துரோகம் செய்த இளவரசனை பழிவாங்க மறுபிறப்பெடுத்து கடந்த காலத்தில் நுழையும் ஈட்டி மாவீரன்!



 ரிடர்ன் ஆப் தி அன்ரிவல்டு ஸ்பியர் நைட்
காமிக்ஸ்
மங்காஓவ்ல்.காம்

ஜோஸ்வா சாண்டர்ஸ் ஆக்னஸ் என்பதுதான் நாயகன் பெயர். தொடக்க காட்சியில் அவர், முதல் இளவரச் மூலமாக சதி செய்து கொல்லப்படுகிறார். வாழ்க்கை முழுக்க அவருக்காக போராடி உழைத்து சண்டை போட்ட ஜோஸ்வா, அவருடைய ஆற்றலின் மீதான பயம் காரணமாக சுற்றியுள்ளவர்களால் துரோகம் செய்யப்பட்டு வீழ்த்தப்படுகிறார். இறக்கும்போது அவர் யோசிப்பது. நடந்த விஷயங்களை மாற்ற முடிந்தால் எப்படியிருக்கும் என்பதுதான். எனவே, அவரின் ஆன்மா பின்னோக்கி செல்கிறது. 

ஜோஸ்வா, ஆக்னஸ் என்ற அவலோன் நாட்டு படைத்தளபதிகளில் ஒருவரின் மகன். வைப்பாட்டி மகன். பணிப்பெண்ணை ஆக்னஸ் உறவுகொள்ள ஜோஸ்வா பிறக்கிறான். வைப்பாட்டி மகன் என்பதால், அவனை அதிகாரப்பூர்வ வீட்டில் துவேசிக்கிறார்கள். ஆக்னசுக்கு அதிகாரப்பூர்வ திருமணம் மூலம் பாபெல் என்ற மகன் உண்டு. உண்மையில் அவன் ஆக்னஸ் மகனா இல்லையா என்பது கதையில் முக்கிய ட்விஸ்ட். ஜோஸ்வா, குதிரை தொழுவத்தில் வேலை செய்கிறான். அவனது அம்மாவும் அங்கேதான் இருக்கிறாள். இருவரையும் ஆக்னசிடம் வேலை செய்யும் நைட் எனும் வீரர் படையில் உள்ளவர்கள் கேலி சித்திரவதை செய்கிறார்கள். ஜோஸ்வா முதலில் அடி உதை படுகிறான். அவனது அம்மா, மானபங்கம் செய்யப்படுகிறார். ஆனால், ஈட்டிவீரன் ஆன்மா இரண்டாவது முறையாக தனது வாழ்வை மாற்ற முயல்கிறது. எனவே, அவனை அடித்து துன்புறுத்த வரும் மூன்று வீரர்களை உடல் பலமில்லை என்றாலும் மனா எனும் ஆற்றலை சூழலில் இருந்து கிரகித்து சண்டை போடுகிறான். உடல் ஒத்துழைக்கவில்லைதான். ஆனாலும் அந்த சண்டையால் ஜோஸ்வா பேசுபொருளாகிறான். கதை நெடுக ஜோஸ்வா தனது வலிமையால் சுயமரியாதையை, தன்மானத்தை பெறுகிறான். வலிமையுள்ள எவர் அச்சுறுத்தலுக்கும் பணிவதில்லை. குறிப்பாக அவனது அப்பா ஆக்னஸ், ஜோஸ்வாவை அழைத்து பேசும்போது பாபெல் பணிந்து வணங்குவான். ஆனால் ஜோஸ்வா அமைதியாக பேசாமல் நிற்பான். ஆக்னசுக்கு ஜோஸ்வா மீது பெரிய பரிவு இருக்காது. ஆனால், அவனைப் பார்க்கும்போது குற்றவுணர்ச்சிக்கு உள்ளாவார். கதை நெடுக, நீ என்னை வெறுக்கிறாயா என்று கேட்டுக்கொண்டே இருப்பார். ஜோஸ்வா, இரு பட்டாலியன் கமாண்டரானபோதுதான் அதற்கு பதில் சொல்வான். அதுவும் கூட வருத்தமாகவோ, கோபமாகவோ இருக்காது. ஏனெனில் அவனுக்கும் அப்பாவுக்கும் இடையில் பாசப்பிணைப்போ, நெகிழ்வான சம்பவங்கள் என ஏதும் இருக்காது. 

ஜோஸ்வாவுக்கு எதிர்காலம் தெரியும், ஆக்னஸ் எப்படி இறந்துபோவார். சகோதரன் பாபெல் எப்படி இறப்பான் என அனைத்துமே தெரியும். எனவே, அதற்கேற்ப தன்னை தயார் செய்துகொண்டு நண்பர்களை தனது பக்கம் கொண்டு வர முயல்வான். கதையில் ஏழை, பணக்காரன் வேறுபாடு, சாதி, மதம், இனம் ரீதியாக சமூகம் பிளவுபட்டு இருப்பது, வேறுபாடுகள் காரணமாக திறமைசாலிகள் தாழ்ந்த இனத்தில் இருந்தால் அடித்து உதைக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவது நடைபெறும். அதுவும் கல்வி நிறுவனங்களிலேயே நடைபெறும். இதை படிக்கும்போது பார்ப்பன ஐஐடி, ஐஐஎம்களில் தலித், பழங்குடியினர் தற்கொலைக்கு தள்ளப்படுவது நினைவில் வந்து போனது. 

