் ஆசிரியர் ஒருவரின் உதவியால் மீண்டும் சென்னையில் தற்காலிக வேலை ஒன்று கிடைத்தது. அதைச் செய்வதற்கு சென்றேன். சென்னையில், இப்போதும் மெட்ரோ ரயில் வேலைகள் முழுவதுமாக முடிக்கப்படவில்லை. வடபழனி முருகன் கோவில் பேருந்து நிறுத்தம் சற்று தள்ளி மாறியிருந்தது. நான் ஏறப்போகும்போதுதான் 12பி பேருந்து முன்னே வேகமாக சென்றது.அடுத்து வந்த பேருந்தில் எப்படியோ ஏறிவிட்டேன். நடத்துநரிடம் விசாரித்ததில், மசூதி பேருந்து நிறுத்தம் என்பதே இல்லாமல் ஆகி இருந்தது. சாலிகிராமத்தில் இருந்து பட்டினப்பாக்கம் செல்லும் 12பி பேருந்தில் ஏறினால், சூரணம் இட்டிருந்த நடத்துநர் நீ சென்னைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு, பஸ்சு வள்ளுவர் சிலைல நிக்கும் அங்கிருந்து நடந்து போயிரு என்றார். அங்கிருந்து வள்ளுவர் சிலைக்கு ரூ.9 டிக்கெட். பேருந்து எங்கெங்கோ வளைந்து ஒடிந்து சென்றது. இளையராஜா ஸ்டூடியோ அருகே இடது பக்கம் சென்று பிறகு மேம்பாலம் ஏறியது. மேலேயிருந்து பார்த்தால் மின்சார வாரிய பொருட்கள் தெரியும். இம்முறை மெட்ரோ ரயில் நீல தகடுகள் மட்டுமே தெரிந்தன. தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் - கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தைக் கடந்து எஸ்ஐடி நிறுத்தம் வந்தது. இந்தமுறை பாரதிதாசன் சாலையில் இருந்த நூலகம் இல்லை என நினைக்கிறேன். அங்கும் நீலத்தகடுகள்தான் கண்ணுக்கு தெரிந்தன. பிறகு, ஆழ்வார்பேட்டை. அங்கும் ஆஞ்சநேயர் கோவில் நிறுத்தம் அருகே சாலை தடுக்கப்பட்டிருந்தது. எனக்கு வள்ளுவர் சிலை நிறுத்தத்தில் இறங்கி மயிலாப்பூர் செல்வது தூரமாக தெரிந்தது. எனவே, உதி நினைவு நிழலில் இறங்கிக்கொண்டேன்.
சூரணம் போட்டிருந்த நடத்துநர், நான் இறங்கியபோது, மயிலாப்பூருக்கு ரைட்ல போ என்று சொல்லி வழிகாட்டினார். அங்கே இருந்து நடைதான். 220 ரூபாய்க்கு கொடுமுடி பாயிடம் வாங்கிய வாக்கரூதான் சென்னையில் அதிகம் பயன்பட்டது. ஈக்காட்டுத்தாங்கலில் வேலைக்காக வந்திருந்ததால், விடுதியில் இருந்து எழுந்து அதிகாலையில் சாலையில் இறங்கி கேகே நகருக்கு அப்படியே நடந்தேன். ஒரு கி.மீ. தூரம் நடந்திருப்பேன். ஒரு கட்டத்தில் கால்கள் விண்ணென தெரித்தன. இனி திரும்ப தங்கும் அறைக்கு செல்லவேண்டுமே? அதிகாலையில் நடப்பது நன்றாக இருந்தது. கே கே நகரில் முன்பே தங்கியிருந்து நடந்த அனுபவங்கள் நினைவுகளாக எழுந்தன. வாரம்தோறும் ஞாயிறு அன்று இட்லி சாப்பிட்டுவிட்டு,நூலகத்திற்கு சென்று வார, மாத இதழ்களை வாசிப்பேன். பிறகு, வரும்போது பழக்கடைகளுக்கு சென்று பழங்களை வாங்கி வருவது வழக்கம். எல்லாம் பழைய கதை அல்லவா? இப்போது மயிலை கதைக்கு செல்வோம்.
