உடல் எடையைக் குறைப்பது எப்படி?

 







உடல் எடையைக் குறைப்பது எப்படி?


பா ராகவனே இளைப்பது சுலபம் என நூல் எழுதியிருக்கிறார். அவரே பன்னீர், வெண்ணெய் என்று சாப்பிட்டு குனுக்கெனதான் இருக்கிறார். அவர் எழுதிய நூலைப் படிப்பவர்கள் மட்டுமே உடனே இளைத்து விடுவார்களா? முடியும். அதற்கு முக்கியக் காரணம், உணவுமுறை. ஒருவர் சாப்பிடும் உணவின் அளவு. அதைக் கட்டுப்பாட்டில் வைத்தாலே உடற்பயிற்சியைத் தொடங்கும் முன்னரே உடலில் மாற்றம் தெரியும். அதற்குப் பிறகு உடற்பயிற்சி பழக்கமானால் மெல்ல உடல்எடை சீராக குறையத் தொடங்கும். 


ஹோமியோபதியில் கூட உடல் எடையைக் குறைக்கலாம் என மருந்துகளை விற்கிறார்கள். ஆனால் அதற்கு ஒருவர் கொடுக்கவேண்டிய விலை என்னவென்று யாருக்கும் தெரியாது. எனவே, மாத்திரை, டானிக்குகள், பெல்ட் என பேசும் விஷயங்களை சரியான ஆலோசனைகளோடு அணுகுவது நல்லது. 


ஃபிட்னெஸ் பேண்டுகள், வாட்சுகள், ஆப்கள் நிறைய உள்ளன. இவற்றை வாங்கிக்கொண்டு சரியான உடற்பயிற்சிமுறை, அதற்கேற்ப உணவுமுறையை திட்டமிட்டால் நிச்சயமாக எடை குறைய வாய்ப்புள்ளது. கலோரி குறைய, ஊளைச்சதை அழிய, கொழுப்பு கரைய என நிறைய பயிற்சிகள் உள்ளன. இவற்றை ரெசிஸ்டன்ஸ், ஸ்ட்ரென்தனிங், கார்டியோ என பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகிறார்கள். சக நண்பர்களின் பாக்கெட்டில் கைவிட்டு காசு திருடி, நாயர் கடையில் மைசூர் போண்டா, பருப்பு, படை, உளுந்துவடை, கஜீரா ஆகியவற்றை தின்பதைக் கட்டுப்படுத்தினாலே நன்மை விளையும். 


உடற்பயிற்சியை தினசரி செய்யும்விதமாக பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அப்போதுதான் அதை தொடர்ச்சியாக செய்யமுடியும். இல்லையெனில் ஒரே நாளில், கடுமையாக உடற்பயிற்சி செய்து அடுத்தநாள் கேட் தாழ்பாளை திறக்க கூட அடுத்த வீட்டு பாலபாரதி மாமாவை கூப்பிடும் நிலை வந்து சேரும். ஒருநாளுக்கு ஒரு மணிநேரம் என்ற உடற்பயிற்சி அவசியம் தேவை. இந்த உறுதி கூட மனதில் இல்லை என்றால் உங்கள் உடல் எடை ஒருக்காலும் குறையாது. 


யூட்யூபில் நிறைய உடற்பயிற்சி வீடியோக்கள் உள்ளன. அதைப் பார்த்துவிட்டு அப்படியே உட்கார்ந்துவிடாமல் அதை செய்யத் தொடங்குவது முக்கியம். இல்லையெனில் வீடியோ பார்ப்பதுதான் மிஞ்சும். உடல் எடை அப்படியேதான் இருக்கும். உடற்பயிற்சிக்கு இடையே ஓய்வு அவசியம். அப்போதுதான் அடுத்தடுத்த பயிற்சிகளை செய்யமுடியும். 








கருத்துகள்