தனது குடும்பத்தை அழித்த படைத்தளபதியை பழிவாங்க முயலும் பலவீனமான எல்லைப் பாதுகாப்பு படை வீரனின் போராட்டம்!

 












எவர் நைட்


சீன டிராமா


முதல் பாகம் அறுபது எபிசோடுகள் 



நிங்க் சூ, வெய் சிட்டி ராணுவத்தில் வேலை பார்க்கிறான். அவனை மரம் வெட்டுபவன் என கூறிக்கொள்கிறான். எல்லையில் உள்ள கொள்ளைக்காரர்களை அடித்து உதைத்து கொல்வதுதான் வேலை. அவனுக்கு வீட்டில் வேலை செய்ய சாங்சாங் என்ற சிறுமி இருக்கிறாள். அவளை குழந்தையாக இருக்கும்போதில் இருந்து நிங்க் சூ , தெருவில் இருந்து எடுத்து வளர்க்கிறான். இருவருக்குமான மனப்பொருத்தம் அந்தளவு நேர்த்தியாக உள்ளது. உடல் இரண்டு என்றாலும் மனசு ஒன்று.  இருவரும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். நிங்க் சூ, ராணுவ வீரன். அவனுக்கு வீட்டில் சாப்பாடு தயாரிப்பது, உடைகளை துவைப்பது, வெந்நீர் போடுவது என அனைத்து வேலைகளையும் சாங்சாங் செய்கிறாள். அவளுக்கு நிங்க் சூ சொல்வதுதான் எல்லாம். வேறு எதுவும் முக்கியமல்ல. 


தனது பெற்றோரைக்கொன்றவர்களை பழிவாங்க உடல்பலத்தோடு ஆன்மிக ஆற்றலும் தேவை என நிங்க் சூவுக்குத் தெரியும். எனவே, டேங்க் பேரரசின் தலைநகரத்தில் உள்ள டேங்க் அகாடமியில் சேர முயல்கிறான். இத்தனைக்கும் அவனுடைய உடலில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் அனைத்துமே அடைபட்டுவிட்டன. ஆனாலும் தற்காப்புக்கலைகளை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்பவன், உடல் அளவில் ஓரளவுக்கு வலிமையாகவே இருக்கிறான். அது கொள்ளையர்களை அழிக்க போதுமானதாக இருக்கிறது. வெய் சிட்டியில் அவனது நண்பர்கள் கொள்ளையர்களால் இறந்துபோகும் நிலையிலும் மனம் தளராமல் அங்கேயே நின்று அவர்களை முற்றாக அழித்துவிட்டு திரும்புகிறான். வெய் நகர பாலைவனை சண்டைக் காட்சிதான் நாயகனுக்கான அறிமுக காட்சி. 


வெய் நகர ராணுவத் தலைவர் ஓல்ட் மா, நிங்க் சூவின் அப்பா போன்றவர். அவர்தான் அவனை வளர்த்து தற்காப்புக்கலை கற்றுக்கொடுத்து ராணுவத்தில் சேர்த்துக்கொள்கிறார். அவரிடம் டேங்க் இளவரசி தன்னை நகரம் வரை கொண்டு சேர்க்கும்  வேண்டுகோளைக் கொண்டு வருகிறாள். அதற்கு வழிகாட்டியாக பாதுகாப்பாக நிங்க் சூ செல்கிறான். கூடவே அவனுடன் சாங்சாங்கும் செல்கிறாள். தனது வேலையை முடித்துவிட்டு டேங்க் அகாடமி சென்று சேர்வதுதான் அவனது நோக்கம். அந்த பயணத்தில் இளவரசியை படாதபாடு பட்டு நிங்க்சூ காப்பாற்றுகிறான். இளவரசிக்கு அவளது உருப்படாத தம்பியை அரசனாக்கும் எண்ணம் இருக்கிறது. அதற்கு நிங்க் சூ போன்ற வீரனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மனதில் திட்டம் உருவாகிறது. 


