யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - இந்திய ஒன்றிய வங்கியின் தில்லாலங்கடித்தனங்கள்
யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - இந்திய ஒன்றிய வங்கியின் தில்லாலங்கடித்தனங்கள்
இன்றைய காலத்துக்கு இந்தியாவிலுள்ள எந்தவொரு அரசு நிறுவனங்களும் நேர்மையாக இயங்குவதில்லை. அப்படி நடந்துகொள்ளவேண்டும் என்றும் நினைப்பதில்லை. அந்தளவு சட்டம், விதிமுறை, நெறிகள் என அனைத்தும் காவி நிறத்தால் மூடப்பட்டு வருகிறது. வலிமை உள்ளவர் அதாவது, அதிகாரம், பணம் கொண்டவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதை ஆற்றல் இல்லாத ஏழை எளியர் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்பதே சொல்லாமல் சொல்லும் பாடமாக உள்ளது. அந்த வகையில் இந்திய ஒன்றிய வங்கியின் கதை அமைகிறது. இந்த வங்கி வடக்கு நாட்டிலுள்ளது. அங்கு நிறைய கிளைகளைக் கொண்டுள்ளது போல. இரண்டு காந்தங்களை எதிரெதிரே பிடித்தது போல லோகோ அமைந்திருக்கும். அதன் அர்த்தம் தொடக்கத்தில் புரியவில்லை. பின்னே அதில் கணக்கு வைத்துள்ள மக்களின் பணத்தை இழுத்து பிடித்து கவர்ந்து ஈர்க்கத்தான் என பின்னர் புரிந்துகொள்ள முடிந்தது.
தொடக்கத்தில் எனக்கு சம்பள கணக்கை, பச்சை நிறம் கொண்ட பெருநிறுவன வங்கி என்ற வங்கியில் தொடங்கி கொடுத்தனர். அந்த வங்கிக்கு பெரியளவு ஏடிஎம் வசதிகளோ அல்லது பெரிய புகழோ, பெயரோ எதுவுமே கிடையாது. ஆனால், கணக்கில் பிரச்னை என்று மின்னஞ்சலில் புகார் கொடுத்தால் உடனே பதில் அளிப்பார்கள். தீர்வை அளிக்க முடிந்தளவு முயல்வார்கள். அப்படியான சேவையை நான் முதன்முதலாக பார்க்கிறேன். அதற்கு முன்னர், அமெரிக்க வங்கி, கர்நாடக விவசாய வங்கி ஆகியவற்றில் கணக்கு வைத்திருந்தாலும் புகார்களை அளிப்பது பற்றி யோசனை வந்ததில்லை. காரணம், அதை அதிகம் பயன்படுத்தும் சூழல் வரவில்லை. பின்னாளில் இந்த வங்கியை இ்ந்திய ஒன்றிய வங்கியுடன் இணைத்தனர். எதற்கு என்று கேட்காதீர்கள். இனிமேல் அப்படித்தான். இழப்பை குறைக்கிறேன் என நிதி அமைச்சு எப்போதும் போல ஓட்டைக் காரணத்தைக் கூறியது. யாருக்கான இழப்பு என மக்கள் கேட்கவில்லை. இப்படியான நாடு முழுக்க மூன்று, அல்லது இரண்டு வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, இந்திய ஒன்றிய அரசுக்கு எளிதாக காசு பிடுங்குவது எளிதானது. அந்த வகையில் குபுயோம் என்ற ஒன்றிய வங்கி ஆப்பை பயன்படுத்த நேரிட்டது. ஆனால், இந்த ஆப் பயனர் எளிதாக பயன்படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்டதல்ல. பயன்படுத்துபவரை எந்தளவு விரக்திக்கு உள்ளாக்கமுடியுமோ, அத்தனை அம்சங்களையும் ஆப் உருவாக்குநர்கள் செய்திருந்தனர். பெருநிறுவன வங்கியின் ஆப், பயன்படுத்த மிக எளிதானது. அதனுடைய வேகம் அதிகம். எந்த வகையில் பார்த்தாலும் இந்திய ஒன்றிய வங்கி, பெரிய திருப்தி அளிக்கவில்லை.
