இந்துத்துவாவிற்கு ஆதரவை திரட்டுகிற நூல்- நிலைத்த புகழ் இந்தியா - அமிஷ் திரிபாதி

 




நிலைத்த புகழ் இந்தியா
அமிஷ் திரிபாதி
கட்டுரை நூல்
வெஸ்ட்லேண்ட் பதிப்பகம்
தமிழில் மிஸ்டிக் ரைட்

இருநூற்று பதினெட்டு பக்கங்களைக் கொண்ட நூலில் அமிஷ், வேதகால இந்தியாவை நவீன காலத்தில் நிதானமாக உருவாக்கவேண்டும் என நயந்து வேண்டியிருக்கிறார். வேதங்களை படிக்கவேண்டும், அதைப்பற்றி தற்பெருமை கொள்ள வேண்டும். மனு ஸ்மிருதிகள் காலத்திற்கேற்ற விதிகளை சட்டங்களை சொல்கின்றன. அதனால் அனைத்து ஸ்மிருதிகளும் தவறில்லை. தலித் மாணவர் ரோஹித் தற்கொலை செய்துகொள்ளப்பட தூண்டிய விவகாரம் பற்றிய கட்டுரையில், தலித்துகள் மட்டுமல்ல பெண்கள் கூட வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என அப்படியே தாவி வேறு மையப்பொருளுக்கு சென்று விடுகிறார். பின்னே யார் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்று சொன்னால் வீட்டுக்கு வருமானவரித்துறை சோதனைக்கு வருமே?

அமிஷ், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தொன்மை உலகை தனது புனைவெழுத்தில் உருவாக்கினார். அவர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு அதில் லாபம் சம்பாதித்தார். அதோடு நிற்காமல், புனைவாக எழுதியதை பலரையும் நம்ப வைக்க முயன்று வருகிறார். வெறும் எழுத்து மட்டுமல்ல, அரசியல் அதிகாரத்தையும் பெற இந்துத்துவ ஆதரவு எழுத்தாளராக மாறியிருக்கிறார்.

நூலில், நிறைய இடங்களில் தனக்கு தெரியாத விவகாரங்களையெல்லாம் கையில் எடுத்து என்னென்னமோ பேசுகிறார். பிதாகரஸ் தோற்றத்தை இந்திய ரிஷி கண்டுபிடித்தார் என்று கூறி அப்படியே கடந்துசெல்கிறார். இதுபோலவே கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்கிற அலறலும் அப்படியே நின்றுபோகிறது. அப்படி என்ன விஷயங்களை கல்வியில் கோருகிறார். தொன்மைக்கால இந்தியாவின் பெருமை, அதாவது வடமொழியை படிக்கவேண்டும். அப்புறம் கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் (அதாவது பார்ப்பனக்கூட்டம்) என்ற வரலாற்று உண்மை பொய்யானது. அதை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள் என்று கூறுகிறார். இதற்கென சில எழுத்தாளர்களை தனக்கு ஆதரவாக சுட்டிக்காட்டுகிறார்.

உண்மையில், இப்போது ஒன்றிய அரசே வலதுசாரி மதவாத சிந்தனை நூல்களை எழுத நிறைய மாணவர்களை தயாரித்து வருகிறது. அதற்கு யுவா என பெயர் சூட்டியுள்ளது. அனேகமாக திட்டத்திற்கு ஐம்பது பேர்களை இப்படி தயாரிக்கிறார்கள். இவர்கள், வேதகால இந்தியாவை பற்றி, சுதந்திரத்திற்கு பிறகான இந்தியா பற்றி கட்டுரைகளை எழுதி அனுப்பவேண்டும். அதில் இந்துத்துவா கருத்துகளை கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு அரசு புத்தக அமைப்பான என்பிடி தேவையான உதவிகளை வழங்குகிறது. ஏற்கெனவே நூறு பேர் இப்படி பயிற்சி அளிக்கப்பட்டு விட்டார்கள். இந்த ஆண்டு அடுத்த ஐம்பது பேர்களுக்கான தேர்ந்தெடுத்தல் நடைபெற்று வருகிறது.

அமிஷ் இப்படியான ஆட்களோடு இணைந்துதான் நூல்களை எழுதுகிறாரா என்று தெரியவில்லை.

நூலில் பல்வேறு இடங்களில் நகைமுரணான கருத்துகள் நிறைந்துள்ளன. வரலாற்று பாடங்களில் இந்தியாவின் வழிபாட்டுத்தலங்களில் பிற சமயத்தவர் நடத்திய தாக்குதல்களை எழுதக்கூறுகிறார். ஆனால், இதைப்படித்துவிட்டு மத வன்முறையில் யாரும் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கிறார். என்ன சொல்ல வருகிறார், ஏற்கெனவே மராட்டிய முதல்வர் உத்தரவின் பேரில் அவுரங்கசீப்பின் கல்லறையை தோண்டி எடுத்து மதக்கலவரத்தை உருவாக்கி வருகிறார்கள். மராட்டிய முதல்வர், பார்ப்பனர் என்பது தற்செயலானதா என்ன?