நிங்க் சூ, ஒரே பார்வையில் இளவரசி பல்வேறு சூழ்ச்சியை செய்பவள் என்று அறிந்துகொள்கிறான். எனவே, அவளுக்கு அரச மரியாதையை பிறர் அளிக்கும்போது அதை அவன் கொடுப்பதில்லை. அவளுக்கே அது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் அவன் அவளை உதவாக்கரை என்று மனதில் நினைத்துக்கொள்வதோடு அதை வெளிப்படையாகவும் கூறுகிறான். இளவரசியை அரசியல் காரணங்களுக்காக பழங்குடி இனத்தில் கட்டிக்கொடுக்கிறார்கள். அங்கு, கணவன் இறந்துவிட்டால் மனைவியை அவனோடு சேர்த்து வைத்து எரித்துவிடுவது வழக்கம். அது அவர்கள் நம்பிக்கை. அங்கிருந்து தப்பி டேங்க் நாட்டிற்கு வருகிறாள். அவளைக் கொல்ல இரண்டாவது தாயின் தம்பி தனது பலத்தை வைத்து முயல்கிறார். படுகொலை செய்யும் ஆட்களை தயார் செய்கிறார். அவர்களை நிங்க் சூவும், குயின்சன் என்ற தற்காப்புக்கலை மாஸ்டரும் சேர்ந்து தடுக்கிறார்கள். 


நகரத்திற்கு வரும் நிங்க் சூவும், சாங் சாங்கும் பிழைக்க வழி தேடுகிறார்கள். நிங்க் சூ, காலிகிராபி எனும் கலையில் தேர்ச்சி பெற்றவன். அழகாக எழுதுவான். அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முயல்கிறார்கள். அவனது காலிகிராபி திறமையைப் பார்த்து தற்காப்புக்கலை வல்லுநர் யான் சே , தனது மாணவனாக்கிக் கொள்ள முயல்கிறார். அவர் டேங்க் நகரத்தின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பொறுப்பானவர். தனது கலையை சீடன் கிடைத்தால் அவனுக்கு கற்றுக்கொடுத்துவிட்டு ஓய்வெடுக்க நினைக்கிறார். 


டேங்க் நாட்டில் அரசியல் ஆலோசகரான ஃப்யூ சூ இருக்கிறார். இவர்தான், டேங்க் அகாடமி தலைவர். இவருக்கு பனிரெண்டு சீடர்கள் உள்ளனர். அரசியலில் நேரடியாக தலையிடாதவரான தலைவர், அரசனைத் தேர்ந்தெடுத்து ஆட்சி செய்ய அனுமதிக்கும் அளவுக்கு செல்வாக்கும் தெளிவும் கொண்டவர். அப்படி தேர்ந்தெடுத்தவர்தான் தற்போதைய மன்னர். மன்னருக்கு தம்பி ஒருவர் இருக்கிறார். ஆனால் அவர் பேராசை கொண்டவரே ஒழிய நாட்டை வழிநடத்தும் நேர்மை கொண்டவரல்ல. சுயநலனுக்காக யாரையும் அடகு வைக்கும் இயல்பு கொண்டவர். இவர், டேங்க் நாட்டை அபகரிக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறார். இளவரசியும் அரியணையை தனது தற்குறி தம்பியை அரசனாக்க முயல்கிறார். ஆனால் இவர்களின் முயற்சிக்கு பழங்குடி இன சித்தியும், அவரது ஆறுவயது பிள்ளையும். ராணுவத் தளபதி ஷியா ஹூவும் தடையாக இருக்கிறார்கள். 


நிங்க் சூ, படைத்தலைவர் லின் வீட்டில் நடந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட ஆட்களை தேடி வருகிறான். அதில் கிடைத்த தகவல்கள்படி, சில ஆட்களை குறித்து வைத்து அவர்களைக் கொல்ல முயல்கிறான். அதில் ஒருவரை விலைமாதுக்கள் இல்லத்தில் கட்டிவைத்து உதைத்து விசாரிக்கிறான். ஆனால் அவர் திடீரென தப்பி ஓடி வாசல்படி தடுக்கி விழுந்து சாகிறார். இந்த முயற்சியின்போது, நிங்க் சூவை, வாள் வீரர் சாவோ பார்த்துவிடுகிறார். அவருக்கு அவனது துணிச்சல் பிடித்துப்போகிறது. இந்த நேரத்தில் அவன், லின்னை தேசதுரோகி என்று கூறிய அவரது கீழ்நிலை அதிகாரியைக் கண்டுபிடிக்கிறான். அவர் டேங்கிலேயே கொல்லராக வேலை செய்து வருவதை ஒருநாள் முழுக்க நின்று பார்க்கிறான். பிறகு அவரை தற்கொலை செய்துகொள்ள வைக்கிறான். இருவர் இயற்கைக்கு மாறாக இறந்துபோக, நகர காவல்துறை அதைப்பற்றி விசாரிக்கத் தொடங்குகிறது. அதேநேரத்தில் டேங்க் அகாடமி தேர்வும் நடைபெறுகிறது. அந்த தேர்வில் நிங்க் சூவுக்கு எந்த பதிலும் தெரிவதில்லை. அவனுக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அதை எழுதி வைத்துவிட்டு வருகிறான். அதிர்ஷ்டவசமாக தேர்வாகிறான். 

