தமிழ் இலக்கிய முன்னோடிகளை அறிமுகப்படுத்தும் நூல் - பழுப்பு நிற பக்கங்கள்(1) - சாரு நிவேதிதா
பழுப்பு நிற பக்கங்கள் -1
சாரு நிவேதிதா
எழுத்து பிரசுரம் ஜீரோ பப்ளிஷிங்
கட்டுரைகள்
இந்த நூலில் மொத்தம் 18 முன்னோடி எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இந்த எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம், தினமணி கதிரில் தொடராக வந்திருக்கிறது. பிறகு, அதை எழுத்து பிரசுரம் நூலாக மாற்றியுள்ளது. மொத்தம் இரண்டு பாகங்கள். நூல் ஒவ்வொன்றும் 400 ரூபாய் வருகிறது. காசுள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம். காசில்லாதவர்கள், வாங்கியவர்களிடம் இரவல் வாங்கி வாசிக்கலாம். அறியாமைத் திமிர் உள்ளவர்கள் நூலை தவிர்க்கலாம்.
நூலைத் தொடங்கி வைப்பது சார்வாகன். இவர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் ஊனத்தை சரி செய்யும்அறுவை சிகிச்சை முறையைக் கற்றவர். அதற்காக பத்மஶ்ரீ வாங்கியவர். இயற்பெயர் ஶ்ரீனிவாசன். எழுதியுள்ள கதைகள் பார்த்தாலும் சிறப்பாகவே உள்ளன. இவர்தான், பாகம் ஒன்று நூலைத் தொடங்கி வைக்கிறார். பிறகு, அப்படியே திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் - தி.ஜ.ர, கு.அழகிரிசாமி, திரு.வி.க என்று நீண்டு செல்கிறது. தி.ஜ.ர பற்றி எழுதியுள்ளது ஆர்வமூட்டுவதாக உள்ளது. கட்டுரைகளுக்கு முக்கிய பங்களித்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. நான் இதுவரை அவர் எழுதியதைப் படித்ததில்லை. படிக்கவேண்டுமென்று ஆசை பிறக்கும் அளவுக்கு அவரைப் பற்றிய அறிமுகத் தகவல்கள் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளன.
சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் வசீகரம் கொண்டவை. குறிப்பாக, அவரையொத்த ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து வகைகளை சிறப்பாக கையாண்டு வெற்றி கண்டவர்களைப் பற்றி பேசும்போது எழுத்தில் ஒரு பரவசத் தன்மை வந்துவிடுகிறது.எடுத்துக்காட்டாக, எம்.வி. வெங்கட்ராம் பற்றிய கட்டுரை. அதில், எம்.வி.வி எழுத்தில் பெற்ற வெற்றியோடு, அவர் தன்னை எப்படி உலகில் பிறருக்கு காட்டிக்கொண்டார் என்பதையும் கூட சாரு கூறுகிறார். ஒருகட்டத்தில் அதுவும் கூட அவருக்கு காவலாக கவசமாக அமைந்ததோ எனத் தோன்றுகிறது. இத்தனைக்கும் அவர் எழுதிய காதுகள் நாவல் வினோதமான கருத்துகளை, அவர் காலத்தில் பிறர் முயற்சிக்காத எழுத்து வகைமையைக் கருத்தைக் கொண்டுள்ளது. பராசக்தி, தன்னுடைய பிரா, ஜட்டியை கழற்றிவிட்டு மகாலிங்கத்தோடு உறவு கொள்ள முனைவது இதற்கு ஒரு சான்று. இதில் உள்ள முரண், மகாலிங்கம் பிறரிடம் மென்மையாக பேசுபவன். உரத்துக்கூட கிடையாது.நேர்மையாகதொழில் செய்ய நினைப்பவன். அவனேதான், எட்டு மாத கர்ப்பிணியோடு உறவு கொண்டுவிட சிசு இறந்து பிறக்கிறது.இதுபற்றி அவனுடைய மூளையில் பல்வேறு பாத்திரங்கள் கேட்கும் கேள்விகள் முக்கியமானவை.
