ஒருவர், மக்கள் திரளின் முடிவுகளை பின்தொடர்வது ஏன்?
உளவியல்
கேள்வி பதில்கள்
அதிகாரத்தை எதிர்ப்பது எப்படி?
உண்மைகளை மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும். தொடர்ந்து நீங்கள் நம்புகிற உண்மைக்காக போராடவேண்டு்ம். இந்த போராட்டத்தில் யாருக்காக போராடுகிறீர்களோ அவர்களே கூட உங்களை இழிவு செய்யலாம். அரசு உங்களை பயங்கரவாத சட்டத்தில் கைதுசெய்யலாம். உங்கள் வீடு புல்டோசரால் இடிக்கப்படலாம். அமலாக்கத்துறை சொத்துக்களை பறிமுதல் செய்யலாம். வழக்கு பதிவு செய்து அலைய வைக்கலாம். ஆனால் பொதுநலனுக்கான போராடும், உண்மையைப் பேசும் மனிதர்கள் உலகமெங்கும் இதுபோன்ற நெருக்கடிகளை சந்தித்துதான் முன்னேறுகிறார்கள். இந்த முயற்சியில் அவர்கள் சிறைப்படலாம் அல்லது கொல்லப்படலாம். ஆனால், உங்களின் வாழ்க்கை உண்மையை பேசி மக்களுக்காக போராடுபவர்களுக்கான உரமாகும். முட்டாள்தனமான பணிதல் அரசை வலுப்படுத்தலாம். சர்வாதிகாரப் பாதையில் பயணிக்க ஆதரவளிப்பதாக அமையும். நெருக்கடி வந்தாலும் நேர்மையான அணுகுமுறையை கைவிட்டுவிடக்கூடாது. மதவாதம், அதன் தொடர்ச்சியாக மூடநம்பிக்கைகள், கடந்தகால வரலாற்று வெறுப்பு ஆகியவை நிகழ்கால மக்களின் வாழ்வை குலைத்து போட்டுவிடும். அவற்றை தடுப்பது சிந்தனையாளர்களின் பணி. அதை அவர்கள் தாக்கப்பட்டாலும், கொல்லப்பட்டாலும், சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்டாலும் கூட காலம் காலமாக செய்துகொண்டே இருக்கிறார்கள். பிழைப்புவாதிகள் அனைத்து சாதியிலும், மதத்திலும், இனத்திலும் உண்டு. கிடைக்கும் ஊதியத்திற்கு ஏற்ப சொல்லும் போலிக் கருத்துகள், செய்திகள் ஒலி அளவு மாறும். இந்துத்துவ கும்பல்கள் செய்யும் வன்முறைக் குற்றங்கள், அரசியலமைப்பு சட்டத்தை மீறியதாக இருந்தாலும் அவற்றை விதந்தோந்துவது அதிகாரத்திற்கு உடனே பணியும் ஆட்களும், அவர்களின் ஊடகங்களும்தான். மக்களை நேசிக்கிற சிந்தனையாளர்களோ, எழுத்தாளர்களோ அல்ல.
வேடிக்கை பார்க்கும் மனநிலை எப்படி உருவாகிறது?
விபத்து நடந்தால் பெரும் திரளாக உள்ள மக்கள் ரீல்ஸ் எடுக்கிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள். சிலர் அதே இடத்தில் நேரலை செய்கிறார்கள். ஏன் ஒருவரும் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்யவில்லை. இதற்கு காரணம், அதுதான் கூட்டம் இருக்கிறதே, அவர்களில் யாரேனும் உதவுவார்கள் என்ற நம்பிக்கையே.
ஒருவர் விபத்துக்குள்ளாகி இருக்கிறார். நிறையப் பேர் அவரைச் சுற்றி இருக்கிறார்கள், ஆனால், அவர்கள் வேறு யாராவது வந்து உதவி செய்வார்கள். நமக்கேன் வம்பு என தள்ளி நிற்கிறார்கள். இது ஒருவர் தன்னுடைய பொறுப்பை அறியாமல், வேண்டுமென்றே கைவிடும் செயல்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால், உதவியைப் பெறுவது எப்படி? கூட்டத்தில் உள்ள ஒருவரை தேர்ந்தெடுத்து உதவி செய்யுங்கள் என கோரலாம். அப்போது அவரோடு சேர்ந்து பிறரும் உதவி செய்ய முன்வரலாம். தமிழ்நாடு காவல்துறை முன்னர், யார் விபத்தில் ஒருவரை காப்பாற்றினார்களோ அவர்களை குற்றவாளியாக்கி விசாரிப்பது வழக்கம். இதை அரசு இப்போது மாற்றிக்கொண்டுவிட்டது. உதவி செய்தவர்களை காவல்துறை சித்திரவதை செய்யக்கூடாது என்று கூறியுள்ளது. நடைமுறையில் எப்படியோ?
