இந்தியா ஒலிம்பிக்கை நடத்தி ஆவதென்ன? - உடற்பயிற்சி கலாசாரமே இல்லாத மதவாத நாட்டின் வெட்டிப்பெருமை!
இந்தியா ஒலிம்பிக்கை நடத்தி ஆவதென்ன?
இந்தியாவில் உள்ள பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பை கடன் வாங்கி பல்வேறு வகுப்புகளை நடத்துவார்களே ஒழிய அடிப்படையிலான விளையாட்டை, உடற்பயிற்சியை ஒருவருக்கு வழங்க அனுமதிப்பதில்லை. இந்த லட்சணத்தில் இந்தியா போட்டியிடும் போட்டிகளில் வெற்றிவாகை சூடவேண்டுமென ஊடகங்கள் ஊளையிடுகின்றன. பாலியல் சுரண்டல், தாக்குதல், வன்முறை இதற்கெல்லாம் ஈடுகொடுத்து வீரர், வீராங்கனைகள் போட்டிக்கு செல்வதே பெரியது. அவர்கள் பதக்கம் வெல்வது அடுத்த சோதனை. அதில் சரிவு ஏற்பட்டால், உடனே அரசியல்வாதிகள் அரிசி, உப்பு, புளி கணக்கையெல்லாம் எடுத்து நிதானமாக படிக்கத் தொடங்குவார்கள்.
எந்த நாட்டிலும் வீரர்களுக்கு இப்படியான அவமானம், இழிவு நடந்ததில்லை. இந்தியாவில் இதெல்லாம் சாதாரணம், ஏனெனில் இங்கு சாதிக்கு ஒரு நீதி என்ற தர்ம அமைப்பு உள்ளது. அடிப்படையில் இந்தியாவில் விளையாட்டு கலாசாரம் கிடையாது. அதை யாரும் ஊக்கப்படுத்துவதுமில்லை. மாத சம்பளத்திற்கு மாணவர்களை தயாரிக்க பள்ளிகள் உதவுகி்ன்றன. படிக்கவேண்டும். வேலைக்கு போகவேண்டும். திருமணம் செய்துகொள்ளவேண்டும். இதுதான் டெம்பிளேட்டான வழிமுறை.
மற்றபடி விளையாட்டு பிடிக்கும் என்றால் ஹால்திராம் இனிப்பு, கார வகைகளை தின்றுகொண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பிற நாட்டினர் விளையாடுவதைப் பார்த்தால் போகிறது. இல்லையா, இருக்கவே இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம். அவர்கள் தரமான பார்ப்பன ஆட்களை தேர்ந்தெடுத்து விளையாட வைக்கும் போட்டிகள், வணிக ரீதியான வெற்றியைப் பெற்றுவிட்டன. தனியார் நிறுவனங்கள் வீர ர்களை ஏலம் எடுத்து விளையாட வைப்பதும் கூட நடக்கிறது. அதன் வருமானத்தை பார்ப்போமா?
2023-24 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பாதித்த வருமானம், 18,700 கோடி. ஐபில் போட்டிகள் மூலம் கிடைத்த தொகை 20 ஆயிரம் கோடி. இதற்கெல்லாம் ஒன்றிய அரசு வரி விதிப்பதில்லை. விளையாட்டு கலாசாரத்தை வளர்க்க வேண்டுமே? இல்லையெனில் நாடு என்ன ஆவது?
இந்து மதவாத கட்சி ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு பெண்கள், அதிகமாக பிள்ளை பெற்றால் போதும் என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறார்கள். பெண்கள் விளையாட்டுக்கு, ராணுவத்திற்கு வரவேண்டும் என்பார்கள். ஆனால், அப்படி வந்தவர்களை வல்லுறவு செய்வார்கள். ஊடகங்களில் இழிவு செய்வார்கள். இப்படியான போக்குள்ள நாட்டிற்கு விளையாட்டு ஒரு கேடா? வாக்கிங் போய்விட்டு வரும் வழியில் உள்ள சரவண பவனில் சாம்பார் வடை சாப்பிடுவதே பரமானந்தமாக இருக்கிறது. இதில் எங்கே வந்தது ஒலிம்பிக்கெல்லாம்? வெட்டிப்பெருமைக்கு ஏதாவது செய்யவேண்டுமே? அரசு எதையும் நடைமுறையில் செய்யாவிட்டாலும் கொள்கை, சட்டமாக உருவாக்குவதில் யாருக்கும் சளைத்தது கிடையாது. அந்த வகையில் விளையாட்டு மசோதா 2025 தயாராக இருக்கிறது.
பொதுவாக விளையாட்டு சங்கங்களை நடத்துபவர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு விளையாட்டு பற்றியெல்லாம் ஏதும் தெரியாது. குறிப்பிட்ட விளையாட்டு சங்கம் என்ன செய்கிறது, என்ன செய்யவேண்டும் என்பதும் தெரியாது. அவர்களின் விளையாட்டெல்லாம் இரவு படுக்கையில் நடப்பதுதான்.
இந்திய ஐக்கிய நாட்டை கரித்துக் கொட்டுவது போல தோன்றுகிறதா? நடைமுறையில் போட்டி முடிவுகள் படுமோசமாக உள்ளன. வேறு எப்படி சொல்வது? 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் இடம் 71. ஒற்றை வெள்ளி, ஐந்து வெண்கலத்தை பெற்றனர். 1976ஆம் ஆண்டு மான்ட்ரியல் ஒலிம்பிக்ஸின் போது, வெளியான இல்லஸ்டிரேட்டட் வீக்லி பத்திரிகையில், அட்டைப்பட கட்டுரையாக 600 மில்லியன் மக்கள் உள்ள நாட்டில் ஒற்றை தங்கப்பதக்கம் இல்லை என தலைப்பிடப்பட்டிருந்தது. இன்றும் அதே நிலைதான். தேதியை மட்டும் மாற்றினால் போதுமானது. 1.46 பில்லியன் மக்களாக மாறியிருக்கிறோம். 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் இந்தியாவின் இடம் 48. 2016ஆம் ஆண்டு, ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா 67ஆம் இடத்தைப் பிடித்தது. 2012ஆம் ஆண்டில் 57ஆவது இடத்தைப் பிடித்தது. குறைந்தபட்சம் பட்டியலில் இந்திய ஐக்கிய நாடு இருக்கிறதே என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
ஆசியாவின் மிகப்பெரும் பொருளாதார சக்தியான சீனாவில் விளையாட்டுக்கென தோராயமாக ஒதுக்கப்படும் தொகை 27,741 கோடி. அமெரிக்காவில் தனியாக விளையாட்டுக்கென பட்ஜெட் ஒதுக்கப்படுவதில்லை. அதற்கென உள்ள அமைப்புகள் வழியாக நிதி ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்படுகிறது. அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி, பாரா ஒலிம்பிக் கமிட்டி 2024ஆம் ஆண்டு, 388 மில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது. 233 மில்லியன் டாலர்களை விளையாட்டை பிரபலப்படுத்த செலவழித்துள்ளனர். தொழில்முறையாக விளையாடும் வீரர்கள் சம்பாதிக்கும் தொகையும் அதிகம். ஜப்பானில் 57 பில்லியன் டாலர்களை விளையாட்டுக்கென ஒதுக்குகிறார்கள்.
இந்தியா 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடத்தப்போகிறது என்றால் நம்ப முடிகிறதா? சொந்த நாட்டை வலிமையாக்கி பதக்கம் வெல்ல முடியாத நாடு, போட்டிகளை நடத்தி என்ன சாதிக்கப்போகிறது? வெட்டி கௌரவத்திற்காக போட்டிகளை நடத்தி வரிப்பணத்தை வீணாக்குவதுதான். அதில் வேறு எந்த ஆதாயமும் கிடைக்கப்போவதில்லை. பெருமைக்கு பிள்ளை பெற்று காண்டாமிருகம் என பெயர் வைத்த கதைதான்.
உதவிய கட்டுரை
வொய் பிட் ஃபார் ஒலிம்பிக்ஸ் - தேர் இஸ் நோ ஸ்போர்ட் கல்ச்சர் - மனிஷ் திவாரி


கருத்துகள்
கருத்துரையிடுக