சூழல் சட்டங்களுக்கு எதிராக ஐரோப்பாவில் விவசாயிகள் போராட்டம்!

 








ஐரோப்பாவில் விவசாயிகள் போராட்டம்!


விவசாயிகள் மேற்குலக நாடுகளில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரசு விதிமுறைகளை மாற்றக்கோரி பெரும் திரளாக போராடி வருகிறார்கள். போலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உக்கிரமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. காலநிலை மாற்றம், ஐரோப்பிய யூனியனின் சூழல் பாதுகாப்பு விதிமுறைகள், இறைச்சி, தானியங்களை மலிவான விலைக்கு அரசுகள் இறக்குமதி செய்வது, உரவிலை ஏற்றம் ஆகியவை முக்கியமான காரணங்கள். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரும் இன்னொரு மறைமுக காரணி. 


உலக நாடுகளில் வேறுபாடுகள் இன்றி வெப்ப அலை, வெள்ளம், பஞ்சம், காட்டுத்தீ பாதிப்புகள் ஏறபட்டு வருகின்றன. இந்த பாதிப்புகள் ஏற்படும் கால அளவு நீண்டுகொண்டே வருகிறது. வெப்பம் இயல்பாகவே அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் கடந்த 2022, 2023 ஆண்டுகளில் ஆலிவ் எண்ணெய் உற்பத்தி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. ஸ்பெயின் நாட்டில் கோதுமை, அரிசி, பார்லி ஆகிய தானியங்கள் உற்பத்தி பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 


ஜெர்மனி, போலந்து நாடுகளில் அதிக மழைபொழிவு காரணமாக கோதுமை பயிர் சேதமாகி அறுவடை செய்யும் காலம் தவறிப்போயுள்ளது. இத்தாலியில், காற்றில் அதிகரித்துள்ள ஈரப்பதம் காரணமாக ஆப்பிள், பேரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. க்ரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக பயிர்களின் மூலமாக கிடைக்கும் வேளாண்மை வருமானம் இருபது சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஐரோப்பாவில் மக்கள் விரைவில் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள நேரும் வாய்ப்புள்ளதாக ஐநாவின் காலநிலை மாற்ற கூட்டமைப்பு கூறியுள்ளது. 


2020ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன், பசுமை கொள்கைகளை உருவாக்கி 2050 ஆம் ஆண்டு என எல்லை ஒன்றை நிர்ணயம் செய்தது. பசுமை இல்ல வாயுக்களின் அளவை 55 சதவீதமாக குறைப்பதே முக்கிய நோக்கம் என்று கூறி, அதற்காக காலகட்டமாக 2030ஆம் ஆண்டைக் கூறியது. வேளாண்மை துறையின் மூலம் உருவாகும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு பதினொரு சதவீதமாக உள்ளது. இதைக்குறைக்கவே ஐரோப்பிய யூனியன் முயன்று வருகிறது. பயிர்கள் வளர பயன்படுத்தும் உரங்கள் வழியாக நைட்ரஸ் ஆக்சைடு அதிகளவு காற்றில் கலக்கிறது. இந்த வாயு, கார்பனை விட ஆபத்தானது. 2030ஆம் ஆண்டுக்குள் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவின் அளவை 20 சதவீதமாக குறைத்து உரங்களின் பயன்பாட்டை பாதியாக குறைக்க திட்டம் தீட்டப்பட்டது. 


ஐரோப்பிய யூனியன் பசுமை இல்ல வாயு குறைப்பு திட்டங்களை பெரிதாக குறை சொல்ல முடியாது. ஆனால், இதன் காரணமாக வேளாண்மை துறை தீவிர கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக, பொருளாதார சுதந்திரம் பறிக்கப்பட்டதாக விவசாயிகள் எண்ணுகிறார்கள். எரிபொருள் விலை உயர்வு, சர்க்கரை, முட்டை மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படுவது ஆகிய அரசின் செயல்பாடுகள் விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது. சூழல் கட்டுப்பாடுகள் பொருளாதார ரீதியாக விவசாயிகளை நலிவுபடுத்துகிறது. 


பயிர்களை உற்பத்தி செய்ய அதிக முதலீடு செய்யவேண்டியுள்ளது. எனவே, அவர் குறைவாக பயிர்களை பயிரிடுவார். இறுதியாக அவர் அரசுக்கு எதிராக போராடுவதற்கே வாய்ப்புகள் உள்ளன. ஐரோப்பிய யூனியன், உரங்களை சிறிது காலத்திற்குப் பிறகு முழுமையாக தவிர்த்துவிட்டு இயற்கை விவசாயத்தை செய்யவேண்டும் என பரிந்துரைத்துள்ளது. சூழல் ஆர்வலர்கள், பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளை முழு உலகிற்கும் ஆபத்து ஏற்படுத்துகிறார்கள் எனக்கூறி  பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். 


ஐரோப்பிய யூனியன் தலைவரான வான் டெர் லெயன், தனது உரையில் உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் கொள்கையை கைவிடுவதாக கூறினார். இதற்குப் பிறகு, 2040ஆம் ஆண்டுக்குள் தொண்ணூறு சதவீத பசுமை இல்ல வாயுக்களை குறைக்கவிருப்பதாக அறிவித்தார். இதில் குறிப்பாக வேளாண்மைத் துறையில் உள்ள மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு பற்றியெல்லாம் கூறவில்லை. 


ஜெர்மனி வேளாண்மை பயன்பாட்டிற்கான டீசல் மானியத்தை நிறுத்த நினைத்திருந்தது. ஆனால் இப்போது விவசாயிகள் போராட்டம் வெடித்துள்ளதால், இப்போதைக்கு மானியத்தை நிறுத்தவில்லை என்று கூறியுள்ளது. பிரான்ஸ் நாட்டு அரசு, உரங்களின் பயன்பாட்டை நிறுத்த அறிவிக்கவிருந்த தேசிய திட்டத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. 


இந்தியன் எக்ஸ்பிரஸ் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்