நாய்கள் அடிமை அல்ல சக உயிர் என உரக்கச்சொல்லும் கட்டுரைகள் - பின்தொடரும் பிரம்மம்
பின்தொடரும் பிரம்மம்
ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
இதிலுள்ள கட்டுரைகள் அனைத்துமே நாய்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்குமான தொடர்பை, அன்பை பகிர்பவை. இந்த கட்டுரைகள் வழியாக அவர் வளர்த்த நாய்கள், அவற்றை அவர் பெற்றது, அதன் வழியாக கிடைத்த அனுபவங்களை நாம் அறிய முடிகிறது. இதில் நவீன் என்ற அவரது நண்பரது நாய் பற்றிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.
நாய்களை வளர்ப்பது பற்றிய அன்பையும் அக்கறையையும் நூல் வழியாக பெற முடியும். பல்வேறு கட்டுரைகளிலும் நாயை எப்படி வளர்ப்பது, பழக்க வழக்கங்களை மாற்றுவது, கனிவோடு நடத்துவது ஆகியவற்றைப் பற்றி ஜெயமோகன் குறிப்பிடுகிறார். நாயை துன்புறுத்துபவர்களை அக இருள் வன்முறையாளர் என கூறுகிறார். நாயின் பழக்கவழக்கங்களை அடித்து திருத்த முடியாது என சில சம்பவங்கள் வழியாக விளக்குகிறார். அவர் தனது வீட்டில் டாபர்மேன், லாப்ரடார் என இரு இன நாய்களை வளர்க்கிறார். பின்னாளில் பயணிக்கும் பிரச்னைகள் எழவே நாய் வளர்ப்பதை கைவிடுகிறார்.
நாய் வளர்ப்பது, பசுவை வளர்த்து பால் பெறுவது போன்றதல்ல. அது ஆத்மாவின் தேவைக்கானது என கூறுகிறார். கறுத்தம்மா என்ற காட்டில் வாழும் வேட்டையாடி உண்ணும் நாய் பற்றிய கட்டுரை, புகைப்படம் சிறப்பாக இருந்தது. கட்டுரைகள் வழியாக கூறப்படுவது நாய் சுயமரியாதை கொண்டது. அதை அந்த வழியாகவே நடத்த வேண்டும் என்பதுதான். நூலில் முப்பதாயிரம் ஆண்டுகளாக மனிதர்களோடு நாய் பழகி வந்ததைப் பற்றி கூறுகிறார். இந்த காலத்தில் வேறுபாடு உள்ளது. அறிவியல் இதழ்களில் ஐம்பதாயிரம் ஆண்டுகள் என குறிப்பிடுகிறார்கள்.
நாய்கள் எப்படி மனிதர்களை அடையாளம் கண்டுகொள்கின்றன, எப்படி உரையாடுகின்றன, அவற்றின் மகிழ்ச்சி, உற்சாகம், நிபந்தனையற்ற அன்பு ஆகியவற்றைப் பற்றி கட்டுரைகளெங்கும் நீங்கள் வாசிக்கலாம். நூலின் அட்டைப்படமே நாய்க்குட்டி ஒன்றை எழுத்தாளர் தூக்கி கொஞ்சுவதுதான். ஒரு உயிரை கனிவோடு நடத்துவது, அன்பு செலுத்துவது வழியாக நம்மை நாம் மேம்படுத்திக்கொள்ளலாம். அதன் தொடர்ச்சியாக அதே அன்பை மனிதர்கள் மீது செலுத்த வாய்ப்பு கிடைக்கிறது என எழுத்தாளர் கூறுகிறார். நாயை வீட்டில் வளர்க்க கூடாது, தெரு நாய்கள் குழந்தைகளைக் கடிப்பது பற்றிய வலுவான கருத்துகளை கூறியிருக்கிறார். விலங்கு அன்பரான அரசியல்வாதி மேனகா காந்தியையும் சாடியிருக்கிறார்.
காட்டிலுள்ள விலங்குகளின் ஆற்றல், சுதந்திரம் ஆகியவற்றையும், நகரத்தில் கட்டிப்போடப்பட்டிருக்கும் விலங்குகளின் சலிப்பையும் சோர்வையும் ஓரிடத்தில் ஒப்பிட்டு காட்டுகிறார்.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக