வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடிவிடு!
வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடிவிடு!
மதவாத நாடான இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் கலவரங்கள், கும்பல் வல்லுறவு, இந்து குண்டர்கள் கொள்ளை என எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இதுபோல பருவ காலங்களில் நடைபெறும் இயற்கை பேரிடர்களும் அதிகரித்து வருகிறது. அப்படியான சூழலில் ஒருவர் தன்னை எப்படி காத்துக்கொள்வது என்று பார்ப்போம்.
உணவு, மருத்துவ சிகிச்சைக்கான பொருட்கள், போகும் இடம், வழிப்பாதை ஆகிய மூன்று விஷயங்கள் முக்கியம்.
கோவிட் வந்தபிறகு நிறையப்பேர் தனியாக இஎம்ஐ கட்டியேனும் வண்டி வாங்கிவிட்டார்கள். நமது மக்கள், நாம் செத்தாலும் கூடவே நான்கு பேரை இழுத்துச்செல்லவேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டவர்கள். தும்மும்போதும் இருமும்போதும் கூட கைக்குட்டை பயன்படுத்த மறுப்பவர்கள். எனவே, உயிர்பிழைக்கவேண்டிய நேரத்தில் நீங்கள் பிறரது வாகனங்களை எதிர்பார்க்க கூடாது.
எந்தளவு வேகமாக செல்கிறீர்களோ, அந்தளவு நல்லது. தாமதம் செய்தால், சாலையில் கூட்டம் சேர்ந்துவிடும். அப்போது நீங்கள் என்ன முயன்றாலும் வேகமாக செல்லமுடியாது. அவரவருக்கு அவரவர் உயிர், சொந்தம், பிள்ளை குட்டி கருப்பட்டிதானே ஐயா...
வயதானவர்கள், குழந்தைகள் இருந்தால் அதற்கேற்ப வண்டிகளை தயார் செய்து கிளம்பவேண்டும். இல்லையெனில் வருந்தும்படி நிலைமை மாறும்.
காட்டுத்தீ, புயல் வரும் சூழலில் அப்பிரச்னை இல்லாத பிரதேசத்திற்கு செல்லலாம். குளத்தில், ஏரியில் வீட்டை கட்டியவர்கள் மழைக்காலத்தில் வெள்ளம் வந்து வீட்டை குடிநீர்தொட்டி போல நிரப்பினால், அதற்கு சில மாதங்களுக்கு முன்னரே அந்த இடத்தை விட்டு பொருட்களோடு விலகி செல்வது நல்லது.
அரசு ஊடகங்களை பெரிதாக நம்ப முடியாது. அவர்கள் அரசு அறிக்கையை ஒப்பித்துக்கொண்டு இருப்பார்கள். தனியார் ஊடகங்கள், வருமானத்திற்காக அரசை சார்ந்திருப்பதால் போலிச்செய்திகளே அதிகம் இருக்கும். எனவே, சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட தகவல்களை சரியாக அளிக்கும் வல்லுநர்களின் கணக்குகளை பின்பற்றலாம். அரசு வானிலை அமைப்பை விட துல்லியமாக தகவல்களை அளிக்கும் தனிநபர்கள் சமூக வலைதளங்களில் உள்ளனர். உங்கள் நாட்டிலும் அப்படி யாரேனும் இருப்பார்கள். அவர்களின் செயல்பாட்டை பார்த்துவிட்டு முடிவுக்கு வாருங்கள்.
நாய், பூனை, ஆமை, தேள் என எதை செல்லப்பிராணியாக வளர்த்தாலும் சரி. நீங்கள் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்தால் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல போகிறீர்களா அல்லது வேறு எங்காவது ஒப்படைக்க போகிறீர்களா என்பதை முடிவு செய்துவிடுங்கள். அதுவும் முக்கியம்.
தப்பி பிழைத்தல் வகை ஆங்கிலப்படங்களை பார்த்துவிட்டு அதேபோல தனிமனிதராக வந்து மனைவி, பிள்ளை, மாமியார், சித்தப்பனை காப்பாற்றும் முயற்சிகளை செய்ய முயலாதீர்கள். அதெல்லாம் செல்லுலாய்டில் சாத்தியம். நிஜத்தில் கிடையாது. சூழல்களை உத்தேசித்து முன்னமே முடிவெடுத்து செயல்படுங்கள். காட்டுத்தீ, புயல் வரப்போகிறது என்றால், அதை முன்னிட்டு பாதிப்பை குறைக்க அரசுகள் கூறிய வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்.
மூடநம்பிக்கை கொண்ட முட்டாள்களின் தாக்குதல், கும்பல் வல்லுறவு, இறைச்சி சாப்பிடுவதை தடுப்பது, மதகோஷங்களை எழுப்ப கட்டாயப்படுத்துதல் ஆகியவை நடைபெற்றால் அந்த நாட்டில் இருந்து வேறு எங்காவது பாதுகாப்பான இடத்திற்கு, நாட்டிற்கு வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடிவிடுவது நல்லது. காசு சேர்த்து வைத்துக்கொண்டு அதற்காக முயலலாம்.
கோமாளிமேடை குழு
மூலம் பிரெப்பர் சர்வைவல் கைட்
கருத்துகள்
கருத்துரையிடுக