உதவி செய்வதை ஊக்கப்படுத்துவது எப்படி?
உதவி செய்ததன் மூலம் ஒருவரின் வாழ்க்கை மாறியதை கதையாக, கட்டுரையாக எழுதலாம். வெளியிடலாம். அப்படி உதவியதை பிறர் பார்க்கும்போது உதவி செய்வதற்குத் தோன்றும். அப்படி செய்வதில் கூட சாதி, மதம், நிறம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஏதோ ஒருவகையில் மக்களுக்கு உதவி தேவைப்படுபவர்களுக்கு அது கிடைத்தால் மகிழ்ச்சிதானே?
பணத்தை சாலையில் கிடந்தது என எடுத்துக்கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம். காவல்துறை அதிகாரிகள் அதற்கு பரிசளிக்கிறார்கள் அல்லது பாராட்டுகிறார்கள். புகைப்பட செய்தி நாளிதழில் வருகிறது. இதெல்லாமே பிறருக்கு நேர்மையாக இருக்கவும், உதவி செய்யவும் ஊக்கப்படுத்தும்.
நன்றிக்கடனை தீர்ப்பது எதற்காக?
சில அறக்கட்டளை நிறுவனங்கள் சிறிய பரிசுப்பொருட்களை மக்களுக்கு வழங்கி கூடவே நன்கொடை படிவத்தை அனுப்பி வைப்பது வழக்கம். ஒருவர், எதைப் பெற்றாலும் பதிலுக்கு ஒன்றை தருவதற்கு முயல்வார். விதிவிலக்காக சோற்றைத் தின்றுவிட்டு அந்த வீட்டுக்கே துரோகம் செய்பவர்கள் உண்டுதான். அதை விட்டுவிடுவோம். பேரங்காடியில் இலவச சாம்பிள்கள் கொடுக்கப்படுவது கூட அந்த பொருட்களை நீங்களாகவே திரும்ப வந்து வாங்குவீர்கள் என்ற உளவியலை அடிப்படையாக கொண்டதுதான். நன்றிக்கடன் தீர்ப்பது என்பது ஒருவருக்கொருவர் உயிர் பிழைக்கவேண்டும் என்ற அடிப்படையில் உருவானதுதான்.
ஒருவர், கும்பலைப் பின்தொடர்வது ஏன்?
இத்தனை பேர் செய்திருக்கிறார்களே, தவறாக இருக்காது என தனிநபர்கள் முடிவெடுக்கிறார்கள். புதிய உணவகத்தை தேடுகிறார்கள். அதில் கூட்டமுள்ள உணவகத்தையே பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். உணவு நன்றாக இல்லாமல் இத்தனை பேர் சாப்பிடுவார்களா என்ன என்ற எண்ணமே இதற்கு காரணம். இது சரியானது என்று கூற முடியாது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கிறித்தவ கன்னியாஸ்த்ரிகளை அடித்து உதைத்த இந்துத்துவ கும்பல்கள், குழந்தைகளை கடத்துவதாக போலியான புகார்களை கொடுத்துள்ளனர். மதமாற்றம் என்று புகார் கொடுத்து இப்போது நிதானமாக வழக்கு வேறு குற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது. அடித்து உதைத்து குற்றங்களை ஏற்கச்செய்வதை யார் ஏற்பார்கள்? பார்ப்பன அரசும், பார்ப்பனர்களை நீதிபதியாக கொண்டுள்ள நீதிமன்றங்களும் ஏற்கும். எல்லாரும் வாங்கிட்டாங்க. அப்ப நீங்க என விளம்பரத்தில் சொல்லப்படுவது கூட இதே ரகம்தான். தனிநபராக பைத்தியக்காரத்தனம் குறைவு. கூட்டமாக இருக்கும்போது அது மட்டுமே இருக்கும். வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. நிறையப்பேர் செய்திருக்கிறார்கள். நாமும் செய்யலாம் தவறில்லை என்ற உளவியல் மோசமான தவறுகளுக்கு காரணமாக உள்ளது.
மூலம் - 365 டேஸ் சைக்காலஜி


கருத்துகள்
கருத்துரையிடுக