மயிலையில் உதி நினைவு நிழல் குடையில் இருந்து இறங்கி சாலையைக் கடந்து வலது பக்கம் சென்றால் ராஜபிளவைக்கு வைத்தியம் செய்யும் சித்த வைத்தியர் வீடு, மருத்துவமனை இருக்கும். அதற்கு எதிராக மளிகைக் கடையொன்று இருக்கும். அப்படியே நேராக நடந்து சென்றால்,அமிர்தாஞ்சன் நிறுவனத்தை எதிரில் பார்க்கலாம். நாகேஸ்வர ராவ் பூங்கா அருகில் இருந்த சாலையில் 29சி பேருந்து வந்து திரும்பியது. அங்கே சாலையில் மீண்டும் நீலத்தகடுகள். முழுக்க லஸ் கார்னர் என்ற பேருந்து நிறுத்தமே குதறப்பட்டிருந்தது. வேறு வழியில்லை. எப்போதும் மக்கள் கூட்டமாக தென்படும் லஸ் கார்னரை இப்போது இப்படியான நிலையில் பார்ப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. எப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, கோயம்பேடு, மார்க்கெட்டிற்கு செல்லவென மக்கள் கூட்டம் எப்போதுமே நிற்கும். இப்போது அங்கே வட இந்திய பணியாளர்கள்தான் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
கபாலீசுவரர் கோவிலுக்கு செல்லும் வழியில் சற்று தொலைவு நடந்து அப்படியே இடதுபுறம் திரும்பினால் கச்சேரி சாலைக்கு செல்வதற்கான வழி கிடைக்கும். அங்கே சென்றால் கச்சேரி ரோட்டில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் டீக்கடையில் டீயே போடுபவர் தாவோ தியானத்தில் இருந்தார். அவர் யாரையும் கவனிக்கவில்லை. முகம் அப்படியே ஆனந்தத்தில் திளைத்திருந்தது. சமூகநீதி பத்திரிகை நிறுவனம் முதலில் எதிர்ப்பட்டது. அம்பேத்கர் பாலம் எப்போதும் போலவே அழுக்காக இருந்தது. அப்படியே சென்று இடதுபக்கம் திரும்பினால்,நீளும் தெருக்களில் சேரி மக்கள் இருப்பார்கள். அவர்களைக் கடந்து சென்றால் நேராக நீளும் சாலை நேராக சாத்தூர் காபி பார் அருகே கூட்டிச்செல்லும். அங்கு சென்றபோது பார்த்தால், சாத்தூர் காபி பார் அண்ணன் பரபரப்பாக டீ போட்டுக்கொண்டிருந்தார். அவரது மகன், அப்போதுதான் வீட்டில் சுட்ட பலகாரங்களை பாத்திரத்தி்ல் கொண்டு வந்தார். நான் அங்கு நின்றால் கோயம்பேடு செல்வதற்கு நேரமாகிவிடும் என வேகமாக சென்றேன். மீண்டும் இடதுபுறத்தில் திரும்பினால், மாட்டு கொட்டகை வரும். கன்றுக்கு பாலே கொடுக்காமல் அதை கொன்று விடாமல் பாலை கறந்து விற்பதுதான் அங்குள்ள கொட்டகைக்காரரின் வணிகம்.இதை ஈடுகட்ட கோவில் ஒன்று திருப்பத்தில் உள்ளது. அந்த திருப்பத்தைக் கடந்தால் ருசி உணவகத்தின் அருகே முன்னர் தங்கியிருந்த வாடகை வீடு வரும்.அந்த வீடு எப்போதும் போல அப்படியே இருந்தது. கதவை திறந்து ஏறினால், படிகள் குறுகல் என்பதால் எப்போதும் போல தடுமாற்றவே இருந்தது.கட்டிடம் முழுவதையும் கட்டி முடித்து மிச்சமிருந்த சிமெண்டில் செட்டியார் கட்டிய வீடு போல.கொத்தனார் தன் அனுபவங்களையெல்லாம் மொத்தமாக இறக்கி கட்டியிருக்கிறார். எனது கால்கள் இரண்டுமே படிகளில் பொருந்தவில்லை.முன்காலை உந்தித்தான் நடக்க வேண்டியிருந்தது.
