என் மீது ஒட்டப்படும் லேபிள்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது - ஆப்கன் திரை இயக்குநர் சாஹர் பானு சதாத்
ஆப்கானிஸ்தான், அங்கு முதலில் அமெரிக்கா,இந்தியா பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்தனர். பிறகு, பல்வேறு திட்டங்களை செய்த பிறகு என்ன நினைத்தார்களோ, தாலிபன்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு இருநாடுகளும் தங்கள் நாடு வந்து சேர்ந்துவிட்டனர். தாலிபன்கள் முட்டாள் மூர்க்கர்கள். மதச்சட்டப்படிஆட்சி நடத்தக்கூடியவர்கள்.
அமெரிக்க, இந்திய நாடுகளில் ஆதரவில் ஆப்கனில் பெண்களின் முன்னேற்றம் மேலேறி உயர்ந்து வந்தது. கல்வி கற்க, விரும்பிய உடையை உடுத்த, வெளியே வேலைக்கு செல்லக்கூடிய, பேசக்கூடிய அடிப்படை விஷயங்கள் நடைபெற்றன. இப்போது மீண்டும் அவர்கள் கற்காலத்திற்கே சென்றுவிட்டனர். அண்மையில், இந்தியா வந்த தாலிபன்கள், பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆண்களை மட்டுமே கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதற்கு பெண்கள்தான் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆண்கள் கண்டனம் தெரிவித்தது குறைவுதான்.
இப்போது சில நாட்களுக்கு முன்னர் ஆப்கனின் மற்றொரு சட்டம் வந்திருக்கிறது. குடும்ப வன்முறையை சட்டப்பூர்வமாக்கும் சட்டம் அது. அதாவது, கணவர் மனைவியை அடிக்கலாம். ஆனால், எலும்பு முறியும் காயம் ஏற்படக்கூடாது. எலும்பு முறியாமல் பெண்ணை அடித்து உதைக்கலாம். இப்படிப்பட்ட கிறுக்கு பிடித்த மனிதர்கள் ஆட்சியாளர்களாக உள்ள நிலத்தில் காதல் திரைப்படம் எடுப்பது என்றால் சும்மாவா?
ஆம்.. சாஹர்பானு சதாத் என்ற 35 வயதான ஈரானில் பிறந்து வளர்ந்த ஆப்கனை பூர்விகமாக கொண்ட இயக்குநர் நோ குட் மேன் என்ற திரைப்படத்தை எடுத்திருக்கிறார். அவரின் பேட்டிதான் இது. இவர் இயக்கிய திரைப்படம் 76வது பெர்லின் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டிருக்கிறது. ஆப்கனின் பெண்கள் மூச்சு விடுவதே சிரமம். இதில் திரைப்படம் எப்படி எடுத்தார் என பலரும் யோசிப்பார்கள். அது சரிதான்.சதாத் இப்போது ஜெர்மனியில் வசிக்கிறார்.
நோ குட் மேன் படத்தைப் பார்த்துவிடுவோம். படத்தில் மையப் பாத்திரம் நாரு. திருமண உறவில் நேர்மையாக இல்லாத கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். காபூலில் உள்ள டிவி ஸ்டேஷனில் வேலை செய்யும் ஒரே பெண் ஒளிப்பதிவாளர் நாருதான். அவருக்கு எந்த ஆணுமே நேர்மையாக இல்லை என்று தோன்றுகிறது. இந்த நேரத்தில் பத்திரிகையாளர் குவாத்ரட் என்பவரை சந்திக்கிறார். இந்த சந்திப்பு மூலம் அவளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதில் அவர்களின் உறவு எப்படி சென்றது என்பதே கதை. இக்கதை, 2021ஆம் ஆண்டு நடைபெறுகிறது. அதாவது, தாலிபன்களின் கைக்கு ஆட்சி செல்வதற்கு முன்னர்.
பொதுவாக,பெண்களின் பிரச்னைகளைப் பேசும் படங்கள் சோகமாக, இருட்டாக இருக்கும். ஆனால், உங்கள் திரைப்படத்தில் நிறைய உணர்ச்சிகளைப் பார்க்க முடிகிறது.
