இடுகைகள்

முருகானந்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீட்டிலிருந்தே அலுவலக வேலை - கடிதங்கள்

படம்
  வீட்டிலிருந்தே வேலை அன்புக்குரிய தோழர் இரா.முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? தங்கள் குடும்பத்தினர் நலமோடு இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எங்கள் இதழுக்கான வேலைகள் தொடங்கிவிட்டன. வேலைகள் அனைத்தும் இணையம் சார்ந்தது என்பதால் கட்டுரைகளை எழுதிய மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவேண்டும். வலி நிவாரணிகள் பற்றி படிக்க நினைத்தேன். அதற்கான நூல் கிடைத்தது. போனில் அதனைப் படித்து வருகிறேன். நேரு பற்றிய தமிழ் நூல் எழுதி வருவதைச் சொல்லியிருக்கிறேன் அல்லவா? இன்னும் பதினைந்து பக்கங்கள் எழுதினால் போதும். சரிபார்த்து வெளியிட்டு விடலாம்.  நன்றி ச.அன்பரசு 2.4.2021 படம் பிக்சாபே

இலங்கையின் அரசியல் நிலைமையை சொல்லும் கதைகள்! கடிதங்கள்

படம்
  இலங்கை சிறுகதைகள் - உறவுப்பாலம் அன்புள்ள நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு,  வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை இரண்டாவது முறையாக நடைமுறைக்கு வந்திருக்கிறது. இப்போது நான் சென்னையிலுள்ள அறையில் இருக்கிறேன். ஊருக்கு வரவில்லை. காலைக்கதிர் அலுவலகத்தில் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு வந்துவிட்டது. நான் உறவுப்பாலம் என்ற இலங்கை சிறுகதை தொகுப்பை படித்து முடித்தேன்.  சிங்களக்கதைகளும், ஆங்கிலக் கதைகளும் நன்றாக இருந்தன. தமிழ்க்கதைகளும் நன்றாக இருந்தன. தமிழ்கதைகள் தேறவில்லை. கணியம் சீனிவாசனிடம் வாங்கி வந்த இந்திய பயணக் கடிதங்கள் நூலை படித்து வருகிறேன். கடல் மார்க்கமாக  இந்தியாவுக்கு வரும் ஆங்கிலப் பெண்மணி எலிசாபே சந்தித்த அனுபவங்கள் கடிதமாக உள்ளன.  நூறு பக்கங்கள் படித்துள்ளேன். அக்களூர் ரவியின் மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது.  நன்றி! ச.அன்பரசு 16.3.2021

அதிகரித்து வரும் வெப்பம்! கடிதங்கள்

படம்
  நேரு அன்புள்ள நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு,  வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? இங்கு வெப்பம் அதிகரித்து வருகிறது. அறையில் நீர் தட்டுப்பாடு பிரச்னை வரும் என நினைக்கிறேன். புத்தக காட்சியில்  வாங்கிய இலங்கை சிறுகதைகளை படித்து வருகிறேன். 2 சிறுகதைகளை படித்துள்ளேன். தொகுப்பு மொழியாக்கம் கண்ணையன் தட்சிணாமூர்த்தி.  நேருவின் போராட்டகால சிந்தனைகள் நூலை அடுத்து படிக்கவேண்டும். அறிவியல் மொழிபெயர்ப்பு  நேர்காணல் நூலை எழுதி அமேசானில் பதிவிட்டேன். ஓராண்டாக தள்ளிப் போய்க்கொண்டிருந்த பணி. இப்போதுதான் அதற்கு நேரம் கிடைத்தது. நூலை எழுதி தொகுத்து பதிவிட்டுவிட்டேன்.  நேரு பேசிய சொற்பொழிவு நூலை நடப்பு ஆண்டில் எழுதிவிட நினைத்துள்ளேன். என்னளவில் அதனை சரியாக செய்ய முயல்கிறேன். அதிர்ஷ்டம் கால் அப்பியாசம் முக்கால் என்பதுதான் நிலை. நன்றி ச.அன்பரசு 8.3.2021

வடகிழக்கு கலாசார விஷயங்களை பேசும் சிறுகதை நூல்! - கடிதங்கள்

படம்
  அசாம் அன்புள்ள நண்பர் இரா. முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? கடந்த சில மாதங்களாக ஷர்ட், பேண்ட் என எதையும் வாங்கவில்லை. நேற்று பேண்ட் ஒன்று வாங்கினேன். ஷர்ட் பீசாக வாங்கி தைக்கவேண்டும். தற்போது சுப்பாராவ் மொழிபெயர்ப்பில் லைபாக்லை ஆன்ட்டி சிறுகதைத் தொகுப்பு படித்து வருகிறேன்.  ஐந்து சிறுகதைகளை படித்திருக்கிறேன். இக்கதைகள் பழங்குடி மக்களின் பண்பாடு, வேறு இனங்களுக்கு இடையே ஏற்படும் சண்டைகள், இழப்புகள் பற்றி பேசுகின்றன. பாசனின் பாட்டி சிறுகதை உணர்ச்சிகரமான கதை. வங்காளி குடும்பத்திற்கும், பழங்குடி குடும்பத்திற்குமான உறவை பேசுகிறது.  எங்கள் இதழ் வேலைகள் எப்போதும் போல நடந்துகொண்டிருக்கிறது. எழுதுவதில் வாக்கிய அமைப்பு பிரச்னை உள்ளது என அலுவலக சகா பாலபாரதி சொன்னார். எனவே, கவனமும், கருத்துமாக எழுத முயன்று வருகிறேன். வேகமாக எழுதும்போது சிலசமயம் பத்திகளிடையே தொடர்பு அற்று போகும் வாய்ப்புள்ளது.  20 நேர்காணல்களைக் கொண்ட நூல் தயார் செய்துவிட்டேன். இன்னும் சில வேலைகள் பாக்கி. தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டு இருப்பீர்கள். உடலை கவனித்துக்கொள்ளுங்கள்.  நன்றி ச.அன்பரசு 3.3.2021

உறுப்புகளை இழந்தாலும் அநீதிக்கு எதிராக குரல் உயர்த்திய பாடகன்! - கடிதங்கள்

படம்
  துணிவின் பாடகன் பாந்த்சிங் அன்பு நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? அறுபத்துமூவர் விழா இறுதிப்பகுதியை எட்டியிருக்கிறது. மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவில் விழா என்பதால் எப்போதும் போல கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. நோய்த்தொற்று காலத்தில் விழாவை நிறுத்தமுடியாமல் நடத்துகிறார்கள். ஏராளமான போலீஸ் நாற்புறங்களிலும் குவிந்து விட்டனர்.  துணிவின் பாடகன் பாந்த்சிங் என்ற நூலைப் படித்து வருகிறேன். 175 பக்கங்கள் படித்துவிட்டேன். இன்னும் நூறு பக்கங்கள் பாக்கியாக உள்ளது. ஜாட் சாதி வெறியர்களால் இருகைகளும், ஒரு காலும் வெட்டப்பட்டு உயிர்பிழைத்தவர் பாந்த்சிங். இவரது மூத்த மகளான பல்ஜித்தை மேல்சாதி இளைஞர்கள் பாலியல் வல்லுறவு செய்கிறார்கள். அதனை காவல்துறையில் பதிவு செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க பாந்த்சிங் முயன்றதற்காக அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நிருபமா தத் என்ற பத்திரிகையாளர் எழுதியதை கமலாலயன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.  நீங்கள் இந்த சம்பவம் பற்றிய செய்தியை முன்னதாக நாளிதழ்களில் படித்திருப்பீர்கள். தெஹல்கா, டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய இதழ்கள் மட்டுமே பாந்த்சிங் பற்ற

இப்படியும் நிதியுதவிகளை பெறலாம்! - கடிதங்கள்

படம்
  நன்கொடை மிரட்டல் அன்பு நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நேற்று பிக்பஜார் கடைக்கு டீஷர்ட் வாங்க சென்றேன். வடபழனியில் தனியாக கடையை அமைத்துள்ளார்கள். துணியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென இரண்டு டிப்டாப் டை கட்டாத ஆட்கள் எங்களை அணுகினர். குழந்தைகள் பசியால் இறக்கின்றனர் என்பதை சொல்லி புள்ளிவிவரங்களைச் சொன்னார்கள். எதற்கு என்னால் நாங்கள் அதற்கு 5 ஆயிரம் தொடங்கி பல்லாயிரம் வரை தானம் கொடுக்கலாமாம். 500 ரூபாய் டிஷர்ட் எடுக்க வந்து ஐயாயிரம் ரூபாய் தானம் கொடுக்கும் தைரியம் எனக்கு இல்லை.  பிக் பஜார் கடையில் இதுபோல வாடிக்கையாளர்களை மிரட்டும் ஆட்கள் புதிதல்ல. இதற்கு முன்னால் வங்கி ஆட்களை உள்ளே விட்டு கிரடிட் கார்டு வாங்கிக்கொள்ளுங்கள் என மிரட்டுவார்கள். இப்போது இப்படி. நேருவின் போராட்டகால சிந்தனைகளை படிக்கத் தொடங்கியுள்ளேன். மதம் பற்றிய அவரது உறுதியான சிந்தனை ஆச்சரியப்படுத்துகிறது.  நன்றி! ச.அன்பரசு  22.3. 2021