பழைய அறை நண்பர் பாயில் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அவருக்கு காது சற்று மந்தம். அதை அவசரத்தில் மறந்துவிட்டு கதவை தட்டினேன். குளித்துவிட்டு அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார். ஏழு மணிக்கு பெரிய காரியத்திற்கு செல்வதாக கூறியிருந்தார். எப்படியோ, ஆறே காலுக்கு மயிலை சென்றுவிட்டேன். பாத்திரங்களை எடுத்து வைத்தார். சரவணா ஸ்டோர் பை, அப்படியே கிழிந்து வந்தது.பாத்திரங்கள் சிலவற்றை எடுத்து எனது பேக்கில் வைத்துக்கொண்டு மீதியை பையில் வைத்தேன். பழைய பேக் ஒன்றைக் கேட்டேன். அதை எடுத்துக் கொடுக்கும்போதே, எனக்கு கல்யாணமாகிவிட்டதா என நண்பர் விசாரித்துவிட்டார். பிறகு வேலையைப் பற்றி கேட்டார். போனமுறை வந்தபோது, இவர்தான் பாத்திரங்களை கொடுக்க மறந்து அலைச்சலுக்கு காரணமானவர். ஆனால், இன்றோ முகத்தில் புத்தர் ஞானமடைந்தது போல அப்படியொரு பிரகாசம்.
கோயம்பேட்டிற்கு பேருந்து கேட்டதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன அதே பதிலைக் கூறினார்.கோயம்பேடுன்னா பட்டினப்பாக்கம் போயிரு என்றார். எனக்கும் வேறு வழியில்லை. நண்பருக்கு நன்றி சொல்லிவிட்டு படிக்கட்டில் ஒரு எட்டு எடுத்து வைத்தேன். கால் வழுக்கியது.சமாளித்துக்கொண்டு இறங்கினேன். அப்படியே கச்சேரி ரோட்டில் நடந்தால், முன்னர் வேலை செய்த சூப்பர் மார்க்கெட் திறந்திருந்தது. அப்படியே நடந்தால் கிறித்தவ பள்ளி அருகே, பள்ளி மாணவிகள் நின்று சிரித்துக்கொண்டிருந்தனர். அந்த மகிழ்ச்சியைத்தானே இன்று இழந்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டேன். தேவாலயம் பெரிதாக இருந்தது. காமராஜர் சாலையை நடைபாதை என வரைந்திருந்த இடத்தில் கடந்தேன். இடதுபக்கம் சென்று அப்படியே நடந்து சென்றேன். பட்டினப்பாக்கம் போகும் வழியில் 12பி, 12எக்ஸ் என இரு பேருந்துகள் கடந்து சென்றன. கூட்டமாக இருந்தால் பாத்திரங்களை வைத்துக்கொண்டு அலைய முடியாது. எனவே, பஸ் டிப்போ போய் பார்த்துக்கொள்ளலாம் என அப்படியே நடந்தேன். காலையில் விடுதி அறையில் நீர் தவிர வேறு ஏதும் குடிக்கவில்லை. ஆனால், அன்றைக்கு ஏனோ களைப்பு ஆகவில்லை.
பட்டினப்பாக்கம் டிப்போ, விலாசமான இடத்தில் அமைந்திருந்தது. 12பி ஒன்று, 12எக்ஸ் இரண்டு பேருந்துகள் நின்றன. எது முதலில் எடுக்கப்படும் என்று தெரியவில்லை. பிறகு எப்படியோ, 12எக்ஸில் போய் ஏற முயன்றேன். ஓட்டுநர் இறுதியாக குலுக்கல் சீட்டை எடுப்பது போல வண்டியை எடுத்தனர். அதற்குள் இருவர் வந்து ஏறினர். கோயம்பேட்டிற்கு பதிமூன்று ரூபாய் காசு வாங்கினார் நடத்துநர். முக்கியச் சாலையில் சென்றபிறகு ஓடிச்சென்று கடையில் போண்டா வாங்கி வந்து ஓட்டுநருக்கு ஒன்று கொடுத்துவிட்டு வந்து தானும் ஒன்றை பிய்த்து ரசித்து தின்று வந்தார். நெற்றியில் சூர்ணம் போட்ட நடத்துநர் கூறியது போலவே சாந்தோம் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் நின்றால் போதும், கோயம்பேடு பேருந்து ஏறிவிடலாம் என உறுதிப்படுத்திக்கொண்டேன். ஏனோ, அன்று பெரிய கூட்டம் இல்லை. பேருந்து, காமராஜர் சாலையில் பயணித்து சிட்டி சென்டர் உள்ள சாலையில் பயணித்து மௌபரிஸ் சாலையில் திரும்பி ஆஞ்சநேயர் கோவில் வந்து எல்டாம்ஸ் ரோடு சென்றது.கோயம்பேட்டில் பெரும் கூட்டம் நின்றது.
