அப்பாவியான பங்குச்சந்தை தரகன் தன்னை சைக்கோபாத் கொலைகாரனாக நினைத்துக்கொண்டால்....
சைக்கோபாத் டைரி
கே டிராமா
பதினாறு எபிசோடுகள்
ராக்குட்டன் விக்கி ஆப்
பங்குச் சந்தை நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகன். இளகிய இதயம் கொண்ட அப்பாவி. எனவே, அவனை பலியாடாக்கி ஒரு நிறுவனத்தைப் பற்றிய அறிக்கையை தயார் செய்யச் சொல்கிறார்கள். அந்த வேலை கூட அவனது நண்பன் செய்யவேண்டியதுதான். ஆனால் அவன் நாயகனின் தலையில் கட்டிவிடுகிறான். அதை அவன் தயாரித்துக் கொடுத்த அந்த நேரத்தில் அதிலுள்ள தகவல்களால் அந்த நிறுவனம் சரிவைச் சந்திக்கிறது. இதை வைத்து அவனை வேலையை விட்டு நீக்க முயல்கிறார்கள். தனது நெருங்கிய நண்பனே இப்படி துரோகம் செய்கிறானே என நொந்துபோன நாயகன் தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான். அப்படி தற்கொலை செய்ய முயலும்போது, யாரோ ஒருவர் வலியில் முனகுவது போல சத்தம் கேட்க, கீழே வந்து எட்டிப்பார்த்தால் ஒருவன் வயதான ஒருவரைக் கொல்ல முயன்றுகொண்டிருக்கிறான். அதை நாயகன் மறைந்திருந்து பார்க்கிறான். அவன் கோழை, அப்பாவி. எனவே, அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறான். அப்போது முதியவர் கொலைகாரனது டைரியை தட்டிவிடுகிறார். அதை நாயகன் எடுத்துக்கொண்டு ஓடும்போது போலீஸ்காரில் அடிபட்டு ரெட்ரோகிராட் அம்னீசியாவில் சிக்குகிறான். அவன் யார், அவனது அம்மா, அப்பா, அலுவலகம், நட்பு என அனைத்துமே மறந்துபோகிறது. டைரியைப் படிப்பவன். தான்தான் சைக்கோபாத் கொலைகாரன் என நினைத்துக்கொள்கிறான்.
அதுவரை அப்பாவியாக இருந்தவன், இப்போது மெல்ல தைரியம் பெறுகிறான். முழுமையாக தைரியம் வராவிட்டாலும் பார்த்த படங்கள், டைரியில் உள்ள தகவல்களை மனப்பாடம் செய்து தேவைக்கு ஏற்படு பிறருக்கு சொல்லி திகில் ஏற்படுத்துகிறான். இந்த நேரத்தில் முதியவர் காயத்துடன் தப்பிவிட தன்னுடைய டைரி எங்கே என சைக்கோபாத் கொலைகாரன் தேடத்தொடங்குகிறான். அவன் வேறு யாருமல்ல. நாயகன் வேலை செய்யும் பங்குத்தரகு நிறுவனத்தின் முதலாளியின் மூத்த மகன் சியோ இன் வூ.
சியோ இன் வூக்கு தனது சைக்கோபாத் முகம் தெரிய வந்தால், அப்பா கம்பெனியை தனது தம்பிக்கு கொடுத்துவிடுவார் என்ற பயம் இருக்கிறது. அதேநேரம் பலவீனமானவர்களைக் கண்டால் அவர்களை கொல்லாமல் விட கொலைகார மனம் விடுவதில்லை. இப்படி ஏராளமானவர்களை கொலை செய்து அதை சிவப்பு நிற டைரியில் எழுதி வைத்திருக்கிறான். கொலைகளை செய்வதற்கென தனி அறையில் ஆயுதங்களை உருவாக்கி வைத்திருக்கிறான்.
சைக்கோபாத் கொலைகாரன் வந்தாலும் கூட சைக்கோபாத் டைரி என்ற தொடர், பீதி தருவதில்லை. அதற்கு காரணம், தாங்க் ஷி என்ற நாயகன் பாத்திரம்தான். பிறர் மீது அக்கறையும், அன்பும் கொண்ட அப்பாவி. அவன் தன்னை சைக்கோபாத் என உணர்ந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் கதையின் சுவாரசியமான பகுதி. தொடரின் மிகப்பெரும் பலமே நாயகனின் பாத்திரம்தான். ஏராளமான கொரிய தொடர்களில் சைக்கோபாத் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பீதி கொடுப்பார்கள். இதில், அந்த பாத்திரத்தை இறுதியாக கோமாளியாக மாற்றிவிட்டார்கள்.