 

தேர்வாகிற மாணவர்களில் அதிக மதிப்பெண் பெறுவதும் நிங்க் சூதான். ஆனால் இருப்பதிலேயே ஆன்ம ஆற்றலுக்கு தியானம் செய்யமுடியாத பலவீனமானவனும் அவன்தான். அதைப் பற்றியெல்லாம் பெரிதாக கவலை கொள்வதில்லை. நூல்களைப் படிக்க முயல்கிறான். அங்குள்ள மாணவர்கள் பலரும் பழைய நூல்கள் கட்டிடத்தில் தற்காப்பு கலை நூல்களைப் படிக்க முடியாமல் வாந்தி எடுத்து மயக்கமாகிறார்கள். இடைவிடாமல் அங்கு வந்து நூல்களை படிக்க முயல்பவன், நிங்க் சூ மட்டுமே. அப்போது அவனுக்கு சென் பிபி என்ற பனிரெண்டாவது ஆசிரியரின் உதவி கிடைக்கிறது. இந்த ஆசிரியர் பெரும் மேதாவி. 


இந்த நேரத்தில் அவனது ஜென்ம எதிரியான யான் நாட்டு இளவரசன் குயிங்கை சந்திக்குமாறு சூழல் அமைகிறது. யான் நாடு, டேங்க்கால் கைப்பற்றப்பட்டு அதன் கீழே உள்ளது. அந்த நாட்டு இளவரசர்களில் ஒருவர் டேங்க் நாட்டில் கைதியாக உள்ளார். இன்னொருவர், யான் நாட்டிலேயே வளர்கிறார். யான் நாட்டில் வளரும் குயின், டேங்க் அகாடமியில் சேர்ந்து அந்த அமைப்பை முழுக்க உடைத்து நொறுக்க நினைக்கிறார். அதை உடைத்து அழித்துவிட்டால் டேங்க் நாட்டை உருக்குலைப்பது எளிது என நம்புகிறார். அதற்கான தேர்வில் பங்கேற்கிறார். ஆனால் நிங்க் சூவிடம் தோற்றுப்போகிறார். என்ன காரணம், இதய சுத்தி இல்லாததே காரணம். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து நிங்க் சூ மீது வன்மம் கொள்கிறார். முதல் பாகத்தில் குயின் மூன்று முறை நேரடியாக சந்திப்பார். நிங்க் சூ அடிக்கும் அடியில், இறுதியில் சக்தியை இழந்து பிச்சைக்காரனாக வாழும் நிலைக்கு வந்துவிடுவார். அவருக்கு நிச்சயம் செய்த பெண்ணைக் கூட சந்திக்க, உதவி செய்ய முற்பட்டாலும் அதை மறுத்துவிடுவார். அவரது கௌரவம், எந்த உதவியையும் பெற அனுமதிக்காது. 


குயின் மனதில் பகையும் வெறுப்பும் மட்டுமே இருக்கும். நிங்க் சூவுக்கு குயினுக்கு கிடைத்த செல்வம், கல்வி, உணவு, மரியாதை, காதல் என ஏதுமே கிடைத்திருக்காது. ஆனாலும் அவன் பிறர் மேல் பகையோ, வன்மமோ கொள்வதில்லை. தன்னைக் கொல்ல முயல்பவர்களை மட்டுமே கொல்கிறானே ஒழிய வம்புச்சண்டைக்கு போவதில்லை. மனதில் வீண் வெட்டிப் பெருமையும் கூட இருக்காது. 


நன்மை எது, தீமை எது, ஒளி என்றால் என்ன, இருள் என்றால் என்ன, உலகத்திற்கு ஆபத்து சாத்தானின் பிள்ளையால் வருமா, மனிதனின் மனதில் உள்ள இருளால் வருமா? இப்படியான  பல்வேறு கேள்விகளை தொடர் எழுப்புகிறது. இதில் சிலர் ஆன்மிக அமைப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். குறிப்பா கோவில் என்ற இனக்குழு தலைவர். இவர்தான் டேங்க் நாட்டை எதிர்க்கும் முதல் முக்கிய எதிரி. இவர் வாழும் நாடு ஷிலிங். இவர்களுக்கு ஆதரவாக கிராண்ட் ரிவர் ஸ்டேட், விலக்கப்பட்ட கோவில், மானடாரி ஆகிய நாடுகள் உள்ளன. ஒளியை பாதுக்கவேண்டும். காப்பாற்ற வேண்டும் என்று ஷிலிங் நாட்டினர் செய்யும் செயல்கள் அனைத்துமே சதி, துரோகம், வஞ்சம்தான். பேச்சு தேன்போல இருந்தாலும் செயல் அனைத்துமே டேங்க் நாட்டை ஒழிப்பதை நோக்கியே உள்ளது. 


ஃப்யூ சூ, நிங்க் சூவை டேங்க் அகாடமியின் தூதராக மாற்றுகிறார். அவனை வெளிவேலைகளுக்கு அனுப்புகிறார். டேங்க் மன்னர் உத்தரவின் பேரில் பிற ஆதரவு நாட்டுப் படைகளுடன் சென்று பழங்குடிகளை வீழ்த்துவது இலக்கு. இப்படி செல்லும்போது டேங்க் அகாடமி மாணவர்களையும் அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கிறார்கள். இந்த பணியில் நிங்க் சூ காட்டும் ஈடுபாடும் தீவிரமும் வீரமும் ஆதரவுப் படையினருக்கு அதிர்ச்சியையும், வியப்பையும் தருகிறது. டேங்க் நாட்டை வீழ்த்த வேண்டுமென்றால், பதிமூன்றாவது ஆசிரியரைக்  கொல்லவேண்டும் போல என நினைக்கத் தொடங்குகிறார்கள். அந்தளவுக்கு நிங்க் சூவின் திறமை, போர் புரியும் நுட்பங்கள் உள்ளன. எதிரியாக பிறரால் கருதப்பட்டாலும் கூட திறமையான பழங்குடிப் பெண்ணை டேங்க் அகாடமியில் சேருவதற்கு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வருகிறான்.  அவன் நம்புகிற உண்மைக்கு எதிராக சூழ்நிலை மாறும்போது போரடவும் தயங்குவதில்லை. சாவோவின் உயிரைக் காப்பாற்ற வாக்கு கொடுத்து காசு வாங்குகிறான். அதை இறுதிவரை காப்பாற்றுகிறான். விட்டே கொடுப்பதில்லை. அதனால் அவர், அவனை தனது சகோதரன். தம்பி என அழைக்கத் தொடங்குகிறார். 


சாங் சாங், நிங்க் சூவின் வீட்டுவேலைகளைப் பார்ப்பதோடு, அவன் உடல்நலத்தையும் அவளே பார்த்துக்கொள்கிறாள். அவனுக்கு அவள் ஏறத்தாழ உடன்பிறக்காத தங்கை போல. இங்கு கூறுவது நிங்க் சூவின் பார்வையில். ஆனால், சாங்சாங் நிங்க் சூ மீது வெறித்தனமான காதலில் இருக்கிறாள். தன்னைத்தவிர வேறு எந்த பெண்ணும் அவனைப் பிடித்திருக்கிறது என்று கூறுவதை காதில் கூட கேட்க விரும்புவதில்லை. போர்முனையில் நிங்க் சூ, இங்க் பாண்ட்டைச் சேர்ந்த புக் மேனியாக் என்ற இளம்பெண்ணை சந்திக்கிறான். அவள் காலிகிராபி எழுதுவதோடு, தாலிஸ்மன் எனும் கலையில் புகழ்பெற்றவள். அவளுக்கு ஏற்கெனவே நிங்க் சூவின் காலியோகிராபி மீது காதல் இருக்கிறது. அவனைப் போல அழகாக எழுதவேண்டும், வாய்ப்பு கிடைத்தால்  அவனை சந்திக்கவேண்டும் என நினைக்கிறாள். நிங்க் சூ ஒருமுறை இங்க் பாண்ட் பெண்களை, ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறான். ஆனால் தனது உண்மையான பெயரை வெளிப்படுத்துவதில்லை. அதற்கு காரணம், அவனுக்கு முன்னால் உள்ள எதிரிகள் யார், என்னவிதமாக யோசிக்கிறார்கள் என்பதை அறியத்தான். எனவே, அவனது அகாடமியில் படிக்கும் நண்பனை பதிமூன்றாவது ஆசிரியரின் மாணவன் போல பிரதிநிதியாக நடிக்க வைக்கிறான். கூட்டு படையில் என்னவிதமான ஆட்கள் இருக்கிறார்கள் என தெரிந்துகொள்கிறான். 


இங்கு இங்க் பாண்ட் புக் மேனியாக்குடன் ஒன்றாக சேர்ந்து சண்டை போடுகிறான். அவனின் தைரியம், முடிவெடுக்கும் திறன், வீரம் என அனைத்துமே புக் மேனியாக்கை வசீகரிக்கிறது. அங்கும் லாங் குயின் வந்து வம்பு செய்கிறான். பந்தயம் வைத்து ஆன்ம ஆற்றலை அதிகம் செய்வோம் என்கிறான். யார் முதலில் செய்வது என்பதே வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. அதில் லாங் குயின் தோற்றுப்போவதோடு கோபத்தில் நிங்க் சூவை கொல்ல முயல்கிறான். நிங்க் சூ எளிமையாக தேர்ட்டீன் ஏரோ என்ற அம்புகளில் ஒன்றை பயன்படுத்துகிறான். அத்தோடு, லாங் குயின் அதுவரை சேர்த்த ஆன்ம ஆற்றல் அத்தனையும் காணாமல் போகிறது. இதயம் கடுமையாக காயம்படுகிறது. 


போர்முனையில் லோட்டஸ் 32 என்ற அரக்கனை புக் மேனியாக், யே ஹோங்குயு என்ற இரு இளம்பெண்களோடு சேர்ந்து நிங்க் சூ வீழ்த்துகிறான். இந்த சண்டையில், லே ஹாரன் என்ற தற்காப்புக்கலை வல்லுநரின் கலைகள், அவனுடைய உடலுக்குள் நுழைந்துவிடுகின்றன. கூடுதலாக, அதில் டீமன் செக்ட் சக்தியும் உள்ளது. நிங்க் சூ, சண்டை போடும் ஆட்கள் அனைவருமே அவனை விட பலமடங்கு சக்தி கொண்டவர்கள்தான். ஆனால் அவன் தைரியத்தை சிறிதும் இழப்பதில்லை. புக் மேனியாக்கோடு, யே ஹோங்குயு என்ற பெண்ணும் அவனை ரகசியமாக காதலிக்கத் தொடங்குகிறாள். புக் மேனியாக்கை நிங்க் சூ தன்னுடைய வீட்டுக்கு கூட்டி வரும்போதுதான் சாங்சாங் வருந்துகிறாள். தன் காதலை எப்படி கூறுவது என தடுமாறுகிறாள். இந்த நேரத்தில் அவளை தொலைத்த உயிரியல் பெற்றோர் தங்களுடைய வீட்டுக்கு வருமாறு கேட்கிறார்கள். அவளும் இனி நிங்க் சூவிற்கு தன் தேவையில்லை என அங்கு செல்கிறாள். ஆனால் நிங்க் சூவினால் சாங் சாங் இல்லாமல் இருக்கமுடியவில்லை. உண்மையில் அவனுடைய ஆன்ம ஆற்றலில் அவளும் ஒரு கருவி. எனவே, புக் மேனியாக்கின் காதலை அவளிடம் நேரடியாக சென்று மறுத்துவிட்டு சாங் சாங்கின் காதலை ஏற்றுக்கொள்கிறான். நிங்க்சூ, சாங் சாங் காதல் எதுமாதிரியானது என்பதை தொடரில் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். 


முதல்பாக சண்டைக்காட்சிகள் சிறப்பாக உள்ளன. கிராபிக்சும் மோசமில்லை. நடிகர்களின் தேர்வும் நன்றாக உள்ளது. 



இரண்டாம் பாகத்தில் முக்கியமான பல நடிகர்கள் மாறிவிட்டனர். அதன் கதையும் எதிர்பார்த்தது போல இல்லை. அதையும் பிறகு பார்ப்போம். 


கோமாளிமேடை டீம் 





Ever Night (Chinese: 将夜) is a 2018 Chinese television series based on the novel Jiang Ye by Mao Ni. It stars Chen Feiyu and Song Yiren. The series streamed on Tencent Video beginning October 31, 2018. The second season premiered on January 13, 2020, with Dylan Wang replaced Chen Feiyu as ... Wikipedia





கருத்துகள்