உண்மையை கண்டறிந்து வாழ்வதே வாழ்க்கை!
எண்ணிப் பார்க்க வேண்டிய ஏராளமான விஷயங்கள்
ஜே கிருஷ்ணமூர்த்தி
இந்த நூலில் கேள்வி பதில் வடிவில் ஏராளமான விஷயங்களை ஜே கே பகிர்ந்திருக்கிறார். அனைத்துமே புதுமையான சிந்தனைகள்தான். அவர் எதையும் உடனே நம்பு என்று கூறவில்லை. யோசியுங்கள். விசாரணை செய்யுங்கள். நீங்களே உண்மையைக் கண்டுபிடியுங்கள் என்று கூறுகிறார்.
நூலில் அதிகம் பேசியுள்ளது கல்வி முறைகளைப் பற்றித்தான். அதற்கு காரணம், பெரும்பாலான கேள்விகளைக் கேட்டது அவர் நடத்திவரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள். இப்படியான கேள்விகளை அவர்கள் கேட்டிருப்பது ஆச்சரியம் தருகிறது. ஜே கே கல்வியை வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதாகவே பார்க்கிறார். தொழிலை பழகுவது, அதில் பணம் சம்பாதிப்பது, மணம் செய்துகொள்வது என்பதைப் பற்றி அவர் பெரிதாக கவலை கொள்ளவில்லை. அதைப்பற்றி அவர் விளக்கமாகவும் பேசவில்லை. காரணம், படித்து, மதிப்பெண் எடுத்து வேலையில் சேர்ந்தால் அடுத்து நடப்பது திருமணம்தான்.
வாழ்க்கையை விசாரணை செய்து அறிந்துகொண்டு வாழ்க்கையை நடத்தக்கூறுகிறார் ஜே கே. மற்றபடி அவர் குறிப்பிட்ட லட்சியம், நோக்கம், ஒழுங்கு என்பதில் ஆர்வம் காட்டவில்லை. இன்றைக்கு வார இதழ்களில் எழுதும் சாமியார்கள், வானொலிகளில் பேசும் பேச்சாளர்கள் ஆங்கில நூல்களை வாசித்துவிட்டு ஒழுங்கு, உடல்பயிற்சி என திட்டவட்டமான விஷயங்களைப் பேசுவார்கள். அதை ஜே கே தவிர்க்கிறார். பயத்தினால், கட்டாயத்தால் மனதில் எந்த மாற்றமும் வராது என்கிறார்.
கடவுளைப் பற்றி கோவிலுக்கு செல்வது பற்றி கூறும் கருத்துகள் நேர்மையானவை. மதவாத வன்முறை, வெறுப்பு பரவிவரும் காலத்தில் இப்படியான கருத்துகள் ஏற்கப்படுபவை அல்ல. இருந்தாலும் ஜேகே அவரது மனதில் தோன்றும் கருத்துகளை கூறுகிறார். கூறுவதற்கு உரிமை உண்டு, சுதந்திரம் உண்டு. பின்னாளில் பறிக்கப்படலாம் என்றால் கூட இப்போது அதைப் பற்றி பேசலாம். விவாதிக்கலாம்.
எளிமையான சொற்கள், வார்த்தைகளில் ஜேகே விளக்கம் கொடுப்பதை வாசிக்க நன்றாக இருக்கிறது. அவர் எதிலும் வடமொழி அல்லது வேறு மொழியில் உள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி விளக்கம் கொடுக்கவில்லை. குறிப்பாக ஓரிடத்தில் வேலைக்காரர்களின் பிள்ளைகள் புழுதியில் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அதைப்பற்றிய கேள்விக்கு அவர் சொல்லும் பதில், நாம் எந்தளவு சுற்றுச்சூழலை கவனிக்கிறோம் என்று விளக்குகிறது. அவர் சொல்லும் வரையில் அது நமக்கு எந்தளவு முக்கியம் என புரிவதேயில்லை என்பது, சொந்த நலனில் எந்தளவு மூழ்கிவிட்டோம் என்று எடுத்துக்காட்டுகிறது.
சோசலிசம், இடது, வலது என எந்த கொள்கையும் இல்லாமல் வாழ்க்கையை பார்க்கவேண்டும். முன்முடிவுகள் வேண்டாம் என கூறுகிறார். இதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்படுவது கடினமாக இருக்கலாம். உண்மையை வாழ்க்கையில் கண்டறிவதே முக்கியம். அதற்காக எந்தளவு சிரமத்தை எதிர்கொண்டாலும் வறுமை, இறப்பு கூட எதிரில் வந்தாலும் மனம் மாறக்கூடாது என்று ஓரிடத்தில் சொல்கிறார். மதம்,சடங்கு, கடவுள் நம்பிக்கை இதெல்லாம் உண்மையில்லை என உடைத்துப் பேசுகிறார். ஒரு கேள்வியில் மதச்சடங்குகளை மதிக்கவில்லையெனில் என் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறு என்கிறார்களே என்பதற்கு, உண்மையைத் தேடும்போது அப்படித்தான் நடக்கும். தனியாக நின்றால்தான் உண்மையை அறியமுடியும். உங்களுக்குள் உள்ள திறமைகள் வெளியே தெரியும். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் சமரசம் செய்துகொள்ளாதீர்கள். போராடுங்கள் என்கிறார். ஒரு மனிதன், தான் தேடும் உண்மைக்காக உலகத்தையே எதிர்த்தாலும் அது மதிப்பானதுதான் என்று கூறுகிறார். இப்படியான கருத்துகளை இன்றைக்கு கார்ப்பரேட் சாமியார்கள் கூட சொல்லத் தயங்குவார்கள். புரட்சிகரமான கிளர்ச்சி செய்யக்கூடிய புதிய உலகை உருவாக்கக்கூடிய ஒருவனை நூல் முழுக்க தேடிக்கொண்டே இருக்கிறார் ஜே கே.
நூலிலுள்ள நிறைய விஷயங்களை வாசித்தபிறகு, நூலின் தலைப்பை பற்றி சிந்தனை செய்யவேண்டியுள்ளது. உண்மைதான். எண்ணிப்பார்க்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உண்டுதானே?
ஜேகேவின் வசந்த இதழ்களை நீங்கள் வாசித்து வந்தால், நூலில் சொன்ன பல்வேறு கருத்துகளை முன்னமே வாசித்துவிட வாய்ப்புண்டு. இப்போது வசந்த இதழ் அச்சுவடிவில் வெளிவருவது நிறுத்தப்பட்டுவிட்டது. பதிலாக கணினியில் படிக்கும் விதமாக வெளியாகி வருகிறது.
கோமாளிமேடை குழு

கருத்துகள்
கருத்துரையிடுக