பலரின் பிரச்னைகளை தீர்த்து வலிமையாக்கும் மர்ம புத்தக கடைக்காரர்!
ஐயம் நாட் எ டிமான் காட் லேக்கி
மாங்கா காமிக்ஸ்
ஹரிமாங்கா
இந்த கதையில், நாயகன் பூமியில் இருந்து மற்றொரு உலகிற்கு வந்தவன். அவனுக்கு ஆதரவாக இங்கி என்ற கருப்பு நிற சக்தி ஆதரவாக உள்ளது. ஆஸ் மார்க்கெட் என்ற நிறுவனம் நடத்தும் புத்தக கடையில் பொறுப்பாளராக இருக்கிறான். அவனைப் பொறுத்தவரையில் அக்கடையில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் சாதாரணமானவை. போட்டித்தேர்வு, இலக்கிய நூல்கள், கட்டுரைகள் என்றுதான் இருக்கின்றன. ஆனால், யாராவது பிரச்னை என்று வரும்போது அவர்களின் பிரச்னைகளுக்கு ஏற்றபடி நூல்களும் மாறுகின்றன. அதை, புத்தகடையில் உள்ள பொறுப்பாளரான நாயகன் அறிவதில்லை.
அவர் முதலில் அதை அறியாமல் இருப்பது சரி. ஆனால், கதை நெடுக அவர் எங்கேயும் தனது நூல்களை வாங்கிப்படித்தவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படிப்பட்ட அதிகாரவெறி கொண்ட மக்கள் என உணருவதேயில்லை. அந்த இடத்தில்தான் கதை தொய்வடைகிறது. நாயகனைப் பொறுத்தவரை அவன் ஒரு சிறந்த விற்பனையாளன். அதேசமயம், அவன் நூல்களை விற்க செய்யும் முயற்சியாக, யாரேனும் மழைக்கு ஒதுங்கினால்கூட அவர்களுக்கு தலை துவட்ட துண்டு, தேநீரை வழங்குகிறான். அதுவும் கூட க்ரீன் டீ. முதல்முறை, எல்டி என்ற பெருநிறுவனரின் மகளுக்கு மழைக்கு ஒதுங்க இடம் கொடுக்கிறான். அப்போது, அவள் எதிரிகளை கொன்றுவிட்டு ரத்தம் வழிய வருகிறாள். நாயகன் அதுபற்றியெல்லாம் கவலையேபடுவதில்லை. அதுவே, எல்டி வாரிசுக்கு ஆச்சரியமாக உள்ளது.
வாரிசு காதல் தோல்வியால் துவண்டுபோய்விட்டால் அதனால் அவளுக்கு மனவலிமை தேவை என்று சொல்லி நூல் ஒன்றை கொடுக்கிறான். ஆனால் அந்த நூல், அவளுடைய தற்காப்புக் கலை ஆற்றலை அதிகரிக்கும் உறுதியான மனப்பான்மை என்ற புதிய சக்தியை அதிகரிக்கிறது. கூடுதலாக, அவளது உடலில் செலுத்தப்பட்ட விலங்கு ரத்தத்தின் பக்க விளைவுகளை குறைக்க உதவுகிறது.
இப்படி இன்னொருவர் வருகிறார். அவர் குரூரமான சடங்குகளை நடத்தக்கூடியவர். தன்னுடைய இரு மாணவர்களை இழந்துவிட்டு, சண்டையில் காயமுற்று தலைமறைவாக இருக்கிறார். புத்தக கடைக்கு வரும் அவரை நாயகன், ஊக்கமூட்டும் விதமாக பேசி தான் எழுதிய குரூர சடங்குகள் பற்றிய ஆராய்ச்சி நூலை வழங்குகிறான். ஆனால், அதை அந்த மனிதர் செய்து நிறைய விஷயங்களைக் கண்டுபிடிக்கிறார். தன்னையும் பலமடங்கு வலிமையாக்கிக் கொள்கிறார். நாயகனைப் பொறுத்தவரை நன்மை தீமை என கருப்பு வெள்ளையாக எதையும் யோசிப்பதில்லை. மனிதகுலத்திற்கு ஆதரவு, அதை அழிக்க நினைப்பவர்கள் என இருதரப்புமே நாயகன் முக்கியமானவர், அல்லது எதிரி என முடிவு செய்கிறார்கள். எல்ஃப் எனும் மரங்களை வணங்கும் பழங்குடி மக்களின் அரசனின் ஆன்ம ஆதரவும் கூட நாயகனுக்கு கிடைக்கிறது.
