ஆற்றல் மாநாட்டை உருக்குலைக்க முயலும் உள்நாட்டு தீவிரவாதிகளை தடுக்க முயலும் கமாண்டோ படையின் வீரதீரம்!

 








operation special warfare


c drama


35 எபிசோடுகள் 



ப்ளூலைட்னிங் என்ற கமாண்டோ படை. அதில் மொத்தம் பதினான்கு வீரர்கள். எட்டு பெண்கள். ஆறு ஆண்கள். இவர்கள் அனைவரும் தங்கள் வேறுபாடுகளைப் பற்றி கவலைப்படாமல் போராடி தீவிரவாதிகளை வீழ்த்தி தூய ஆற்றல் மாநாட்டை எப்படி வெற்றிகரமாக நடத்தினர் என்பதே கதை. 


இதில் எட்டு பெண் கமாண்டோக்கள் உள்ளனர். அவர்களில் நிங் மெங்தான் நாயகி. இவருடைய அண்ணன் தீவிரவாத தாக்குதலில், தங்கையைக் காப்பாற்றிவிட்டு இறந்துபோவார். இதன் விளைவாக அம்மாவிற்கு அழுது அழுதே கண் பார்வை போய்விடும். நிங்மெங், தனது அண்ணனைக் கொன்றவர்களை பழிவாங்க ராணுவத்தில் குறிப்பாக கமாண்டோ படையில் இணைவார். ஆனால், கமாண்டோ படை கேப்டன், நிங் மெங்கை மட்டும் வெளியேற்றுவதில் குறியாக இருப்பார். அவரை திட்டுவார். இழிவு செய்வார். ஆனால் நிங்மெங் திறமை மீது கமாண்டோ படையின் உயரதிகாரிக்கு நல்ல அபிப்பிராயம் நம்பிக்கை இருக்கும். எனவே அவர் அவளை வெளியேற்றக்கூடாது என கேப்டனை மிரட்டுவார். 


அடிப்படையில் பார்த்தால் தேசப்பற்று சீரியல்தான். ஆனால், ராணுவத்தில் கூட பெண்களை ஆண் வீரர்கள்தான் காப்பாற்ற வேண்டும். அவர்கள் செய்யும் பணியின் வீரியம் புரியாது காதலிக்க ஆண்களை தேடி அலைவார்கள். பலவீனமானவர்கள் என்ற கருத்தை இந்த தொடர் நுட்பமாக பார்வையாளர்கள் மனதில் விதைக்கிறது. இயக்குநர் சிறந்த ஆணாதிக்கவாதப் படைப்பை உருவாக்கி அளித்திருக்கிறார். வெளிப்படையாக சொன்னால் தேசப்பற்று சார்ந்த தொடர் எடுப்பது தவறில்லை. ஆனால், அந்த காட்சிகள் ஒன்று கூட மனதை தொடவில்லை. அதற்கு மாற்றாக, உறவுகளை இழந்த பெண் வீரர்கள் அழுவதும், நாட்டைக் காப்பாற்ற போய் வீட்டிலுள்ளவர்களுக்கு உதவ முடியாத இயலாமையுடன் வீரர்கள் தவிக்கும் சில காட்சிகள் நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது ராணுவ வீரர்களின் உளவியல் எந்தளவு குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்படுகிறது. அவர்களின் நலன், எதிர்பார்ப்பு எல்லாமே சிக்கலை ஏற்படுத்துகிறது என்ற கோணத்தில் அமைந்த காட்சிகள் பரவாயில்லை. 


பெண் வீரர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பயிற்சிகள், அதை செய்யும்போது ஏற்படும் தடைகள் ஆகியவற்றை நன்றாக பதிவு செய்திருக்கிறார்கள். தொடர் முழுக்கவே பெண்களை விட ஆண்கள், ஆண் வீரர்கள் ஒருபடி மேலே என்று மறைமுகமாக கூறுவது, காட்சிகளை அமைத்திருப்பது என்று திசையில் யோசித்திருப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. ஆண், பெண் என இருவருக்குமே உடல் அளவில் வரம்புகள் உள்ளன. இதை யாருமே மறுக்கமுடியாது. கமாண்டோ படையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணை, உளவியல் குறைபாடு என்ற ஒரே காரணத்திற்காக அவரை தலைவர் பதவியிலிருந்து மாற்றி சாதாரண வீரராக்கி கடைசி வரையில் தனது பதவியை பெற முடியாமலேயே போகும்படியான காட்சிகள் எதற்கு? பெண்கள் அந்த பதவிக்கு தகுதியில்லை என்று கூறுவதுதான் நோக்கமா, ஆண்கள் மட்டுமே படையை நடத்தமுடியும் கூறுவதுதான் உள்நோக்கமா?


நிங்மெங்கிற்கு பிடிஎஸ்டி பிரச்னை இருக்கிறது. அதை அவர் பிறரிடம் மறைப்பதில்லை. ராணுவத்தில் ஒருவரைப் பற்றி முழுமையாக விசாரிக்காமலா பதவிக்கு எடுப்பார்கள், மேலும் அவர் தான் எதிர்கொள்ளும் சோதனைகளில் சிறப்பாக செயல்படுகிறார். கேப்டனோடு கேள்வி கேட்டு மல்லுக்கு நி்ற்கிறார். அவரின் குழுவில் தன்னைப் பற்றி மட்டுமல்லாது பிறரைப் பற்றியும் யோசிக்கிற ஒரே ஆள் நிங்மெங் மட்டுமே. ஆனால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கூட அவரது மனநிலை சிக்கலாகிறது என காரணம் காட்டி ஆண்களின் நாயகத்துவத்தை உயர்த்திப்பிடித்து தொடரை காதல் உணர்வு இழையோட முடிக்கிறார்கள். 

நிங்மெங்கின் படை கேப்டன் வேறுயாருமல்ல, நிங்மெங்கின் அண்ணனுடன் வேலை செய்தவர்தான். நண்பர்தான். நிங்மெங்கிற்கு ஆபத்து வரும் என அவரைக் காப்பாற்றும் விதமாக அவரது திறமையை குறைசொல்லி வெளியேற்ற முயல்கிறார். இறுதியாக அவர் மீதே மறைமுகமாக காதல் கொள்கிறார். ஆனால் காதல் என்பது என்ன? ஒருவரின் விருப்பத்தை ஒருவர் புரிந்துகொண்டு அதற்கு உதவுவது தானே? ஆனால் அந்த விஷயம் இங்கு நடக்கவில்லை. 


நிங்மெங், உளவியல் பிரச்னை சிலநேரங்களில் தலையெடுக்கிறது என்றாலும் கூட பெரும்பாலான நேரங்களில் அவரே அணியை பல்வேறு ஐடியாக்களை சொல்லி வழிநடத்துகிறார். அணியை வெற்றிபெற வைக்கிறார். ஆனால் அவரை தீவிரவாதிகளுடன் சண்டை போடும்போது பலவீனமாக காட்டுகிறார்கள். ஒருமுறை அல்ல மூன்று முறைகளுக்கும் மேலாக என்பதே இங்கு முக்கியம். ஒருமுறை நிங்மெங் பசூக்கா ஏவப்படுவதை பார்க்காமல் தடுமாறுகிறார், அடுத்து, ஆயில் பீப்பாய் அருகே நெருப்பு எரிவதை பார்க்காமல் தவறவிடுகிறார். ஒருமுறை கையெறி வெடிகுண்டு வீசப்படுவதை பார்க்காமல் இருக்கிறார். உண்மையில் எப்படி ஒரு பெண்வீரர், இந்தளவுக்கு கவனக்குறைவோடு இருப்பார் என்று புரியவில்லை. இத்தனைக்கும் அவர் ராணுவத்தில் வேறொரு படையில் இருப்பவர்தான். கமாண்டோவுக்கு தேர்வாகி வருகிறார். வெடிகுண்டோ, பசூக்காவோ, துப்பாக்கியோ அவருக்கு புதிதல்ல. மூன்று முறையும் கேப்டன் அவரைக் காப்பாற்றுகிறார். இடுப்பைச் சுற்றி கைபோட்டு அணைத்து உயிரைக் காப்பாற்றுகிறார்.  நாயகத்துவத்தை தூக்கிப்பிடிக்க பெண் பாத்திரத்தை பலிகொடுத்து இருக்கிறார்கள். 


ராணுவப்பயிற்சிகள், தீவிரவாதிகளுடன் சண்டை ஆகியவற்றை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள், மோசமில்லை. மனிதனின் புத்திசாலித்தனம் முக்கியமா, தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி இருக்கலாமா என்று விவாதம் ஒன்றை மாநாட்டில் செய்கிறார்கள். அது பார்க்க சுவாரசியமாக உள்ளது. 


இதில், ஷோடுன் என்ற பெண்வீரர் வருகிறார். இவர், ஸ்னைப்பர் துப்பாக்கி வீரரைக் காதலிக்கிறார். எதற்காக என்கிறீர்களா? ஷோடுன் நேருக்கு நேராக ஆண் வீரர்களுடன் சண்டை போடும் வீராங்கனை. மற்றவிஷயங்களில் அவர் வெகு சுமார். அவர் காதலிக்கும் வீரர் லின் யி, பணக்கார குடும்ப வாரிசு, பார்க்க பப்பாளி பழம் போல மேனி. ஆனால் அவரது சிந்தனையோ பழங்கால ஆட்களைப் போல. அவரைத்தான் ஷோடுன் காதலிக்கிறார். காதலனுக்காக பித்தலாட்டங்கள், விதிமீறல்களை கூட செய்கிறார். இவரது முட்டாள்தனத்தால் காதலன் வெடிகுண்டில் சிக்கி இறந்துபோகிறார். அந்த காட்சி இருக்கிறதே, ஐயோ பார்க்கவே பரிதாபமாக உள்ளது. 


ஷோடுன் தீவிரவாதிப்பெண்ணை துரத்துகிறார். நம் காதலிக்கு உதவலாம் என லின் யி வேறு பின்தொடர்கிறான். இருவரும் சேர்ந்து தீவிரவாதியை இரண்டு கிலோமீட்டர் வரை காட்டுக்குள் துரத்தி ஓடுகிறார்கள். ஷோடுன் தன் கையில் உள்ள துப்பாக்கியை பயன்படுத்தி காலில் சுட்டிருந்தால் கூட அவளை எளிதாக பிடித்திருக்கலாம். ஆனால் எபிசோடை இழுக்க வேண்டுமே? இறுதியாக ஓ நம் கையில் துப்பாக்கி இருக்கிறதே என நினைவுக்கு வந்து முதுகில் சுடுகிறாள். தீவிரவாதிப் பெண் இறந்துபோகிறாள். லூசுத்தனமாக அருகில் போய் உடலைப் புரட்ட, இறந்துபோகும் தருவாயில் அந்த பெண்ணோ வெடிகுண்டை வெடிக்க வைக்கிறாள். காதலியை  தள்ளி விட்டு லின் யி கையெறி குண்டின் தாக்குதலில் மாட்டி அங்கேயே இறந்துபோகிறான். இந்தக் காட்சியைப் பார்த்தால் பார்வையாளர்களுக்கு அழுகையோ, வருத்தமோ வருவதில்லை. ஏனெனில் லின் யி, தீவிர ஆணாதிக்கவாதி.


திறமை அல்ல.  ஒரே குழுவில் இருந்தாலும் ஒரு பெண்ணிடம் தோற்றுப்போக கூடாது என தன்னை அடிக்கடி ஊக்கப்படுத்திக்கொள்கிற உன்னதன். ஷோடுன், லின் யி இருவருமே பெரிதாக எதற்கும் யோசிக்கமாட்டார்கள். சொல்லும் ஆணையைச் செய்பவர்கள்தான். எனவே, இரு முட்டாள்களும் காதலிப்பதில் தவறு ஏதுமில்லை. லின் யி இறக்கும் காட்சி, எந்த உணர்வையும் கடத்தவில்லை. அவன் சிந்தனையில் மாற்றம் ஏற்படுவதாக காட்டியிருந்தால் கூட நன்றாக இருக்கும். லின் யியை விட சூ போ என அவனது இடத்திற்கு வரும் வீரரின் அறிவு முதிர்ச்சி எவ்வளவோ பரவாயில்லை. பெண் வீரரை ஈகோவை கைவிட்டு பாராட்டுகிற காட்சி நன்றாக உள்ளது. 


சீன ராணுவத்தில் ஆண் வீரர்கள் மட்டுமே உசத்தி என்று கூறும் படைப்பு. 


-கோமாளிமேடை டீம் 

"Operation Special Warfare" is a 2022 Chinese action romance drama directed by Liu Bo

கருத்துகள்