பட்டுநூல் மாவீரனின் மறுபிறப்பு பழிவாங்கல் கதை!

 










ஸ்வார்ட் டைனஸ்டி


23 எபிசோடுகள் - மொத்த எபிசோடுகள் 30க்கும் அதிகம


சீன டிராமா


ராக்குட்டன் விக்கி 



பா எனும் வாள் பயிற்சி அகாடமி இருக்கிறது. அதன் தலைவர் ஹெங் என்ற அரசருக்கு போரில் உதவுகிறார். இதனால் அரசர மூன்று ராஜ்யங்களையும் வெற்றி கொள்கிறார். ஆனால் போரின் இறுதியில் வாள் பயிற்சி அகாடமி தலைவரின் பங்களிப்பு காரணமாகவே தான் வெற்றிபெற்றோம் என தாழ்வுணர்ச்சியால் தவிக்கிறார். இதிலிருந்து மீள துரோகம் செய்து வாள் பயிற்சி அகாடமி தலைவரைக் கொல்கிறார். இதில், அவருக்கு அகாடமி தலைவர் காதலியும் உதவுகிறார். இருவரும் சேர்ந்து அவரை விருந்து ஒன்றில் தாக்கி கொல்கிறார்கள். பிறகு அந்த காதலி மன்னரை மணந்துகொள்கிறாள். அந்த துரோகத்தை எதிர்கொள்ள முடியாத வாள்வீரர், தன்னைத்தானே அழித்துக்கொண்டு இறந்துபோகிறார். இது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கதை. 


அகாடமி தலைவரிடம் பயிற்சி செய்த மாணவர்கள் சிலர், அவருக்காக பழிவாங்க காத்திருக்கிறார்கள். அதற்கெனவே உயிரை பத்திரமாக வைத்திருக்கிறார்கள். மற்றும் சிலரோ, ஹெங் அரசில் இணைந்து சுயநலமாக மாறி தங்கள் வாழ்க்கைக்கு என்ன கிடைக்கும் என பார்க்கிறார்கள். நிகழ்காலத்தில், ஹெங் நாட்டில் உள்ள தலைநகரில் ஒயின் விடுதி ஒன்றை பெண் நடத்துகிறார். அங்கு, சுயசேவைதான். ஒயினை நீங்களே தேர்வு செய்து எடுத்து குடித்துவிட்டு பணத்தை மேசையில் வைத்துவிட்டு செல்லலாம். பரிமாற பரிசாரகர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த கடையின் சிறப்பே, உரிமையாளரி்ன் அழகுதான். அப்படியொரு பேரழகி. அவளும் அவளுடைய உறவினனான டிங் நிங் என இரண்டுபேரும் அங்கு வாழ்கிறார்கள். அவனுக்கு அவள் சின்ன அத்தை முறை. 


கதையில் இருவரும் காதலர்கள் போலவே இருப்பார்கள். ஆனால், வெளியில் இருப்பவர்களுக்கு சின்ன அத்தை என உறவுமுறை சொல்லிக்கொள்வார்கள். பெண் சற்று வயதில் மூத்தவள். ஆண் இளையவன். இருவருமே அகாடமி தலைவர் வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டதற்கு பழிவாங்க முனைவார்கள். டிங்னிங்கிற்கு உடலில் யாங் சக்தி அதீதமாக வெளிப்படும் பிரச்னை இருக்கும். ஆன்ம ஆற்றலை அதிகரித்தால் விரைவில் இறந்துவிடுவான்.  எனவே, ஆயுள் முப்பது வயதுதான். அதைத்தாண்டி தற்காப்புக்கலை பயிற்சி பெற்றால் உயிரோடு இருக்க முடியாது. இந்த உடலை வைத்துக்கொண்டு ஹெங் மன்னரை அவன் பழிவாங்க முடிந்ததா இல்லையா? மன்னரை பழிவாங்குவதற்கு என்ன காரணம் என்பதையெல்லாம் படு நிதானமாக கதையில் சொல்கிறார்கள். 