---------------------------------
கிளாம்பாக்கம் சென்றுதான் சேலத்திற்குப் பேருந்து பிடிக்கவேண்டும். நானோ இன்னும் கோயம்பேட்டை விட்டே கிளம்பவில்லை. கோயம்பேட்டில் வரும் பேருந்துகள் மின் வாகனங்கள்தான் அதிகம். அதுவும் பார்த்தாலே சொகுசு பேருந்துகளாக இருந்தன. இறுதியாக, எழுபது சி என்ற பேருந்தில் ஏறினேன். அதில் பெண்களுக்கு இலவசம், எனவே, போகப்போக கூட்டம் முண்டியடித்து ஏறியது. அதில் பெரும்பாலான ஆட்கள் கேகே நகரில் இறங்கிவிட்டனர். பேருந்து நேராக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போவதல்ல. சின்மயா நகர் சென்று விருகம்பாக்கம், நெசப்பாக்கம் சென்று கிளாம்பாக்கம் செல்வது. நடத்துநர் அனைத்து பேருந்து நிறுத்தங்களையும் முன்னமே சொல்லி பயணிகளை இறக்கி விட்டார். பயணிகளை சிறப்பாக கையாண்ட நடத்துநர் இவர் ஒருவரே. கிளாம்பாக்கத்திற்கு வரும்போது ஒரு நடத்துநரை கண்டேன். அவர் எழுபது வி பேருந்தில் வேலை செய்தார். மனிதன் காசு வாங்கிப் போடுவது தவிர எதையும் சொல்லவில்லை. கலைமகள் நகர் பஸ் ஸ்டாப் வந்தால் சொல்லுங்கள் என்று சொன்னேன்.ஆனால், அவரோ எனக்கு மட்டுமல்ல யாருக்குமே எந்த இடம் வருகிறது முன்னே வாருங்கள் என்று சொல்லவில்லை. அப்படியே கள்ளமௌனத்தை கடைபிடித்தார். இவரைப் போலவே சேலத்தில் ஒரு நடத்துநர், அரசு பேருந்தில் ஏறக்கூடாது, பொறுமையாக இரு என மிரட்டினார். தனியார் பேருந்தில் ஏறவேண்டும் என சொல்லாமல் சொன்னார். இவர்கள் இருவருமே தங்களுடைய பணியை நேர்மையாக செய்யாத ஆட்கள்.
எழுபது சி நடத்துநர், ஆளுமை மிக்கவர்தான். ஆனால், இருபது ரூபாய் கொடுத்து பத்தொன்பது ரூபாய் டிக்கெட் கொடுத்தவர் ஒரு ரூபாயைக் கொடுக்கவே இல்லை. மிகச்சரியாக செலக்டிவ் அம்னீசியா தாக்கிவிட்டது. என் அருகில் இருந்த போதை ஆசாமிக்கும் ஒரு ரூபாய் தரவேண்டும். அதை, நடத்துநர் தரவில்லை. இவரும் கேட்கவில்லை. கேகே நகரில் இறங்கிவிட்டார். நடத்துநர் எப்படியெல்லாம் காசு சம்பாதிக்கிறார் என யோசித்தேன். இவரைப் போலவே தனியார் பேருந்தில் வேலை பார்த்துவிட்டு அரசு நடத்துநர் பணிக்கு வந்தவர் ஒருவரும் ஈரோட்டில் ஒரு ரூபாயைக் கொடுக்கவில்லை. பிறகு கேட்டால், முகத்தை சுளித்தபடி ஒரு ரூபாயைக் கொடுத்தார். நாம் கொடுக்க வேண்டிய ஒரு ரூபாயைக் கூட நடத்துநர்கள் விட்டுக்கொடுத்ததில்லை. என்னுடைய பணத்தை இப்படி விட்டுக்கொடுத்தால் அதுவே ஒரு பெரிய தொகையாக வந்துவிடும்போல....