எம்.வி.வி போலவே உள்ள இன்னொரு எழுத்தாளர் ஆ.மாதவன். இவர் எழுதியுள்ள கதைகளிலும் தீமையின் அழகியல் உண்டு. உண்மை என்றால் அதற்கு எதிராக பொய், துரோகத்தை முன்வைத்து இயங்கும் பாத்திரங்கள். சாரு, ஆ.மாதவனின் நிறைய சிறுகதைகள், நாவல்களை முன்வைத்து நம்மிடம் உரையாடுகிறார். அவற்றையும் வாசகர்கள் கவனித்து வா்ங்கிப் படிக்கலாம். இன்னொரு முன்னோடியை விட்டுவிட்டோம். திரு.வி.க அவர்கள். தமிழ்நாட்டில் திரு.வி.க தொழிற்பேட்டையே ஈக்காட்டுத்தாங்கலில் அமைக்கப்பட்டுள்ளது. எதற்கு என ஆராய்ந்தால் விடை கிடைக்கும். ஆம், தமிழ்நாட்டில் தொழில்சங்கத்தை முதன்முதலில் கட்டமைத்த தலைவர் திரு.வி.கதான். நவசக்தி வார இதழைத் தொடங்கி நடத்தியவர். காந்தி தமிழ்நாடு வந்திருந்தபோது, அவருக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டவரும் இவர்தான். அரசியல் காரணங்களுக்காக அல்ல, எழுதிய நூல்களுக்காகவும் வாசிக்க வேண்டிய மனிதர்.
பதினெட்டு எழுத்தாளர்களையும் முழுக்க விவரித்து விமர்சனம் செய்வது கடினம், நண்பர்களே. எனவே, தஞ்சை ப்ரகாஷ் பற்றிக்கூறி இக்கட்டுரையை முடித்துக்கொள்வோம். தஞ்சை ப்ரகாஷ் எழுதிய கள்ளம், கரமுண்டார் வூடு என்ற இரு நாவல்களை நான் வாசித்திருக்கிறேன். இந்த நூலிலிலும் நிறைய எழுத்தாளர்களின் நூல்களில் உள்ள சில பகுதிகளை சாரு, எடுத்து கையாண்டிருக்கிறார். அது போற்றத்தக்கது. அவரது எழுத்து வகைமை எப்படியானது என புரிந்துகொள்ள உதவும். தஞ்சை ப்ரகாஷ் பல்வேறு மொழிகளைக் கற்று பாண்டியத்தியம் பெற்றிருந்ததோடு, அவர் குறிப்பிட்ட இடங்களை பாத்திரங்களாக மாற்றுவது, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை தனித்துவம் மிக்கவர்களாக காட்டியதை முக்கிய அம்சமாக சாரு எடுத்துக்கூறுகிறார். அதேசமயம். தஞ்சை ப்ரகாஷ் முன்னோடிகளாக கருதியவர்கள் கூட அவரை செக்ஸ் எழுத்தாளராக கருதி புறக்கணித்த அவலத்தையும் வெளிப்படுத்துகிறார். இதற்கு சாதி,மதம் கூட காரணமாக இருக்கலாம். இவரது சிறுகதைகளை எனக்கு முன்னொரு முறை கவிஞரும்,இன்றைய குங்குமம் டாக்டர் இதழில் ஆசிரியரும் ஆன இளங்கோ கிருஷ்ணன் அடையாளம் காட்டி உதவினார். இந்த நேரத்தில் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அப்படி படித்த சிறுகதை, கட்டி மாம்பழம் என்று நினைக்கிறேன். தஞ்சை ப்ரகாஷ் நாவலை, சிறுகதையை படமாக்கும் தைரியம் யாருக்கேனும் உண்டா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், அவரது நூல்கள் சிறப்பானவை. அதை சிறப்பாக உ்ளவாங்கிக் கொண்டவர்கள் இதை அறியலாம். இந்த நேரத்தில் கரமுண்டார் வூடு பற்றி கூறி வாங்கிப்படி என அறிவுறுத்திய எழுத்தாளர் திரு.என். ஶ்ரீராம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மூலமே, நான் தஞ்சை ப்ரகாஷ் எழுதிய கரமுண்டார் வூடு நாவலை வாங்கி வாசித்தேன். அந்த நாவலைப் பொறுத்தவரை திரும்ப திரும்ப வாசிக்க வேண்டியது அவசியம். நான் இரண்டு முறை வாசித்திருக்கிறேன். சுந்தர ராமசாமி கூறுவது போல, புனைவை பலமுறை வாசிக்கவேண்டும்.
