பின்லாந்து கல்விமுறையில் என்ன சிறப்பு உள்ளது?
டீச் லைக் ஃபின்லாந்து
டிமோத்தி டி வாக்கர்
கல்வி கட்டுரை நூல்
அமெரிக்க ஆசிரியரான வாக்கர், பின்லாந்துக்கு பணிமாறி செல்கிறார். அங்கு ஹெல்சின்கி என்ற நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். அவரைப் பொறுத்தவரை வேலை என்பதில் ஓய்வே கிடையாது. மனிதனா, எந்திரமா என்று கேட்கும்படி உழைக்கவேண்டும் என பாடுபடுகிறார். இறுதியாகத்தான் தெரிகிறது. அப்படி பாடுபட்டு உழைக்கவேண்டியதில்லை. மாணவர்கள் உயருவதற்கு, கவனிப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்தால் போதும் என புரிந்துகொள்கிறார். அதற்காக ஏராளமான நூல்களைப் படித்து பல்வேறு சோதனை முறைகளை செய்து பார்க்கிறார். அதைப்பற்றிய அனுபவங்களை பகிரும் நூல்தான் இது.
பின்லாந்தில் உள்ள கல்விமுறை, கல்வி ஆராய்ச்சி பற்றி வாக்கர் முதலில் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அமெரிக்க முறையில் கல்வியை போதிக்கிறார். தன்னை சற்று நெகிழ்த்திக்கொள்வதில்லை இறுக்கமாகவே இருக்கிறார். அவர் மனம் எப்படி மெல்ல மாறுகிறது என்பதே நூல் விளக்குகிறது. நூலில் அதிகமுறை வரும் வார்த்தை, அமெரிக்காவில், அமெரிக்க கல்விமுறையில் என்பதுதான். பின்லாந்து எப்படிப்பட்ட நாடாக இருந்தாலும் சரி, அந்த நாட்டின் கல்விமுறையை நிதானமாக கவனித்தாலே நிறைய விஷயங்கள் புரியும். எதற்காக அமெரிக்க கல்விமுறை உத்திகளை பின்லாந்தில் கடைபிடிக்கிறார்? அப்படி கடைபிடித்தும் அதில் வெற்றி கிடைக்கவில்லை. பிறகே மெல்ல மனம் மாறுகிறார்.
வாக்கர் தொடக்கத்தில் செய்யும் சீர்திருத்த முயற்சி, அவருக்கானது மட்டுமே. பின்னாளில்தான் அது மாணவர்களுக்கானதாக மாறுகிறது. நூலில் ஏராளமான நூல்களை பரிந்துரைக்கிறார். அத்தனை நூல்களிலிருந்தும் நிறைய தகவல்களை நமக்கும் பகிர்கிறார். நூல் முழுக்க நிறைய கல்வி சோதனைகளை செய்து அதன் வழியாக அறிந்த உண்மைகளைக் கூறுகிறார். பின்லாந்தில் கற்ற கல்வி சார்ந்த ஆக்கப்பூர்வ யோசனைகளை கூறிக்கொண்டே வருகிறார். பின்லாந்தில் உள்ள கேலி சித்திரவதையை தடுக்கும் முறையைய விளக்கியுள்ளார். அதை அமெரிக்காவோடு ஒப்பிட்டுள்ளார். அப்பகுதி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
எந்த யோசனையாக இருந்தாலும் சரி, இறுதியாக அமெரிக்காவுக்கு வந்து நின்றுவிடுகிறார். வணிகரீதியான கல்வியை அமெரிக்கா வெற்றிகரமாக போதிக்கிறது. அவ்வளவுதான். அதற்காக அனைத்து சிந்தனைகளும் கண்டுபிடிப்புகளும் அமெரிக்காவில் மட்டும்தான் தோன்றும் என நினைக்க வேண்டுமா என்ன? கல்வி சார்ந்து நூல்களை வாசிக்கவேண்டுமா, இந்த நூலிலேயே ஆசிரியர் பத்துக்கும் அதிகமான நூல்களை பரிந்துரைக்கிறார். அவற்றை வாங்கி வாசிக்கலாம். பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டுமன்றி, ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்கள், யோசனைகளை நூல்கள் வழங்குகின்றன.
நன்றி
எழுத்தாளர் ச.மாடசாமி
அகரம் பவுண்டேஷனின் யாதும் இதழ்

கருத்துகள்
கருத்துரையிடுக