டிங் நிங்காக நடித்திருப்பவர் சீன நடிகர். ஆ.. கதையில் எல்லோருமே சீன நடிகர்கள்தானே? நாயகன் சற்று மைசூர் போண்டா மாதிரி இருக்கிறார். அதனால் அவரின் லட்சியம் பற்றி சொல்லும்போது நமக்கு அது தீவிரமாக தோன்றுவதில்லை. காமெடி பண்ணாதப்பா என்றே தோன்றுகிறது. கதையின் இருபத்து மூன்றாவது எபிசோடில் ஒரு திருப்புமுனை உள்ளது. ஆனால் அதுவரை இந்த தொடரை பார்ப்பதே பெரும்பாடு. பேஷன்ஸ் தக்குவா என நிறையப் பேர் நினைக்கலாம். ஆனால், பணி எக்குவா என்று சொல்பவர்கள் தொடரை தொடங்கிய சில எபிசோடுகளில் கைவிட்டுவிடலாம். அது நல்லதுதான். 


ஒரு பழிவாங்குகிற கதை. கொலை, அதை தொடர்ந்த விசாரணை எப்படி இருக்கவேண்டும்? ஆனால் இதில் எல்லாமே படு நிதானமாக நகர்கிறது. ஒருகட்டத்தில் நாயகன் பழிவாங்கினால் என்ன, வாங்காவிட்டால் என்ன என்று தோன்றிவிடுகிறது. அந்தளவு நிதானமாக ஆமை போல நகரும் காட்சிகளை தொகுத்து வெறுப்பேற்றுகிறார்கள். தற்காப்புக்கலை போட்டி நடக்கிற மேடை. அங்கு உள்ளே வரும் பெண் தற்காப்புக்கலை கற்றுத்தரும் குருவை அக்குபஞ்சர் புள்ளிகளை முடக்கி முதுகில் கத்தியால் குத்திக் கொல்கிறாள். இத்தனைக்கும் அந்த இடத்தில் உள்ளவர்கள் அனைவருமே தற்காப்புக்கலை வித்தையில் பெரிய இடத்தில் இருப்பவர்கள். அவர்களின் சுற்றுப்புறம் அறியும் திறனும் கூடுதலாக இருக்கும். இதையெல்லாம் மீறி அந்த பெண் கொலை செய்துவிட்டு தப்பி செல்கிறாள். ஆனால் அதை யாருமே கவனிக்கவில்லையாம்...... போட்டியை மேடையில் இருந்து, அதற்கு முன்புறம் இருந்து பல நூறு பேர் பார்க்கிறார்கள். ஆனால் யாருக்கும் கொலையாளி யார் என தெரியவில்லை. செல்வாக்கான குரு கொல்லப்படுவதை பார்க்கவில்லை என்று கூறமுடியுமா? தொடரில் கூறுகிறார்களே....நம்பத்தான் முடியவில்லை.


பெண் பாத்திரங்கள் எல்லாம் பாண்ட்ஸ் பவுடரை 3 கோட்டிங் அடித்துக்கொண்டு வந்து செயற்கையாக நடித்து தள்ளியிருக்கிறார்கள். அதிலும் அரசு படைத்தலைவராக வரும் யே செல்லான் எல்லாம் வேறு ரகம். ஆண் மட்டுமே இருக்க கூடிய இடத்தில் பெண் முன்னேறுவது கடினம். அப்போது அவர் மூன்று மடங்கு அதிகமாக உழைக்கவேண்டும். ஆனால் அவர் பங்கு பெறும் முதல் சண்டையைத் தவிர்த்து பிற இடங்களில் அடி வாங்கிக்கொண்டே இருக்கிறார். இறுதியாக அவரை முதுகில் வாள் பாய்ச்சி கொல்கிறார்கள். நமக்குத்தான் பரிதாபம் வரமாட்டேன்கிறது. காரணம், அவருக்கு ஆதரவாக மன உணர்வைப் புரிந்துகொள்ள ஒரு காட்சிகூட இல்லையே என்ன செய்வது? இந்த லட்சணத்தில் அவரைக் காதலிக்கும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் காதலன் வேறு இருக்கிறான். எப்படி காதல் வந்தது என்பதற்கான ஒரு காட்சி கூட இல்லை. ஒரே ஒருமுறை யேவை காதலன் கட்டி அணைக்கிறார். அம்புட்டுத்தேன். அடுத்த காட்சியில் காதலி மர்கயா...


