திராவிட இயக்கம், கட்சி ஆகியவற்றின் போராட்டம் நிறைந்த நெடிய சமூகநீதிப் பயணம்!
தெற்கிலிருந்து ஒரு சூரியன் இந்து தமிழ்திசை ஆசிரியர் குழு - அசோகன், கே.கே மகேஷ், சமஸ், ரங்காச்சாரி, ஏஎஸ் பன்னீர்செல்வம் இந்து தமிழ்திசை, சென்னை திராவிட இயக்கத்தின் செயல்பாடு, திமுக அரசியல் அதிகாரம் பெற்று செய்த சாதனைகள், அதன் பிரச்னைகள், பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி என மூன்று தலைவர்களின் ஆளுமை, தமிழ்நாட்டின் தனித்துவம், திராவிட ஆட்சியில் நடைபெற்ற சமூகநீதி திட்டங்கள் என ஏராளமான தகவல்களைக் கொண்டதாக நூல் உருவாகியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படியான நூலை உருவாக்கியிருப்பது சமூகநீதிக்கு எதிராக இருந்த பார்ப்பன பத்திரிகைக் குழுமம் என்பதுதான். திராவிட இயக்கத்திற்கு ஆதரவாக நின்ற பத்திரிகைகளோ, பத்திரிகையாளர்களோ கூட இப்படியான நூலை தொகுக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது. எதிர்க்குழுவோ, ஆதரவான குழுவோ திராவிட இயக்கம் சார்ந்து கருணாநிதி அவர்களை புத்தக அட்டையாக போட்டு நூல் ஒன்று தயாராகிவிட்டது. நூல் எப்படியிருக்கிறது என்று பார்ப்போம். நூல் தொடக்கத்தில் நீதிக்கட்சி, பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என பல்வேறு கட்டுரைகள் வழியாக தம...