திராவிடர்களைத் தாழ்த்தி ஆரியத்தை உயர்த்திப் பேசும் கம்ப ராமாயணத்தை எரித்தால் என்ன? - தீ பரவட்டும்!
தீ பரவட்டும்
சிஎன் அண்ணாதுரை
கலைமன்றம், சென்னை
விலை.1.00
முதல் பதிப்பு 1943 ஏப்ரல்
இந்த நூலில் நால்வர் பேசிய சொற்பொழிவு உரைகள் உண்டு. சி.என். அண்ணாத்துரை, ஆர்பி சேதுப்பிள்ளை, நாவலர் எஸ் சோமசுந்தர பாரதியார், ஈழத்து அடிகள் ஆகியோர் ராமாயணம் பற்றி பேசியுள்ளனர். இதில் திராவிட கருத்துகளுக்கு ஆதரவாக அண்ணாத்துரையார், ஈழத்துஅடிகள் பேசியுள்ளனர். இவர்களுக்கு எதிராக ஆரியர்களுக்கு ஆதரவாக ஆர்பி சேதுப்பிள்ளை, சோமசுந்தர பாரதி ஆகியோர் பேசியுள்ளனர். அடிப்படையில் இவர்களது உரைகளை ஒருவர் கேட்டாலே, அது பிழையுள்ளதாக எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் வெறும் வாய்ப்பந்தல் போடுவதாக உள்ளது என்பதை அறிய முடியும்.
சோமசுந்தர பாரதி, இன்னும் ஒருபடி மேலே போய் ராவணன் ஆரிய மன்னன் என்றும், கம்ப ராமாயணத்தை ஒருவர் எரித்தால், எரிப்பவர்களை இந்துகள் எரித்து கொல்வார்கள் என்று ஓரீடத்தில் கூறுகிறார். அவருக்கு இந்து முன்னணி அல்லது ஆர்எஸ்எஸ் உதிரி தீவிரவாத அமைப்புகள் பற்றி தெரிந்திருக்குமா இல்லையா என்று புரியவில்லை. ஆனாலும் அக்கருத்தை அவர் உறுதியாக கூறுகிறார். அண்ணாத்துரை ஏன் எரிக்க வேண்டும் என்ற கருத்தை தெளிவாக முன்வைக்கும்போது சோமசுந்தர பாரதி கூறும் கருத்துகள் அந்தளவு வலிமையாக இல்லை. கம்ப ராமாயணம் ஒட்டுமொத்த தமிழினத்தை திராவிடர்களை இழிவுபடுத்துவதாக கூறும்போது, சோமசுந்தர பாரதி விவாதத்தில் சொற்போரில் தான் தோற்றுவிடக்கூடாது என்பதற்கான சொந்த விஷயங்களை மக்களுக்கு கூறி தன்னை மதவெறி கும்பலுக்கு வெளியே வைத்துக்கொள்ள முயல்கிறார். ஆனால், அதற்கும் அவர் எந்த கருத்தை பாதுகாத்து பேசவேண்டுமோ, அதற்கும் எள்ளளவும் தொடர்பே இல்லை.
சேதுப்பிள்ளை பேசுவதும் கூட இப்படித்தான். சொற்போரில் இறுதியாக வெல்வது சிஎன் அண்ணாத்துரையார்தான். அவரது வாதங்கள் அவ்வளவு ஆணித்தரமாக வலிமையாக உள்ளன. ஆனால், எதிராளிகளிடம் எந்த ஆதாரமும் இல்லை. வெறும் மல்லுக்கட்டுதலும், தொன்மையும், சமாளிப்பும், மூடநம்பிக்கையும்தான் உள்ளது. ஒரு இனத்தை தாழ்த்தி இன்னொரு இனத்தை உயர்த்திப் பேசுவதை திராவிட மக்கள் எதற்கு புராணமாக புனிதமாக கருத வேண்டும். தவறான கருத்துகளை தன் வாழ்வில் ஏற்றுக்கொண்டு அடிமையாக வாழ வேண்டுமா என்று கேட்டால் எதிர்தரப்பிடம் எந்த பதிலும் இல்லை. அண்ணாதுரையார், கம்பன் கவித்திறமை பற்றிய ஐயத்தை, சந்தேகத்தை எழுப்பவில்லை. அந்த கவித்திறமையை எதற்குப் பயன்படுத்துகிறார் என்று கேள்வி கேட்கிறார். ஆரியர்களை உயர்த்திப் பிடிக்க. அப்படி செய்வதால் மக்களுக்கு என்ன நன்மை?
ஒருவகையில் தீ பரவட்டும் நூல் என்பது, திராவிடர்களின் வாழ்க்கையை அழிக்கும் புராண புரட்டுளை அழிக்கவேண்டும். சமூகத்தில் சமத்துவத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறவருவது. நேரடியாக பார்த்தால் புராணங்களை தீ வைத்து எரிக்கவேண்டும் என்பது வன்முறையாக, கோபமாக தோன்றலாம். ஆனால், அதன் பின்னே உள்ளது, மக்கள் மீதான கரிசனம், அன்புதான். ஆரிய புராணங்களை வைத்து உனக்கு அவன் மேலே என நம்ப வைத்து அதை படிக்கும் பார்க்கும் மக்களை ஏமாற்றி அனைத்து உரிமைகளையும், வாய்ப்புகளையும் பறித்துக்கொண்டால் மக்கள் ஆட்டு மந்தைகளாக அடிமைகளாகவே திரிவார்கள். அனைத்து சமூகங்களும் ஒன்றாக சேர்ந்து உழைத்தால்தான் வளர்ச்சி. ஆனால், பார்ப்பனர்கள் அவர்கள் மட்டுமே அத்தனை உரிமைகளையும் வாய்ப்புகளையும் பறித்துக்கொண்டால் பிற இனத்தவர் அடிமையாக இருக்க வேண்டியதுதான். அந்த வகையில் ஆரியர்கள் முன்வைக்கும் அனைத்தும் பதிலடியாக திராவிடம், திருக்குறளை, சிலப்பதிகாரத்தை முன்வைக்கிறது.
அண்ணாத்துரையாரின் நூலை என்னவென்று கூட தெரியாமல் நிறையப்பேர் வாங்கி சென்றிருக்க கூடும். அதனால் பிழையொன்றுமில்லை. படித்தால் அதுவரை இருந்த பிரமை தெளிந்துவிடும். அறிவு தெளிவாக துலங்கும். கவலைப்பட வேண்டியதில்லை.
கோமாளிமேடை குழு


கருத்துகள்
கருத்துரையிடுக