இந்த தொடரில் வரும் தற்காப்புக்கலை போட்டிகள் ஒன்று கூட சுவாரசியமாக இல்லை. சண்டைகளும் ஏனோதானோவென்று இருக்கிறது. கேமரா கோணங்களும் சண்டைக்காட்சியில் சுமாராகவே தெரிகிறது. வாள் அகாடமியைச் சேர்ந்த புத்திசாலி திட்ட அமைப்பாளர் தண்ணீர் சிறையில் இருக்கிறார். அவரை மீட்க புரட்சியாளர்கள் போடும் திட்டம் இருக்கிறதே, படு சொதப்பல். இறுதியாக அவரை விடுதலை செய்து வரும் சண்டையும் கூட உருப்படியாக எடுக்கப்படவில்லை. 


ஹெங் மன்னர்தான் வில்லன். இவர் பெரிய வீரனல்ல. கோழைத்தனமும் தந்திரமும் கொண்டவர். வாள் வீரனுக்கு துரோகம் செய்து அவனது காதலியை மனைவியாக்கிக் கொள்கிறார். அதன் வழியாகவே நேரடியாக வெல்ல முடியாத நண்பனின் மனநிலையை பலவீனம் செய்து வெல்கிறார். பலம் அதிகரித்த நிலையிலும் கூட அவருக்கு இறந்துபோன நண்பனின் கொடுங்கனவுகள் வருகின்றன. இந்த மன்னரின் மூத்தமகன் அதிகாரவெறி பிடித்த மூடன். இளைய மகன் மட்டுமே சற்று தந்திரங்கள் இல்லாத சாத்வீக எண்ணம் கொண்டவன். உண்மையில் அவனுக்கு வெளியுலக அனுபவங்கள் பெரிதாக இருக்காது. தனக்கு மரியாதை கொடுப்பவர்களை மட்டுமே பார்த்தவன், டிங்நிங்கை நண்பனாக நினைக்கிறான். இருவருக்குமான இடைவெளி பெரியது. இவன் அரண்மனைவாசி. அவன் தெருவில் மதுபானச்சாலை பரிசாரகன். இளவரசனுக்கு தற்காப்புக்கலை ஆர்வம் இருக்கிறது. அதில் டிங்நிங் உயரம் செல்ல, அவனை நண்பனாக்கிக்கொள்ள முயல்கிறான். 


ஒட்டுமொத்த அரச குடும்பத்தை அழித்து விட நினைக்கும் டிங்நிங்கிற்கு இளவரசன் யாரென தெரியாமல் எப்படி இருக்கும்? ஆனால், அவன் அடையாளம் தனக்கு தெரியாது என்பது போல நடிக்கிறான். இளவரசனும் தனது பெயரை மாற்றிச் சொல்லி டிங்நிங்கிடம் பேசிப் பழகுகிறான். இதில் நகைச்சுவை என்னவென்றால், பெயர் மாற்றியது சரி, உடையை? உடை அப்படியொரு தும்பைப்பூ வெள்ளையில் உயர்தர வாழ்க்கையை வெளிக்காட்டுவது போல இருக்கிறது. தலை அலங்காரம் கூட மிகையாக உள்ளது. தன்னை ஏதோ ஒரு வாள் மையத்தில் மாணவன் என்று சொல்லுகிறான். டிங்நிங் சிரிப்பை அடக்கியபடி, இளவரசனை நண்பனாக்கிக்கொண்டால் நமக்கு சாதகம் என புரிந்துகொள்கிறான். 


