காதல் என்பது கலையா?

 காதல் என்பது கலையா?

காதல் என்பது கலையா, அல்லது வெறும் மகிழ்ச்சிகரமான உணர்வா? கலை என்றால் அதைக் கற்க அறிவு, முயற்சி, செயல்பாடு என பலவும் தேவை. மகிழ்ச்சிகரமான உணர்வு என்றால், அப்படியான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிற அனுபவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. 

காதலை, நாம் விரும்பவில்லை என்று கூறமுடியாது. காதல் திரைப்படங்கள், காதலை மையப்படுத்திய தொடர்கள் இன்றுமே பல கோடி மக்களால் பார்க்கப்படுகிறது. காதலை நாம் பார்க்கும் கோணம் மாறிவிட்டிருக்கிறது. திரைப்படமோ, தொடரோ அதில் காட்சிகள் சுவாரசியமான வகையில் தொகுக்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியல்லாதபோது மக்கள் என்ன செய்வார்கள்? ஆங்கிலப்பட இயக்குநர் குவான்டின் டரன்டினோ, எடுக்கும் திரைப்படங்களைப் போன்றவற்றின் மலினமான நகல்களைப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியதுதான். இன்றும் பேருந்துகளில் காதல் பாடல்கள், மஜாவுக்கு அழைக்கும் பாடல்கள் என பலவும் மக்களால் கேட்கப்பட்டு வருகிறது. இசை பேரரசரின் காப்புரிமை பிரச்னை இருந்தாலும் மனதிற்குள்ளேயே அதை பாடிக்கொண்டு தனது சோகத்தை மறந்து காதல் உணர்வில் திளைக்கும் மக்களைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ஆனாலும் கூட இப்படி வாழ்க்கையோடு பயணிக்கும் காதலை, அன்பை பற்றி ஏதேனும் கற்க முடியுமா என்றால் அதற்கான ஆர்வம், ஈடுபாடு மக்களிடையே குறைவுதான். 

இன்றைய சமூகத்தில் காதலிப்பதை விட காதலிக்கப்படுவது என்பதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். வலிமையும் செல்வமும் ஆணுக்கு பெண்ணிடத்தில் செல்வாக்கை பெற்றுத்தரும் என சில நூல்கள் அறிவுறுத்துகின்றன. இது ஆணுக்கான கற்பிதம். அடுத்து பெண்ணுக்கு, அழகு தேவை என சமூகம் கூறுகிறது. அழகாக உடலைக் கட்டாக வைத்துக்கொள்வது, பளபளவென உடை உடுத்துவது, தன்னை கூட்டத்தின் மையத்தில் ஈர்ப்பாக நிலைநிறுத்திக்கொள்வது ஆகியவற்றை பெண்கள் செய்கிறார்கள். அதாவது, சமூகம் அப்படியாக பல்வேறு கருத்துகளை கொண்டுள்ளது. திருமணம், பூப்புநன்னீராட்டு விழாக்களில் பார்த்தால் சில பெண்கள் டிஸ்னி கதைகளில் வரும் கவுன்களை போட்டுக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருப்பார்கள். பார்த்திருப்பீர்கள். இதெல்லாம் ஒருவித விளம்பர விநியோக உத்திதான். 

வேலையைப் பெற நம்மால் முடியாதவற்றைக்கூட முடியும் என கூறி வாக்களிக்கிறோமே எதற்கு? சுய விளம்பரம் செய்தால்தான் உலகில் பிழைக்க முடியும். காதலுக்கும் இந்த வகையில் பொருத்தம் உள்ளது. நாகரிக பேச்சு, நளினமான நடத்தை, கௌரவமான பாங்கு, மகிழ்ச்சியான முகபாவனை, காயப்படுத்தாத உரையாடல் என அனைத்துமே முக்கியமாக உள்ளது. மேற்சொன்னவற்றை சிலர் இயல்பாகவே கொண்டிருப்பார்கள். சிலர், விருது கொடுத்தால் கூட நன்றாக இருக்குமோ என்ற வகையில் நடித்து தள்ளிக்கொண்டிருப்பார்கள். இவ்வாறு அவர்களுக்கு, குடும்பத்தினர் அறிவுறுத்தியிருப்பார்கள். 

விக்டோரியா காலத்தில் காதல் என்பதெல்லாம் கிடையாது. குடும்பங்கள் பார்த்து திருமணங்களை முடிவு செய்வார்கள். அப்படி செய்யும் திருமணங்கள் வணிகம், அந்தஸ்து, சொத்து, சமூக மரியாதை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருக்கும். மற்றபடி இதில் காதல் என்பது உருவாகும் என்றெலாலம் உறுதியாக கூறமுடியாது. மேற்குலகில் காதலித்து அந்த உறவு வலுவாக இருந்தால் திருமணம் செய்துகொள்வது வழக்கில் உள்ளது. அந்த உறவு கசந்துபோனால், அதை விட்டு விலகி விவாகரத்து செய்வதும் பரவலாக உள்ளது. 
மேற்குலகினர் பொதுவாக ஒன்றை வாங்கும் கலாசாரத்தைக் கொண்டவர்கள். ஒரு பொருளை கடையில் விற்பதைப் பார்க்கிறார்கள். அதை வாங்கும் காசு இருந்தால் வாங்கிவிடுகிறார்கள். அதே தத்துவத்தை மனிதர்களுக்கும் கையாள்கிறார்கள். காதலில் ஈர்ப்புடையதாக உள்ளது எது? அந்த காலகட்டத்திற்கு ஏற்ப உடை உடுத்துவது, நாகரிகத்தைக் கொண்டிருப்பது, உடல் வலிமையாகவும், மனம் ஒத்திசைவுடனும் இருப்பது. அடிப்படையில் தோற்றம் ஈர்ப்பும் வசீகரமும் கொண்டிருக்கவேண்டும். 

எனக்கு இந்த அம்சங்கள் தேவை, இவை கொண்டிருக்கும் ஆண் , பெண் தேவை என தனது தேவைகளை முன்வைப்பவர்கள் பெருகியுள்ளனர். வலிமையான கடினமான பெண்கள், குடும்ப வேலையில் ஈடுபடுத்திக் கொள்பவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பல்வேறு தேர்வுகளை ஆண்கள் கொண்டிருந்தனர். ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன? சொத்து, நிலம், செல்வாக்கு, சமூகத்தோடு இணைந்து பயணிப்பது ஆகியவை அவர்களின் பங்காக இருந்தது. மேற்சொன்னவை எல்லாம் காலத்திற்கு ஏற்ப மாறுபவை. அப்படியே நிலையாக அசையா சொத்துக்களாக இருப்பவை அல்ல. இதெல்லாமே திருமணத்தில் பேசப்படும் எனக்கு என்ன, உனக்கு என்ன, உனக்கு இவ்வளவு சதவீதம், எனக்கு இவ்வளவு சதவீதம் என பிரித்துக்கொள்ளும் வணிகப் போக்குதான். 

தமிழாக்கம் தமிழ் முருகன்
மூலம் - தி ஆர்ட் ஆஃப் லவ்விங்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!