அறமதிப்பீடுகளை பின்பற்றும் பழக்கம் எப்படி தொடங்குகிறது?

 









லாரன்ஸ் கோஹ்ல்பர்க் 

lawrence kohlberg


ஒருவரிடம் அறம் சார்ந்த மதிப்பீடுகள் எப்படி உள்ளன என்பதை லாரன்ஸ் அறிய நினைத்தார். இதற்கென 72 சிறுவர்களை பங்கேற்க வைத்து இருபது ஆண்டுகளாக சோதித்தார். இவர்களின் வயது வரம்பு 10 முதல் 16 வரை. இதை எளிமையாக புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். ஒருவரிடம் காசு இல்லை. ஆனால் அவரது நோயுற்ற மனைவிக்கு மருந்துகள் தேவை. அதை மருந்தகத்தில் இருந்து திருடவேண்டும் அல்லவா?  இப்படி திருடுவதில் மூன்று அம்சங்கள் உள்ளன. பரிசு, தண்டனை, பழிக்குப்பழியாக கிடைக்கும் தண்டனைகள் என அம்சங்களை ஒருவர் யோசித்துப் பார்க்கலாம். 


மக்கள் நிறையப் பேர் ஏன் திருட்டுகளில் ஈடுபடாமல் இருக்கிறார்கள்? அதற்கு முக்கியக் காரணம், அரசின் கடுமையான சட்டங்கள், அதிகாரத்தின் மீது கொண்ட பயம் காரணமாக வரும் கீழ்ப்படிதல். இதன் காரணமாக குற்றங்கள் குறைவாகவே ஏற்படுகின்றன. இதற்கு அடுத்ததாக, சரி, தவறு என்பதற்கு கிடைக்கும் பரிசுகள் வருகின்றன. மூன்றாவது நிலையாக ஒருவர் என்னை அடித்தால், நான் அவரைத் திருப்பி அடிப்பேன் என்று கூறுவது வருகிறது. இந்த நிலை பின்விளைவுகளை/எதிர்வினையை அடிப்படையாக கொண்டது. மேற்சொன்ன கருத்துகள் ஒருவரின் சிறுவயதை அடிப்படையாக கொண்டவை. 


நோக்கங்களை லட்சியங்களை தனது நலனுக்காக அமைத்துக்கொண்டு செயல்படுவதை லாரன்ஸ் குறிப்பிடுகிறார். சிறந்த குண இயல்பு கொண்டவன், கொண்டவள் என ஒருவர் பிறரால் அழைக்கப்பட்டால், அவர் இந்த வகையில் வருவார். குறிப்பிட்ட நோக்கத்தை அடிப்படையாக கொண்டு அமைதியாக இயங்கி வருவார். சமூக நன்மைக்காக சட்டங்களை மதித்து அதற்கு ஒப்புதல் வழங்கி ஒழுகி வாழுவதையும் கூட இதற்கடுத்ததாக கூறலாம். தனிநபர் உரிமை சார்ந்து சட்டங்கள் அதை வழங்காதபோது அதை எதிர்க்கும் மனநிலை. இப்படியான குணநிலை கொண்டவர்கள் சமூகத்தில் மிக குறைவானவர்களாகவே இருப்பார்கள். இருந்தால் பத்து தொடங்கி பதினைந்து சதவீதம் வரை இருப்பார்கள். அரசின் கொள்கைகளை எதிர்த்து, நீதிக்காக மக்கள் போராட்டங்களை நடத்தும் தலைவர்கள் இந்தப் பிரிவில் வருவார்கள். 


குழந்தைகள் பிறருடன் பழகுவதன் வழியாக மரியாதை, மனிதநேயம், காதல் ஆகியவற்றை அறிந்து அற மதிப்பீடுகளை அடையாளம் கண்டுகொள்வார்கள். நாம் எதையும் அவர்கள் மீது திணிக்க வேண்டியதில்லை என்று லாரன்ஸ் கருதினார். 


லாரன்ஸ் கோஹ்ல்பர்க் 


நான்கு பிள்ளைகளில் இளையவர். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்தபோது, இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்திருந்தது. கப்பல் ஓட்டுபவராக வேலை செய்தார். அந்த பணியில் யூதர்களை பாலஸ்தீனத்திற்கு கொண்டு வந்து சேர்க்க உதவினார். 


1948ஆம் ஆண்டு, லாரன்ஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளங்கலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். பிறகு, கற்பித்தல் ஆய்வு என இயங்கி 1958ஆம் ஆண்டு முனைவர் பட்டத்தைப் பெற்றார். யேல், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்திருக்கிறார். 


1971ஆம் ஆண்டு, லாரன்சிற்கு உடலில் ஒட்டுண்ணி தாக்குதல் ஏற்பட்டது. இந்த பாதிப்பை அவரால் குணப்படுத்த முடியவில்லை. எனவே, வாழ்க்கை முழுக்க வலியும், மன அழுத்தமும் தொடர்ந்தது. 1987 ஆம் ஆண்டு, ஜனவரி 19 அன்று மருத்துவச் சிகிச்சையை முடித்துக்கொண்டு வந்தவர், அட்லாண்டிக் கடலில் இறங்கி தற்கொலை செய்துகொண்டார். 



முக்கிய படைப்புகள் 


1969 ஸ்டேஜ் அண்ட் சீக்வென்ஸ் 

1976 மாரல் ஸ்டேஜஸ் அண்ட் மாரலைசேஷன்

1981 தி பிலாசபி ஆஃப் மாரல் டெவலப்மெண்ட்


இதுவரை உளவியல் கோட்பாடுகள், அறிஞர்களை அறிந்துகொள்ள கட்டுரையை வாசித்தவர்களுக்கு நன்றி. இத்தோடு இந்த தொடர் நிறைவு பெறுகிறது. 

மூலநூல் தி சைக்காலஜி புக் - டிகே புக்ஸ் 

https://www.amazon.com/Psychology-Book-Ideas-Simply-Explained/dp/0756689708







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்