மாரடைப்பில் இறந்துபோன பேசாத தாய்மாமன்! - கடிதங்கள்






நூலகத்திற்கு நூல்களை வழங்குதல்




அன்பு நண்பர் இரா. முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா?

அண்மையில் எனது தாய்மாமன்களில் ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். பெரிய காரியம் காரணமாக அலைந்துகொண்டிருக்கிறேன். இருபத்தைந்து ஆண்டுகளாக எங்கள் வீட்டோடு பேச்சுவார்த்தையே இல்லாதவர், கந்தசாமி மாமா. 

கடந்த மூன்று ஆண்டுகளாக அம்மாவோடு போனில் பேசிக்கொண்டிருந்தார். இதெல்லாம் அவரது இறந்து கிடந்த உடலைப் பார்க்கும்போது நினைவுக்கு வந்தது. அம்மா கண் ஜாடை காட்ட, அவரது உடலை தொட்டுக் கும்பிட்டுவிட்டு வந்துவிட்டேன். விரைவில் ஆபீஸ் செல்லவேண்டும். வரச்சொல்லி அழைப்பு வந்துவிட்டது. கொரோனா காரணமாக சம்பளத்தையும் குறைத்துவிட்டார்கள். இருக்கும் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள சம்பள வெட்டையும் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.  

வீட்டிலிருந்து வேலைபார்க்கும் போது தஞ்சை ப்ரகாஷ், தி.ஜானகிராமன், வர்க்கீஸ் குரியன் ஆகியோரின் நூல்களைப் படித்தேன். அதுவே மகிழ்ச்சி. திருவண்ணாமலையில் கிடைத்த நம்மாழ்வார் நூல்கள், எனது படிப்பிற்காக வாங்கிய அனிமேஷன் நூல்களை வடக்குப்புதுப்பாளையும் ஊர்ப்புற நூலகத்திற்கு கொடுத்துவிட்டேன். நிறைய நூல்களை வைத்துக்கொண்டு கரையான்களோடு போராட முடியவில்லை. நூலகத்தில் பொதுவாக துறைசார்ந்த நூல்கள் குறைவு. அனிமேஷன் நூல்கள், கிராபிக் டிசைன் நூல்கள் அங்கு வருவோருக்கு கொஞ்சமேனும் உதவும் என்று நினைக்கிறேன். 

நன்றி!

ச.அன்பரசு

3.2.2021



கருத்துகள்