மாவோவுக்கு அடுத்த நிலையில் தன்னை வலிமைப்படுத்திக்கொண்டு வரும் ஷி!
ஷி ச்சின்பிங் செல்வாக்கும், கருத்துகளும்!
ஷி ச்சின்பிங் சிக்ஸியாங் - ஷி ச்சின்பிங் கருத்துகள் என்ற பெயரில் நூலொன்றை லியுமிங்ஃபு, வாங் ஸாங்யுவான் என்ற இரு கல்வியாளர்கள் வெளியிட்டனர். இந்த நூலை வெளியிட்ட நிறுவனம், ஸெஜியாங் வணிக நிறுவனம். நூல் ஆங்கிலம், சீனம் என இருமொழிகளில் வெளியானது.
இந்த நூல் பற்றி டாங்ஜியான் யான்ஜியு என்ற பொதுவுடைமைக் கட்சி இதழிலும் புகழ்ந்து எழுதப்பட்டது. இதே நூல் பற்றி, வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பொதுவுடைமைக் கட்சி பள்ளியில் வெளியாகும சூக்சி ஷிபாவோ என்ற இதழில் கட்டுரை ஒன்றை எழுதினார். அக்டோபர் மாதம் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற 19ஆவது பொதுவுடைமை கட்சி மாநாட்டில் ஷி ச்சின்பிங்கின் கருத்துகள் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டது. மாவோ, டெங் ஆகியோருக்கு பிறகு ஷி ச்சின்பிங்கின் கருத்துகள் பொதுவுடைமைக் கட்சியால் ஏற்கப்பட்டுள்ளது.
2012-14 ஆகிய காலகட்டங்களில் ஷி ச்சின்பிங் ஆற்றிய உரைகள் நூலாக ஷி ச்சின்பிங் - சீன அரசு நிர்வாகம் என்ற பெயரில் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த வரிசையில் இதுவே முதல் நூல். இந்நூல் மஞ்சள் நிறத்தில் ஷி ச்சின்பிங்கின் மார்பளவு புகைப்படத்தைக் கொண்டிருக்கும். நூலில், அதிபரின் 79 உரைகள் அச்சிடப்பட்டிருந்தன. இரண்டாம் தொகுதி 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் தொடங்கி, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலானது. இந்த நூல் ஒன்பது மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது, மேலும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என கூறப்பட்டது.
சீன கலாச்சார இயல்புப்படி நாட்டை சீர்திருத்தப் பாதையில் கொண்டு செல்வது, சட்டத்தின் ஆட்சியில் நாடு இயங்குவதை உறுதிப்படுத்துவது, உலக நாடுகளின் உறவை, மனித இனத்திற்கான பொது விதியாக மாற்ற முயல்தல், அரசியல் தலைமையில் கட்சியே அதிக வலிமை கொண்டது ஆகிய கருத்துகளை ஷி ச்சின்பிங் வலிமையாக வலியுறுத்தி இருந்தார்.
2035ஆம் ஆண்டில் பொதுவுடைமைக் கட்சி நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். நாடு, அரசு, சமூகம் என மூன்றிலும் சட்டங்களே இறுதியானது. சூழல் ரீதியாக நாட்டை மேம்படுத்தி, சீனாவை சிறந்த நாடாக மாற்றவேண்டும். பொதுவான நலன்களுக்கான உழைப்பதன் வழியாக சீன மக்கள் பாதுகாப்பான ஆரோக்கியமான மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை பெற முடியும். குறையாத ஊக்கத்துடன் சீனா தலைநிமிர்ந்து நிற்க முடியும்.
அதிபர் தனது கருத்துகளை மாநாட்டில் பேசி முடித்து மாநாடு நிறைவுற்றது. உடனே ரென்மிங் என்ற பல்கலைக்கழகம் அதிபர் ஷி கருத்துகளை ஆராய்ச்சி செய்ய மையம் ஒன்றை உருவாக்குவதாக அறிவிப்பை வெளியிட்டது. பொதுவுடைமைக் கட்சி, நாட்டில் பத்து ஆராய்ச்சி மையங்களை அங்கீகரித்தது. தனி கல்விக்கழகங்கள், அல்லது பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்கள் தொடங்கப்பட்டன. பட்டப்படிப்பு, ஆன்லைனில் படிப்புகள் என ஷியின் கருத்துகள் விளம்பரப்படுத்தப்பட்டன.
மூலம்
தி பொலிட்டிகல் தாட் ஆஃப் ஷி ச்சின்பிங்

கருத்துகள்
கருத்துரையிடுக