இந்து என்றால் சாதிய முறை, கிறிஸ்தவர்கள் என்றால் குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு, இஸ்லாமியர்கள் என்றால் அதீத வன்முறை என அடையாளப்படுத்துகிறார். எனக்கு புரியவில்லை. எங்கிருந்து இந்த அடையாளங்களை அமிஷ் பெறுகிறார். இப்படி கூறுவதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கிறது. நூலில் பல்வேறு உரைகள், தேசிய ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரைகள் ஆகியவை எழுத்துருவம் பெற்றிருக்கின்றன. இப்படியான இந்துத்துவ ஆதரவு கட்டுரைகளை நாளிதழ்கள் எப்படி வெளியிட்டன என்பதே அதிர்ச்சியாக உள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில், ஞாயிறு அன்றைக்கு நடுப்பக்க கட்டுரைகள் ஏற்கெனவே மதவாத சிந்தனையாளர்களுக்கு என ஒதுக்கப்பட்டுவிட்டது. அதில் அவர்கள் பேசும் கருத்துகள் அனைத்துமே காலாவதியானவை. அரசின் அநீதிக்கு ஆதரவான கருத்துகளைக் கொண்டவை.

அமி்ஷ் நூல் முழுக்க நேரடியாக இந்துத்துவ கருத்துகளை சொன்னால் சங்கடமாகிவிடும் என்று நினைத்தாரோ என்னவோ, மனிதநேயத்தை உள்ளே கொண்டு வந்து நிறுத்துகிறார்.  அடிக்கடி மத வன்முறை வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். அப்புறம் எதையும் இன்னொன்றோடு மதிப்பிட வேண்டாம் என்கிறார். மதமாற்றம் பற்றிய கட்டுரையில், எதற்கு மதமாற்றம் நடக்கிறது என்று வெளிப்படையாக விவாதிக்க திராணியில்லாமல், அப்படி செய்வதால் இந்துத்துவ தீவிரவாத கும்பல்கள் நடத்தும் கொலைவெறி தாக்குதல்களால் நாடு பாதிக்கப்படும் என எழுதுகிறார். எழுத்தாளர் அமிஷ் அவர்கள், இக்கட்டுரைகளை கண்ணை மூடிக்கொண்டு தட்டச்சு செய்தாரா என்று தெரியவில்லை. அன்னை தெரசாவை மதமாற்றம் செய்தவர், அவர் மீது காவல்துறை வழக்கு தொடுக்கவில்லை என்று ஓரிடத்தில் பேசுகிறார். அவர் தொழுநோயாளிகளுக்கு செய்த மருத்துவப்பணிகளை வசதியாக மறந்துவிட்டார். உண்மையில் தேவைக்கு ஏற்ப பொய்களை கலந்து பேசுவது, அரைப்பகுதி உண்மையை பேசுவது சங்க பரிவார் அமைப்புகளுக்கு இயல்பானது. அதேபாதையில் அமிஷ் பயணிக்கிறார்.

இந்தியாவில் நடைபெறும் மத வன்முறை பற்றி வெளிநாட்டு நண்பர் கேள்வி கேட்பதற்கு, அமிஷ் பெண்கள் மீதான வன்முறை பற்றி பேசுகிறார். அடுத்து நேராக மத்திய கிழக்கில் சென்று சவுதி அரேபியர்கள் நடத்தும் போர்கள், அதில் பாதிக்கப்படும் மக்கள் பற்றி பேசத் தொடங்கிவிடுகிறார். நூல் முழுக்க இப்படி தப்பித்துச் செல்லுதல் நிறைய இடங்களில் உள்ளது.

அமிஷின் தந்தை லார்சன் டூப்ரோவில் வேலை செய்தார். அமிஷ், வங்கியில் வேலை செய்தார். அவரது மகன் நீல் இன்னும் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில், பங்கு முதலீடு அல்லது காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்வார். சந்தேகமில்லை. ஆனால், அமிஷ் தனது நூல்களை படிக்கும் வாசகர்களுக்கு வடமொழியை படிக்கச்சொல்கிறார். வேதங்களை கற்க கூறுகிறார். தொன்மைக்கால பண்பாட்டை பின்பற்றக் கூறுகிறார். அரசின் சட்டங்களை அவை அநீதியாக இருந்தாலும் அதை ஏற்க கூறுகிறார். அதை கர்மா என்ற பெயரில் சுட்டி்க்காட்டியுள்ளார். கர்மா என்ற வார்த்தை நூலில் எத்தனை முறை பயன்பட்டிருக்கிறது என்று கணக்கு போட்டால் கால்குலேட்டரே திகைத்து நின்றுவிடக்கூடும்.

நூலின் தலைப்பு தொன்மைக்கால இந்தியா, வேதகால இந்தியா, இந்து, இந்தி, இந்துஸ்தான் என ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து வைத்திருக்கலாம். பொறுத்தமாக இருந்திருக்கும்.

இந்துத்துவா ஆதரவு நூல். மற்றபடி நூல் வாசகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்புகளை ஏதும் வழங்கவில்லை. ஏமாற்றம்தான். கடந்தகாலத்திலேயே பெரும்பாலான கட்டுரைகள் பயணிக்கின்றன. சொல்லும் கருத்துகளும் உண்மையை, கர்மா என்ற வார்த்தையால் எதிர்கொள்வதால் நம்பிக்கையோடு உண்மை மோதும் நிலை ஏற்படுகிறது. 

கோமாளிமேடை குழு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்