டாங்க் ஷி பாத்திரம் இருப்பதிலேயே கோமாளியாக இருப்பதுபோல காட்டி இறுதியாக அதை வலிமையாக்கி விட்டார்கள். பலவீனமாக இருப்பதால்தான் பிறரைக் கொல்ல தோன்றவில்லை. அப்படி இல்லாதிருந்தால் கொலைகளை செய்திருக்க கூட வாய்ப்புள்ளது என பத்திரிகையாளர்களிடம் கூறுவது வெறும் கழிவிரக்க வார்த்தை அல்ல. அம்மா கற்றுக்கொடுத்த கருணை என்பதன் மூலம் தன்னை விரோதியாக கருதியவர்களை, அழிக்க நினைத்தவர்களை, துரோகம் செய்தவர்களைக் கூட பின்னாளில் நண்பனாக்கிக் கொள்கிறான். அதை காட்சியாக பார்க்கும்போது அந்தளவு நன்றாக இருக்கிறது. அதிலும் ரவுடி குழுவில் இருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் நாயகனின் நெருங்கிய நண்பனாகி அவரை அண்ணன் என்று அழைக்கத் தொடங்குகிறார். அவர் இறுதிவரை அவனது நண்பனாக இருந்து உதவுகிறார். அந்த காட்சிகள் நகைச்சுவையாக இருந்தாலும் நன்றாக இருக்கின்றன.
டாங்க் ஷி மீது காரை மோதி புரமோஷன் போய்விடுமோ என பயந்து கழிவிரக்கம் கொண்டு பிறகு மெல்ல அவன் மீது காதல் கொள்ளும் போலீஸ்கார நாயகி சிம். தொடரில் காதலுக்கென தனி காட்சிகள் கிடையாது. சிம்முக்கு, டாங்க் ஷியின் அப்பாவித்தனம் பிடித்துப்போய்விடும். அவனைப் போல இன்னொரு ஆளை அவள் நினைத்தே பார்த்திருக்க மாட்டாள். பார்க்க அப்பாவி மாதிரி இருந்தாலும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அவன் காட்டும் வேகம், கொடுக்கும் ஐடியாக்கள் அவளை ஆச்சரியப்படுத்தும். ஆச்சரியப்பட ஏதுமில்லை. அவன் ஏராளமான திரில்லர் நாவல்களை படிப்பவன்.
தொடரில் தான் உண்மையில் சைக்கோபாத்தா, இல்லையா என டாங்க் ஷி தடுமாறுவது தனக்குள்ளேயே புலம்புவதை சிறப்பாக காட்சிபடுத்தியிருக்கிறார்கள். ஏனெனில் அப்பாவியாக பிறருக்கு கருணை காட்டவேண்டும் என வளர்ந்தவன் எவ்வளவு முயன்றாலும் பிறரைக் காப்பாற்றவே நினைப்பான். தன்னைக் காயப்படுத்திக்கொள்வானே தவிர பிறரைக் காயப்படுத்த தயங்குவான்.
சியோ இன் வூ, தன்னுடைய டைரியை வைத்துக்கொண்டு டாங்க் ஷி தன்னை கொலைகாரன் என நினைத்துக்கொண்டிருக்கிறான் என்று அறிந்துகொள்வதுதான் தொடரின் திருப்புமுனை. கூடவே, நாயகி சிம்மின் மாமா, ஊழல் அதிகாரி என்பதை இயக்குநர் சொல்வதற்கு முன்னரே பார்வையாளர்களுக்கு தெரிந்துவிடுகிறது. எனவே அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
லாஜிக் தடுமாற்றங்களைப் பார்ப்போம்.