நூல் க.நா.சுவோடு நிறைவு பெறுகிறது. அதுவும் கூட பொருத்தம்தான். தன் வாழ்நாள் முழுக்க இலக்கியத்தை வளர்க்க உழைத்த மனிதர். பெரிய பணம் சேர்க்கவில்லை. ஆனால், ஏராளமான உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தியதோடு, அதில் பங்களிப்பும் செய்திருக்கிறார். சாரு, அவரைப் பற்றி எழுதும்போது ராஜாஜியோடு அவருக்குள்ள முரண்பாடுகளைக் கூற சில சம்பவங்களை சுட்டிக்காட்டுகிறார். அந்த சம்பவங்கள் இரண்டுமே க.நா.சுவின் குணத்தையும், இலக்கியத்தில் உள்ள அக்கறையையும் வெளிக்காட்டுவது போல அமைந்திருக்கிறது. க.நா.சு, இலக்கியவட்டம், சூறாவளி, சந்திரோதயம் என்ற இலக்கிய சிற்றிதழ்களை எழுதியிருக்கிறார். மேற்கத்திய இலக்கியங்களுக்கு நிகராக தமிழ் இலக்கியம் என்பதே அவரது லட்சியம். அன்றைக்கு இலக்கிய வட்டாரத்தில் சி.சு. செல்லப்பா செய்த அரசியலால், க.நா.சு அடைந்த பின்னடைவுகளை சாரு சுருக்கமாக எழுதியிருக்கிறார். க.நா.சு தன் வாழ்வில் அடைந்த அலைச்சல்களில் சி.சு.செல்லப்பாவின் அரசியல், சூழ்ச்சிகள் எல்லாம் பெரியளவு அவரை பாதித்திருக்குமா என்று தெரியவில்லை. இதில், க.நா.சுவின் வறுமை பற்றி சில பத்திகளில் சாரு குறிப்பிட்டிருக்கிறார். வருத்தமாக உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு இன்னும் வருத்தமாக, வேதனையாக இருந்திருக்கக்கூடும்.
இந்த நூலின் பலவீனம், தினமணி கதிரில் தொடராக வந்தது சரிதான். ஆனால், அதை அப்படியே ஏன் தொகுக்க வேண்டும். இதில் சில இடங்களில் போன வாரம் பார்த்தோம் என்று கூட வருகிறது. அதையெல்லாம் செம்மை செய்திருக்க வேண்டாமா? அப்புறம் சில இடங்களில் பக்க பற்றாக்குறை காரணமாக சில விஷயங்களை பேச முடியவில்லை என சாரு கூறுகிறார். நூலாக்கம் செய்யும்போது இன்னும் கட்டுரைகளை விரிவு செய்து எழுதியிருக்கலாமே? தினமணி கதிரில் இடமில்லை சரி. எழுத்து பிரசுரத்திலும் கூடவா இடம் தர மறுத்துவிட்டார்கள்? நூல் பெரிதானால் அதை பல்வேறு பாகங்களாக கூட போட்டு விற்றுக்கொள்ளலாம்.
முன்னோடி எழுத்தாளர்களை அறிந்துகொள்ள சிறந்த நூல். தமிழை, தமிழைக் கற்க விரும்புபவர்கள், இலக்கியத்தை நேசிப்பவர்கள் நிச்சயம் பழுப்பு நிற பக்கங்களை வாங்கி வாசிக்கலாம். இது பாகம் 1 தான். பாகம் 2 உள்ளது. அதை வாசிக்கிற வாய்ப்பு கிடைத்தால் அதைப்பற்றி எழுதுவேன்.
கோமாளிமேடை குழு
நன்றி - பதிப்பாளர், வடிவமைப்பாளர் இரா. மோகன வசந்தன்
தரு கிரியேஷன்ஸ் அலுவலக உதவியாளர் - சூர்யராஜன் திம்மரசு
#இலக்கியம் #முன்னோடிகள் #சாரு நிவேதிதா #தீமையின் அழகியல் #ஆ.மாதவன் #தஞ்சை ப்ரகாஷ் #தினமணி கதிர் #எழுத்து பிரசுரம் #பழுப்பு நிற பக்கங்கள் 1 #தமி்ழ் இலக்கியம் #மேற்கத்திய இலக்கியம் #சி.சு.செல்லப்பா #க.நா.சு #சார்வாகன் #அசோகமித்திரன் #திரு.வி.க #கு.அழகிரிசாமி #ஆர்.ஷண்முகசுந்தரம்
#tamil #literature #writings #poverty #literacy #caste #discrimination #thanjai prakash #novel #non-fiction #charuniveditha #ezhuthu #classics #recognition #komalimedai.blospot.com



கருத்துகள்
கருத்துரையிடுக