தமிழ் திரையுலகை மிரள வைத்த தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்ப தேவர்!
Book review
tamil
சாண்டோ சின்னப்ப தேவர்
தீனதயாளன்
சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம்
ப.176
இந்த நூலில் தீனதயாளன், சாண்டோ சின்னப்ப தேவரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பல்வேறு சம்பவங்களை விவரித்துள்ளார். இது ஒருவரின் வாழ்க்கை வரலாறு போலத்தான். ஆனால், இது கட்டுரை நூல் என்பதை மறக்கும் வகையில் தீனதயாளன் கட்டுக்கோப்பாக நாவல் போல எழுதியிருக்கிறார். நூலில் உள்ள பல்வேறு பக்கங்களிலும் தேவரின் வாழ்க்கை, முருக பக்தி இல்லாமல் அந்த பக்கமே முடியாது. அதேசமயம், தேவரின் முருக பக்தி, நூல் முழுக்க நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதேசமயம் அவர் மதிக்கும் கொள்கைகளில் இருந்து பிறழ்பவர்களை எப்படி எதிர்கொள்வார் என்பதற்கு ஒரு அத்தியாயமாவது கொடுத்திருக்கலாம்.
தீனதயாளன் முழுக்க தேவரின் ஆளுமையை புனிதப்படுத்தவில்லை. சில இடங்களில் கோடு காட்டியிருக்கிறார். குறிப்பாக அவரது தம்பி திருமுகத்திடம் வேலைக்காக கடுமையாக திட்டுவது, தாமதமாக வருபவர்களை வசை பாடுவது, உதவியாளர்களை அடித்து உதைப்பது எல்லாமே உண்டு. கோபத்தில் அப்படி செய்தாலும் கூட மறுபக்கத்தில் அவர் அவர்களுக்கு வீடு வாங்கிக்கொடுப்பது, கைநிறைய கணக்கு பார்க்காமல் காசு கொடுப்பது ஆகியவற்றை செய்கிறார். இறுதிவரை அவர் காசு கொடுப்பதை பெரிதாக நினைத்துக்கொள்வதில்லை. அதிலும் பெரும்பாலும் முருகனின் கோவில்களுக்குத்தான் அவர் நிறைய அறப்பணிகளை செய்திருக்கிறார். அவர் செய்த அத்தனை விஷயங்களும் இறுதியாக அவரது மனைவி முத்து மாரியம்மாள் கேட்கும் கேள்வியில் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. அவர் மனைவி, ஊருக்கு செய்வதெல்லாம் சரி. ஆனால், பிள்ளைகளுக்கு என்ன இருக்கிறது?
இந்த நூலில் சாண்டோ சின்னப்ப தேவரின் வாழ்க்கை அவரது பெற்றோர்களான அய்யாவு,ராமக்காள் ஆகியோர் பற்றியும் பேசப்படுகிறது. அதெல்லாம் தாண்டி எம்ஜிஆர். சிவாஜி கணேசன் ஆகியோரின் ஆளுமைகளும் இதில் வெளிப்படுகிறது. அதிலும், எம்ஜிஆர் தேவர் பிலிம்சில் பதினெட்டு படங்கள் எப்படி நடித்தார் என்பது ஒரு ஆச்சரியமாக இருக்கலாம். அந்த ஆச்சரியத்திற்கான காரணத்தை இந்த நூலைப்படித்தால் அறிந்துகொள்ளலாம். எம்ஜிஆர், சிவாஜி கணேசனை முற்றாக தவிர்த்து தேவர் பிலிம்ஸ் படங்களில் நடித்து தன்னை மேலேற்றிக்கொள்கிறார். அவரது தொழில் எதிரியான சிவாஜி கணேசனை முற்றாக வெல்கிறார். இதற்காக எம்ஜிஆர் தானே சென்று தேவரிடம் வாய்ப்பு கேட்கிறார். அப்போது அவரது திரைப்பட வாழ்க்கை அந்தளவு ஆரோக்கியமாக இல்லை. தேவருக்கு எம்ஜிஆரின் தேவை இருக்கிறது. அவருக்கு என்ன? மக்கள் அபிமானம் கொண்ட நாயகன் தேவை. முற்று முழுதாக கால்ஷீட் கொடுத்துவிட்டால் போதும். மூன்று அமாவாசையில் படத்தை முடித்துவிடவேண்டும். அவ்வளவுதான். இப்படியே பதினெட்டு படங்கள் செய்திருக்கிறார்கள். எம்ஜிஆர், தேவரை அணுகி வாய்ப்பு கேட்டதற்கு இன்னொரு காரணமும் கூட இருந்திருக்கலாம். சிவாஜி கணேசன், தேவர் இனத்தைச் சேர்ந்தவர். எளிதாக இருவரும் இணைந்நது விடுவார்கள். அப்படி செய்தால் தனக்கு ஆதரவு இருக்காது என அவர் நினைத்திருக்க கூடும்.