நாயகி சிம் சாதாரண பேட்ரோல் செல்லும் பிரிவைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் கஃபே ஒன்றை நடத்துகிறார்கள். இவர்கள் கடைக்கு வரும் சியோ இன் வூ, சிம்மின் அப்பாவுக்கு மருத்துவ உதவிகள் செய்து, செலவுகளை தான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியவுடன் சிம்முக்கு எந்த சந்தேகமும் வரவில்லையே ஏன்? அவன் உறவுக்காரன் கிடையாது. நண்பன் கிடையாது. கடைக்கு ஜூஸ் குடிக்க வந்த ஆள். எதற்கு பெரிய செலவு செய்து தன்னுடைய அப்பாவுக்கு உதவுகிறான் என்று அவள் யோசிக்கவே இல்லையே?
சைக்கோபாத் கொலைகாரன் எழுதிய டைரியில் உள்ள கையெழுத்து சீராக உள்ளது. அதாவது. இடதுகையில் எழுதப்பட்டு இருக்கும் எழுத்தை கண்ணாடியில் பார்த்தால்தான் என்னவென்றே புரிந்துகொள்ள முடியும். அதை நாயகன் எடுத்து படித்து தான்தான் கொலைகாரன் என நினைத்துக்கொள்கிறான். ஆனால் எந்த அடிப்படையில்? கையெழுத்து கூட அவன் எழுதியது போல இல்லை. டாங்க் ஷி எழுதும் எழுத்து, புதிதாக இடது கையில் எழுதப்பழகுபவர் போல சீரற்று இருக்கிறது. டைரி தன்னுடையதுதானா என அவர் தான் எழுதிய பிற கோப்புகளைக் கூட எடுத்து பார்க்கவில்லையே ஏன்?
டாங்க் ஷி உலகில் ஒரே ஆதரவு அவனது அம்மாதான். அவள்தான் அவனை மென்மையான இதயம் கொண்டவனாக வளர்க்கிறாள். அப்படியிருப்பது அவனது இயல்பாக கூட இருக்கலாம். அப்படி இருந்தால் உலகில் வாழ முடியாது என அவனது அப்பா கூறுகிறார். முதல் மனைவி இறந்தபிறகு இரண்டாம் மனைவியை மணம் செய்துகொண்டு ஒரு பிள்ளையை வேறு பெற்றுக்கொள்கிறார். டாங்க் ஷிக்கு ஒரே ஆதரவு அவனது அக்கா மட்டுமே. இந்த சூழ்நிலையில் அவனை காரில் இடித்து தள்ளிய போலீஸ் அதிகாரி சிம்மை மட்டும் எதற்கு நம்புகிறார் என்று புரியவில்லை. இறுதியாக அவள்தான் அவனுக்கு சைக்கோபாத் கொலைகாரன் என முத்திரை குத்தி ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுக்கிறாள். டாங்க் ஷி சிறையில் ஒரு நண்பனைப் பிடித்து அவனது உதவியால் கழிவறைக் குழியில் குதித்து தப்பிக்கிறான். அவனே வெளியே வந்து தன்னை நிரூபிக்கிறான். அந்த சூழ்நிலையிலும் அவன் சிம்மை நம்புகிறான். இத்தனைக்கும் அவனை அண்ணன் என அழைக்கும் முன்னாள் ரவுடி ஏன் நீ என்னை நம்பவில்லை என்கிறான். தொடரில் இந்த பாத்திரம் மட்டுமே நாயகன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது.
குற்றங்களை ஒப்புக்கொண்டான் என்ற ஒரே காரணத்திற்காக டாங்க் ஷியை குற்றவாளி என கூறுகிறார்கள். ஆனால் அதற்கான என்ன ஆதாரம் கையில் இருக்கிறது. சிவப்பு நிற டைரியை அவனுக்கு கொடுப்பதே அதிகாரி சிம்தான். டாங்க் ஷிக்கு டைரி தன்னுடையது என்று கூட நினைவே இருப்பது இல்லை. அதுவரை குற்றவாளி பற்றிய புரோஃபைல் செய்கிறார்கள். அதைக் கூட கைவிட்டு டாங்க் ஷியை குற்றவாளி என்று கூறி, தண்டனை வாங்கிக் கொடுத்து புரோமோஷன் வேறு வாங்கிக்கொள்கிறார்கள். கொரிய காவல்துறை இப்படித்தான் இயங்குகிறதா?
வேடிக்கையான சைக்கோபாத் கதைக்காக மட்டுமே
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக