அப்பா தனது உயிரை தியாகம் செய்து காப்பாற்றிய சிறுமியே மகனின் காதலியாக வந்தால்..... ஃபிளேமிங் ஹார்ட்
flaming hearts
chinese drama
rakutan viki
தீயணைப்பு துறை சார்ந்த கதை. நாயகன் ஹூவா ரான். இவனின் தந்தையும் தீயணைப்பு வீரர்தான். கேப்டனாக இருந்தவர், 2000ஆம் ஆண்டு தொழிற்சாலையில் நடந்த விபத்தில் சிறுமியை காப்பாற்ற முயன்று அதில் வெற்றிகண்டு பதிலுக்கு தன்னையே தியாகம்செய்கிறார். அப்படி இறந்துபோனதால், ஹூவா ரான் நிலைகுலைந்து போகிறான். அப்பாவைப் போலவே படித்து தீயணைப்பு வேலைக்கு வருகிறான். தென்கிழக்கு மருத்துவமனையில் எமர்ஜென்சி பிரிவில் உள்ள இளம்பெண் பழக்கமாகிறாள். இருமுறை அவளது உயிரைக் காப்பாற்றுவது ஹூவா ரான்தான். அவளுடைய கடந்த காலத்தில் ஒரு ரகசியம் இருக்கிறது. அது நாயகனின் அப்பா இறப்பு சம்பந்தமானது. அது என்ன என்பதை சீன தொடர் ஜவ்வாக இழுத்து சொல்லுகிறது.
பொதுவாக தீயணைப்புத்துறை சார்ந்த தொடர் என்றால் தேசப்பற்று என மூக்கு சிந்த வைப்பார்கள். ஆனால் இந்த தொடர் தேசப்பற்று, காதல் என எந்தப்பக்கமும் போகாமல் இருபத்து நான்கு எபிசோடுகளில் முடிகிறது. ஆனால் என்ன சொல்லவருகிறது என ஒன்றும் புரியவில்லை. தொடரின் ஒரே பலம், நாயகன் ஹூவா ரானாக நடித்துள்ள சீன நடிகரின் முக வசீகரம்தான். அவருக்கு அடுத்து நர்சாக வரும் ஷியோபாய் அழகாக இருக்கிறார். கருத்தாக நடித்திருக்கிறார். நாயகியைப் பார்த்தால் அணில் அல்லது முயல் நினைவுக்கு வந்து தொலைகிறது. அவரும் அந்த விலங்குகளைப் போலவே கண்களை உருட்டி விழிப்பது, ஈறு தெரிய சிரிப்பதை செய்கிறார். ஒரு பயனும் இல்லை.
நாயகனின் அப்பா, அவன் வளரும்போது இடையில் இறந்துபோகிறார். அம்மா ஒற்றை மகனை சில, பல வேலைகள் செய்து காப்பாற்றுகிறார். ஹூவா ரான் , நிலையத் தலைவருக்கு அடுத்த இரண்டாவது கட்ட தலைவராக உயர்கிறான். பணத்திற்கு பெரிய பிரச்னை இல்லாத ஆள். அம்மாவை வீட்டில் வைத்து பார்த்துக்கொள்கிறான். உண்மையில் அவரின் அம்மா பாத்திரம் மனநிலை பிரச்னை உள்ளதா இல்லையா என்ற சந்தேகம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. அவரின் நடிப்பு அப்படிப்பட்டது.
ஹூவா ரான் எந்த பெண்ணைப் பார்த்தும் பின்னே போகவில்லை. காதலிக்க நேரமில்லாமல் தண்ணீர் பைப்பை பிடித்தபடி தீயணைக்க ஓடிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரை நோக்கியும் காதலிக்க நேரமில்லையா என மருத்துவப் பெண் ஒருத்தி வருகிறாள். விபத்தில் சிக்கிய கர்ப்பிணிக்கு ஹூவா ரான் உதவி குழந்தையைப் பெற்றெடுக்க உதவுகிறான். கூடுதலாக, மருத்துவப்பெண் யான் லான், ஒரு தீவிபத்தில் சிக்கிக்கொள்ள வயர்லஸ் போனில் தகவல் சொல்லி உயிர் காக்கிறான். இதனால் அவளுக்கு அவன்மேல் ஒரு இது அதாவது காதலே உருவாகிவிட்டது எனலாம். அந்தப் பெண்ணை லுவோ என்ற இன்னொரு தீயணைப்பு வீரன் கல்யாணம் செய்ய அலைகிறான்.