தொழிலை தொடங்கி நடத்த நெஞ்சம் முழுக்க துணிச்சல் கொண்டவர்! - கடிதங்கள்

படம்
தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் அன்புள்ள தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இன்று காலை 5.45க்கு தாம்பரம் பஸ் பிடித்தேன். கணியம் சீனிவாசன் சார் வீட்டுக்கு போவதுதான் திட்டம். சானடோரியம் பஸ் ஸ்டாப்பில் இறங்கிவிட்டு பஸ் டிப்போவில் ஒருமணிநேரம் உட்கார்ந்திருந்தேன். அங்கு தினசரி பேப்பர்களை வாங்கிப்படித்தேன். பிறகு, எழுந்து சாலையைக் கடந்து எதிரே தெரிந்த உணவகத்திற்கு சென்று நான்கு இட்லிகளை சாப்பிட்டேன். பிறகு, அருகில் இருந்த காய்கறிக்கடைக்கு சென்று பழங்களை வாங்கினேன்.  பிறகுதான் சீனிவாசன் சாரை அழைத்தேன். பைக்கில் வந்து வீட்டுக்கு அழைத்துப்போனார். நான் முதலில் அவர்கள் வீட்டுக்குப் போனபோது வியன் என்ற பையன் இருந்தான். இப்போது கைக்குழந்தையோடு இயல் என்ற சிறுமியும் இருந்தாள். அந்தளவு இடைவெளி ஆகிவிட்டது. நிறைய நேரம் பேசிவிட்டு, வீட்டில் சாப்பிட்டுவிட்டு சில புத்தகங்களை படிக்க வாங்கி வந்தேன்.  ரிச்சர்ட் பிரான்சன் - என் சொக்கன் எழுதிய நூலை அவரது வீட்டிலேயே படித்துவிட்டேன். 174 பக்கம்தான். தொழில் அதிபர்களைப் பற்றி படிப்பது எப்போதும் எனக்கு பிடித்தமானது.ரிச்சர்டின் வாழ்க்கையில் அவரது

மாரடைப்பில் இறந்துபோன பேசாத தாய்மாமன்! - கடிதங்கள்

படம்
நூலகத்திற்கு நூல்களை வழங்குதல் அன்பு நண்பர் இரா. முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா? அண்மையில் எனது தாய்மாமன்களில் ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். பெரிய காரியம் காரணமாக அலைந்துகொண்டிருக்கிறேன். இருபத்தைந்து ஆண்டுகளாக எங்கள் வீட்டோடு பேச்சுவார்த்தையே இல்லாதவர், கந்தசாமி மாமா.  கடந்த மூன்று ஆண்டுகளாக அம்மாவோடு போனில் பேசிக்கொண்டிருந்தார். இதெல்லாம் அவரது இறந்து கிடந்த உடலைப் பார்க்கும்போது நினைவுக்கு வந்தது. அம்மா கண் ஜாடை காட்ட, அவரது உடலை தொட்டுக் கும்பிட்டுவிட்டு வந்துவிட்டேன். விரைவில் ஆபீஸ் செல்லவேண்டும். வரச்சொல்லி அழைப்பு வந்துவிட்டது. கொரோனா காரணமாக சம்பளத்தையும் குறைத்துவிட்டார்கள். இருக்கும் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள சம்பள வெட்டையும் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.   வீட்டிலிருந்து வேலைபார்க்கும் போது தஞ்சை ப்ரகாஷ், தி.ஜானகிராமன், வர்க்கீஸ் குரியன் ஆகியோரின் நூல்களைப் படித்தேன். அதுவே மகிழ்ச்சி. திருவண்ணாமலையில் கிடைத்த நம்மாழ்வார் நூல்கள், எனது படிப்பிற்காக வாங்கிய அனிமேஷன் நூல்களை வடக்குப்புதுப்பாளையும் ஊர்ப்புற நூலகத்திற்கு கொடுத்துவிட்டேன். நிறைய நூல்களை வைத்துக

