ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள உதவ வழிகாட்டும் அறிவுரைகளின் தொகுப்பு! - ராஜதந்திரம் - நிக்காலோ மாக்கியவெல்லி

 

 

ராஜதந்திரம்
நிக்கோலோ மாக்கியவெல்லி
தமிழில் துளசி
தினமணி நாளிதழ் வெளியீடு

தமிழில் வெளிவந்துள்ள ராஜதந்திர நூல். இந்த நூலை எழுதியுள்ள நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலியைச் சேர்ந்தவர். முடியரசில் இயங்கியவர். பின்னாளில் அரசு பதவியில் இருந்து நீக்கப்பட்டு, வறுமையில் உழன்று இறந்துபோனார். அவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான தகவல் இதுதான். எழுத்தாளரின் வறுமை, மகிழ்ச்சி, வலி, வேதனை பற்றி தெரிந்துகொள்வது அவர் எழுதிய நூலின் அடிப்படையை புரிந்துகொள்ள கொஞ்சமேனும் உதவும்.

நூற்றி எழுபது பக்கங்களைக் கொண்டுள்ள இந்த நூல், இத்தாலி நாட்டின் நலனை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. மாக்கியவெல்லி அரசு நிர்வாகம், ராணுவம் ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அதன் அடிப்படையில், இத்தாலி நாடு எப்படி இருந்தால் பிழைக்கும் என்பதை ஊகித்து பல்வேறு நீதிகளை எழுதினார்.

பிரின்ஸ் என்று பெயரிட்டுள்ள இந்த நூல் கூட முடியாட்சியில் இருந்த அரசர் ஒருவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். அரசநீதி, ஆராய்ச்சி நூல்கள், கவிதைகள், நாடகங்கள் என பல துறை நூல்களை எழுதியிருக்கிறார். அரசியல் தொடர்பான நூல்களுக்கே மாக்கியவெல்லி போற்றி புகழப்படுகிறார். இகழவும் படுகிறார். நாம் அவரை புகழவோ இகழவோ வேண்டாம். அவரை சிந்தனையாளர் என்ற நிலையில் வைத்து நூலைப் பார்ப்போம்.

தனது பதவி, அனுபவங்களை வைத்து அரசருக்கு நீதி சொல்லும் நூலை எழுதியிருக்கிறார். அவர் கூறும் பல்வேறு அறிவுறுத்தல்களில் மிக நீண்டகாலமாக வாழ்ந்துவரும் ஆன்மா ஒருவரை பார்க்க முடிகிறது. மனித உளவியலை மாக்கியவெல்லி போல வெளிப்படையாக ஒருவர் கூற முடியுமா என்று தெரியவில்லை.

மாக்கியவெல்லியின் நூல்களை பின்னாள் சர்வாதிகாரிகள் வாசித்தனர். அதிலுள்ளவற்றை சோதித்துப் பார்த்திருக்கிறார்கள். இதனால் மக்களின் கோபம், சிந்தனையாளர் மாக்கியவெல்லி மீது திரும்பிவிட்டது. மாக்கியவெல்லி தனது இத்தாலி நாட்டின் மீது கொண்ட அன்பு காரணமாகவே ராஜதந்திரம் என்ற நூலை எழுதினார். பிறர், அதை எப்படி பயன்படுத்துவார்கள் என்று அவருக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்? இங்கு ஆயுதம் என்பது சிந்தனைதான். ஆயுதத்தால் நடத்தப்படும் படுகொலை என்பது ஒரேநாளில் நடந்து முடிந்துவிடும். ஆனால், அதற்கான ஆயத்தங்களை பல்லாண்டுகளாக ஒருவர் திட்டமிடவேண்டும்.

மனிதர்களின் தீமையை நோக்கி சரியும் இயல்பு, நாட்டின் ராணுவ பலம், சீர்திருத்தங்களை எப்படி செய்வது, சர்வாதிகார தலைவர்களின் செயல்பாடு, மக்களின் அன்பு, வெறுப்பு, அரசனுக்கு மக்களின் ஆதரவு, புகழ் பெறுவது, அன்பு செலுத்துவது என நிறைய விஷயங்களை வெளிப்படையாக அறிவுறுத்துகிறார். இடையறாது போர் நடந்துகொண்டே இருக்கும் நாட்டில் மக்கள் நிம்மதியாக இருக்கமுடியாது. அப்படியான சூழலில் நிலையான ஆட்சி அமையவேண்டும். அதற்கு அரசன் என்ன செய்யவேண்டும் என்பதை மாக்கியவெல்லி நூல் முழுக்க விளக்கியுள்ளார். குடியாட்சி என்பது பின்னர் வந்திருக்கலாம். அன்றைக்கு இருந்த ஒரே நம்பிக்கை. முடியாட்சி. நிலையான ஆட்சியை அரசன் கொடுத்தால் அவன் ஆட்சி நீடிக்கும். இதே கண்ணோட்டத்தில் மாக்கியவெல்லி நூலை எழுதியிருக்கிறார். அறிவுரைகளை கூறியிருக்கிறார். இன்றைக்கு பெயருக்கு ஜனநாயகம் இரு்ந்தாலும் அடிப்படையில் கீழ்படிவது, மேலாதிக்கம் செய்வது மாறவே இல்லை.

நூலில் கூறும் கருத்துகளை ஏற்கெனவே இந்தியாவில் அரசியல்வாதிகள் அமல்படுத்தி இருக்கிறார்கள். செய்துகொண்டும் இருக்கிறார்கள். மதாபிமானத்தை கொண்ட ராஜதந்திரியாக மாக்கியவெல்லி இருக்கிறார். மதத்தை அரசன் எப்படி பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சொன்ன ஆத்திகர் இவர். ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அரசன் செய்யவேண்டிய சூழ்ச்சி, தந்திரங்களை நூலில் முற்றாக விளக்குகிறார். ஒரு சட்டம் அமுல்படுத்தப்படும் முறையை விட அதன் பயனையே கருத்தில் கொள்ளவேண்டும் என்று கூறுகிறார். சரிதான். மாக்கியவெல்லி ஒரு சிந்தனையாளராக பல்வேறு கருத்துகளை சொல்கிறார். அவை அனைத்துமே அவரது தாய்நாட்டைப் பற்றியவை. அந்த நாடு மேம்பாடு அடையவேண்டு்மென உழைத்து நூலை எழுதினார். அதிகாரம், பதவியை அடையவேண்டும் என பேராசை கொண்டவர்களுக்கு நூல் மிகவும் பிடிக்கும். நூலை உறுதியாக வாசிப்பார்கள். அதில் எந்த சந்தேகமுமில்லை.

இந்தியா இந்துஸ்தானாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், எதிர்காலத்தில் உள்நாட்டுப்போர்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். மாக்கியெவெல்லியின் அறிவுறுத்தல்களை வாசிக்கு்ம்போது இதுவரை நடந்த அக்கிரமங்கள், கொடுமைகளை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. அந்த வகையில் இந்த நூல் வாசிப்பவர்களுக்கு தெளிவை வழங்குகிறது. நம்மை சுதாரிப்பதாக இருக்க உதவுகிறது.

கோமாளிமேடை குழு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்