தேவர் கடைபிடித்த கொள்கைகள் மூன்றுமே தொழில் வாழ்க்கையில் அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை. தாமதம், சொன்ன வார்த்தை தவறுவது, பண மோசடி செய்வது. இவற்றை அவர் எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. பெரும்பாலும் தேவர், நடிக்க வைத்த கலைஞர்களுக்கு அவர்களுக்கு அதுவரை வாங்கியதை விட அதிக பணத்தைக் கொடுத்திருக்கிறார் என்று அறிந்துகொள்ள முடிகிறது. மற்றவர்கள் எப்படி என ஒருமுறை கலைஞானம் கூற கேட்ட பிறகும் கூட பத்தாயிரம் பணத்தைக் கொடுத்து ஊருக்குப் போய் நிலத்தை வாங்கிட்டு வந்து கதை சொல்லு என்று கூறுகிறார். அந்த காலத்தில் யார் அப்படி சொல்லுவார்கள்? யார் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்களோ அவர்களை வைத்து படம் எடுப்பதுதான் அவரது நோக்கம். தேவரின் படங்கள் அனைத்துமே டிபிக்கலான் மசாலா டெம்பிளேட் படங்கள்தான். அதை அவர் நட்சத்திர ஈர்ப்பு கொண்டு ஈடுகட்டி வெற்றி கண்டிருக்கிறார். கமல் சினிமா வாய்ப்பு தேடும் சமயம், அவரை வைத்து காதல் படம் எடுக்க நினைத்த தேவரை, அவரது சகாக்கள் தடுத்திருக்கிறார்கள். பிறகு, கமல் புகழ் பெற்ற நடிகரான பிறகு, நான் உதவி செய்ய நினைத்தேன். கூட இருப்பவர்கள் தடுத்து விட்டார்கள். அதை மனதில் வைத்து பழிவாங்க வேண்டாம். கால்ஷீட் கொடு என்று அவரால் கேட்க முடிகிறது. இதற்கு காரணம், தேவரின் நேரடியான அணுகுமுறைதான். தேவர், தொடர்ந்து நாகிரெட்டியின் நட்பை பேசி பராமரித்து வந்திருக்கிறார். எம்ஜிஆரிடமும் நட்பு உள்ளது. அதாவது, அவர் அரசியல்வாதியாக மாறிய பிறகும், அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகும் கூட.
நாகிரெட்டி, ஏவிஎம் செட்டியார் ஆகியோரோடு போட்டியிடுவதற்கான துணிச்சலை தேவர் தொடக்கத்திலிருந்தே கொண்டிருக்கிறார். பிறகுதான் எம்ஜிஆர் வந்து இணைவதெல்லாம். எம்ஜிஆர் நட்பு கொண்டிருந்ததெல்லாம் பின்னர்,தனக்கும், கட்சிக்குமான ஆதாயமாக மாற்றிக்கொண்டார். சினிமா தயாரிப்பாளராக இருந்தாலும் தன்னுடன் நெருக்கமானவர்கள், நெருக்கமானவர் என கருதுபவர்களுக்கு நேரடியாக காசு கொடுக்காமல் சொத்தாக வாங்கிக்கொடுப்பதை தேவர் செய்து வந்திருக்கிறார். அதனால்தான், அவரால் எம்ஜிஆர்,அசோகன், ஜெய்சங்கர், முத்துராமன், கமல், ரஜினி,ஶ்ரீபிரியா என பல்வேறு வகையான வேலை முறை கொண்டவர்களோடு இணைந்து வேலை செய்ய முடிந்திருக்கிறது. தேவர் பட டெம்பிளேட்டாக தொடக்க காட்சியில் நாயகன் வெற்றி வெற்றி என்று கூறுவது, படத்தின் தலைப்பை பாத்திரங்கள் பலவும் சொல்வது,நேர்மறையான கிளைமேக்ஸ் என இருக்கும். பாடல்களுக்கும் தேவர் முக்கியத்துவம் கொடுத்தார். அடிப்படையில் அவரது படங்கள் அனைத்துமே டூரிங் டாக்கீஸில் உட்கார்ந்து படம் பார்ப்பவர்களுக்கானது. ஜாலியாக ரசித்து பொழுதைக் கழிப்பவர்களுக்கானது. சிறுபிள்ளை படம் பார்த்தாலும் படம் புரியவேண்டுமென மெனக்கெட்டிருக்கிறார் தேவர்.
முருகனை வேண்டி, படமெடுத்து அதற்காக நடித்த நடிகர்கள் மட்டுமல்ல தன்னுடைய நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பிறரை விட அதிகளவு சம்பளம் கொடுத்து வருகிறார். தன்னுடைய குடும்ப நலனுக்காக படம் எடுத்து கொடுக்க நினைத்து எடுக்கும் படம்தான் முருகன் அடிமை. ஆனால்,அந்தப் படம் தோல்வியுறுகிறது. நூலில், அவர் தன் குடும்பத்திற்காக ஏதேனும் சொத்து சேர்த்தாரா, நிலம் வாங்கி வைத்தாரா என்று தெரியவில்லை. தேவரைப் பொறுத்தவரை வருடத்திற்கு இத்தனை படம், அமாவாசையன்று பூஜை. மூன்றாவது அமாவாசையில் படம் ரிலீஸ். படத்தின் பூஜையின்போதே வெளியீட்டை சொல்லிவிடுவது என உறுதியாக நின்று படங்களை எடுத்திருக்கிறார். அதுவே ஆச்சரியம்தான்.
இந்த நூலில் கௌரவ தோற்றத்தில் வருபவர்கள் கமல்ஹாசன், ரஜினி, ஶ்ரீபிரியா, கோவை ராஜா எனும் கே பாக்கியராஜ் ஆகியோர். தேவர் கதை இலாகாவில் உதிரிப்பூக்கள் இயக்குநர் மகேந்திரன் வேலை செய்திருக்கிறார். அதற்கான காரணம், வயிற்றுப் பசிதான். அதையும் அதிலேயே கூறிவிட்டார்கள். ஜெய்சங்கர் ஆண்டுக்கு பத்து படங்கள் நடித்தது. அதற்கான காரணம். அன்றைய காலத்தில் வெளிவந்த சினிமா இதழ்கள் என நிறைய தகவல்கள் போகிற போக்கில் படித்து மகிழ உள்ளளன.
பெரிய பின்னணி இல்லாமல் தமிழ் சினிமா மீது வேட்கை கொண்டு நடிக்க ஆசைப்பட்ட மனிதர், தயாரிப்பாளராக வெகு தூரம் சென்றிருக்கிறார். ஏராளமான பொழுதுபோக்கு திரைப்படங்களை அளித்திருக்கிறார். அவரது நிறுவனம் மூலம் ஏராளமான கலைஞர்கள் மேலே வந்திருக்கிறார்கள்.பட்டினி இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என்றும் சென்றிருக்கிறார். அத்தனை இடங்களிலும் முருகனின் அருளால் வெற்றி பெற்றிருக்கிறார். சாண்டோ சின்னப்ப தேவர் நூல், நம்மை அக்காலகட்டத்திற்கே அழைத்துச் செல்லும் விதமாக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் பா. தீனதயாளன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
கோமாளிமேடை குழு.
#சின்னப்ப தேவர் #சாண்டோ சின்னப்ப தேவர் #திரைப்படம் #எம்ஜிஆர் #அம்மு #பாம்பு #வாகினி ஸ்டூடியோ #நாகிரெட்டி #ஏவிஎம் #தேவர் பிலிம்ஸ் #தண்டாயுதபாணி பிலிம்ஸ் #அமாவாசை #மிருகம் #ஹாத்தி மேரா சாத்தி #கமல்ஹாசன் #ரஜினி #ஜெய்சங்கர்
#devar #sixthsense publication #sando #devar films #mgr #sarojadevi #money #kovai #heartattack #murugan #honesty #spritual #temples #help #victory #18 films #elephant #snake #goat #ammu #rajesh khanna #hathi mera saathi #tamilnadu #admk #atheist


கருத்துகள்
கருத்துரையிடுக