காவரி ஆற்று வெள்ளம் போல அலைபுரளும் காமம்! கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் அன்புத்தோழர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு,  வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? வேலை இப்போது முழுக்க இணையம் சார்ந்து மாறிவிட்டது. சமாளித்து செய்து வருகிறேன். கரமுண்டார் வூடு நாவல் படித்துக்கொண்டிருக்கிறேன். கள்ளர்களுக்கும் பள்ளர்களுக்குமான பல்லாண்டு கால உறவை நாவல் பேசுகிறது. கள்ளர்களின் ஆவேசமும், கட்டற்ற காம உறவுகளும் பள்ளர்களுக்குள் உருவாக்கும் மோதல், பிரிவினை பற்றியதே நாவல். இதனை பேச்சு மொழியில் எழுதியுள்ளார் தஞ்சை ப்ரகாஷ்.  தஞ்சையில் வாழும் கள்ளர், பள்ளர் மக்களை இயக்குவதும், செயலின்மையை ஏற்படுத்துவதுமாக காமமே உள்ளது. காவிரி ஆற்றில் கட்டப்பட்ட பழமையான கரமுண்டார் வூடு அங்கு வரும் வெள்ள நீரின் தன்மைக்கு ஏற்ப தன்னை சமாளித்துக்கொண்டதா இல்லையா என்பது கூட குறியீடுதான். அடுத்து அங்கு அந்த வீட்டை தலைமை ஏற்க வரும் ஒருவனுக்காக பல்வேறு வகையிலும் காத்திருப்பது கதையை வாசிக்க வைக்கும் இடம். வயதான காலத்திலும் கரமுண்டார் ஆண் வாரிசுக்காக மனைவியின் பின்னாடியே சுற்றுவதும், உமா, உடலின் பொறுமலை சகிக்க முடியாமல் கலியனைத் தேடிப்போவதும், காத்தாயம்மா பத்தாயக்கட்டுக்குள் தன்னை இருத்தியப

கள்ளம் இல்லாத மனத்துடன் கலையை வளர்க்க முயல்பவனின் கதை! - கடிதங்கள்

படம்
  கள்ளம் -எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் அன்பு நண்பர் முருகுவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஆர்ச்சீவ்.ஆர்க் என்ற தளத்தில் பள்ளத்தாக்கு என்ற சிறுகதையைப் படித்தேன். மைதிலி என்ற பெண்ணின் சுதந்திர வாழ்கையைப் பேசுகிற கதை. தஞ்சை ப்ரகாஷின் மொழியில் பெண்கள் தைரியமாகவும், தனித்துவமாகவும் எழுந்து நிற்கிறார்கள். முக்கியமான அம்சம், மைதிலியைப் பெண் பார்க்க வரும் ஆண்கள் பற்றியது.  வர்க்கீஸ் குரியன் எழுதிய  எனக்கும் ஒரு கனவு  நூலை இரண்டாம் முறையாக படித்தேன். குரியன் போன்றவர்களின் அர்ப்பணிப்பு மீதான ஈர்ப்பு எனக்கு குறையவே இல்லை. திரிபுவன்தாஸ் படேலின் பேச்சைக் கேட்டு பணிபுரிய ஒப்புக்கொண்ட வர்க்கீஸின் முடிவு முக்கியமானது. விவசாயிகளை வலுவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் அமுலுக்கு முக்கியமான பங்குண்டு.  1950 முதல் 1988ஆம் ஆண்டுவரை மேலாளர் பதவியில் ரூ.5 ஆயிரத்தை சம்பளமாக வாங்கிக்கொண்டு வேலை செய்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது. அரசியல்வாதிகளில் சுயநலமாக செயல்பட்ட ஜெகஜீவன்ராம் போன்றோரை நேரடியாகவே விமர்சித்து எழுதியிருக்கிற துணிச்சல் பாராட்டத்தக்கது. குரோடி, ஜெகஜீவன்ராம், நேரு, ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி ஆகியோ

இறுதியாத்திரை அனுபவத்தில் அப்பாவின் நினைவுகள்! - கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இன்றுதான் இங்கு வெயில் லேசாக அடிக்கிறது. விரைவில் சென்னை ஆபீசுக்கு வேலைக்கு வரச்சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்.  அறையில் தங்கவில்லை என்றாலும் வாடகையை மாதம்தோறும் கொடுத்து வருகிறேன். அறையைத் தக்க வைக்க வேறு வழியில்லை. எம்.டி. வாசுதேவன் நாயரின் இறுதி யாத்திரை நாவலைப் படித்தேன். 130 பக்கம் கொண்ட நாவல் இது. புற்றுநோயால் இறந்துபோன அப்பாவின் இறுதிச்சடங்கிற்கு வரும் நான்கு மகன்களைப் பற்றிய கதை. நான்கு மகன்களின் வாழ்க்கையில் அப்பாவின் பங்கு, அப்படி எப்படி இருந்தார் என்பதை விவரிக்கிறார் ஆசிரியர்.  கேரளம், இலங்கை என பயணிக்கும் கதையில் அனைத்து இடங்களையும் சிறப்பாக அனுபவித்து உணரும்படி எழுதியிருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம், மொழிபெயர்ப்பாளரான சைலஜாதான். பொருளாதாரத்தில் முக்கியமான வார்த்தைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதுதொடர்பான நூலில் இன்னும் நூறு பக்கங்கள் மிச்சமுள்ளன.  அம்பேத்கரின் இந்துமத தத்துவம் என்ற நூலை எடிட்டர் கே.என்.சிவராமன் பரிசாக வழங்கினார். அதன் இரு பகுதிகளைப் படித்துள்ளேன். இன

