சீனாவின் கல்வி சீர்திருத்தங்கள் - நாட்டுப்பற்றை அடிப்படையாக கொண்ட பாடத்திட்டம்!
நாட்டில் எந்த சீர்திருத்தங்கள் வந்தாலும் அதற்கு கலந்துரையாடல்கள், விவாதங்கள் அவசியம். பல்வேறு தரப்பு, கொள்கைகளை விவாதித்தால்தான் பல்வேறுவிதமான பார்வைகள் நமக்கு கிடைக்கும். அதுவே, நேர்மறை, எதிர்மறையான விஷயங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சி அதை புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் சீனாவில் கல்வி சீர்திருத்தங்கள் வேகம் பெற்றது தொண்ணூறுகளுக்கு பிறகுதான். சீனா போன்ற தொன்மை பெருமை கொண்ட நாட்டில், அதன் கடந்த காலமே சீர்திருத்தங்களுக்கு எதிராக மாறுவது புதிதான ஒன்றல்ல.
சீனாவில், 1990ஆம் ஆண்டு இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு கல்வி புத்துயிர்ப்பு செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2001ஆம் ஆண்டு, அடிப்படை கல்வித்திட்ட சீர்திருத்தம் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது.
2011ஆம் ஆண்டு சீனாவின் கல்வித் திட்டங்களில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன. காலப்போக்கில் மேம்பாடுகள் இருந்தன என்பது உண்மை என்றாலும் மத்திய அரசின் மேலாதிக்கம் கூடுதலாக இருந்தது. 2017ஆம் ஆண்டு அதிபர் ஷி ச்சின் பிங்கின் கருத்துகள் அடிப்படையில் நாட்டுப்பற்று தொடர்பான கருத்துகள், பாடங்கள் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இவை முழுக்க மாணவர்களை அரசியல் தன்மையில் மடைமாற்றின என்று கூறமுடியாது. அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தியலாக கொண்டு பாடத்திட்டம் உருவானது. அரசியல், மாணவர்களின் கல்வியில் பலவந்தமாக கொண்டு வரப்பட்டாலும் நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றம் பின்னடைவை சந்திக்கவில்லை.
சீனாவில் தொன்மை அறிவு இருக்கிறதென புகழப்பட்டாலும் தேர்வு முறை மட்டுமே கண்டுபிடிப்புகளை நடத்த உதவவில்லை. ஏனெனில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், நடைமுறையில் புதிய கண்டுபிடிப்புகளை செய்யவே இல்லை. கிழக்கும் மேற்குக்கும் உள்ள இடைவெளி வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிந்தது. இதை சீனத்திலுள்ள கல்வியாளர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கான கல்வி சீர்திருத்தம் 2001, 2011 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்டன. இதன் நோக்கமாக சுதந்திரம், புதுமைத்திறன், பிரச்னைகளை தீர்க்கும் திறன், பிறருடன் இணைந்து ஒத்திசைவாக கற்றல் ஆகியவை இருந்தன. சீன அரசும், பொதுவுடைமைக் கட்சியும் இணைந்து தொடக்கப்பள்ளி மாணவர்கள் சீனாவின் கலாசாரம், அதன் பெருமை, மார்க்சிய கருத்தியல் ஆகியவற்றுடன் கற்றுக்கொள்ளுமாறு பாடத்திட்டங்களை வகுத்தனர். உடல், உள்ளம், அற மதிப்பீடுகள் என பாடங்கள் அனைத்துமே இதே திசையில் உருவாக்கப்பட்டது.
நடைமுறை ரீதியாக, நாடெங்கும் அரசின் தேசிய தேர்வுமுறை புகழ்பெற்றிருந்தது. ஆனால், அரசு உருவாக்க நினைத்த புதிய சீர்திருத்தங்களுக்கு, தேர்வுமுறை பெரும் பின்னடைவாக, தடைக்கல்லாக இருந்தது. மாணவர்களின் பெற்றோருக்கு தேசிய தேர்வுமுறை மீது நம்பிக்கையின்மை உருவாகி வந்தது. காலத்திற்கேற்ப மாற்றங்களை கொண்டதாக தேர்வுமுறை இல்லை.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக அரசு உருவாக்கிய சீர்திருத்த கல்விமுறை, பாடத்திட்டங்கள் மேற்குலக கல்விமுறையை தழுவியதாக இருந்தது. பெரும்பாலும் குழந்தைகளை அடிப்படையாக கொண்டிருந்தது.
சீனாவில், வகுப்பறையில் பாடம் நடத்துவது என்பது ஆசிரியரை மையமாக கொண்டிருந்தது. ஆசிரியர் கேள்வி கேட்பார், பதில் தெரிந்தவர்கள் கைதூக்கி பதில் சொல்லலாம். இதுதான் நடைமுறை கல்விமுறை. வசதிகொண்டவர்கள், செழிப்பானவர்கள் தங்களுக்கு தேவையான கல்வியை தேர்ந்தெடுக்கும் போது அவர்கள் மேற்குலக நாடுகளைப் போன்ற கல்வியை தனியார் கல்வி நிறுவனங்களின் மூலம் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். இந்த வாய்ப்பு பொருளாதார வசதி இல்லாத அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை. மாணவர்களை மையப்படுத்திய கல்விமுறையில், தனித்தனி மாணவர்களுக்கும் கவனம் செலுத்தப்பட்டது. அனைவருக்கும் ஒரே விதமாக போதனை முறை பயன்படாது அல்லவா?
2000ஆம் ஆண்டில் தாவரவியல் பாடத்தில் சீர்திருத்த கல்விமுறையாக மாணவர்கள் நேரடியாக ஆறுகளுக்கு சென்று நீரை எடுத்து பரிசோதிப்பது, களத்தில் ஆய்வு செய்வது ஆகியவை சேர்க்கப்பட்டது. ஆனாலும் தேசிய தேர்வுமுறை பெரிதாக செல்வாக்கு குறையவில்லை. மாணவர்கள் எப்படி படித்தாலும் சரி, தேசிய தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது முக்கியமாக கருதப்பட்டது. மனப்பாடம் செய்வது, தேர்வு எழுதுவது என திரும்ப பழைய முறைக்கே மாணவர்கள் திரும்புமாறு நடைமுறை மாறவே மாறாமல் இருந்தது.
தேசிய தேர்வான காவோகாவோவில் சீனமொழி, கணிதம், ஆங்கிலம் கட்டாயம். மீதி மூன்று பாடங்களை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம். இப்படியான தேர்வுகள் வழங்கப்பட்டாலும் கூட தேர்வு தேர்ச்சி காரணமாக மாணவர்கள் மீது குவியும் நெருக்கடியும், அழுத்தமும் குறையவில்லை.
2017ஆம் ஆண்டு, சீன அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் தினசரி பாடவேளையில் ஒரு மணி நேரம் சமூக செயல்பாடுகளை செய்யவேண்டுமென வலியுறுத்தியது. இந்த செயல்பாடு வழியாக, மாணவர்கள் பிரச்னையை தீர்க்கும் திறன், சமூக பொறுப்புணர்வு, நடைமுறைரீதியாக பிரச்னைக்கு தீர்வறிவது, கண்டுபிடிப்புக்கான ஊக்கத்தை பெறுவார்கள் என அரசு கருதியது.
ஆனாலும் அரசு, பாடத்திட்டம் வழியாக வலிந்து நாட்டுப்பற்றை வளர்க்கத் தீட்டிய திட்டங்களை பொருத்தமானது என்று கூறமுடியாது. யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து சீன அரசு, மாணவர்களுக்கு அருங்காட்சியகங்களை இணைத்து பாடங்களை உருவாக்கியது. இதில், அருங்காட்சியகங்கள் மாணவர்களுக்கென கல்வித்துறையை உருவாக்கி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
சீனாவில் இயங்கிய அரசு பங்குச்சந்தை ஒழுங்குமுறைப்படுத்தும் நிறுவனம், நாடு முழுக்க இருபது பகுதிகளில் கல்வித்திட்டம் ஒன்றை உருவாக்கி பத்தாயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தது. இந்த திட்டம் நவீன காலத்திற்கு ஏற்றபடி முதலீடு, நிதி திட்டமிடல் தொடர்பான புரிதலை மாணவர்களுக்கு அளிக்கக்கூடியது. நவீன காலத்திற்கேற்ப பாடத்திட்டங்களை மேம்படுத்துவது முற்றிலும் இல்லை என்று கூற முடியாது.
அமெரிக்காவின் சிலிக்கன் வேலியில் மேக்கர் மூவ்மென்ட் என்ற திட்டம் உருவானது. இந்த திட்டம் புதிய நிறுவனங்களைத் தொடங்குவது, கோடிங்குகளை எழுதுவது தொடர்பானது. இதை சீனா கையில் எடுத்து, தனது பள்ளிகளில் செயல்படுத்தியது.
பள்ளிகளில் டிசைன் ஸ்டூடியோக்கள் அமைக்கப்பட்டு, புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவது, புரோகிராம்களை எழுதுவது ஆகியவற்றை மாணவர்கள் செய்ய ஊக்குவிக்கப்பட்டனர். இதற்கு ஆதரவாக இங்கிலாந்தின் விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகம் நிறுவனமும், சீனா மெர்ச்சன்ட்ஸ் குழுமம் என்ற அரசு நிறுவனமும் பின்னணியில் இருந்தன. இந்த திட்டம் சீனாவில் பொருட்களை தயாரித்தல் என்ற அரசின் கொள்கையாக பின்னர் மாற்றப்பட்டது. ஷென்சான் பகுதியிலுள்ள பள்ளி, பல்கலைக்கழகங்களோடு விக்டோரியா அருங்காட்சியகம் இணைந்து பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை செய்தது. மாணவர்களுக்கு பல்வேறு வகுப்புகளை நடத்தியது.
2011ஆம் ஆண்டு சீன அரசு, செய்த கல்வி சீர்த்திருத்தங்களிலேயே அதன் தொன்மையான கலிகிராபி, ஓபரா, இசை, நாட்டுப்புற பாடல்கள் மேல் கவனம் குவித்தது. கல்வித்தளத்தில் தொன்மை கலைகளை பரப்புவது அதன் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு பிரச்னை ஏற்படுத்துமா என நிறைய விமர்சனங்கள் கிளம்பின.

கருத்துகள்
கருத்துரையிடுக