ஆயுர்வேத அடிப்படைகளை விளக்கிப் பேசும் நூல்!
பதார்த்த விஞ்ஞானம் எல் மகாதேவன் தமிழ்நாடு அரசு மின்னூலகம் பதார்த்த விஞ்ஞானம் என்ற நூல், மொத்தம் 393 பக்கங்களைக் கொண்டது. இந்த நூலின் அடிப்படை ஆயுர்வேதம் என்றால் என்ன, அதில் நோய்களை எப்படி மருத்துவர்கள் அடையாளம் காண்கிறார்கள் என்பதை விளக்குவதேயாகும். ஆனால், நூலின் பெரும்பகுதியில் ஆயுர்வேதத்திற்கு அடிப்படையான பல்வேறு மெய்யியல் நூல்களை வரிசையாக விளக்கி கூறிக்கொண்டே வருகிறார் ஆசிரியர். பிறகு, ஆயுர்வேத நூலான சரக சம்ஹிதைக்கு வருகிறார். வடமொழி நூல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட தமிழ்நூல் என்பதால், வடமொழி சொற்கள், வார்த்தைகள், சுலோகங்கள், பாடல்கள் நிறைய உள்ளன. வடமொழியை புகழ்ந்தும் இறுதியில் வாசகம் உள்ளது. நூல் முடியும்போது, வடமொழியை ஏன் தொன்மை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என தந்திரயுக்தி பகுதி விளக்குகிறது. வடமொழியைக் கற்றவர்கள்தான் ஆயுர்வேதம் கற்க முடியும், கற்கவேண்டும் என அழுத்திக் கூறப்படுகிறது. ஆயுர்வேதத்தின் அடிப்படை, மூன்று தோஷங்கள், பஞ்ச பூதங்கள், கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம் என பல்வேறு விஷயங்களை வாசகர்களுக்கு தெளிவாக விளக்க முனைகிறது...