ஜோஸ்வா, கதையில் வலியவர்களால் எளியவர்கள் பாதிக்கப்படும்போது பாதிக்கப்படுபவர்கள் பக்கம் நிற்பான். அதுவே அகாடமியில் அவனுக்கு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவனுக்கு ஆதரவாக இருக்க காரணமாக அமையும், அகாரெஸ், இகாரெஸ் எனும் இரு நண்பர்கள் அறைத்தோழர்களாக அமைவார்கள். இருவருமே ஜோஸ்வாவை முதலில் வலியவர்களுக்கு எதிராக போராட வேண்டாம் பணிந்து போ என்றுதான் கூறுவார்கள். ஆனால், பின்னாளில் அவனது வலிமையான ஆதரவாளர்களாக மாறுவார்கள். 

தேவடியாப்பயல், வைப்பாட்டியின் மகன், கள்ள உறவில் பிறந்தவனே என்று எத்தனை முறை ஜோஸ்வா வசை பாடப்பட்டான் என்று எண்ணவே முடியாது. எண்ணற்ற முறைகள் இகழ்ச்சிக்குள்ளானவன் அவன்தான். ஆனால், அவன்தான் தனது வலிமை, மனிதநேயம் மூலம் பலரையும் தன் பக்கம் கொண்டு வருபவனாக இருக்கிறான். வாள் பெரியதா, ஈட்டி பெரியதா என அகாடமியில் விவாதம் நடக்கும்போது, ஈட்டிதான் பெரிது என்று ஜோஸ்வா பேசி சண்டை போட்டு ஸ்டென் குடும்ப வாரிசுக்கு அதை நிரூபித்தும் காட்டுவான். அராக்சியா என்ற மேல்தட்டு வர்கத்தின் குண்டர் குழுவை அழிப்பான். இகாரஸை அங்கு படிக்க செய்து அகாடமியை சீர்திருத்த வைப்பான். இதெல்லாம் அவன் செய்வது சுயநலத்திற்காக அல்ல. பொதுநலனும் அதில் உண்டு. 

செரில், ஐசெலின், செரியன் என மூன்று இளம்பெண்கள், ஜோஸ்வாவுக்கு நெருக்கமானவர்கள். இவர்கள் ஆக்னசின் உதவியைப் பெற முயல்வார்கள். அதாவது ரெப்ரிகாவின் ஐசெலின், பான்டர் குடும்பத்தின் செரில். இவர்களுக்கு ஆக்னசின் குடும்ப வலிமை, சொத்துக்களை பாதுகாக்க தேவைப்படும். ஜோஸ்வா, செரிலுக்கு உதவுவதாக வாக்கு கொடுப்பான். அதை பின்னாளில் நண்பன் இகாரஸ், நைட் கேன் ஆகியோர் மூலம் செய்வான். ஐசெலினுக்காக செய்யும் உதவி உராவிசின் படைத்தளபதிக்கானது. அவரின் நட்புக்காக ஐசெலினை காப்பாற்றி உதவுவான். இளவரசி செரியன், சாதி, மத, இனம் பார்க்காத இளம்பெண். கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. அவளின் இளகிய மனதிற்காக மருத்துவ உதவியை செய்வான். 

இரண்டாவது பிறப்பு, வாய்ப்பு என்பதால் அவன் யாருடனும் பெரிதாக நெருக்கமாக பழக மாட்டான். கொஞ்சம் தள்ளியே நிற்பான். காரணம், சூழல் மாறுபடும் என்பதால்தான். தெய்வசக்தியும், தீய சக்தியும் அவனது உடலுக்குள் இருக்கும். அதாவது ஈட்டியில் இருக்கும். அவற்றை கட்டுப்படுத்த போராடிக்கொண்டே இருப்பான். எப்போதுமே தெய்வசக்திக்கு பொன் நிறம், தீயசக்தி என்றால் கருப்பு நிறம்தானே? இதிலும் அதேதான். 

தொடரில் சில இடங்களில் எழுத்துருக்கள் படுத்தி எடுக்கின்றன. மாற்றி மாற்றி பயன்படுத்தி படிக்கவே சிக்கலை ஏற்படுத்துகிறார்கள். மொத்தம் 73 அத்தியாயங்கள்தான். அதற்குள் எதற்கடா இத்தனை மாற்றங்கள். கதை முடியவில்லை. அப்படியே தொடர்கிறது. அவலோன், ஸ்வாலோ, த்ரான் நாடு, ஹப்லட் எனும் நாடு என பல்வேறு நாட்டு அரசியலை, ரத்தம் தேய்ந்த வரலாற்றை கதை பேசுகிறது. 

சாதி,மத, இனம், குடும்பம் இதெல்லாம் தாண்டி ஒருவரின் திறமைதான் விதியை தீர்மானிக்கிறது என ஜோஸ்வா சொல்ல வருகிறான். அவனைச் சுற்றி இருப்பவர்கள் அதை தொடக்கத்தில் ஏற்க மறுக்கிறார்கள். தனது வலிமையால் அவன் அதை நிரூபித்த பிறகு ஒப்புக்கொள்கிறார்கள். அவனை பின்தொடர்கிறார்கள். கதை நெடுக, ஜோஸ்வாவுக்கு மண்டியிட்டு மன்னிப்பு கேள் என்பதை யாராவது ஒருவர் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அவன் அதை எப்போதும் ஏற்கவே மாட்டான். அவன் இடி மின்னல் மாந்திரீகனிடம் போராடும்போது ஒருநொடி தோற்றுப்போவோமோ என்று நினைப்பான். உடனே அவனது ஈட்டி விட்டுக்கொடுத்தால் அதற்கு பிறகு வெல்லவே முடியாது. போராடு என சொல்லும். பிறகு, தனது ஈட்டியை எறிந்து எதிரியை கொல்வான். 

கோமாளிமேடை குழு



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!