வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டும் 87 வயது உளவியலாளர் எழுத்தாளர் ரீ குன் ஹூ!
இப் யூ லிவ் டு 100 - யூ மைட் ஆஸ் வெல் பி ஹேப்பி
உளவியலாளர் ரீ குன் ஹூ
பெங்குவின்
கொரியாவில் இருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு - சுபில் லீ பார்க்
இந்த நூலை எழுதிய ஆசிரியர் பிறந்த ஆண்டு 1935. ஆமாம். 87 வயதில் இந்த நூலை தனது குடும்பத்தினர் உதவியுடன் எழுதியிருக்கிறார். அப்படி எழுதிய நூலும் அப்படியொரு சாதனையாக விற்கிறது. எப்படி சாத்தியம் ஆகிறது? சாத்தியம்தான். ஏனெனில் எழுத்தாளர் ரீ குன் ஹூ தனது வாழ்க்கையில் பார்க்காத மேடு பள்ளங்கள் கிடையாது. சந்திக்காத துயரங்கள் கிடையாது. அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் நம்மைப் போன்றவர்களுக்கு அறிவுரை கூறக்கடாதா என்ன? நூலில் அவர் தான் சந்தித்த அனுபவங்களின் வழியாக தன்னை சுயபரிசோதனை செய்வதாக நாம் கருதலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கை என்பதை விட நிதானமான வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை என்பதை ரீ வலியுறுத்துகிறார். இதற்கு அவர் பல்வேறு அறிஞர்களுடைய மேற்கோள்களை சுட்டிக் காட்டவில்லை. தன்னுடைய வாழ்க்கையை முன்வைத்துப் பேசுகிறார். அவ்வளவுதான். அவர் தன்னுடைய வாழ்க்கையில் கொரிய போர், வறுமை, பிரதமருக்கு எதிரான போராட்டம், அதனால் சிறைவாசம், சிறைவாசம் காரணமாக மருத்துவம் பயில முடியாமல் போனது. அக்காலத்தில் யாரும் செல்லத் தயங்கிய உளவியல் மருத்துவர் வேலைக்கு விண்ணப்பித்தது. அதன் வழியாக அவருக்கு ஒரு கதவு திறந்தது என நிறைய அனுபவங்கள் நூல் முழுக்க கொட்டிக் கிடக்கிறது.
இதில் ரீ தனது நான்கு குழந்தைகளை அருகில் இருந்து பார்த்து வளர்க்க முடியாமல் போனதுபற்றியும், குடும்பத்தில் மேலாதிக்கமாக நடந்துகொண்டது பற்றியும், பத்தாண்டுகளாக ஒரே வில்லாவில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளோடு வாழ்வது பற்றியும் எழுதியுள்ளார். அதில் உள்ள நேர்மைதான் வாசிக்கும்போது இன்பம் தருவது. பெரும்பாலும் ஒருவர் தான் செய்த தவறுகளை வாழ்க்கை முழுவதுமே ஒப்புக்கொள்ள தயங்குவார். ஆனால், ரீ அவற்றை தவறுதான், கவனிக்கத் தவறிவிட்டேன் என்று கூறுகிறார். குறிப்பாக, மனைவியிடம் பேசும்முறை, பிள்ளைகளின் கருத்துகளைக் கேளாமல் தன்னை மட்டுமே முக்கியத்துவப்படுத்துவது ஆகியவற்றைக் கூறலாம்.
ரீ குன் ஹூவின் பக்குவப்பட்ட மனதுக்கும் திறந்த மனப்பான்மைக்கும் இன்னொரு சாட்சிதான். பேரப்பிள்ளைகளுக்கு அவர் தனது கதையைக் கூறுவது. கூறியபிறகு பேரப்பிள்ளைகள் கூறும் கருத்துகளைக் கேட்பது. புரியாத நவீன கால வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டுத் தெரிந்துகொள்வது ஆகியவை நடப்பது. 87 வயது ஆனாலும் அவர் கற்பதை நிறுத்தவே இல்லை. நூலில் உள்ள இன்னொரு முக்கியமான பகுதி. செய்த நன்மைகள் திரும்பி வருவது. ஆனாலும் நன்மைகள் என்றால் தீமைகள் திரும்பி வந்தால் என ரீ குன் ஹூ அச்சப்படும் பகுதி. ஏனெனில் உளவியல் மருத்துவராக குறிப்பிட்ட நிலைமைகளை கவனிக்கத் தவறி இளம்பெண் ஒருவர் இறந்துபோக காரணமாக மாறுகிறார். அதை ரீ குன் ஹூ ஒப்புக்கொள்கிறார். ஆனால், சம்பந்தப்பட்டவர் இறந்துபோகும்போது பெரும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறார். நூலில் ஆச்சரியமான பகுதி என்று ரீ குன் ஹூவை அடித்த ரௌடி திருந்தி கார் டிரைவராக இருப்பது, தனது வன்முறையான குணத்திற்கு வருந்தி ரீயிடம் மன்னிப்பு கேட்டு காரில் பயணம் செய்த தொகையை வாங்க மறுப்பது, அடுத்து, இன்னொரு மாணவர் பகுதி நேரமாக வாடகைக் கார் ஓட்டுகிறார். தான் படிக்கும் பல்கலைக்கழக பேராசிரியர் என்று தெரிந்து பணம் வாங்காமல் மரியாதை செலுத்துவது ஆகியவற்றைக் கூறலாம். சில இடங்களில் இப்படியான கருணை, ரீயை வருத்துகிறது. நன்மை இப்படி வந்தால், தீமையும் வரும்தானே? எனவே, கார் ஓட்டுநர்களிடம் மறுத்தாலும் கையில் அதிகளவு காசை கொடுத்துவிட்டு ஓடி வந்துவிடுகிறார்.
ரீ குன் ஹூ, பெற்றோரைத் தெரிந்துகொள்வது, நேபாளத்திற்கு செல்லும் சாகசப் பயணம் உணர்த்தியவை, செய்த தவறுகளின் சுமையை படிக்கட்டுகளில் ஏறி கடப்பது பற்றி நண்பன் கூற வருந்துவது, வயதான காலத்தில் ஏழு நோய்கள் வந்தாலும் அதற்கான மருத்துவம் செய்து அதை தீர்க்க முடியாமல் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தனது வாழ்வை வாழ்வது என நிறைய ஆச்சரியங்களை, நூலை வாசிக்கும்போது அறியலாம். இந்த நூல் ஆன்மிக நூல் அல்ல. நூலின் தலைப்பு அப்படி ஒரு தன்மையை ஏற்படுத்தினாலும், வாழ்க்கை பற்றிய கவனத்தை, அறிவுறுத்தலை, எதை கவனிக்க வேண்டும் என்ற அவரது பார்வையில் பிறருக்கு கூறுவதாக நூல் அமைந்துள்ளது. அதிலும், கொரிய பழமொழிகள், கன்பியூசியஸ் கூறிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளமை சிறப்பு.
நாம் நூறாண்டு வாழ்கிறோமோ இல்லையோ, அப்படி வாழும் வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக. தனிமை வேதனைப்படுத்தினாலும் சமாளித்து இடர்களை சமாளித்து மேலேறி வரலாம் என்று வழிகாட்டுவதாக நூல் அமைந்துள்ளது. வாய்ப்புள்ளோர் வாங்கி வாசியுங்கள்.
கோமாளிமேடை குழு



கருத்துகள்
கருத்துரையிடுக