என்னைப் பொறுத்தவரை நீங்கள் கூறுவது இயற்கையாகவே நடைபெறுகிறது. படம் இப்படித்தான் இருக்கவேண்டும் என தீர்மானித்துக்கொண்டு இயங்கவில்லை. ஒரு மென்மையான படம். பெண்களைப் பற்றி உருவாக்கவேண்டும் என யோசித்தேன். காபூலில் உள்ள என்னுடைய வாழ்க்கை அந்தளவு சோகம், மனச்சோர்வு கொண்டதாக இல்லை. ஆமாம். அந்த சமூகம் ஆண் மேலாதிக்கம் கொண்டதுதான். அந்த சமூகம் உடைந்து நொறுங்கிப் போன ஒன்றுதான். பெண்கள் மீது ஏராளமான விதிகளை திணிக்கிறதுதான். ஆனால், நான் எனக்கான வழியைத் தேடிக்கொண்டேன். திரைப்படத்தில் வரும் நாரு கூட என்னைப் போன்றவள்தான். அவள், அதிகாரிகளை, அரசை எதிர்கொள்ளும்போது தன்னுடைய சுதந்திரத்தை மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படியான சூழ்நிலையில், அவள் அதை ஏற்றுக்கொள்கிறாள் என்பதல்ல. நான் பெண்கள் ஜிம்முக்கு போவதைப் பற்றி குறும்படம் ஒன்றை எடுத்தேன். சூப்பர் ஆப்கன் ஜிம் என்பது அதன் பெயர். ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் அதை திரையிட்டோம்.
ஆப்கனில் உள்ள பெண்கள், சமூக வலைத்தளம் வழியாக என்னைத் தொடர்புகொண்டு தாலிபன்கள் வந்தபிறகு தங்களால் பள்ளிக்கு, வேலைக்கு போக முடியவில்லை. ஆனால், ஜிம்முக்கு ரகசியமாக போய் வருகிறோம். அதுதான் அன்றைய தினத்திற்கானது. ஜிம்முக்குப் போய் தசைகளை உருவாக்கி வருகிறோம். அதைத்தான் செய்ய முடிகிறது என்று எழுதியிருந்தனர். அதைப் படித்தபோது என் இதயமே நொறுங்குவது போல உணர்ந்தேன். ஆனாலும் கூட நான் அந்தப் பெண்களை விரும்புகிறேன். அவர்கள்தான் எனது முன் மாதிரிகள்.
என்னுடைய ரோம் காம் படத்தை எடுப்பதற்கு நிதியளித்தவர்கள், ஆப்கனில் தாலிபன்களுக்கு எதிராக பெண்கள் போராடும் நேரத்தில் காதல் படம் எடுப்பது அவசியமா என்று தயங்கினார்கள். ரொமான்ஸ் காமெடி திரைப்படம் என்பது முழுக்க வெள்ளையர்களுக்கானதா என்ன? அவர்கள் ஆப்கனைச் சேர்ந்த கலைஞர்களை என்ன மாதிரியான கலைப்படைப்புகளை உருவாக்குகிறாய் என்று வேறு கேட்கிறார்கள். காதல் நகைச்சுவை திரைப்படத்தை உருவாக்குவது என்பது உள்ளுக்குள்ளும், வெளியிலும் சவாலான ஒன்றே.
வீடு என்பது உங்களுக்கு எப்படியானது?
இரானில், என்னை ஆப்கன் என்று கூறுவார்கள். நான் ஒரு ஆப்கன், அங்கு நான் திரும்ப போய்விடவேண்டும் என கூறப்பட்டது. ஆனால், நான் பிறந்தது இரானில், நான் ஏன் ஆப்கனுக்கு திரும்ப போக வேண்டும்? எனக்கு ஆப்கன் என்பது இதுவரை அறியாத தேசம். நான் ஏன் அங்கு செல்ல வேண்டும்? இரானில் ஆப்கானி என்பது ஒருவரை இழிவுபடுத்தக்கூடிய வார்த்தை. அடுத்து, நான் என் பெற்றோரோடு ஆப்கன் போனால், அங்கு இரானியன் என்று எங்களை கூறினர். அவர்கள் என்னை இரானுக்கு திரும்பச் செல்லும்படி கூறினார்கள். இதுபோன்ற அடையாள சிக்கல்கள் எனக்கு வெகு காலம் முன்னரே ஏற்பட்டது. நான் எந்த நிலத்திற்கு சொந்தமானவள் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை. நான் ஜெர்மனிக்கு வந்தபோது எனக்கு புதிய அடையாளம் கிடைத்தது. வெளிநாட்டுக்காரர், ஒரு அகதி என்று. அப்போதுதான் எனக்கு புரிந்தது. இரானியன், ஆப்கானி, வெளிநாட்டுக்காரன், அகதி என்பது எல்லாம் வெளியுலகம் சார்ந்தது. அவர்கள் இப்படியான அடையாளத்தை திணிக்கிறார்கள். இரான், ஆப்கன், ஜெர்மனி என மூன்றுமே என்னுடைய வீடுதான். நான் ஒரே மாதிரியான மனிதராகவே உணர்கிறேன். இப்போது உள்ள சூழலில் நான் தேசியவாத அடையாளத்தை தாண்டிவிட்டேன். அவற்றைப் பற்றியெல்லாம் ஒரு பொருட்டாக கருதுவது இல்லை. அவை எனக்கு எந்த பொருளையும் உணர்த்துவதும் இல்லை.
