நாடக கலைஞர் அவ்வை சண்முகம் அவர்களின் நாடக வாழ்க்கை போராட்டங்கள்!
அவ்வை சண்முகம் படைப்புகள் ப.830 மின்னூல் அதிக பக்கங்களைக் கொண்ட நூல், பொதுவாக மின்னூலை இவ்வளவு பெரியநூலாக வைத்து படிப்பது அயர்ச்சியை உருவாக்கும். அதையெல்லாம் தாண்டி அவ்வை சண்முகத்தின் கட்டுரைகள், நாடக அனுபவங்கள் நம்மை ஈர்க்கின்றன. இந்த நூல் நாடக கலைஞர் அவ்வை சண்முகத்தின் தனிப்பட்ட வாழ்க்கை, நாடக வாழ்க்கை என இரண்டையும் பேசுகிறது கூடுதலாக, நாடக அனுபவங்கள் பற்றி பல்கலைக்கழகங்களில் ஆற்றிய உரையும் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் அதையும் வாசித்து நாடகம் பற்றிய விஷயங்களை அறிந்துகொள்ளலாம். அவ்வை சண்முகம், அவ்வையார் நாடகம் வழியாக புகழ்பெற்றவர். இடதுசாரிகள், திராவிடர் கழகம், திமுக, தமிழரசு கட்சி ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர். இவரை சங்கரதாஸ் சுவாமிகள் என்பவர் நான்கு ஆண்டுகள் பயிற்சி கொடுத்து உருவாக்கினார். நூலின் இறுதிப்பகுதியில் சங்கரதாஸின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அவ்வை சண்முகம் தனது குருவுக்கான காணிக்கை போல அப்பகுதியை உருவாக்கியுள்ளார் போல. அவ்வை சண்முகம் படைப்புகள் நூலில் தொடக்கத்தில் அவர் ஆற்றிய உரைகள் இடம்பிடித்துள்ளன. இந்த உரைகள், அனைத்தும் மாணவர்கள...