பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை பற்றிய காரண காரியங்களை விளக்கும் அம்பேத்கர்!

 பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை
பி ஆர் அம்பேத்கர்
தமிழில் மகாதேவன்
கிழக்கு பதிப்பகம்

அம்பேத்கர் எழுதிய நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டால் அதற்கு பின்னால் என்ன காரணம் இருக்க முடியும்? முஸ்லீம்களை அவர் விமர்சித்து எழுதியிருக்கக்கூடும். சரிதான். அந்த வகையில் முஸ்லீம்களை விமர்சிப்பதோடு, அவர்கள் படையெடுப்பு வழியாக இந்தியா அடைந்த சேதம், கோவில்கள் இடிப்பு, மக்கள் பலி என பலவற்றையும் அம்பேத்கர் ஆவணப்படுத்தி எழுதியுள்ளார். 

நூலில் அவர் பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை தனது போக்கில் அணுகி அதற்கான காரண காரியங்களை விளக்கி எழுதியுள்ளார். இதை ஆதரிக்கும், எதிர்க்கும் தரப்புகளின் உள்நோக்கங்களை தெளிவுபடுத்தியுள்ளார். 

நூலைப் படித்து எழுதும்போது இந்திய ஒன்றியத்தின் சுதந்திர தினம் கடந்துபோய்விட்டது. ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தான் இந்தியா பிரிவினை பற்றி பேச, ஆலோசிக்க, சரியான காலம்தான். நூலில், அம்பேத்கர் முஸ்லீம்கள் ஏன் தனிநாடு கேட்கிறார்கள், அதற்கான தேவை என்ன என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். அதேசமயம் இந்து மகாசபையினரின் இந்து அரசு அமைந்தால் ஏற்படும் பாதகங்களையும் அவர் கூறியிருக்கிறார். இந்துக்களின் சாதி தீண்டாமை, முஸ்லீம்களின் அரசாதிக்க எண்ணம் என இரண்டையும் அவர் தெளிவாக விளக்கி கூறியுள்ளார். தேசியம், துணை தேசியம் ஆகியவற்றைப் பற்றிய விளக்கம் சிறப்பானது. 

நூலில் முஸ்லீம்கள் தம் மதத்தை மட்டுமே நம்பி நாட்டை கைவிடுவது, இஸ்லாமிய பேரரசை அமைக்க முயன்றது. கிலாபத் இயக்கம் ஒத்துழையாமை இயக்கத்தை உருவாக்கியது, ஜின்னாவின் அரசியல் தந்திரங்கள் என எல்லாமே சுவாரசியமான தகவல்களாக உள்ளன. இந்துக்கள் பற்றி அம்பேத்கர், பகடியாக நிறைய விஷயங்களைக் கூறுகிறார். குறிப்பாக இந்துக்கள் தாய்மதம் திரும்புவது எனும் முறையை ஏன் கைவிட்டனர் என்று கூறும் பகுதி. அடுத்து, இந்துவாக இருப்பவர் கிறித்தவராக மாறுவது, முஸ்லீமாக மாறுவது இரண்டில் எது இந்துக்களிடையே அதாவது அதை வைத்து அரசியல் செய்பவர்களிடையே கோபத்தை உருவாக்குகிறது என்று கூறும் இடம். 