எட்கர் ஆலன்போவின் இறந்தகாலம், நிகழ்காலத்தை ஒப்பிடும் கதை! - கடிதங்கள்

படம்
  அன்பு முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா?  எட்கர் ஆலன்போவின் மம்மி பற்றிய கதையை இப்போது வாசித்தேன். இன்னும் இரண்டு கதைகள் பாக்கியாக உள்ளது. எகிப்திலிருந்து பெறப்பட்ட மம்மிக்கு மின்சாரம் அளிக்கப்பட அது பேசத் தொடங்கிவிடுகிறது. அந்தக்காலம், இந்தக்காலம் என உரையாடல் தீராத விவாதமாகிறது.  பீடிஎப் வடிவில் நிறைய கதைகள் உள்ளன. அவற்றை முடிந்தளவு நேரமொதுக்கி படிக்கவேண்டும். குரங்கு வளர்க்கும் பெண் - மோகனரங்கன் மொழிபெயர்த்த கதைகள் படித்தேன். இதில் அனைத்து கதைகளும் வாசிக்க நன்றாக இருந்தன. கார்சியா மார்க்வெஸ் எழுதிய கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை என்ற கதை நீளமானது. வாசிக்க மனம் கனக்கக் கூடியதும் கூட. ஓய்வூதியத்தை 15 ஆண்டுகளாக எதிர்பார்த்து வாழும் ராணுவ வீரர் ஒருவரின் கதை.  உள்நாட்டுப் போர்களால் சீரழிந்த நாட்டை உரையாடல்கள் வழியாக அறிய முடிகிறது.  தலைப்பில் அமைந்த குரங்கு வளர்க்கும் பெண், இங்கர் என்ற பெண் மீது ஒருவருக்கு ஏற்படும் காதலை  விவரிக்கிறது. இது பித்தேறிய காதல்வகை. ரேமண்ட் கார்வர் எழுதிய நகர கதைகள் சிறியவை என்றாலும் படிக்க சிறப்பானவை.  நன்றி ச.அன்பரசு 6.1.2021

அதிசயங்கள் இல்லாத மனிதரின் வாழ்க்கை கதை! கடிதங்கள்

படம்
  அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் ஃபேஸ்புக்கில் எழுதும் பதிவுகளை படித்து வருகிறேன். அரசின் விதிகள் பற்றியும் அதன் செயலின்மை பற்றியும் பகடியாக எழுதுவது நன்றாக இருக்கிறது. வீடியோக்களைப் பார்க்கவில்லை. எழுத்துகளை மட்டுமே படித்தேன்.  எங்கள் பத்திரிகைக்கான வேலைகளை வீட்டிலிருந்தே செய்து வருகிறேன். இந்த வேலை எத்தனை நாட்கள் இருக்கும் என்று தெரியவில்லை. வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறைக்கு இன்னும் உடல், மனம் இரண்டுமே பழகவில்லை.  பூனாச்சி - பெருமாள் முருகன் எழுதிய நாவலைப் படித்தேன். ஆடு தன்னுடைய பார்வையில் உலகைப் பார்த்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் நாவல் எழுதப்பட்டுள்ளது.  ஆட்டுக்கு காது குத்தி எண் பதிவது என்ற முறையில் அரசின் செயல்பாடுகளை கடுமையாக பகடி செய்கிறார் ஆசிரியர். இப்படி செல்லும் சில இடங்கள் அதிகமாக நீள்கிறதோ என்று தோன்றுகிறது. குறிப்பாக ஏழு குட்டிகளை ஆடு ஈன்றபிறகு அதைப்பற்றி அரசு அதிகாரிகள் கேள்வி கேட்கும் இடம். குருதேவ் எனும் பானுமதி நரசிம்மன் எழுதிய ரவிஷங்கரின் சுயசரிதையைப் படித்தேன். நூல் எளிமையாக ரவிஷங்கர் அவர்களின் வாழ்க்கையை விவரிக