பொதுவாக சம்பள கணக்கு என வங்கியில் இருந்தாலும், பின்னாளில் அதை சாதாரண சேமிப்பு கணக்காக மாற்றி கையாள்வார்கள். நான் பல்வேறு நிறுவனங்களில் மாறும்போது, அந்த நிறுவனத்திற்கென ஆதரவாக உள்ள வங்கியில் சம்பள கணக்கை தொடங்குவார்கள். நான் செய்த தவறு, அப்படி மாறும்போது பழைய கணக்குகளை முழுமையாக தீர்த்து பணத்தை பூர்விகமாக சொந்த ஊரில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கிக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி மாற்றாதபோது என்னாகும்? நம்முடைய பணத்தை வங்கிக்காரர்களே தின்று தீர்ப்பார்கள். அதேதான் என்னுடைய விவகாரத்திலும் நடைபெற்றது. குபுயோம் ஆப்பில் பணத்தை கையாள்வது என்பது ஒற்றை தலைவலியை உருவாக்கக்கூடியது. வேகமாக இயங்காது. இயங்கினாலும் உடனே பயன்படுத்துவதற்கான நேரம் முடிந்துவிட்டது என செய்தி காட்டும். இப்போது கணக்கில் பணம் இருந்தாலும் கணக்கில் இருந்து ஒரு பைசாவைக் கூட செலவிட அனுமதிக்க மாட்டேன் என செய்தியைக் காட்டி வருகிறது. ஆப் வழியாக பணத்தை பரிமாற்றம் செய்தாலும் ஏடிஎம் வழியாக பணம் எடுத்தாலும் எல்லாமே அந்தந்த மாத கணக்கில்தான் வரும். அதுவும், ஒன்றிய வங்கியில் அட்டை வழியாக ரூ.25 ஆயிரம் மட்டுமே எடுக்கமுடியும். அதுதான் தினசரி கணக்கு. வணிக ரீதியாக பொருட்களை வாங்குவதிலும் அதே கட்டுப்பாடுதான். அதை மீறி செல்ல முடியாது. இப்படி செய்தால் ஒரு லட்சம் ரூபாயை எடுக்க எத்தனை நாட்களாகும்? நான்கு நாட்கள். ஆக மொத்தம் அனைத்தும் நஷ்டம்தான். யாருக்கு? கணக்கு வைத்துள்ள நமக்குத்தான்.
டெபிட் அட்டையின் பணம் எடுக்கும் அளவை மாற்றவே முடியாது. மாற்ற வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது வேலை செய்யாது. அவர்கள் வைத்துள்ள வரம்புதான் இறுதியானது. அப்புறம் என்ன மயி**** அதில் நாம் பணத்தின் அளவை தட்டச்சு செய்யும் வசதியை கொடுக்கவேண்டும்? இதே போல தன்னிச்சையாக கெட்டவார்த்தையை வெளியே கொண்டுவரும் பற்பல வேலைகளை ஒன்றிய வங்கியின் ஆப் கொண்டுள்ளது. அதிலும் புகார் கொடுப்பது வேறொரு ரக சித்திரவதை. புகாருக்கு மின்னஞ்சல் முகவரி, அனைத்திந்திய... என்று சொல்லி தொலைபேசி எண்கள் இருக்கும். இந்தி பேசுபவனிடம் தமிழ்நாட்டுக்காரன் பேச என்ன இருக்கிறது? குபுயோம் பற்றி, கணக்கில் காசு தரமாட்டேன் என செய்தி வருவதைப் பற்றி இரண்டுமுறை புகார் அனுப்பியும், ஒருமுறை கூட பதில் வரவில்லை. புகாரை பதிவுசெய்துகொண்டோம் நன்றி என்ற பதில்தான் வருகிறது. இங்கிலாந்து பெருநிறுவனம், இந்தியாவில் பொருட்களை விற்கிறது. அப்பொருட்களை வாங்கி பயன்படுத்திவிட்டு, உங்களுடைய கருத்தை அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் உடனே அதை பதிவு செய்துகொண்டு முறையான பதிலை அவர்கள் அனுப்பி வைக்கிறார்கள்.ஒரு பொருளை வாங்கி பயன்படுத்துபவரின் கருத்தை அந்தளவு மதிக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் உலக நாடுகள் முழுக்க வணிகம் செய்யமுடிகிறது. ஆனால், நமது இந்திய ஒன்றிய வங்கியோ அப்படியல்ல. ஆட்சியில் உள்ள மதவாத தலைவர்களின் நூல்களையோ, வேறு பொருட்களையோ மக்கள் பணத்தில் வாங்க போட்டிபோடுவார்கள். புகார்களை கவனிக்கவெல்லாம் எங்கே நேரம்?