நாடு என்ற ஒன்று எப்படி உருவாகிறது, பல்வேறு சமூகங்கள் ஒன்றாக வாழ முடியாதா, அரசியல் அமைப்புச் சட்டம் பல்வேறு சமூகங்களை பாதுகாக்கும்படி அமைக்க இயலுமா என பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு வரலாறு, படித்த நூல்கள், இந்திய வரலாறு என நிறைய விஷயங்களை விளக்கி தனது கருத்தை கூறியிருக்கிறார் அம்பேத்கர். 
ஒற்றை கலாசாரத்தன்மை இந்தியாவுக்கு எப்படியான ஆபத்தை கொண்டு வரும் என்று  என்பதையும் எச்சரித்திருக்கிறார் அம்பேத்கர். அந்த வகையில் இந்துமத சர்வாதிகார நாடு என்பதை நோக்கி இந்திய ஒன்றியம் சென்றுகொண்டிருக்கிறது. இந்த வேளையில் அம்பேத்கர் எழுதிய நூல், அத்தகைய ஆபத்தைப் பற்றி எச்சரித்து பல்வேறு விஷயங்களைக் கூறுகிறது. ஒருவகையில் இந்து மகாசபை அதாவது இன்றைய ஆர்எஸ்எஸ், முஸ்லீம் லீக் என இரண்டு அரசியல் கட்சிகளும் இந்து முஸ்லீம் அடிப்படைவாத ஆதிக்கம் பற்றி பேசுபவைதான். இந்த அமைப்புகளின் கோரிக்கைகள், இந்தியாவை எப்படியான ஆபத்துகளில் கொண்டுபோய்விடும் என்பதை அம்பேத்கர் விளக்கியுள்ளார். 

காந்தியை சாடாமல் இருந்தாமல் எப்படி? இந்துக்களில் பட்டியலினத்தோருக்கு(தாழ்த்தப்பட்டோர்) எந்த அரசியல் உரிமைகளையும் தர விரும்பாதவர், முஸ்லீம்களுக்கு பல்வேறு உரிமைகளை கேட்காமலேயே தர முயல்கிறார் என பகடி செய்கிறார். அவரின் குரலில் பெருமளவு விரக்தியும், வேதனையும் உள்ளது என்பதை அறிய முடிகிறது. ஓரிடத்தில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்டம் தோற்றுப்போய், இலக்குமின்றி லட்சியமுமின்றி ஆனார் காந்தி எனக்கூறுகிறார். ஜின்னாவிடம் காந்தி செய்துகொள்ள முனைந்த இறுதியான ஒப்பந்தம் கூட கோமாளிக்கூத்தாக மாறுகிறது. இந்திய சுதந்திரத்திற்கு முஸ்லீம்களின் ஆதரவை வேண்டுவதுதான் காந்தியின் நோக்கம். ஆனால், அதற்கு ஜின்னா உடன்படவில்லை. அரசியல் ரீதியாக அந்த ஒப்பந்தம் அமையாமல் போனது இரு அரசியல் தலைவர்களுக்குமே சில இழப்புகளை ஏற்படுத்துகிறது. 

ஒட்டுமொத்தமாக நூலை வாசிக்கும் ஒருவர் முஸ்லீம் அரசர்கள், பேரரசர்கள் செய்த வன்முறை, கோவில் இடிப்பு, கொலைகள், வரிகள் ஆகியவற்றைப் பற்றி அதிகம் நினைவு கொள்ளக்கூடும். ஆனால், அம்பேத்கர் அதையும் கடந்து ஒரு நாடு எப்படி உருவாக்கப்படுகிறது, அதற்கு அடிப்படையாக எது அவசியம், எது ஆபத்தான போக்கு என்பதை கூறியுள்ளார். துருக்கி - பல்கேரியா, துருக்கி - கிரேக்கம் ஆகிய நாடுகளைப் பற்றிய எடுத்துக்காட்டுகளை கூறி இரு தனிநாடுகள் எப்படி பிரிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார். அயர்லாந்து பிரிவினையை விட்டுவிட்டோமே, அதையும் கூட எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளலாம். ஆங்கிலேயர்கள், ராணுவத்தில் செய்த பாகுபாடான செயல்பாடுகளையும் கவனப்படுத்தி பார்க்க வேண்டும். ஒட்டுமொத்தமாக பார்த்தால், அவர்களின் செயல்பாடு இந்திய ஒன்றியத்திற்கு ராணுவ பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலை எதிர்காலத்தில் உருவாக்கும்படி நிலையை உருவாக்கியது. 

குறிப்பு
கிழக்கு பதிப்பகம், வலதுசாரி மதவாத சக்திகளுக்கு ஆதரவான பதிப்பகம். எனவே, இதை மனதில் கொண்டு இந்த பதிப்பக நூல்களை வாசிப்பது நன்று.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!