புதிய துப்பறியும் விவகாரத்தை விளையாட்டுத்தனமாக கண்டுபிடிக்கும் ஆத்ரேயா! - கடிதங்கள்

படம்
  சாய் சீனிவாஸ் ஆத்ரேயா  அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? கடந்த மாதம் எங்களுக்கு பாதி நாட்களிலேயே வீட்டிலேயே வேலை பார்ப்பதற்கான அனுமதியை வழங்கிவிட்டார்கள். அதற்காக சம்பளத்தை முழுக்க கொடுக்க முடியுமா? பாதிதான் கொடுத்தார்கள். இந்த மாதம் முழுக்க விடுமுறை என்று சொல்லிவிட்டார்கள்.  விஸ்வரூபம் எண்ட மூரி வீரேந்திரநாத்தின் நாவல் ஒன்றை படித்தேன்.  ராமகிருஷ்ணன் என்ற முன்னாள் ராணுவ வீரன் ஒருவனை காதலை காரணமாக காட்டி அணு ஆயுத ரகசியங்களை திருடுகிறது தாலிபன். இதைவைத்து சாரங்கபாணி என்ற விஞ்ஞானியை பயன்படுத்தி ஆயுதங்களை தயாரித்துத் தர சொல்லுகிறது. அவனையும் அவன் மனைவியை தந்திரமாக அவனே கொன்றான் என்று தடயங்களை உருவாக்கி மிரட்டுகிறது. இவற்றை ராமகிருஷ்ணன் எப்படி முறியடித்து இந்தியாவை காப்பாற்றுகிறான். தாலிபன் தீவிரவாதிகளை கொல்கிறான் என்பதுதான் கதை. 336 பக்க கதையில்  நாம் இந்தியா, இரான், ஆப்கானிஸ்தான், டெல்லி, பாகிஸ்தான் என பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கிறோம். தமிழ் மொழிபெயர்ப்பு கௌரி கிருபானந்தன்.  விறுவிறுப்பான தேசபக்தி நாவல். தொடக்கத்தில் வரும் காதல் உரையாடல்கள் நன்றாக இருக்கி

விற்க முடியாமல் நின்றுபோன ஆங்கில மாத இதழின் அச்சுப்பதிப்பு! கடிதங்கள்

படம்
  பௌண்டைன் இங்க் மாத இதழ் அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  சென்னை முழுவதும் கொரோனா பீதியில் தவித்து வருகிறது. சானிடைசர், மாஸ்க்,  ஆகியவற்றுக்கு பெரும் தட்டுப்பாடாக உள்ளது. இந்த நேரத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை, வைரஸ், பாக்டீரியா தொற்று நோய்களை மையமாக கொண்ட திரைப்படங்களை தொகுத்து பட்டியலிட்டு செய்தியை வெளியிடுகிறார்கள். விநோதமான மனிதர்கள்.  காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு போனாலும் குறிப்பிட்ட டிகிரியில் இருக்கவேண்டுமென திருப்பி அனுப்பிவிடுகிறார்கள் என்று செய்தியைப் படித்தேன். அரசு தன் பொறுப்பை இப்படித்தான் செய்கிறது என நண்பர் பாலபாரதி அலுத்துக்கொண்டார். மத்திய அரசு தொற்றுநோய்க்கு எதிராக தயாராக இருப்பதாக கூறினாலும் உண்மையில் பாதிப்பை சரிவர உணரவில்லை என்றுதான் தெரிகிறது.  பீஷ்மா என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன். இயற்கை விவசாயத்திற்கும், வேதிப்பொருள் விவசாயத்தை வலியுறுத்தும் நிறுவனத்திற்குமான சண்டைதான் கதை. படம் நெடுக வரும் காமெடிதான் படத்தை பார்க்க வைக்கிறது.  பௌண்டைன் இங்க் என்ற ஆங்கில மாத இதழின் அச்சுப்பதிப்பு நிறுத்தப்படுகிறது. அந்த இதழ் இனி டிஜிட்டல