இளவரசன் தனது தந்தை சென்றுள்ள மான் மாநாட்டிற்கு செல்ல விரும்புகிறான். அவனை டிங்நிங் கூட்டிச் செல்கிறான். வழியில், ஸூயு குடும்ப பெரியவர் மீட் போதி என்ற அரிய மூலிகையை அடைய விரும்புகிறார். அதற்கு டிங்நிங்கை பயன்படுத்த திட்டம் தீட்டுகிறார். ஆனால் டிங்நிங் ஏற்கெனவே அவரின் தந்திர புத்தியை அறிந்திருக்கிறான். கூடவே இளவரசனும் வேறு வந்து மாட்டிக்கொள்கிறான். அவனைக் காப்பாற்றி, மீட் போதியையும் மீட்கிறான் டிங்நிங். இந்த போராட்டத்தில் பெரியவரை தனது பட்டுநூல் வைத்துக்கொல்கிறான். போதி மூலிகையை தனது குருவிற்காக பத்திரப்படுத்துகிறான். பிறகு அதை, இளவரசனிடம் கொடுத்து குருவிடம் சேர்ப்பிக்கச் சொல்கிறான். 


பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அகாடமி வாள் வீரரும் தலைவரும் ஆனவர், தனது காதலை தவறான பெண்மணி மீது வைத்து அவரோடு ஏராளமான சீடர்கள் இறந்துபோக காரணமாக அமைகிறார். அதை சரி செய்துகொள்ள வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது. டிங்நிங்கிற்கு இன்னொரு அடையாளம் இருக்கிறது. அதை மின் மவுண்டைன் வாள் பயிற்சி அகாடமி தலைவர் அறிந்துகொள்கிறார். அவர் வேறுயாருமில்லை. துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாபெரும் வீரனின் தம்பிதான் அவர். தனது சகோதரரின் அகாடமி மாணவர்களை முடிந்தவரை காப்பாற்றுவார். ஆனால், அவர்களை தன்னுடன் வைத்துக்கொள்ள மாட்டார். அப்படி செய்தால் ஹெங் மன்னரின் கோபம் தன்மேல் திரும்பும் என யோசிக்கிறார். அண்ணன் மீது பாசம் இருந்தாலும்,  தான் சொன்ன உண்மையான விஷயங்களை கேட்காத காரணத்தால் இறந்துபோக நேரிட்டது அவருக்கும் வருத்தமாக கோபமாக இருக்கிறது. 


அவரது அகாடமியில் உள்ள தற்காப்புக்கலை ஒன்றை அடைந்தால் டிங்நிங்கின் பிறவி வியாதி தீரும் என கூறுகிறார்கள். ஆனால் அதை அடைவதற்கு ஆண்டுதோறும் நடத்தும் போட்டியில் வெல்லவேண்டும். வென்றவர்களுக்குப் பரிசாக தற்காப்புக்கலை வழங்கப்படுகிறது. அதையும் டிங்நிங் அடைகிறான். அதற்குப் பிறகு என்னவானது என்பதே கதை. 


முதல் எபிசோடு தொடங்கி இருபத்து மூன்று வரை கதை ஆமை வேகத்தில் நகர்கிறது. உருப்படியான ஒரு காட்சி கூட கிடையாது. இயக்குநர் எழுதியது தாளில் சிறப்பாக இருக்கிறது. ஆனால் காட்சியாக மனதில் ஆர்வம் ஏற்படும்படியாக உருவாகவில்லை. பார்க்கும் பார்வையாளர்களுக்கு உவப்பாக இல்லை. 


தூக்க மாத்திரையாக தொடரைப் பயன்படுத்தலாம். 


கோமாளிமேடை டீம் 

Sword Dynasty (Chinese: 剑王朝; pinyin: jiàn wángcháo) is 2019 Chinese costume wuxia live-action streaming television series based on the novel of the same name by Wu Zui. Directed by Jones Wah-Kon Ma starring Li Xian and Li Yitong airs on iQiyi starting December 6, 2019. Wikipedia

கருத்துகள்