பெர்லின் திரைப்பட விழாவில் அதன் தலைவர், திரைப்படங்களில் அரசியலைக் கலக்கக்கூடாது என்று கூறினார். அதைப்பற்றி உங்கள் கருத்து?
நானும் அதைக் கேட்டேன். அதைப்பற்றி என்னுடைய கோணத்தில் கருத்தைக் கூறுகிறேன். திரைப்பட இயக்குநராக நான் உருவாக்கியுள்ள திரைப்படம் ஆண்களின் மேலாதிக்கம் பற்றி பேசுகிறது. நிறைய பேர் என்னைக் கேட்கிறார்கள் நீங்கள் பெண்ணிய திரைப்பட இயக்குநரா என்று. அது இன்னொரு லேபிள். நான் இதுபோல லேபிள்களால் அடையாளம் காணப்பட விரும்பவில்லை. அனைவரும் இதுபோல ஏராளமான லேபிள்களை கையில் வைத்திருக்கிறார்கள். இனவெறி, பாலியல் ரீதியான மேலாதிக்கம் போன்ற அனுபவங்களை நான் என் வாழ்நாளில் எதிர்கொண்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை திரைப்படங்களை உருவாக்குவது உளவியல் சிகிச்சை போல. என்னுடைய திரைப்படத்தில் நாரு என்ற பாத்திரத்தில் நடித்தபோது, என்னையே அடையாளம் கண்டேன். கேமராவின் முன்னே நான் சிறந்த நடிகை கிடையாதுதான். முழு உலகமே அதை கண்டு இதுபோல கூறக்கூடும். எனக்கு இதில் அசௌகரியங்கள் உண்டு. ஆனால், இந்த திரைப்படத்தில் நாருவாக நடித்தது என்னை நானே பார்த்துக்கொள்ள உதவியது. திரைப்படம் எனக்கு சுதந்திரத்தை அளிக்கிறது.
உங்களது திரைப்படத்தை ஆப்கனிலுள்ள மக்கள் பார்க்க முடியுமா?
அனைத்து மக்களிடமும் ஸ்மார்ட்போன், இணையம் உள்ளது. அவர்கள் திரைப்படத்தை திருடி பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். படத்தை எடுத்து யூட்யூபில் போடலாம், அதை சுருக்கி டாக்டாக்கில் பரப்பலாம். அல்லது டெலிகிராமில் பதிவிடலாம். அவர்கள் உறுதியாக திரைப்படத்தைப் பார்ப்பார்கள். எனக்கு இதுகுறித்து எதிர்பார்ப்புகள் குறைவாகவே உள்ளன. என்னுடைய படத்தை அவர்கள் வரவேற்பார்கள் என்று நேர்மறையாக எண்ணுவது குறைவுதான். முதலில் நான் பெண், நான் எப்படி தைரியமாக பேசலாம் என்பார்கள். அப்புறம், என்னுடைய திரைப்படத்தின் பெயர் நல்ல ஆண்களே கிடையாது. இதைப் படித்துவிட்டு என்னை லெஸ்பியன் என்று கூறுவார்கள். எனவேதான், ஆண்களை மோசமானவர்கள் என்று கூறுகிறேன். இப்படித்தான் அவர்கள் எனக்கு கமெண்டுகளை எழுதப்போகிறார்கள். ஆனால் இந்த திரைப்படத்தை பெண்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.
#ஆப்கன் #ஆண்கள் #மேலாதிக்கம் #உரையாடல் #தனுஶ்ரீகோஷ் #தி இந்து #பெர்லின் 2026 #திரைப்பட விழா #அரசியல் #பெண்கள் #காதல் #நகைச்சுவை #சாஹர்பானு சதாத்
#afghan #romcom #shahrbanoo sadat #nogoodmen #berlinale 2026 #anwar hashimi #autobiograohy #taliban #naru #dark and grim #patriarchal #society #politics #films #identity #freedom #telegram #tiktok #sad #depression #racist
நன்றி
தனுஶ்ரீ கோஷ்
மேக்கிங் ஆஃப் ஏன் ஆப்கன் ரோம்காம் Making of an afghan rom-com
தி இந்து



கருத்துகள்
கருத்துரையிடுக