தொழிலாளர்களின் வேலை நீக்கத்தை எதிர்த்து போராடும் அப்பாவி மனிதவளத்துறை அதிகாரி!
ஜானி கீப் வாக்கிங்
சீன திரைப்படம்
யூட்யூப்
ஜானி, நட், போல்ட், ஸ்க்ரூ என தயாரிக்கும் பெரு நிறுவனத்தில் வேலை செய்கிறான். நிறுவனத்தில் சிறப்பாக வேலை செய்தாலும் அவனுக்கு செல்வாக்கான ஆட்கள் பின்புலம் இல்லாத காரணத்தால் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில்லை. கிராமத்தில் உள்ள தொழிலாளர்களிடையே அவனுக்கு நல்ல பெயருண்டு. ஜானி சீனியர் பிட்டர். எந்த வேலையாக இருந்தாலும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறான். அவன் மனைவி, கணவனுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கவில்லையென சண்டை போட்டு விவாகரத்து செய்துவிட்டு போய்விடுகிறாள். அதற்குப் பிறகு அவனுக்கு நண்பர்கள்தான் உலகம். அப்படி இருப்பவனுக்கு திடீரென நிறுவனத்தின் தலைமையகத்தில் வேலை செய்ய பணி இடமாற்ற ஆணை வருகிறது.
ஜானிக்கு மகிழ்ச்சிதான். நண்பர்களுக்கு விருந்து கொடுத்துவிட்டு நகருக்கு கிளம்புகிறான். உண்மையில் அந்த பணி ஆணை, இன்னொருவருக்கு வழங்கவேண்டியது. தவறுதலாக அவனுக்கு வந்துவிடுகிறது. ஜானி, தலைமையகத்திற்கு செல்கிறான். அங்கு அவனுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையில் வேலை அளிக்கிறார்கள். அவனுக்கு ஒன்றும் புரிவதில்லை. அவன் சீனியர் பிட்டர். அவனை எதற்கு மனிதவளத்துறைக்கு மாற்றினார்கள் என்று கேள்வி கேட்டாலும் யாருக்கும் பதில் தெரியவில்லை. அவனுக்கு வேலை கொடுத்த அதிகாரி, அவனை எந்த வேலையும் செய்யவிடாமல் பார்த்துக்கொள்கிறார். இந்த நேரத்தில் அலுவலகத்தில் நிறுவனத்தின் இழப்பைக் குறைக்க பணிநீக்கம் செய்யலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். நிறுவனத்தலைவர் அதை ஏற்கவில்லை என்றாலும் உள்ளுக்குள் உள்ள ஆட்கள் ஒன்றாக சேர்ந்து ஊழல் செய்து பணம் வாங்கிக்கொண்டு அதை நடைமுறைப்படுத்த முயல்கிறார்கள்.
ஜானி, அவனுடைய மனிதவளத்துறை மேலதிகாரி, தற்காலிக பணியாளரான இளம்பெண் ஆகிய மூவரும் சேர்ந்து ஊழல் செய்த அதிகாரிகளை எப்படி நிறுவனரிடம் பிடித்துக்கொடுத்து தவறை நிரூபணம் செய்தார்கள் என்பதே திரைப்படத்தின் பின்கதை.
படத்தில் நாயகனாக நடித்துள்ளவர், நன்றாக நடித்திருக்கிறார். பிட்டராக வேலை செய்யும் அப்பாவியான மனிதர். நகருக்கு வந்து அங்குள்ள நாகரிகத்திற்கு ஏற்ப மாறுவது, தலைமையகத்தில் வேலை செய்யும் அத்தனை நபர்களையும் பெயர் சொல்லி அழைப்பது, பெயர்களை மனப்பாடம் செய்வது என தொடக்க காட்சிகள் நகைச்சுவைக்கு பஞ்சம் வைக்காதவை. பிற்பகுதி காட்சிகள், அதிகாரம் எப்படி தொழிலாளர்களை வேலையிலிருந்து இரக்கமின்றி நீக்குகிறது, ஊழல் லஞ்சத்தால் அப்பாவி தொழிலாளர்கள் எப்படி பலியாகிறார்கள் என்பதை காட்டும் இடங்களில் நாயகன் நெகிழ்ச்சியாக, குற்றவுணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நடித்திருக்கிறார்.
