ஆட்டிச குறைபாடு கொண்டவர்களுக்கு உள்ளது ஆண் மூளை!

 









சைமன் பாரோன் கோகன்

simon baron cohen


பிரிட்டனின் லண்டனில் பிறந்தவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியல் படிப்பை படித்தார். யுனிவர்சிட்டி காலேஜில் முனைவர் படிப்பை நிறைவு செய்தார். 1995ஆம் ஆண்டு, டிரினிட்டி கல்லூரியில் சோதனை உளவியலைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். தற்போது ஆட்டிசம் தொடர்பான ஆராய்ச்சியை செய்துவருகிறார். ஆட்டிசத்தின் தீர்வு, அதை ஏற்படுத்தும் காரணிகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். 2009-2011ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச ஆட்டிச ஆராய்ச்சி சங்கத்தில் துணைத்தலைவராக இருந்தார். தற்போது தேசிய ஆட்டிஸ்டிக் சங்கம்(இங்கிலாந்து) அமைப்பில் துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார். அதிபர் விருது, ஸ்பியர்மேன் பதக்கம், பாய்ட் மெக்கேண்ட்லெஸ் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். 


1993 ஆட்டிசம் - தி ஃபேக்ட்ஸ் 

1995 மைண்ட்பிளைண்ட்னெஸ்

1999 டீச்சிங் சில்ட்ரன் வித் ஆட்டிசம் மைண்ட் ரீட் 

2003 தி எசன்ஷியல் டிஃபரன்சஸ் 


புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கம் - இதுதான் ஆட்டிசத்திற்கான தமிழக அரசின் தமிழ்மொழி வழக்குச்சொல். அதன் நீளம் காரணமாக மதி இறுக்கம் என்று சுருக்கமாக கூறலாம். மதி இறுக்கம்  ஒருவருக்கு ஏற்பட்டது என்றால், ஒருவரின் இயல்பான சமூக, தகவல்தொடர்பு அம்சங்கள் பாதிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். மதி இறுக்க நபர்கள் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்வது பிறருக்கு வினோதமாக தோன்றும். இவர்களுடன் பெற்றோர் தவிர்த்த வெளிநபர்கள் தொடர்புகொள்வது கடினம். சமூகரீதியாக பழகுவதும் எளிதாக இருக்காது. பெரிதாக பிறருடன் பேசுவதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். உலகில் பெரும்பாலான மதி இறுக்கம் கொண்டவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள். இதற்கு உளவியலாளர் சைமன் கூறிய விளக்கம், மதி இறுக்கம் என்பது அதீத ஆண் மூளை இயல்பை ஊக்குவிக்கிறது என்பதுதான். மூளையை ஆண், பெண் என இருவகையாக பிரித்து விளக்கம் சொன்னார். 


இந்த மூளை வகை பாலின பேதமற்றது. ஆண் மூளை என்பது அமைப்பு ரீதியானது. பெண் மூளை என்பது உணர்ச்சி ரீதியானது. ஆண்கள், பிரச்னை என்றால் அதை தெரிந்துகொண்டு உடனே தீர்வுக்கு சென்றுவிடுவார்கள். அமைப்பை, கட்டுமானத்தை உருவாக்க மெனக்கெடுகிறார்கள். வரைபடங்களில் உள்ளவற்றை எளிதாக அடையாளம் காண்கிறார்கள். பெண்கள் ஒருவர் பேசுவதை விட பேசும்போது வெளிக்காட்டும் உடல்மொழிக்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள். 



மதி இறுக்கம் கொண்டவர்கள் பிறரது உணர்ச்சிகளை செயல்களை அதன் பின்னே உள்ள அர்த்தங்களை அறியமாட்டார்கள். அறிந்துகொண்டார்கள் என்றாலும் கூட அதற்கான அறிகுறி ஏதும் இருக்காது. பெரும்பாலும் இயலாது என்பதே உண்மை. குறிப்பிட்ட சிக்கலான அமைப்பை, எடுத்துக்காட்டாக மின்விளக்கு ஸ்விட்சை அமைக்கவேண்டுமென்றால் மதி இறுக்கம் கொண்டவர்கள் அதை துல்லியமாக இறங்கி ஆராய்ந்து செய்வார்கள். எனவே, இவர்கள் அதீத இயல்பு கொண்ட ஆண் மூளையினர் என பாரோன் அடையாளப்படுத்தினார். இவரின் ஆய்வு மதி இறுக்கம் பற்றிய தெளிவை மக்களுக்கு கொண்டு சேர்த்தது. சிகிச்சைகளும் அதற்கேற்ப மாற்றம் பெற்றன. 
















கருத்துகள்