''மக்களோடு இணைந்து தொற்றுநோய்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறோம்'’


''மக்களோடு இணைந்து தொற்றுநோய்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறோம்'’




கிறிஸ்டியன் ஹேப்பி, ஆப்பிரிக்க தொற்றுநோய் மரபணுவியல் மையத்தின் நிறுவனர். இந்த மையம், ஆப்பிரிக்க மருத்துவர்களுக்கு வேகமாக பரவும் தொற்றுநோய் பற்றிய பயிற்சியை, எச்சரிக்கை செயல்பாடுகளை கருவிகளை வழங்குகிறது. 2025ஆம் ஆண்டு டைம் வார இதழின் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் கிறிஸ்டியன் ஹேப்பி இடம்பிடித்துள்ளார்.




நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணி, அதற்கான தீர்வு பற்றி சுருக்கமாக விளக்க முடியுமா?




நான் மூலக்கூறு உயிரியல் மற்றும் மரபணுவியல் துறை சார்ந்த பேராசிரியர். ரெட்டீமர் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய்க்கான மரபணு மையத்தின் இயக்குநராக பணியாற்றிவருகிறேன். ஆப்பிரிக்காவில் பரவும் தொற்றுநோய்களை தடுக்க, 2013ஆம் ஆண்டு மரபணு மையத்தை தொடங்கினோம். ஆப்பிரிக்காவில் எபோலா தொற்று பரவத்தொடங்கிய காலம்தொட்டு தொற்றுநோய் பரவுதலை தடுக்க முயன்று வருகிறோம்.

கடந்த பத்தாண்டுகளாக இயங்கி வந்தாலும் இத்துறைக்கு நாங்கள் புதிய நிறுவனம்தான். துறையில் செய்து வரும் அடிப்படைக் கட்டமைப்பு, மேம்பாடு, தொற்றுநோயை எதிர்கொள்வதற்கான மருத்துவப் பயிற்சி சார்ந்து மக்கள் எங்களை பழமையான நிறுவனமாக கருதுகிறார்கள்.




உங்களது செயல்பாடுகளால் பயன்பெறுபவர்கள் யார்?




எங்களது மையத்தின் செயல்பாடுகளால் நேரடியாக பயன்பெறுபவர்கள், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்தான். மறைமுகமாக, அதற்கு பயிற்சி அளிக்கும் மருத்துவக்குழுவினர் பயன்பெறுகிறார்கள். அதற்கடுத்து உள்ளூர், தேசிய அளவில் அரசுகளைக்கூறலாம். நாங்கள் ஆக்கப்பூர்வமான முறையில் ஆப்பிரிக்க கண்டம் முழுக்க மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம்.


மக்களுக்கு உதவுவது பற்றி எப்படியென விளக்க முடியுமா?




நாங்கள் முதலில் மக்களின் பிரச்னைகளை அடையாளம் காண்கிறோம். பிறகு, அதை மக்கள் இனக்குழுக்களோடு கலந்தாலோசித்து தேவையான தீர்வுகளை நோக்கி நகர்கிறோம். அடிப்படையில் நாங்கள் தீர்வுகளை மையமாக கொண்டு இயங்குகிறோம். நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் வளங்களைத் தேடி நேரடியாக அவர்களது வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்துமாறு இயங்குகிறோம். இந்த வகையில் நோயாளிகளை, அவர்கள் சார்ந்த இனக்குழுவினர் பராமரிக்க முடியும்.




இதற்கு ஒரு எடுத்துக்காட்டை கூற விரும்புகிறேன். 2007 ஆம் ஆண்டு, லாசா காய்ச்சல் நைஜீரியாவில் பரவியது. 1969ஆம் ஆண்டு மக்களை பாதித்த நோய் இது. நோயை சோதித்துப் பார்க்கும் வசதி இல்லை. மூலக்கூறு சோதனை மூலமே நோய் தாக்குதலை அறியமுடியும். மலேரியா, டைபாய்டு காய்ச்சல் போல தாக்கி மக்களை அழிக்கிறது. அங்கு, ஆண்டுதோறும் லாசா காய்ச்சல் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே, நான் நைஜீரியாவின் கிராமங்களுக்கு சென்று காய்ச்சல் பற்றி முன்னமே தொற்றுநோய் மையம் மூலம் அறிந்தால், அவர்களைக் காக்க முடியுமா என்று ஆலோசித்தேன்.