இறுதியாக எனக்கிருந்த ஒரே வாய்ப்பு. ஏடிஎம் வழியாக பணத்தை எடுப்பது. சென்னையில் இருந்து பூர்விக ஊருக்கு வந்தபிறகு இந்திய ஒன்றிய வங்கி பெருநகரில் மட்டும்தான் கிளைகளை, ஏடிஎம்களை கொண்டிருக்கிறது என அறிந்தேன். காலதாமதமாகிவிட்டது. காசை எடுக்கவேண்டுமெனில் பிற ஏடிஎம்களில்தான் எடுக்கவேண்டும். இந்த வகையில் ஆறு முறை காசை எடுத்ததில் 434 ரூபாயை திருடிக்கொண்டனர். சேவைக்கட்டணமாம். நான் உள்ள கிராமத்தில் இருந்து ஆறு கி.மீ. தொலைவு சென்றால் சிறுநகரம் உண்டு. ஆனால், அங்குமே கூட இந்திய ஒன்றிய வங்கி இயங்கவில்லை. சரி, இயங்காவிட்டால் போய்தொலைகிறது. ஏடிஎம் ஆவது வைத்து இருக்கலாமே? ம்ஹூம்......
முடிந்தளவு வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும். நீங்கள் பூர்விகமாக எங்கு வாழ்கிறீர்களோ, வாழ்ந்தீர்களோ, அந்த பகுதி வங்கியில் பணத்தை போட்டுவைப்பது நல்லது. அனைத்து அரசு வங்கிகளும் கடந்த பத்தாண்டுகளில் எப்படி திருடலாம் கொள்ளையடிக்கலாம் காரணம் சொல்லிக்கொள்ளலாம் என துணிந்துவிட்டனதான். அதை நேரடியாக போய் கேட்டு தெரிந்துகொள்ளலாம். நானூறு கி.மீ. தொலைவில் வங்கி இருந்தால் எப்படி போய் வங்கியை அணுகுவது? அதற்கான போக்குவரத்து செலவு, உணவு இதெல்லாம் கணக்கு போட்டுப் பாருங்கள். பீதியாகிவிடும்.
ஏடிஎம் அட்டையின் செயல்பாடு ஐந்து ஆண்டுகளுக்கு கொடுக்கிறார்கள். இது தோராயமான புரிதலில் கூறப்படுவது மட்டுமே. அதை அடிக்கடி எடுத்துசோதிக்க வேண்டும். இதற்கு ஆப் தேவையில்லை. அட்டையை கையில் எடுத்து பார்த்தாலே எப்போது காலாவதி ஆகும் என அச்சிட்டிருப்பார்கள். கணக்கு வைத்துள்ள வங்கி பெருநகரிலும் நீங்கள் பூர்விக ஊரிலும் இருக்கும்படி சூழல் அமைந்தால் வங்கி கணக்கை சோதித்துக்கொண்டே இருப்பது நல்லது. அப்படியல்லாதபோது தலையை மொட்டையடிக்க முயல்வார்கள்..
கைபேசி சிம்களை வாங்கி குவிப்பது போல வங்கி கணக்குகளை வைத்திருக்க கூடாது. முடிந்தளவு குறைவாக இருக்கவேண்டும். ஒரு வேலையை விட்டு நின்றால், உடனே சம்பள கணக்கை துடைத்து பணத்தை பூர்விக முகவரியில் உள்ள வங்கிக்கு மாற்றுவது நல்லது. ஏனெனில் சம்பள கணக்கு, சேமிப்பு கணக்காக மாறும்போது விதிமுறைகள் மாறும். இதையெல்லாம் முன்பு கடிதம் எழுதி தெரிவித்தனர். இப்போது வெறும் குறுஞ்செய்தி மட்டுமே. காப்பீட்டு துறையில் கோலோச்சிய அரசு காப்பீட்டு நிறுவனம் கூட காப்பீடு நிறைவடைந்தால் அதை பயனாளிக்கு கடிதம் எழுதி தெரிவிப்பது இல்லை. இப்படியான பண்பாட்டை மின்னிலக்க இந்தியா திட்டம் உருவாக்கியுள்ளது. இதனால் யாருக்கு பயன் என்றால் யாருக்கோ?