அவனது குடும்ப நண்பர்கள்தான் யான் லானின் பெற்றோர். எனவே, கல்யாணம் நடந்தால் பாதுகாப்பான உறவாக இருக்குமே என நினைக்கிறார்கள். லுவோவுக்கும் பெற்றோர் சொல்வதை நம்புகிறான். அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து தனது காதலி யான் லானைப் பார்த்து போகிறான். ஆனால் அவளோ லுவோவை நண்பனாகத்தான் பார்க்கிறாள். நேரடியாக அதையும் சிலமுறை கூறுகிறாள். ஆனால் அதை லுவோ ஏற்க மறுக்கிறான். யான் லானின் தோழி, லுவோவைப் பார்த்து காதல் வயப்படுகிறாள். அவனை காதல்வயப்பட வைக்க முயல்கிறாள். இதற்கு மருத்துவப் பெண்தோழி எந்த உதவியும் செய்வதில்லை. உனது சாமர்த்தியம் என்று கூறிவிடுகிறாள்.
தீயணைப்பு கதையில் நாயகனின் வருமானம், அந்தஸ்து, அவனது அப்பாவின் மீது போலி குற்றச்சாட்டு, பணக்கார காதலி, மருத்துவராக உள்ள அந்தஸ்து, நாயகனின் அந்தஸ்து மீறிய காதலுக்காக அவனை வேலையில் இருந்து வெளியேற்ற முயலும் உள்புற சதிகள் என கதையை நகர்த்துவார்கள். கூடவே கட்டிடத் தீவிபத்து சம்பவங்கள், நிலநடுக்கம், வேதிப்பொருள் தொழிற்சாலை வெடிப்பு என அலுப்புக்கு சில விஷயங்களை சேர்ப்பார்கள்.
இந்த தொடரில் ஃபிளேமிங் ஹார்ட் என ஒரு திட்டத்தை தீயணைப்பு வீரர்களுக்காக உருவாக்குகிறார்கள். தங்களின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வை வெய்போ எனும் சமூக வலைதளத்தில் வீரர்கள் பகிரலாம். சிறந்த விஷயமாக இருந்தால் அதற்கு சீன அரசு பரிசு தரும். நாயகன் அப்படி ஏதாவது செய்கிறானா என்று கூட இயக்குநர் கூறவில்லை. அப்படியே லூசில் விட்டுவிட்டார்கள். தொடரில் வாங் டாயின், ஜியோங் டாங் என்ற ஜோடியின் கதை நன்றாக இருந்தது. நாயகன், நாயகியை விட மேற்சொன்ன இரண்டாம் நிலை பாத்திரங்களின் கதை சற்று பரவாயில்லை. வாங் டாயின் ஆதரவற்றவர். டிகிரி முடிக்க முடியாத சூழல். தீயணைப்பு வீரராகிறார். ஆனால் அவருக்கு காதல் வருவது பல்கலைக்கழக மாணவி மீது. அவர் யாருடைய மகளென்று பார்த்தால், தீயணைப்பு துறை மேலதிகாரி மினிஸ்டர் ஜியாங்.
ஜியோங் டாங்கிற்கு வாங் டாங்குடன் முதலில் மோதலில் உறவு தொடங்கினாலும், அவனின் மனிதநேய மனம் பார்த்து காதலில் விழுகிறாள். படிப்பு, அந்தஸ்து, பணம் பற்றியெல்லாம் அவள் கவலைப்படுவதில்லை. வாங்குக்கும் அவள் மீது பேய்க்காதல். அவன் தனது இபைக்கை விற்று ட்ரோனுக்கான ஒரு பொருளை வாங்கி ஜியாங்கிற்கு கொடுக்கிறான். அவளோ, தனது ட்ரோனை விற்று அவனது இபைக்கிற்கான ஹெல்மெட்டை வாங்கிக் கொடுக்கிறாள். ஓ ஹென்றியின் கதை போல ஒரு காதல் கதை.