கதையில் நாயகன் என்பது வேறு யாருமல்ல. அவனை இந்த உலகிற்கு கொண்டு இங்கி எனும் முகம் காட்டாத ஒரு சக்திதான்.அதுதான் அங்கு வரும் அத்தனை பேரையும் உருட்டி மிரட்டி தனக்கேற்றபடி பயன்படுத்திக்கொள்கிறது. தேவையான வழிகாட்டுதல்களை நூல் மூலம் வழங்குகிறது. அந்த புத்தக கடைக்கு வந்தவர்கள் அனைவருமே வாழ்க்கையில் பெரும் நம்பிக்கை, ஊக்கத்தை கண்டுகொள்கிறார்கள். தாங்கள் என்ன செய்கிறார்களோ அதையேதான் பிறகும் செய்கிறார்கள். ஆனால் அதை புதிய நம்பிக்கையோடு செய்கிறார்கள்.
இந்தியாவை எப்படி அதானி அம்பானி ஆள்கிறார்களோ அப்படியேதான் அங்கும் இரண்டு வணிக நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஒன்று ஆஸ் மார்க்கெட் குழுமம், இன்னொன்று எல்டி குழுமம். கதையில் ஆஸ் மார்க்கெட் குழுமத்தின் உரிமையாளருக்கு பிடித்தமானவன்தான் நாயகன். அவர்களின் கடையில் உட்கார்ந்துகொண்டு அவன் பயன்படுத்தும் கப்புகள் எல்டி நிறுவனத்துடையவை. அதுவே குறியீடுதான். தினசரி மக்கள் வாங்கும் பொருட்களில் ஆதிக்கம் செலுத்துவது எல்டி ரிசோர்ஸ் நிறுவனம். அதிகார, செல்வாக்கு தொடர்பாக திரைமறைவு வேலைகளை செய்வது ஆஸ் மார்க்கெட் நிறுவனம்.
நாயகனைப் பொறுத்தவரை அவனுக்கு இதெல்லாம் தெரியாது. அவனுக்கு புத்தக கடைக்கு நூல்களை வாடகைக்கு வாங்க அல்லது விலைக்கு வாங்க வாடிக்கையாளர்கள் தேவை.அவ்வளவுதான். ஆனால், அவனது கடைக்கு வருபவர்கள் அனைவருமே வாழ்வில் பல்வேறு தேவைகளைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், யாரேனும் நாயகனை அச்சுறுத்த முயன்றால் அவர்கள் முழுமையாக நசுக்கப்பட்டு தரையோடு தரையாக அழுத்தப்படுகிறார்கள். குரூரமான மாந்தீரிகர் நாயகனுக்கு தீய சக்திகளை குறிப்பாக நாயகனை கொலை செய்ய முயலும் ஆட்களிலிருந்து பாதுகாக்க சிலை ஒன்றை வழங்குகிறார். அந்த சிலையில் ஆன்மா ஒன்று உள்ளது. அது, அக்கடைக்கு வரும் தீய ஆன்மாக்களை உணவாக கொள்கிறது. திருடர்களை முற்றாக கொன்றொழிக்கிறது. எல்ஃப் இனக்குழுவின் பாதிரி பெண் கொடுக்கும் சீட் ஆப் டிசையர் ரோஜா செடி வேறுவிதமானது.