எழுபது சி நடத்துநரை ஒரு ரூபாய் கேட்டு வாங்கிக்கொண்டுதான் இறங்கி, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்குள் நுழைந்தேன். அதற்குள் தவெக தற்குறி ஒருவன் அருகில் பிரமாண்ட உருவத்தில் உட்கார்ந்திருந்தான்.அவன், திடீரென தணிவான குரலில் இருபது ரூபாய் இருக்குமா என்றான். இல்லீங்க என்றேன். எனக்கு நெஞ்சு வலிக்குது, ஆஸ்பத்திரிக்கு வேணும் இருபது ரூபா கொடுங்க என மீண்டும் நச்சரித்தான். நான் இல்லை என்று உறுதியாக கூறியதும் என் சீட்டிற்கு பின்னே உள்ளவர்களிடம் இருபது ரூபாய் பிச்சை எடுக்க தொடங்கினான்.அவன் என் அருகில் உட்கார்ந்தது முதல் தவெக தலைவர் பற்றிய கானா பாடலை சத்தமாக வைத்துக் கேட்டுக்கொண்டிருந்தான். சிலர் இரைச்சலை கேட்டு திரும்பி பார்த்தாலும் அவனுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. இவனைப் போலவே சத்தமாக போனை வைத்து பாட்டு கேட்கும் மூன்று பேரை இப்பயணத்தில் சந்தித்தேன். போனை ஆஃப் பண்ணு என என் உள்ளுக்குள் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஒலி மாசுபாடு அல்லவா? அதெப்படி பேருந்துக்கு வரும்போது மட்டும் ஹெட்போனை, இயர்போனை மறந்துவிடுகிறார்கள். இவனைப் போலவே ஒருவன் 12 ஜி பேருந்தில் ஏழு மணி நடையில் நூலகம் அருகே ஏறி, டிக்கெட் காசுக்கு பிச்சை எடுப்பான்.
கிளாம்பாக்கத்தில் சேலம், ஈரோடு செல்வதற்கு உரிய நடைமேடை எண் 6. கலைஞர் பேருந்து நிலையம் நன்றாக அழகாக வடிவமைத்து கட்டப்பட்டிருந்தது. தகவல்பலகை வழிகாட்டுதல்கள் சிறப்பாக இருந்தது. கவனமாக இருந்தால், நிறைய விஷயங்களை யாருடைய உதவியுமின்றி நீங்களாக புரிந்துகொண்டு பேருந்துகளை நோக்கி சென்றுவிடலாம். ஒன்று முதல் ஐந்து வரையிலான நடைமேடைகள் தனியாக வழி அமைத்து செல்லும்படி அமைக்கப்பட்டிருந்தன. ஆறு ஏறு ஆகிய நடைமேடை தனி வழி. சேலம் பேருந்தில் எப்படியோ ஏறியாயிற்று. பேருந்து எப்போது சேலத்திற்கு சென்று சேரும் என்பதை விட விழுப்புரத்திற்கு சென்று செல்லும் என்பதுதான் பெரும் பயமாக இருந்தது. அங்குதான் பயணிகளை அச்சுறுத்தம் திருநங்கை பிச்சைக்காரர்கள், குழந்தைக்கு டீ வாங்கிக் கொடுத்து ஊட்டச்சத்து வழங்கும் பாசிமணி விற்கும் பிச்சைக்கார தாய்மார்கள் அதிகம்.சென்னைக்கு வரும்போது உளுந்தூர் பேட்டையில் திருநங்கைகள் பிச்சை கேட்க பேருந்து ஏறினார்கள். திரும்ப போகும்போது விழுப்புரத்தில் அதுபோன்று ஏதாவது நடக்கும் என எதி்ர்பார்த்தேன்.