இவருக்கு துணையாக மனிதவளத்துறையில் உள்ள இளைஞன் பாத்திரம், தற்காலிகமாக வேலை செய்யும் இளம்பெண் ஒருவரும் படம் நெடுக வருகிறார்கள். படத்தில் நாயகன் தடுமாறுவது ஒரே இடத்தில்தான். இன்னொருவருக்கு பதிலாக தன்னை தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்று அறிந்து, அந்த வேலையைக் காப்பதற்காக முயல்கிறார். அப்போது டேப்லெட்டில் போடும் கையெழுத்து, 300 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க வைக்கிறது. அதை அவர் உணர்ந்து தனது தவறை திருத்திக்கொண்டு ஊழலை வெளிப்படுத்துகிறார்.
தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்காமல் இருக்க அதிகாரிகள் யோசிக்கவேண்டும் என்ற கருத்தை சொல்லுகிற படம். நவீன காலத்தில் நடக்கும் பணிநீக்க சம்பவங்களை நினைவுபடுத்துகிறது. இப்படி ஒரு தீவிரமான கருத்தை சொன்னாலும் படம் நம்மை சோதிக்கவில்லை. படம் நெடுக நகைச்சுவை உண்டு.
படத்தின் இறுதியில் மனித வளத்துறை இளைஞனுக்கு உரிய பதவி கிடைக்கிறது. தற்காலிக ஊழியரான இளம்பெண், முழுநேர ஊழியராகிறார். நீக்கப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் வேலையில் சேர்க்கப்படுகிறார்கள். ஜானி, பழையபடி தன்னுடைய வேலையை தொடர்கிறார். பணம் வாங்கிக்கொண்டு மட்டமாக இரும்பில் பொருட்களை தயாரித்து இழப்பை ஏற்படுத்திய அதிகாரிகள் சிறையில் தள்ளப்படுகிறார்கள்.
சீனாவில் அதிகாரியை தயவு செய்யவேண்டுமானால் பரிசுகளை அன்பளிப்புகளை வழங்குவது புழக்கத்தில் உள்ளது. அதையும் படத்தில் காட்டுகிறார்கள். அடுத்து, ஒருவரின் பின்புலம் பொறுத்தே அவருக்கு பதவியுயர்வு, சம்பள உயர்வு வருகிறது என்பதையும் காட்சியாகவே காட்டுகிறார்கள்.
நிறுவனர் இறுதியாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் பணிநீக்கத்தை தடுக்கிறார் என்பதெல்லாம் சரி. ஆனால், அதற்கு முன்னதாகவே பணிநீக்கம் பற்றி அவருக்கு கூறியிருப்பார்களே அப்போதே அவர் ஏன் கேள்வி கேட்கவில்லை. 300 கிராமத்திலுள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள் என்பது பெரிய விஷயம் அல்லவா? ஜானி கிராமத்தில் இருந்து வந்தவன், அவனுக்கே ஆண்டுவிழாவுக்கான பட்ஜெட் அதிகம் என்று தெரிகிறது. ஆனால் நிறுவனருக்கு அது உறுத்தலாக தெரியவில்லை. அதாவது நிறுவனம் லாபத்தில் இல்லை இழப்பில் உள்ளது என்று தெரியும்போது கூட....
இறுதியாக முதலாளி, தொழிலாளர்களுக்கு நீதியை வழங்கிவிட்டார் என்று கருத்து சொல்லி படம் நிறைவடைகிறது....
நாயகனின் நடிப்பு, நகைச்சுவை படத்திற்கு பெரிய பலம்.
கோமாளிமேடை குழு


கருத்துகள்
கருத்துரையிடுக