வெள்ளை ஏடிஎம்களை இந்தியா 1, ஹிடாச்சி, டாடா இன்டிகேஷ் ஆகிய நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. இவற்றில் நீங்கள் பத்தாயிரம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம்தான். அவர்கள் எந்த சேவைக்கட்டணமும் வசூலிப்பதில்லை என்கிறார்கள். அப்புறம் எப்படி ஏடிஎம் சேவையை நிறுவி வணிகம் செய்யமுடியும்? சரி இருக்கட்டும். ஆனால், நீங்கள் வைத்துள்ள டெபிட் அட்டையை வழங்கியுள்ள வங்கி வெள்ளை ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் அதற்கும் காசை உங்கள் கணக்கில் இருந்து திருடிக்கொள்வார்கள். இப்படி திருடும் கட்டணத்தைப் பற்றி போனில் குறுஞ்செய்தி அனுப்ப மாட்டார்கள். ரகசியமாக வைத்துக்கொள்வார்கள். ஆப் வழியாக போய் பார்த்தால் திருடிய பணம் பற்றிய தகவலை தெரிந்துகொள்ளலாம். அதற்கு சேவைக்கட்டணம் என காரணம் சொல்வார்கள். நம்முடைய பொருட்களை திருடன் திருடிவிட்டான். திரும்ப அவனிடமே நாம் காசுகொடுத்து நம்முடைய பொருட்களை வாங்குகிறோம். இந்த உதாரணம், அரசு வங்கிகளின் போக்கை புரிந்துகொள்ள உதவும். நம் வீட்டில் திருடப்பட்ட பொருட்களை, திருடியவனிடம் காசு கொடுத்து வாங்குவது.. கசப்பாக இருக்கிறதுதானே? ஆனால், நடைமுறை உண்மை இப்படியாகவே உள்ளது.
ஆக மொத்தம் நாம் பணத்தை வங்கியில் போட்டு வைப்பது, அதை புழங்குவது என்பது கடினமாக மாறிவருகிறது. இதோ இப்போது வங்கிகளின் ஆப்பை பயன்படுத்தி போனுக்கு ரீசார்ஜ் செய்தாலும் அதற்கு ஒரு ரூபாய் கூடுதலாக போகும். டெபிட் அட்டையை, ரீசார்ஜ் செய்ய, பொருட்கள் வாங்க பயன்படுத்துகிறீர்களா, அதற்கென ஆண்டு இறுதியில் ஒரு தொகையை எடுத்துக்கொள்வார்கள். டெபிட் அட்டை வாடகைப் பொருள் போல, உங்கள் கையில் வைத்திருக்கும் வரை வங்கிக்கு வாடகையை கொடுத்தே தீரவேண்டும். நீங்கள் என்ன கொடுப்பது அவர்களே எடுத்துக்கொள்வார்கள். வங்கிகளுக்கு செய்யும் அனைத்தும் லாபம். நமக்கு இருப்பது அனைத்துமே நஷ்டம். இன்றைய வங்கித்தொழில் அப்படித்தான் இருக்கிறது. மின்சார கட்டமைப்பு முழுக்க உருவாக்கப்பட்ட பிறகு, மின் விளக்கு கண்டறியப்பட்டது. உடனே மக்களிடம் வரவேற்பு பெற்றது. ஆனால், மின்சார கட்டமைப்பு இல்லாதபோது, மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் என்னாகியிருக்கும்? அதேதான். எந்தவொரு பயனும் இல்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், மக்களுக்கு சேவைபுரியும் என அன்றைய பிரதமர் உத்தேசித்தார். ஆனால், அவர்களே கொள்ளைக்காரர்களாக மாறுவார்கள், மாற்றப்படுவார்கள் என யாரும் யோசித்திருக்க முடியாது... பரிதாபமான நிலைமைதான்.
இனி போகிற போக்கைப் பார்த்தால் பழைய திரைப்படங்களில் காட்டுவது போல பணத்தை தங்கமாக, நகையாக மாற்றி பெட்டிகளில் வைத்து பூட்டி வீட்டுக்குள் குழி தோண்டி புதைப்பது, அல்லது கோத்ரேஜ் லாக்கர் வாங்கி வைத்து பணத்தை பாதுகாப்பது மட்டுமே ஒற்றை வழியாக எஞ்சும் போல. அரசு வங்கிகள் நமக்கு வேறு எந்த வாய்ப்புகளையும் தரவில்லை.
குறிப்பு
மக்கள் பிரதிநிதியான எதிர்க்கட்சி தலைவருக்கே நீ பேசுவது உண்மை என்றால் சத்தியம் செய் என பகிரங்கமாக சுயாட்சி அரசு அமைப்பின் தலைவர் அச்சுறுத்தும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம்? எனவே, வங்கியின் பெயர்கள் கூறப்படவில்லை. மேற்சொன்னவற்றை என்னுடைய சொந்த அனுபவத்தின் பேரில், இழப்பின் அடிப்படையில் எழுதினேன்.இந்த சம்பவம் அனைவருக்கும் பொருந்தாது.
கருத்துகள்
கருத்துரையிடுக