பதிலுக்கு, அந்த பாத்திரத்தை முழுக்க பாசி ஊசிமணி பிச்சைக்கார தாய்மார்கள் எடுத்துக்கொண்டனர். பேருந்தின் சன்னலை நீக்கி வைத்தால் முடிந்தது. அங்கு வந்து நின்று பிள்ளைக்கு பசி, டீ க்கு காசு கொடு, அதை வாங்கிக்கொடுத்து பிள்ளையைக் காப்பாற்றுகிறேன் என புலம்புவார்கள். விழுப்புரம் என்று பெயர்ப்பலகை பார்த்த உடனே சன்னலை மூடி வைத்துவிட்டேன். நடத்துநர், லேகியம் விற்பவனைப் போல ஸ்பீக்கர் ஒன்றில் பேசி பதிவு செய்த ஒலிக்கோப்பை ரிபீட்டில் போட்டுவிட்டு ரிலாக்சாக போக்குவரத்து அதிகாரியோடு உரையாடப் போய்விட்டார். கள்ளக்குறிச்சி,ஆத்தூர், சேலம் என அவரது குரல் பீதியூட்டும் வகையில் பலமுறை ஒலித்தது. ஏறத்தாழ இருபது நிமிடங்கள் பேருந்தில் பிச்சைக்காரர்களின் எரிச்சலான அத்துமீறல்களை பார்த்தும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டியிருந்தது. விழுப்புரம் பேருந்து நிலையத்தில் ஒரே உருப்படியான விஷயம், அங்குள்ள அலங்கார வாயில் வளைவு மட்டும்தான். அது மட்டும்தான் புதிதாக தெரிந்தது. மீதியெல்லாம் மாடு, மாட்டுச்சாணி, கன்றுக்குட்டி, அழுக்கு, சிறுநீர், திருநங்கைகள், கைதட்டி பிச்சை கேட்கும் திருநங்கைகள், பேருந்து நிறுத்தும் இடங்களில் உடைந்த கான்க்ரீட் இடிபாடுகள் இருந்தன. போக்குவரத்து அதிகாரி அருகே ஒருவர் தன் பெண் குழந்தையைக் கூட்டிக்கொண்டு பயணிகள் நடக்கும் இடத்தில் பைக்கை ஓட்டிச்சென்றார். அவருக்கு பின்னால் கன்றுகுட்டி ஒன்று நடந்து வந்தது.அரசு போக்குவரத்து நேரக்காப்பாளர், நடத்துநர்களோடு பேசி சிரித்துக்கொண்டிருந்தார். தெய்வீக சிரிப்பு.... அவர் சிரிப்பைப் பார்த்தால் நீங்களே இதை ஒத்துக்கொள்வீர்கள்.
விழுப்புரத்தில் அழகாக தெரிவது கலைஞர் திருமண மண்டம்தான். ஏசி வசதி உண்டு. பார்க்க பிரம்மாண்டமாக இருக்கிறது. மேற்படி, விழுப்புரத்தில் சேலம் செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வராமல் சாலையில் நின்றுவிட்டு சென்றால் நமது உடல்நலம், மனநலம் பாதிக்கப்படாமல் காக்கலாம். நடத்துநருக்கு, அந்த நடையில் எப்படியும் முப்பது பேரை ஏற்றினால்தான் கிளம்புவேன் என அப்படியே ஏற்றியபிறகே விழுப்புரத்தை விட்டு கிளம்ப விசில் அடித்தார். மொத்தம் அரைமணிநேரம் அங்கு, அதற்கு முன்பு சோறு தின்ன அரைமணிநேரம். அடுத்து சென்ற இடம், கள்ளக்குறித்து அங்கு கால்மணிநேரத்தை வீணாக்கினார்கள்.
வடை, சமோசா, அன்னாசி விற்பவர்களுக்கு வணிக வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் உள்நாட்டு முயற்சி. யாரும் அதை குறை சொல்ல முடியாது. நாட்டின் பிரதமரே தோற்கும் இடத்தில் நடத்துநர் வெல்கிறார் என்றால் அது சாதாரணமா? நடத்துநர் அதிமுக காரரா என்று தெரியவில்லை. பேருந்து பயணம் நெடுக, திமுக தலைவர் கலைஞர், பெரியார் ஆகியோரை எந்தளவுக்கு இகழ்ச்சியாக பேச முடியுமோ அந்தளவு பேசி சிரித்துக்கொண்டே வந்தார். பெரியார் இரண்டாவது மணம் புரிந்த விவகாரத்தைப் பற்றி பேசும்போது அவர் முகம் அப்படியொரு பிரகாசமாக இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு பேருந்துக்கு ஆள் திரட்டிய அவரது காட்டுக்கத்தல் வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது. ச்சீ என தலையை உலுக்கிக் கொண்டேன். நடத்துநருடன் அரசியல் பேசியவர், தாடி இன்னும் கொஞ்சம் வளர்ந்தால் அவரது தொப்புளுக்கு வந்துவிடும். தலைமுடிக்கு கர்ச்சீப் கட்டியிருந்தார். டீசர்டும் பேண்டும் அணிந்திருந்தார். கள்ளக்குறிச்சியில் கடைசி சீட்டில் அமர்ந்துதான் வாங்கிய சோற்றை வேகமாக அள்ளித் தின்றார். ஐந்தரை அல்லது ஆறரை என்று நேரம் சொன்னார். ஒன்பது மணிக்கு எடுத்த பேருந்து நிதானமாக சென்று மாலையில் சேலத்திற்கு செல்கிறது. இதில் வேறு, பயணிகளுக்காக ஒரு நிறுத்தத்தில் நிற்கவில்லை என்ற நடத்துநர் பெருமை பீற்றினார்.
சேலம் வந்தபிறகு, அங்குள்ள இலவச கழிவறைக்கு சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தேன். கையில் பாத்திரப்பை இருந்ததால் அதுவேறு செல்லும் இடமெல்லாம் டங் டங் என ரோபாட் ஒலியை எழுப்பி வந்தது. சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் அங்கு இருந்த பேருந்துகளின் எண்ணிக்கையை விட அதிகமாக தனிநபர்களின் பைக்குகள் உண்டு. பேருந்து நிலையத்திற்குள் இவர்கள் வேறு எஃப்1 பந்தயம் போல சீறியபடி பாய்ந்துகொண்டிருந்தனர். விட்டால் பைக்கை விட்டு நம்மை இடித்து அங்கேயே சிறுநீரை கழிக்க வைத்துவிடுவார்கள் போல. அம்புட்டு வேகம் சல்லிப் பயல்களுக்கு...
அரசு பேருந்தில் ஏறலாம் என்றால் ஒரு வாசல் படியில் ஓட்டுநரும், இன்னொன்றில் நடத்துநரும் நின்றுகொண்டிருந்தனர். அருகில் இருந்த தனியார் பேருந்துகளில் பயணிகள் ஏறி இருக்கைகளை நிரப்பிக் கொண்டிருந்தனர். நான் அந்த பேருந்துகளில் ஏறவிரும்பவில்லை. அதில் சரக்குகளை நிறைய ஏற்றுவார்கள். கால்களை கீழே வைக்க முடியாது. தொந்தரவாக இருக்கும். நடத்துநர்களும் ஒழுங்காக காசு வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுக்கவும் மாட்டார்கள். ஓட்டுநர், பந்தயத்தில் ஓட்டுவது போல பேருந்தை ஓட்டுவார். தாமதமாக ஈரோடு சென்றால் பந்தயத்தொகையை கட்டுவார்கள் என்பதுபோலவே வண்டி ஓட்டுவது இருக்கும். குடலே வாய்க்கு வந்துவிடும். எனவே, அரசு பேருந்துக்கு சென்றுவிடலாம் என ஏறச்சென்றேன். ஐந்து நிமிஷம் கழிச்சு ஏறிக்கலாம் இருங்க என நடத்துநர் தடுத்தார். என்னடா இது தனியார் போலவே அரசு பேருந்துகளும் மாறிவிட்டன என்று தோன்றியது.அதில்தான், முன்னமே வந்தாலும் கரூர் செல்பவர்கள் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தபிறகு நீங்கள் பணிவாக இடம் கிடைத்தால் உட்காரலாம். இல்லையென்றால் பரவாயில்லை நின்று கொண்டே வரலாம். அதெல்லாம் உங்களுக்கு கிடைக்கிற பாக்கியத்தைப் பொறுத்தது.
வேறு ஏதாவது பேருந்து ஏறலாம் என்று பார்த்தேன். பிறகு, நடத்துநர் உள்ளே சென்ற பிறகு சரி நாமும் உள்ளே போகலாம் என்று ஏறி உட்கார்ந்தேன். சார், கொஞ்சம் வெயிட் பண்ண முடியாதா, தனியார் பஸ்சுக்காரன் பார்த்தா என்னையில்ல சத்தம் போடுவான் என்றார். சார், இது அரசாங்க பஸ்தானே? நீங்க சொல்றது புரியுது. நீங்க எங்க பஸ்சுல ஏறோணும்தான் நினைக்கிறோம். ஆனால், தனியார் ஆட்களை ஏத்தும்போது நாங்க ஏத்துக்கூடாது என்று சொல்லிவிட்டு இறங்கிப் போய்விட்டார். எனக்கோ, பாத்திரப்பையை எவ்வளவு நேரம் வைத்துக்கொண்டு நிற்பது என்று இருந்தது. தனியார் பேருந்து மாஃபியா பற்றி எனக்கென்ன? அவர்கள்தான் ஒழிக்கப்படவேண்டியவர்கள். எங்கள் ஊரில் ஈரோடு செல்ல இருபத்து நான்கு ரூபாய் இருந்த டிக்கெட் விலையை சில்லறை கொடுக்க முடியவில்லை என இருபத்தைந்து ரூபாய் என ஒரு ரூபாயை ஏற்றினார்கள். விலையை இருபது ரூபாயை ரவுண்டாக மாற்றினால் சில்லறைக்கு இன்னும் எளிதாக இருக்குமே? இருபத்தைந்து இன்னும் சிறிது நாட்களில் முப்பதாக மாறும். சில்லறை கொடுக்க இன்னும் எளிதாக்கவேண்டுமே? யாருக்காக இதை செய்கிறோம. மக்களுக்காகத்தானே?