நாயகன் ஹூவா ரான் பாத்திரத்தில் நடித்த நடிகர், சிறந்த மாடலாக வர வாய்ப்புண்டு. ஆள் பார்க்க ரேமண்ட் விளம்பரத்தில் நடிக்கலாம் போல. மற்றபடி அவர் நடிக்க உருப்படியான காட்சிகளே கிடையாது. புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துகிற ஆள். உயிரைக்காப்பாற்றுவதில் தேர்ந்தவர். லுவோ முரட்டுத்தனமாக ஆற்றலைப் பயன்படுத்துகிற ஆள். இதனால் ஹூவா ரான் நிலையத் தலைவராக உயர்கிறான்.
தொடரின் இறுதிப்பகுதியில்தான், வில்லனை அறிமுகப்படுத்தி அவன் செயல்பாடுகளை விளக்குகிறார்கள். அதை தொடரின் இடையிடையே காட்டினாலே நன்றாக இருந்திருக்கும். வில்லன் பாத்திரமும் உதவாக்கரைதான். சொல்ல ஏதுமில்லை. கிளிஷே வில்லன். அவனது இறப்பைத் தொடர்ந்தும் கதை நீள்கிறது. நீள்கிறது. பார்க்கத்தான் நமக்கு கஷ்டமாக இருக்கிறது. இதில் ராக்குட்டன் விக்கியில் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை என்சுயிர் என்ற சத்துப் பொடியை வேறு மூன்றுமுறை கூவி கூவி விற்கிறார்கள். விளம்பர வெறியர்கள்.
சீன தொடர்களில் டைட்டில் கார்ட் என்பதே கேரள படங்களில் நன்றி சொல்வதை பதினைந்து நிமிடங்களுக்கு போடுவார்களே .. போட்டு முடிக்க அதுபோல இரண்டு நிமிடங்களாகிறது. ஒவ்வொரு எபிசோடிலும் இரண்டு நிமிடங்களை எடுத்துக்கொண்டு சாகடிக்கிறார்கள். எபிசோடுகள் அனைத்துமே கச்சிதமாக இருப்பதில்லை. முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது என செல்வதால், டைட்டில் கார்டுக்கென அதிக டேட்டா செலவாகிறது.
தொடரில் நாயகன் நாயகிக்கு எதிர்கொள்ள பெரிய முரண் ஏதுமில்லை. எனவே, பெரும்பாலான நேரம் இருவரும் அங்கேயும் இங்கேயும் சுற்றுகிறார்கள். நட்சத்திரம் பார்க்கிறார்கள். நூடுல்ஸ் தின்கிறார்கள். ஒயின் குடிக்கிறார்கள். பார்வையாளர்களான நமக்குத்தான் வங்கொலையாக இருக்கிறது. தொடங்கிய கதையை எப்படியாவது முடித்துவிடலாமே என இயக்குநர் நினைத்திருக்கிறார். கிளிஷே காட்சிகள்,மிகை நடிப்பு, போலி தேசப்பற்று என அனைத்துமே எதிர்மறை திசையில் போக உண்மையில் பார்வையாளர்களின் இதயம் வலி, வேதனையில் பற்றி எரிந்துதான் போகிறது.
கோமாளிமேடை டீம்
The Flaming Heart (Chinese: 你好,火焰蓝), is a 2021 Chinese rescue emotional drama streaming television series co-produced by Youku, and NICE.film, directed by Zhang Li Chuan, written by Hou Shi Qi, Wu Wei, Ding Rui, and Chen Che. It starred Gong Jun (Chinese: 龚俊) and Zhang Huiwen ... Wikipedia
கருத்துகள்
கருத்துரையிடுக