அது மனிதர்களின் மனதில் உள்ள ஆசைகளை, பேராசைகளை வேட்டையாடுகிறது. ஒருமுறை அப்படி செய்துவிட்டால் பிறகு மனிதர்கள் உயிர் வாழவே முடியாது. ஆன்ம ஆற்றலை உறிஞ்சிவிடுகிறது. நாயகனுக்கு எப்போதும் போல அதைப்பற்றி ஏதும் தெரியாது. அவன் தன் மேசையில் உள்ளவற்றை வாடிக்கையாளர்கள் கொடுத்த மகத்தான அன்பளிப்பு என்றே நினைக்கிறான்.ஆனால், அவை அவனை பாதுகாக்க வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்டவை.
இக்கதை அந்த உலகின் பல்வேறு சமூக அடுக்குகளின் பிரச்னை, அதிகாரத்தை அடைய முயற்சிக்கும் ட்ரூத் சொசைட்டி, மிஸ்ட்ரி சர்வீஸ், எல்டி ரிசோர்ஸ் ஆகிய நிறுவனங்களின் அரசியல் பற்றியும் விளக்கமாக பேசுகிறது. மாய மாந்த்ரீக கதைதான். அதிலும் மனிதர்களின் உறவுகள், அதை இழக்கும்போது ஏற்படும் அவலம், வேதனை பற்றியும் விளக்கியுள்ளனர்.
நாயகன் தனது வாடிக்கையாளர்களின் பிரச்னைகளை மிகச்சரியாக தவறாக புரிந்துகொள்பவன். ஆனால், தீர்வு எப்படியோ சரியாக இருந்துவிடுகிறது. உளவியல் ரீதியாக பேசுவது, முக்கியமான எழுத்தாளர்களின் மேற்கோள்களை கூறுவது என நாயகனின் பாத்திரம் வெகுளியான அதேசமயம் உறுதியாக அறிவுத்திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நிலவை வணங்கும் இனக்குழு பற்றிய கதையும் கூட முக்கியமானது. புத்தக கடைக்கு வரும் பாதிரி, தன் வாழ்வில் எது உண்மை என தேடமுயன்று சூரியனின் ஆற்றலை பெறுகிறார். அதை பெற வைக்க அவருக்கு சூரிய கடவுள் பற்றிய நூலை புத்தக கடைக்காரரான நாயகன் கொடுக்கிறான். அவனுக்கு அந்த நூலைப் பற்றியெல்லாம் ஏதும் தெரியாது. நாயகனின் உதவியாளராக உள்ள இளம்பெண், நிலவு தேவதையின் அருளைப் பெற்றவள். கதையில் கனவு உலகம் என்பது முக்கியமான பகுதி. அங்குதான் நாயகன், எல்ஃப் தேவதையைப் பார்க்கிறான். அவளுடன் பேசி நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்கிறான். அவளுக்கும் ஒரு நூலை வாசிக்க கொடுக்கிறான். பதிலுக்கு எல்ஃப் இன அரசரின் வாள் பயிற்சியைக் கற்கிறான்.
நாயகன், தான் எப்படியான விஷயங்களின் மையமாக திகழ்கிறோம் என்பதை நூற்றுக்கும் மேலான அத்தியாயங்கள் சென்றபிறகும் உணர்வதேயில்லை. கதாசிரியர் நாயகன், தன்னைப் பற்றிய உண்மைகளை உணருவதை நெடுநேரம் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறார். அதுவே கதைக்கு பெரும் சோதனையாக அமைகிறது. ஒரே மாதிரியான தொடர்ந்த சம்பவங்கள் சலிப்பைத் தருகின்றன. காமிக்ஸை தொடக்கத்தில் படிக்கும்போது இருந்த ஆர்வம் பின்னர் மெல்ல படிப்படியாக குறைந்துவிடுகிறது. கதைக்கான ஓவியங்கள் அழகாக உள்ளன. இதில் வரும் விலங்குகள் பலவும் உங்கள் கற்பனையை விரிவாக்க உதவும்.
கோமாளிமேடை குழு

கருத்துகள்
கருத்துரையிடுக