லா.ச.ராவின் நுட்பமான உரையாடல்கள்! கடிதங்கள்

படம்
  அன்புள்ள தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் பகலில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரவில் அதன் வெளிப்பாடாக புழுக்கம் அதிகமாக உள்ளது.  மீனோட்டம் - லா.ச.ரா எழுதிய சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஆறு கதைகளைப் படித்தேன். அதில் இரண்டு மட்டும்தான் பிடிபட்டது. மீதி பலவும் நுட்பமான விஷயங்களைக் கொண்ட உரையாடல்கள். லா.ச.ரா அவரது சொந்தங்கள் கூட பேசுவது போலவே இருப்பதால் அதனை எளிதில் தொடர்புபடுத்திக்கொண்டு ஆர்வமாக படிக்க முடியவில்லை. மின்னூலாக படிப்பதில் அதிகம் சோதித்த நூல் இது. படிப்பை கைவிட்டுவிட்டேன்.  குமுதம் தீராநதி படித்தேன். குழந்தை எழுத்தாளர் கோதை சிவகண்ணகி பேட்டி நன்றாக வந்திருந்தது. இதழை ஆசிரியர் மலர்வதி ஒற்றையாளாக செய்கிறார் போல. இதழ் முழுக்க அவரின் கைவண்ணம்தான் அதிகம்.  சப்தரிஷி லா.ச.ரா எழுதும் தொடர் பரவாயில்லை ரகத்தில் இருக்கிறது. படிக்கலாம். ரணரங்கம் என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன். சர்வானந்த் நம்பிக்கையுடன் நடித்த கேங்க்ஸ்டர் படம். காலத்தில் முன்னும் பின்னுமாக காட்சிகள் மாறி மாறி ஓடுகின்றன. கல்யாணி பிரியதர்ஷன் பிளாஷ்பேக் காட்சிகளில் பொருந்தால் வந்து ப

எதன் கேள்வியைக் கேட்பது சமூகமா, மனமா? - கடிதங்கள்

படம்
  அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நன்றாக இருக்கிறீர்களா? இங்கு பனியும் வெயிலுமாக இருக்கிறது. வரும் ஏழாம்தேதி எங்கள் இதழ் சார்ந்த போட்டி ஒன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.  அதற்கு நாங்கள் கட்டாயமாக செல்லவேண்டியுள்ளது. அவசியமில்லைதான். ஆனால் அழைக்கிறார்கள். நிகழ்ச்சியில் முழுக்க விற்பனைப்பிரிவு அதிகாரிகள் முன் நிற்பார்கள். அங்கு நாங்கள் எதற்கு? இதற்கு முன்பே ஒரு விழா கோட்டூர்புரத்தில் நடைபெற்றது. நாங்கள் தேமே என்று நிற்கவைக்கப்பட்டோம். முக்கியமான விஷயம், முதலாளி வருகிறார் என்பதுதான்.  ஓல்ட்பாய் என்ற கொரிய படம் பார்த்தேன். படம் பார்த்து அது சொல்லும் விஷயங்களை புரிந்துகொள்வது கடினம்தான். இந்த விஷயத்திலிருந்து வெளியே வருவது சிரமமாகவே இருக்கும். தேவையில்லாமல் ஒருவரின் வாழ்க்கை பற்றி வதந்தி பரப்புவதன் பாதிப்பை ஒருவனுக்கு எப்படி பாதிக்கப்பட்டவன் புரிய வைக்கிறான் என்பதுதான் கதை. அண்ணன், தங்கை, அப்பா, மகள் உறவு அதுபற்றிய உண்மை அறியாமலே காமத்தினால் ஒன்றாக சேர்ந்து ஒன்றாக நொறுங்குகிறது. சமூக விதிகளின்படி வாழ்வதா, மனம் சொன்னபடி வாழ்வதா என்பதுதான் படத்தின் அடிப்படைக் கேள்வி. திகைக்

வலதுசாரிகளின் கொடுங்கனவாக மாறிய காந்தி - கடிதங்கள்

படம்
  விவாதங்களின் மையப் பொருளாக இன்றும் காந்தி அன்புள்ள முருகு அவர்களுக்கு,  வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? காந்தி பற்றி மாலன் எழுதியதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொள்கையை தன் உடலாகவே மாற்றிக்கொண்டு போராடிய காந்தி இன்றும் விவாதங்களின் மையமாகவே இருக்கிறார்.  கடந்த ஒரு வாரமாக உடல்நலம் சரியில்லை. காய்ச்சல், பேதி என்று நிலைமை தீவிரமாக இருந்தது. மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். இன்னும் சிகிச்சைகள் முழுமையாக நிறைவு பெறவில்லை.  நாகரிகங்களின் மோதல் என்ற நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு சாதகமானது. கட்டுரை நூலுக்காக விகடனின் விருது பெற்ற நூல் இது.  எங்களது இதழ், பல்வேறு நகரங்களில் மாணவர்களுக்கான வினாடிவினா போட்டிகளை நடத்தி வருகிறது. இதுதொடர்பான செய்திகளை வெளியிடச்சொல்லி ஆசிரியர் கூறுகிறார். இதனால் இதழ் தயாரிப்பு வேலைகள் நேரடியாக எனது தோளில் விழுந்து விடுகிறது. டைபாய்டு காய்ச்சலுக்கான ரத்தப் பரிசோதனை எடுக்கவேண்டியுள்ளது. ஹீவெய் பற்றிய நூலை வாசிக்க நன்றாக உள்ளது. சாதாரண நிறுவனமாக தொடங்கி இன்று 5 ஜி வசதியை பிற நாடுகளுக்கு கொடுக்கும் வகையில் நிறுவனம்