நான் ஈரோடு வரும்வரை அந்த நடத்துநரிடம் ஏதும் பேசவில்லை. அவரைப் பார்க்க கூட விரும்பவில்லை. பேருந்தில் முதல் டிக்கெட் எடுத்தது நான்தான். பிறகு, ஈரோடு வரும்போது மணி ஏழு இருபத்தைந்து ஆகும் என மற்றொரு பயணியிடம் சொன்னார். ஆனால், ஏழு முப்பதைந்து ஆகிவிட்டது. டவுன் பஸ் அருகே உள்ள ஆவினில் ஒரு பாலை வாங்கிக் குடிக்க நினைத்தேன். அதற்குள் அம்மா, தீயணைப்பு துறை அருகே வந்துவிட்டார். நூறுகிராம் பால்கோவா வாங்கிக்கொண்டு வந்து நேரக்காப்பாளர் அருகே நின்றுகொண்டேன்.15 பி மீண்டும் பேருந்து மாற்றி இருக்கைகள் உட்கார கடினமாக இருந்தது. அதில் அம்மா, சன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்தார். அவரிடம் சென்று பாத்திரப்பையை ஒப்படைத்தபிறகே நிம்மதி. இங்கும் ஊருக்கு செல்ல பத்தொன்பது ரூபாய் டிக்கெட். ஒரு ரூபாயை நடத்துநர் துரதிர்ஷ்டவசமாக மறந்துவிட்டார். பிறகு அவரை அழைத்து கேட்டபோது பக்கத்து இருக்கையைச் சேர்ந்த கட்டிட பாதுகாவலர் முகம் சுளித்தார். பரவாயில்லை ஒரு ரூபாய் எனக்குத் தேவை. ஒரு ரூபாயை கேட்டதும் நடத்துநர் முகம் மாறியது. பிறகு முன்னே போக முயன்றவர், சட்டென தோள்பையைத் திறந்து காசை எடுத்து கொடுத்துவிட்டு நகர்ந்தார்.
பேருந்து பயணத்தில் பெண்களுக்கான இடத்தில் அமர்ந்துவிட்டு ரகளை செய்தவர் கெட்ட வார்த்தை பேசிக்கொண்டு இருந்தார். அவரை ஒருவழியாக பேருந்து ஓட்டுநர், பேருந்தை நிறுத்திவிட்டு வந்து சண்டை போட்டு சோலார் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டார். அப்போதும் அவர் சமாதானம் ஆகாமல், தாயோளி என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். ஓட்டுநருக்கு ஏற்கெனவே பெண்களின் இருக்கையில் அமர்ந்து அவர்களை சீண்டியதில், காவல்நிலையத்திற்கு சென்று அவமரியாதையை எதிர்கொண்டிருந்தார். அதையும் பேச்சில் வெளிப்படையாக கூறினார். நீலச்சட்டை போட்ட அனுபவசாலி, வயதான காலத்தில் எதற்காக கண்ட நாய்களுக்காக அவமானத்தை சுமக்க வேண்டும்? தனியார் பேருந்தில் வேலை செய்த நடத்துநர், அரண்டுபோய் எதுவும் பேசாமல் நின்றார். ஓட்டுநர் நன்றாக ஆறடி இருப்பா்ர். அவர் வந்து பேசியபிறகுதான், பயணிகளும் அந்த நீலச்சட்டை ஆணுக்கு எதிராக பேசினார்கள்.
ஒருவழியாக ஒன்பது நாற்பதுக்கு வீடு வந்து சேர்ந்துவிட்டோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக