தொன்மைக்கால தென்கொரியாவில் புரட்சிகர கண்டுபிடிப்புகளை செய்யும் பட்டத்து இளவரசர்!
பிளாக் கார்ப்பரேஷன்
மாங்கா காமிக்ஸ்
குன்மாங்கா.காம்
தென்கொரிய காமிக்ஸ். இதில் மன்னர் ஜோசியன் காலத்திற்கு நவீன கண்டுபிடிப்பாளர் பயணிக்கிறார். இவர் படிப்பாளி அல்ல. ஆனால் கருவிகளை புதிதாக உருவாக்குபவர். மன்னர் காலத்திற்கு சென்று அங்கு செய்யும் பல்வேறு 21ஆம் நூற்றாண்டு பொருட்களால் அந்த நாடு வளர்வதே கதை.
தொன்மைக்காலத்திற்கு சென்று அங்கில்லாத பொருட்களை உருவாக்குவது, அதை பரவலாக்குவது, அதை கன்பூசியவாதிகள் எதிர்ப்பது என கதை நகர்கிறது. இதில் கதாசிரியர் ஏராளமான முன்னோடிகளின் அறிவுரைகளை, பழமொழிகளை கையாண்டிருக்கிறார். இந்த கதையின் நாயகன் நவீன காலத்தில் முப்பது வயது கொண்டவனாகவும், தொன்மைக் காலத்திற்கு செல்லும்போது ஒன்பது வயது கொண்டவனாக இருக்கிறான். அந்த வயதிலேயே அவன் தனது புத்திசாலித்தனத்தால் மன்னர் சேஜோங்கிற்கு எப்படி உதவுகிறார். பேனா, துப்பாக்கி, வெடிகுண்டு, அரசியல் நிர்வாக சீர்திருத்தங்கள், சின்னம்மை ஊசி என நிறைய விஷயங்கள் கதையில் வருகின்றன. அவை கதையில் முக்கிய பங்கும் வகிக்கின்றன. குறிப்பாக கதை நெடுக சாதி,மத, வர்க்க பேதம் நாட்டை முன்னேற்றாது என்று நாயகன் கூறிக்கொண்டே இருக்கிறார்.
மன்னர் சேஜோன் வெளிப்படையாக தனது கருத்துகளை கூறாவிட்டாலும் அவர் சொல்ல நினைப்பதை பெருமளவு மூத்தமகன் யி ஹியாங் அல்லது முன்யாங் வெளிப்படையாக கூறுகிறார். யி ஹியாங்தான் கதையின் நாயகன். வயது ஒன்பது தொடங்கி பதினைந்து வயது வரையிலான அத்தியாயங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை விரும்புபவர்கள் தேடி வாசிக்கலாம். எதிர்காலம், வரலாறு தெரிவதால் நாயகன் செய்யும் விஷயங்கள் எல்லாம் பிறருக்கு ஆச்சரியம் தருவதாக உள்ளது. அதேசமயம், பெரும்பாலான விஷயங்கள் மக்களுக்கு உதவக்கூடியவை. அதை முடியாட்சியில் சாத்தியப்படுத்தும்போது எப்படியெல்லாம் எதிர்ப்புகள் வருகின்றன என்பதை முடிந்தளவு கதாசிரியர் சிறப்பாக சம்பவங்களாக்கியிருக்கிறார் .
குறிப்பாக மிங் பேரரசர், ஜோசியனின் பெரும்பாலான சொத்துக்களை வரி என்ற பெயரில் கொள்ளையடிக்க அதை தடுக்க யி ஹியாங் முயலும் காட்சி, அதை சேஜோங் மறுக்கிறார். அப்படியும் விடாமல் யி ஹியாங் முயன்று தண்டனைக்குள்ளாகும் சம்பவம் முக்கியமானது. இறுதியாக நாயகன் யி ஹியாங், அரசு நிறுவனம் ஒன்றை உருவாக்கி இரும்புகளை வாங்க முயல்வதோடு கதை நிற்கிறது. இன்னும் பல்வேறு அத்தியாயங்கள் வரக்கூடும்.
கதையில் ஓவியங்கள் அழகாக வரையப்பட்டுள்ளன. அப்பா, மகன் உறவையும், அரசியல் சிக்கல்களையும் சிறப்பாக விவரித்துள்ளனர். மற்றபடி கதையில் காதல் சம்பவங்கள் ஏதும் கிடையாது. முழுக்க நாடு, நாட்டு மக்களின் சேவை, அரசு தேர்வுகள், அறிவியல் ஆராய்ச்சி என்று கதை நகர்கிறது. இப்படி நகரும் கதையில் எந்த இடத்திலும் சோர்வு தரவில்லை. கொரிய வரலாற்றில் மன்னர் சேஜோங் சிறந்த மன்னராக அறியப்பட்டவர். இக்கதை வழியாக நாம் அவரை நினைவுகூர்கிறோம். மன்னர், அவரின் மகன் அமைச்சர்களுக்கு இடையில் நின்று பிரச்னைகளை பேசி தீர்வுகளை வழங்குவதாகவே கதை நகர்கிறது. ஒரு அமைச்சர் கூட அறிவுப்பூர்வமாக வாதங்களை முன்வைக்கவில்லை. அனைவருமே அவர்களது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறார்களே ஒழிய நாட்டின் வளர்ச்சி, மேம்பாடு காலத்திற்கேற்ப மாறவேண்டும் என யோசிப்பதில்லை.
கதையில் நிறைய இடங்களில் மன்னருக்கு தோன்றும் பிரச்னைகள் பலதையும் அமைச்சர்கள் தீர்ப்பதில்லை. இளவரசன் யி ஹியாங்தான் தீர்க்கிறான். மன்னர் சில இடங்களில் அமைச்சர்களுக்கு நீ பரவாயில்லை என்றே வாய்விட்டு சொல்கிறார். நாயகன் யிக்கு எதிர்காலம் தெரியும் என்பது இங்கு பலமல்ல. அவன் நாட்டு மக்களுக்கு நன்மைகளை செய்ய முடியுமா, எப்படி எந்த முறையில் செய்யமுடியும் என யோசிக்கிறான். எனவே, நிலைமை எந்தளவு சீர்கெட்டாலும் விட்டுக்கொடுப்பதில்லை. பிழைத்திருப்பது என்பது சவால்தான். ஆனால் விட்டுக்கொடுப்பது என்றால் சாவு. நான் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என
உறுதியாக கூறுகினான். சோர்ந்திருந்த மன்னர், மகனின் பேச்சைக் கேட்டு உத்வேகம் பெறுகிறார்.
அரசவையில் யி பேசும் சீர்த்திருத்த ஆதரவு வாதங்கள் அனைத்துமே சிறப்பாக உள்ளன. மக்களின் நலனை விரும்புகிற, நாட்டை மேலே கொண்டு செல்ல முயலும் ஒருவரின் குரலாக அந்த வாதங்களின் நோக்கம் உள்ளது.
இந்தியா மதவாத நாடாக எழுபது சதவீதம் மாறிவிட்ட நிலையில், சீரழிந்துகொண்டிருக்கிறபோது இந்த காமிக்ஸ் கதை மனதில் நெகிழ்ச்சியை உருவாக்குகிறது. ஒரு நாட்டின் வரலாற்றில் வளர்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி, தேய்மானம் எல்லாம் இயற்கையில் உண்டுதானே? தென்கொரிய புனைவுகதைதான். ஆனால் வாசிக்க அவ்வளவு சிறப்பாக உள்ளது.
கோமாளிமேடைகுழு
கருத்துகள்
கருத்துரையிடுக