வேட்டையாடுதல் எனும் ஆதி உணர்வு- கடிதங்கள்

படம்
  ஓநாய்குலச்சின்னம் தமிழில் சி.மோகன் அன்புத்தோழர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நன்றாக இருக்கிறீர்களா? நான் இப்போது எங்கள் இதழில் வெளியாகும் சிறப்பிதழுக்காக வேலை செய்து வருகிறேன். நெற்பயிருக்கான சிறப்பிதழ். உதவி ஆசிரியர்களை நிருபர்களாக மாற்ற நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருகிறது. எப்படி சாத்தியமோ? ஓநாய் குலச்சின்னம் நாவலைப் படித்து வருகிறேன். இன்னும் இருநூறு பக்கங்கள் மிச்சமுள்ளன. நாடோடியாக வாழும் மங்கோலியர்களின் வாழ்க்கைப்பதிவு இது. ஓநாய்கள் முக்கியான பாத்திரங்களாக வரும் வேட்டை இலக்கியம் இது. சி.மோகனின் அற்புதமாக மொழிபெயர்ப்பு காலம் கடந்தும் நிற்கும் என நினைக்கிறேன்.  2020 பெரும் போராட்டங்களுடன்தான் தொடங்குகிறது. விளைவு எப்படி இருக்குமோ? பொருட்களின் விலை ஏற்றம் மக்களின் மனதில் சொல்ல முடியாத கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  ஜல்லிக்கட்டு - ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கிய படம் பார்த்தேன். கறிக்கடைக்காக கட்டப்பட்டிருக்கும் மாடு ஒன்று தப்பித்துவிடுகிறது. காட்டின் உள்ளே ஓடிவிட அதனை வேட்டையாட மனிதர்கள் ஆவேசத்துடன் கிளம்புகிறார்கள். மாட்டை வேட்டையாடினார்களா இல்லையா என்பதுதான் கதை. வேட்டையாடுதல்

வாசிப்பு நோக்கத்தை பாழாக்கும் தேர்வு! - கடிதங்கள்

படம்
  காகித மலர்கள் - ஆதவன் அன்புத்தோழர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்க இறையைப் பிரார்த்திக்கிறேன்.  இன்றுதான் ஆதவன் எழுதிய காகித மலர்கள் நூலைப் படித்து முடித்தேன். நாவலில் வரும் கேள்விகளுக்கு இறுதியில் பதில் சொல்லியிருக்கிறார்  ஆசிரியர். வாசிக்க நல்ல நூல்தான் என்பதில் சந்தேகமில்லை.  அறையில் சமைத்து சாப்பிட முயற்சிகளைச் செய்து வருகிறேன். கடைகளில் அசைவப் பிரியர்களுக்கான விஷயங்களே அதிகம் உள்ளன.  ஹிட் ரெஃப்ரெஷ் - சத்யா நாதெள்ளா எழுதிய நூலைப் படித்து வருகிறேன். கணினித் துறை வளர்ச்சி, தனது மூளைவாதம் கொண்ட குழந்தையின் பராமரிப்பு, தொழில் தடைகள் என பல்வேறு விஷயங்களை நூலில் தெளிவாகப் பேசியுள்ளார். அலுவலகத்தில் இப்போது மாதம்தோறும் ஒரு நூலைப் பற்றி பேச சொல்லுகிறார்கள். அந்த வரிசையில் சத்யாவின் நூலைப்பற்றி பேசலாம் என யோசித்து வருகிறேன். எதைப்படித்தாலும் சரி, அதைப்பற்றி தேர்வு வைத்தால் வாசிப்பு நோக்கம் பாழாகப் போய்விடும் என்பது எனது கருத்து.  சாவி எழுதிய நவகாளி யாத்திரை, இந்திய சுயராஜ்யம் ஆகிய நூல்களை வாசிக்கவேண்டும். தேசியம் பற்றிய கட்டுரையில் உங்கள் உதவி தேவை என்று நினைக்கிறேன்.  ஜோ