ஒரு காலத்தில் மோசடி நிறுவனங்கள், இன்று நம்பர் 1 நிறுவனங்கள்!
ஒரு காலத்தில் மோசடி நிறுவனங்கள், இன்று நம்பர் 1 நிறுவனங்கள்!
சீனா ஒரு காலத்தில் வெளிநாட்டு பொருட்களை ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்து தனக்கான பொருட்களை உருவாக்கி்க்கொண்டது. அங்கு கண்டுபிடிப்புகளே கிடையாது. காப்பி பேஸ்ட் மட்டுமே என்ற நிறைய கருத்துகள் கூறப்பட்டன. தொடக்க காலத்தில் இதில் உண்மை இருந்தாலும் ஒரு நாடு அப்படியே இருப்பதில்லை. இன்று சீனாவில் உள்ள சமூக வலைத்தளங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் பாதிப்பு இருக்கலாம். ஆனால், அவை வேறுபட்ட பல்வேறு வசதிகளை வழங்கி மக்களின் தினசரி வாழ்க்கையில் பங்களித்து வருகின்றன. அப்படி ஒரு நிறுவனத்தை இப்போது பார்க்கலாம். அதன் பெயர் சினா வெய்போ. 50 மில்லியன் பயனர்கள் இந்த சமூக வலைதளத்தில் உள்ளனர்.
இதை உருவாக்கியவர் தைவான் நாட்டைச் சேர்ந்த கை பு லீ. 1961ஆம் ஆண்டு பிறந்த லீ, அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு கணினி படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார். ஆப்பிள், சிலிகான் கிராபிக்ஸ், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவம் உண்டு. சீனாவின் பெய்ஜிங்கில் கூகுள் நிறுவனத்திற்காக வேலை செய்தார். அப்போது சீனாவில் ஸ்டார்ட்அப்களுக்கு நிதியுதவி செய்யும் திட்டங்களை இன்னோவேஷன் வொர்க்ஸ் நிறுவனம் தொடங்கிவிட்டது. ஏறத்தாழ நமது ஊரில் சிக் ஷாம்பு விற்கும் ரங்கநாதன் சிறந்த தொழில்முனைவோருக்கு விருது கொடுத்து பாராட்டி, தங்களது தொழிலுக்கு பயன்படுத்தி கொள்கிறாரே அதே முறைதான். ஷாவ்மி கூட இப்படி ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கி உயர்ந்ததுதான். அதற்கு ஆப்பிள் போன்களுக்கான மென்பொருட்களை உருவாக்கி கொடுத்த அனுபவம் இருந்தது. அதை வைத்து மலிவான விலையில் ஆப்பிள் போன்ற உருவத்தில் போன்களை தயாரித்து விற்று பெயரும் புகழையும் பெற்றனர்.
பைடு சீனாவில் தேடுதல் வேலைகளை செய்தாலும், உருவான காலத்தில் திருட்டுத்தனமாக படங்களைப் பார்க்கும் வலைத்தளங்கள், இசைப்பாடல்களைத் தேடவே பயன்பட்டது. வழக்குகள் பதியப்பட மெல்ல தனது பாதையை மாற்றிக்கொண்டது. 2013ஆம் ஆண்டு யூக்கு டூவு என்ற வீடியோ நிறுவனம், பைடு மீது காப்புரிமை வழக்கு தொடர்ந்து 2,50,000 யுவான்களை இழப்பீடாக பெற்றது. இதை சொல்வதால் பைடு இப்போதும் அப்படியான வரலாற்றைக் கொண்டுள்ளது என கூறவரவில்லை. தொடக்கம் அப்படி என்றாலும் அந்த நிறுவனம் தன்னை மெல்ல சட்டவிரோத காரியங்களிலிருந்து விலக்கிக்கொண்டு மேம்பட்டுள்ளது என்று கூறவிரும்புகிறேன். மருந்துகளில் கலப்படம், தரம் குறைந்த பொருட்கள் என அனைத்திற்கும் இதே கருத்து பொருந்தும்.
சீன நிறுவனங்கள் உலகளவில் முக்கியமான நிறுவனங்களை கையகப்படுத்தி சாதனையும் செய்து வருகின்றன. 2014ஆம் ஆண்டு, பன்றி இறைச்சி விற்பனையாளரான டபிள்யூஹெச் குழுமம், ஸ்மித்ஃபீல்ட் புட்ஸ் நிறுவனத்தை 7.1 பில்லியன் டாலர்களுக்கு கையகப்படுத்தியது. நில விற்பனை நிறுவனமான டாலியன் வாண்டா, அமெரிக்காவின் புகழ்பெற்ற ஏஎம்சி என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தை 2.6 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.
அமெரிக்கா சீனாவை இழிவுபடுத்தி பேசினாலும் சீனா, அமெரிக்காவில் செய்து வரும் முதலீடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அறிவியல் ஆய்வு, மேம்பாடுகளுக்கென சீன நிறுவனங்கள் நிதியை அதிகரித்து வருகின்றன. இன்று நீங்கள் வணிக இதழ்களின் சிறந்த நிறுவன பட்டியலை எடுத்துப் பார்த்தாலே அதில் சீன நிறுவனங்கள் இன்றியமையாதவையாக இடம்பெற்று இருப்பதைப் பார்க்கலாம்.
சீனாவின் லெனோவா பற்றி பார்ப்போம். 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம், மேசை கணினிகளை மட்டுமே விற்று வந்தது. இன்று 60 நாடுகளில் 160க்கும் மேலான டெக் பொருட்களை விற்று வருகிறது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா, பெய்ஜிங்கில் அலுவலகங்கள் உள்ளன. 2013ஆம் ஆண்டே அமெரிக்காவின் ஹெச்பியை பின்னுக்கு தள்ளிவிட்டது. லெனோவா, ஐபிஎம்பின் கணினிப் பிரிவை கையகப்படுத்தியது முக்கியமான செயல்பாடு. இன்று அந்த நிறுவனத்தை சீனாவைச் சேர்ந்த பிராண்டு என சுருக்க முடியாது. சர்வதேச கணினி பிராண்டு என கூறலாம். லெனோவாவின் தாய் நிறுவனம், லெஜண்ட் ஹோல்டிங்க்ஸ்.
கருத்துகள்
கருத்துரையிடுக