ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சம்பள பாகுபாடு
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பொருளாதார பாகுபாடு
ஆண் ஒரு டாலர் சம்பாதிக்கிறான் என்றால் பெண் எழுபத்தேழு சென்டுகள் சம்பாதிக்கிறாள் என உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் சங்கம், சம்பளத்தில் உள்ள பாகுபாடு என்பதே, ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரம் என கூறியுள்ளது.
மாதம், வாரம், நாள் என பல்வேறுவிதமாக ஒருவர வேலை செய்து சம்பளம் வாங்கலாம். ஆனால், ஒருவரின் பாலினம் சார்ந்து ஆண் என்பதற்காகவே பாரபட்சமாக பார்த்து பெண்ணுக்கு சம்பளவெட்டு செய்வது நேர்மையான செயல் அல்ல. ஆணும், பெண்ணும் ஒரே விதமாக வேலை செய்தாலும் கூட பெண்களை சற்று இளப்பமாக பார்த்து சம்பளக்குறைவு செய்வது உலகநாடுகளில் இயல்பாக உள்ளது.
ஒரே கல்வித்தகுதி, அனுபவம் இருக்கும் ஆண், பெண்ணுக்கு ஒரேவிதமாக சம்பளத்தை வழங்குவதே நேர்மையான செயல்பாடு. அப்படியில்லாமல் பாகுபாடு காட்டுவது சமூகநீதிக்கு புறம்பானது. 2022ஆம் ஆண்டு ப்யூ நிறுவனம் செய்த ஆராய்ச்சியில் ஆண்கள் சம்பாதிக்கும் ஒரு டாலரில் எண்பது சென்டுகள் பெண்களுக்கு செல்கிறது என அளவிட்டு கூறியுள்ளனர். அதாவது, ஆண்களுக்கு ஒரு டாலர் என்றால் பெண்களுக்கு எண்பது சென்டுகள். ஆனாலும் உலகளவில் பலரும் எப்படியான அளவீட்டில் ஆண் பெண் சம்பள பாகுபாடு கணக்கிடப்படுகிறது என புரியவில்லை என்று கூறியுள்ளனர்.
வாரவேலை நேரம், மாதவேலை நேரம் என பலவிதமாக கணக்கெடுத்து அளவீடு செய்யப்படுகிறது. எப்படி நேரத்தை அளவிட்டாலும் சம்பள பாகுபாடு உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. வேலைகளில் பெண்களின் பங்களிப்பு 47 சதவீதம். ஆண்களின் பங்களிப்பு 72 சதவீதம். இந்தியாவை (2011) உதாரணமாக எடுத்துக்கொண்டால், ஆண்களின் பங்கு 53 சதவீதம். பெண்களின் பங்கு 25 சதவீதம்.
பெண்களின் சம்பள சதவீதம் குறைவாக இருப்பதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வேலையும் முக்கிய காரணம். பெரும்பாலும் மேலாளர் வேலையை விட நிதி நிர்வாக ஆலோசகர், மனிதவளத்துறை பணிகளை அவர்கள் அதிகம் நாடுகிறார்கள். அல்லது திட்டம் தீட்டுபவர்களாக இருக்கிறார்கள். எனவே, மேலாளர்களாக, தலைவர்களாக உள்ள ஆண்களின் சம்பளத்திற்கு அருகில் கூட பெண்களின் சம்பளம் வருவதில்லை.
பொறியியல், கணினி அறிவியல் துறைகளில் வேலைவாய்ப்பும், சம்பளமும் அதிகம். பெண்கள், கலை, கல்வியை வேலைவாய்ப்பாக தேர்ந்தெடுக்கிறார்கள். எழுபத்து மூன்று நாடுகளில் செய்த ஆய்வில் பெண்கள் பெரும்பாலும் முழுநேர வேலையைத் தேடுகிறார்கள். ஆனால் அமர்வதோ குறைந்த சம்பளம் கிடைக்கும் பகுதிநேர வேலைகள்தான். இதில் எதிர்பார்த்த சம்பளம் கிடைப்பதில்லை. பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள்தான் குடும்பத்தலைவர்களாக சம்பாதிப்பவர்களாக உள்ளனர். பெண்களுக்கு குறைந்த கல்வி அளிப்பது, சமூகத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு இன்மை, உடல் சார்ந்த வரம்புகள், வேலைக்கு தொலைதூரம் செல்வது எல்லாமே அவர்களின் வேலைவாய்ப்பை குறைக்கிறது.
பெண்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, குழந்தைகளைப் பெற்று வளர்க்கும்போது இடைவெளி விழுவதால் அதுவரை செய்துவந்த வேலையில் எதிர்பார்த்த சம்பளத்தை பெறமுடிவதில்லை. எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் கூட கிடைப்பது இல்லை. இதை புள்ளிவிவர வல்லுநர்கள் கண்டுகொள்வதில்லை என சிலர் விமர்சிக்கிறார்கள்.
குடும்பம் என்பதை ஆண்கள், பெண்கள் என இருவேறுவிதமாக சமூகம் பார்க்கிறது. ஆண்களைப் பொறுத்தவரை குடும்பத்தை பொருளாதார ரீதியாக காப்பாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறது. பெண்கள் என்றால், அவர்கள் வெளியி்ல வேலை செய்து உழைக்க வேண்டியதில்லை. ஆனால் கணவனுக்காக, குழந்தைக்காக உழைக்கவேண்டும் என நிர்பந்தம் உள்ளது. இதன் காரணமாக பெண்கள் சுய தொழில்முனைவோர்களாக நின்று போராடி வெல்ல வேண்டியுள்ளது. இப்படியான தொழில்களிலும் சாதிக்க, சம்பாதிக்க ஏராளமான சவால்கள் உள்ளன. பாலின பாகுபாட்டால் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு, அடிப்படை மதவாத நாடாக மாறிவரும் இந்தியா போன்ற நாட்டில் பிரச்னைகள் இன்னும் கூடுதலாக இருக்கும்.
ஐஇ கட்டுரையைத் தழுவியது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக