நாடக கலைஞர் அவ்வை சண்முகம் அவர்களின் நாடக வாழ்க்கை போராட்டங்கள்!

 


 

அவ்வை சண்முகம் படைப்புகள்
ப.830
மின்னூல்

அதிக பக்கங்களைக் கொண்ட நூல், பொதுவாக மின்னூலை இவ்வளவு பெரியநூலாக வைத்து படிப்பது அயர்ச்சியை உருவாக்கும். அதையெல்லாம் தாண்டி அவ்வை சண்முகத்தின் கட்டுரைகள், நாடக அனுபவங்கள் நம்மை ஈர்க்கின்றன. இந்த நூல் நாடக கலைஞர் அவ்வை சண்முகத்தின் தனிப்பட்ட வாழ்க்கை, நாடக வாழ்க்கை என இரண்டையும் பேசுகிறது கூடுதலாக, நாடக அனுபவங்கள் பற்றி பல்கலைக்கழகங்களில் ஆற்றிய உரையும் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் அதையும் வாசித்து நாடகம் பற்றிய விஷயங்களை அறிந்துகொள்ளலாம்.

அவ்வை சண்முகம், அவ்வையார் நாடகம் வழியாக புகழ்பெற்றவர். இடதுசாரிகள், திராவிடர் கழகம், திமுக, தமிழரசு கட்சி ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர். இவரை சங்கரதாஸ் சுவாமிகள் என்பவர் நான்கு ஆண்டுகள் பயிற்சி கொடுத்து உருவாக்கினார். நூலின் இறுதிப்பகுதியில் சங்கரதாஸின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அவ்வை சண்முகம் தனது குருவுக்கான காணிக்கை போல அப்பகுதியை உருவாக்கியுள்ளார் போல.

அவ்வை சண்முகம் படைப்புகள் நூலில் தொடக்கத்தில் அவர் ஆற்றிய உரைகள் இடம்பிடித்துள்ளன. இந்த உரைகள், அனைத்தும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் நாடகம் என்றால் என்ன, அதை எப்படி நடத்தவேண்டும், நடிகர்களுக்கு என்னென்ன திறமைகள் தேவை என்பதைப் பற்றிக் கூறுவதோடு நாடக விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். இதற்குப் பிறகுதான், சண்முகத்தின் நாடக அனுபவங்கள் தொடங்குகின்றன.

இந்த நூல் முழுக்க வரும் நபராக என்எஸ் கிருஷ்ணன் இருக்கிறார். அவர் நாடக கலைஞராக இருந்து மெல்ல வளர்ந்து திரைப்பட நடிகராகிறார். அப்படி ஆனவுடன் அவர் சில மரியாதைகளை எதிர்பார்க்க தொடங்குகிறார். அந்த இடம்தான் மனிதர்களின் மனம் எப்படி வசதி வரும்போது மாறுகிறது என்பதைக் காட்டும் எடுத்துக்காட்டு. அவ்வை சண்முகம், என்எஸ்கேவுடன் பெரிதாக முரண்படவில்லை. சக கலைஞர் என எப்போதும் மதித்து வருகிறார். சண்முகத்திற்கும் திராவிடர் கழக தலைவர் பெரியாருக்கும் ஆன உறவும், சண்டையும் நூலில் முக்கியமானவை என கூறலாம்.
அவ்வை சண்முகம் ஒரு ஆத்திகர். அதேசமயம் நாடகம் என்பது தொழில். அதில் அவர் நிறைய புராணக்கதைகளை எழுதி நடித்தார். பிற மொழிபெயர்ப்புகளை உரிமை வாங்கி நடித்தார். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் அண்ணா பாராட்டும்படி சமூக சீர்திருத்த கருத்துகளையும் நடித்திருக்கிறார். ஆனால், புராணங்களை கைவிடவில்லை. ஒருகட்டத்தில் அவ்வை சண்முகத்திற்கும் பெரியாருக்கு கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அவ்வை சண்முகத்தின் எழுத்து வழியாக, இருவரின் கருத்து வேறுபாடுதான் காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், வேறு ஏதாவது பிரச்னையா என்று முழுக்க தெரியவில்லை. திராவிட நாடு நாளிதழில் நேர்மறையாக, குடியரசு நாளிதழில் எதிர்மறையாக நாடக மாநாட்டு செய்திகள் வெளிவந்தன.

பெரியார் அவ்வை சண்முகம் உறவு சிறப்பாக வந்து பிறகு கசப்பில் முடிந்திருக்கிறது. காசநோய் வந்த மனைவியை படுக்கவைக்க ஈரோட்டில் இடம் கிடைக்காதபோது, பெரியார் தானே முன்வந்து தன்னுடைய அலுவலகத்தை கொடுக்கிறார். அங்குதான் முதல் மனைவி மீனாட்சி இறந்துபோக, இறுதிச்சடங்கு நடக்கிறது. அறிஞர் அண்ணாதுரை உறவு அந்தளவுக்கு மோசமில்லை. அவ்வை சண்முகம் தான் பார்த்து பிடித்த நாடகங்களுக்கு, அரசியல் தலைவர்களுக்கு கூட இடையறாது கடிதங்களை எழுதுகிறார். அதன் வழியாக பாராட்டுகளை தெரிவித்து வந்திருப்பது நம்பமுடியாத ஆச்சரியம்.

நாடக கலைஞர்கள் புகழால் ஆணவத்தால் நேர்மின்மையின்மையால் அழிவதை பல்வேறு மனிதர்களை வைத்து நாடக வாழ்பனுபவத்தினூடே கூறிக்கொண்டே இருக்கிறார். அவ்வை சண்முகம் நாடகம், சினிமா என இரண்டிலும் சாதித்தவர். அடிப்படையில் நாடக கலைஞர் என்பதையே முதன்மையான அடையாளமாக கொண்டவர். வருமானக்குறைவான வாழ்க்கை என்றாலும் கூட இந்தியாவின் சுதந்திரத்திற்கு நாடகம் போடுவது, நண்பர்களுக்கு பண உதவிகள் செய்வது, நாடக ஆசிரியர்களுக்கு நாடகம் போட்டு அதன் வழியாக உதவுவது என உழைக்கிறார்.

கோமாளிமேடை குழு

 





 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்