தி பொலிட்டிகல் தாட் ஆப் ஷி ச்சின்பிங் ! - book review
தி பொலிட்டிகல் தாட் ஆப் ஷி ச்சின்பிங்
ஒலிவியா செங், ஸ்டீவ் யுயி சங் ட்சங்
கட்டுரை நூல்
297 பக்கங்கள்
ஷி ச்சின்பிங் தனது அரசின் நிர்வாக சாதனைகளைப் பற்றி பிரசாரத்துறை மூலம் ஏராளமான நூல்களை எழுதி தொகுத்து வெளியிட்டுள்ளார். அவற்றை பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்த்து விற்று வருகிறார்கள். அந்த நூல்களை படித்த நூலாசிரியர்கள், அதை வைத்து ஷி என்ன யோசிக்கிறார், உண்மையில் அவரது நாட்டில் நடந்த சம்பவங்கள், அதைப் பின்பற்றி அவர் என்ன யோசித்தார், செய்தார். கட்சியினர் என்ன நினைத்தனர் என்று விளக்கமாக எழுதியிருக்கிறார்கள்.
ஷியின் ஆளுமை, கட்சியில் தன்னை வளர்த்துக்கொண்ட பாங்கு ஆகியவை தொடக்கத்தில் விளக்கமாக கூறப்பட்டுவிடுகின்றன. டெங், மாவோ ஆகியோரிடமிருந்து அவர் வேறுபடும் விதம் பற்றி மெதுவாக பல்வேறு திட்டங்களை அவர் எப்படி செயல்படுத்தினார், அதில் அடைந்த ஆதாயம் என கூறிக்கொண்டே வருகிறார்கள். நூலில் அத்தியாயம் தொடங்கும்போது அதில் கூறியுள்ள செய்திகள், இறுதியாக முடியும்போது படித்த விஷயங்கள் என்னென்ன என பாடநூல் போல வடிவமைப்பை பின்பற்றி இருக்கிறார்கள். இதுபோன்ற அமைப்பு எதற்கு என புரியவில்லை.
ஷி எழுதிய நூல்கள் அனைத்துமே பொதுவுடைமைக் கட்சியின் பதிப்பக குழு மூலம் கவனமாக செம்மை செய்யப்பட்டு வெளியிடப்படுபவை. அதாவது, அவர் உள்நாட்டில் பேசியவற்றில் கூறிய கருத்துகளில் பிழை இருந்தாலும் அவை திருத்தப்பட்டு வெளியிடப்படும். அவற்றை வைத்து ஷியின் சிந்தனை முறையைக் கணிக்க முயன்றிருக்கிறார்கள். அதோடு பல்வேறு நாளிதழ், இதழ்களில் வெளியான சீனாவின் அரசியல், குற்றம், பிரச்னைகளை எடுத்து வைத்து ஆராய்ந்து கருத்துகளை கூறியுள்ளனர். உண்மையில் இத்தனை விஷயங்களை ஆராய்ந்து நூல் எழுதுவது நிச்சயம் எளிதான பணி அல்ல.
சீனாவில் உள்ள பல்வேறு பிரச்னைகளை நூல் அடையாளப்படுத்துகிறது. பொதுவாக சீன பொதுவுடைமைக் கட்சி வெளியிடும் நூல்களில் எந்த போராட்டங்களும் பிரச்னைகளும் அடையாளப்படுத்தப்படாது. அரசியல் தலைவர்கள் அவர்களாக சமூக சமத்துவம் காக்க ஏதேனும் திட்டங்களை தீட்டுவார்கள், அதில் கிடைத்த வெற்றி, தோல்வியைப் பற்றி பேசுவார்கள். அவ்வளவுதான். மற்றபடி சீன தலைவர்களே கூட தனிப்பட்ட கருத்துகளை வெளியிட கட்சி அனுமதிப்பதில்லை.
நூலாசிரியர்கள் எழுதியுள்ள கண்ணோட்டத்தில் பார்த்தால், மாவா, டெங் ஆகியோர் கட்சியை முக்கியத்துவப்படுத்தினார்கள். மாவோவின் வாக்கே பொதுவுடைமைக் கட்சியின் கொள்கைகளாக மாறின. அதே இடத்தை அடைய ஷி முயன்று வருகிறார். அவர் செல்லும் வழியில் கட்சி பயணிக்கிறது. கட்சி, நாடு, ஷி என அனைத்தையும் மக்கள் நேசிக்கவேண்டும். இல்லையா நீங்கள் தேச விரோதி என முத்திரை குத்தப்படுவீர்கள். கேமரா, ஆப் என நவீனமாக கட்சி உறுப்பினர்கள், மக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ராணுவம் கூட ஷியின் ராணுவமாக மாறிவிட்டது என நூலில் கூறப்படுகிறது.ஓரிடத்தில் ஷியின் பேச்சுக்கு முரணான விஷயம் ஒன்றுள்ளது. அதுதான் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக பேசும் சீனா தைவான், வியட்நாம், இந்தியா ஆகிய நாடுகளை தாக்கியது... மேலாதிக்கத்திற்கு எதிராக பேசும் நாடு, அதே இடத்தை அடைந்து பிற நாடுகளை கட்டுப்படுத்த துடிக்கிறது என்பதுதான் அதிலுள்ள வினோதம்.
ஷி செய்வதெல்லாம் தனது அதிகாரத்திற்காக மட்டுமே. மக்களெனும் மந்தைக்கூட்டத்தை நம்ப வைக்க தேசபற்று, கட்சி மீது விசுவாசம், நாட்டின் மீது பாசம் என நிறைய வார்த்தைகளை பயன்படுத்துகிறார். நூலில் நிறைய இடங்களில் ஷி பயன்படுத்தும் வார்த்தைகள் குறியீடாக காட்டப்படுகின்றன. அதன் அர்த்தமும் கூறப்படுகிறது.
கோமாளிமேடை குழு

கருத்துகள்
கருத்துரையிடுக