லாசா வைரஸை, ரிபைவைரின் என்ற மூலக்கூறு மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அதற்கு முன்னமே சோதனை செய்யவேண்டும். இதற்காக மூலக்கூறு சோதனை செய்யும் கருவிகளைக் கொண்டு மக்களை சோதித்தோம். இதற்காக மருத்துவர்களுக்கும் பயிற்சி கொடுத்தோம். ஆண்டுக்கு லாசா வைரஸ் மூலம் ஐந்து மருத்துவப் பணியாளர்கள் இறந்து வந்த இடத்தில், இப்போது பரிசோதனை வசதி இருப்பதால் யாரும் இறப்பதில்லை. அறிகுறிகள் தெரிந்தால் உடனே இலவசமாக சோதித்துக்கொண்டு மருந்து உண்டு அதிலிருந்து வெளியே வரமுடிகிறது. இதுதான் அங்கு நடந்த முக்கியமான மாற்றம்.




உங்களுடைய அமைப்பிற்கும், பிற தொண்டூழிய அமைப்புகளுக்குமான வேறுபாடு என்னவென நினைக்கிறீர்கள்?




ஆப்பிரிக்க கண்டத்தில் மருத்துவ சோதனைக்காக முதலீடு செய்து இயங்கி வருகிறோம். எங்கு பிரச்னை இருக்கிறதோ அங்கு மட்டுமல்லாது, மக்கள் இனக்குழுவோடு சேர்ந்து பிரச்னைகளுக்கான தீர்வுகளை கண்டுபிடிக்கிறோம். தீர்வுகளையும் அவர்களோடு இணைந்து தேடுகிறோம்.




2014ஆம் ஆண்டு எபோலா நோய்த்தொற்று ஏற்பட்டபோது, அதன் பாதிப்பை நினைத்து பயம் உருவானது. கினியாவில் உருவான நோய்த்தொற்று ஆப்பிரிக்காவில் எளிதாக பரவ வாய்ப்பு இருந்தது. நோய் அறிகுறிகளை முறையாக சோதிக்கும் மையங்கள் இல்லாத காரணத்தால், ஏராளமான மக்கள் எபோலாவிற்கு பலியாயினர். அப்போது சியராலியோனில் நாங்கள் தொற்றுநோயை கண்டறிவதற்கான பயிற்சியைக் கொடுத்தோம். முன்னமே அங்கு லாசா காய்ச்சலுக்காக பணியாற்றியிருந்தோம். நாங்கள் பயிற்சி கொடுத்த மருத்துவர்களில் ஒருவரான அகஸ்டின் கோபா, எபோலா சியராலியோனை தாக்கியபோது முதலில் அதைக் கண்டுபிடித்து அறிவித்தார். பாதிக்கப்பட்ட 31 நோயாளிகளில் 14 பேரை சிகிச்சை அளித்து காப்பாற்றினோம். இதற்கு காரணம், களத்தில் நாங்கள் செய்த பணிகள்தான்.




நைஜீரியாவில் எபோலா தொற்றுநோய் பரவியபோது ஆறு மணிநேரத்தில் நோயாளியை பரிசோதித்து கண்டுபிடித்தோம். உடனே தேசிய பொதுமக்கள் பாதுகாப்பு ஆணையத்தைத் தொடர்புகொண்டு சோதனைமுடிவை அறிவித்தோம். பிறகு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. 93 நாட்கள் பணியாற்றி எபோலா பாதிப்பு 20 நோயாளிகளுக்கு மட்டுமாக சுருக்கி, எட்டு இறப்புகள் என சூழலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தோம்.




உங்களது செயல்பாடுகள் வழியாக கற்றுக்கொண்ட பாடம் என்னென்ன? இதிலிருந்து மக்கள் எதையாவது பின்பற்றவேண்டுமென நினைக்கிறீர்களா?




ஒரு செயலைச் செய்யும்போது அடிப்படையான நோக்கம் முக்கியம். நீண்டகால முதலீடு என்ற நோக்கில் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். அறிவியலை பொதுநலனுக்காக பயன்படுத்தவேண்டும். சிக்கலான நேரங்களில் பயன்படும்படி மனித வளங்களை உருவாக்கிக்கொள்வது நல்லது. நீங்கள் செய்யும் சிகிச்சை, கருவிகளை எளிதாக மக்கள் அணுகும்படி மாற்றிக்கொள்ள வேண்டும். தொலைதூரத்தில் உள்ள பகுதியில் இருக்கும் மக்கள் நோய்த்தொற்று பற்றி தகவல் கொடுத்தால் அதை புரிந்துகொண்டு செயல்படும் விதமாக பணியாளர்கள் பயிற்சி பெற்று இருக்கவேண்டும்.




தமிழில்

ச.அன்பரசு




மூலம்

whatsworkingsolutions.org

Interview with Christian Happi (African Center of Excellence for Genomics of Infectious Diseases at Redeemer's University)



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!