எல்ஐசி முகவரின் ஆன்மிகத்தேடல் பயணம் - வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்

 








வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர் 

கிழக்கு பதிப்பகம் 

நாவல் 


சந்தானம் என்ற எல்ஐசி ஏஜெண்ட், திருவண்ணாமலையில் கணபதி என்பவரைச் சந்திக்கிறார். அதன் வழியாக வேதமூர்த்தி என்ற சாமியாரைப் பற்றி அறிவதோடு அவரது சீடர்களையும் சென்று சந்திக்க செல்கிறார். இதன் வழியாக அவர் பெறும் அனுபவங்கள்தான் கதை. 


ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத ஒரு சம்பவம், அவர்களது சாதாரண வாழ்க்கையை அசாதாரணமாக்குகிறது. மாதச்சம்பள வேலைக்குப் போகவேண்டும் என நினைத்த பால்பாண்டி, சிலம்பம் கற்றுக்கொடுப்பவராக மாறுகிறார். கண்பார்வை இல்லாத ஹரி, குருவின் தீட்சை பெற்று அடுத்த குருவாக மாறுகிறார். இறந்துபோன அம்மாவின் நினைவில் இருந்து மீளாத வைரவன், நகரத்தார் விடுதிக்கு பொறுப்பாளராகிறார். மடத்தின் விடுதியில் வளர்ந்த கோவர்த்தனம் பத்து ஆண்டுகள் அலைந்து திரிந்தபிறகு, ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். மகன் அகாலமாக இறந்துபோக, தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து அதன் வழியாக துக்கத்திலிருந்து மீள முயல்கிறார் கட்டுமானக் கலைஞர் சிவராமன். ஒட்டுமொத்த குடும்பமே தற்கொலை செய்து இறக்க, மடத்தில் துறவியாகி வாழ்கிறார் மன்னாதி. பிறப்பு ஆண்டவன் கொடுத்தது. இறப்பும் அப்படியே நேரட்டும் என குருவின் முடிவைக்கூட எதிர்த்து செயல்படும் மராட்டிய சீடனாக ஜய்ராம் இருக்கிறார். தனது வயிற்றுப்பசி நின்றுவிட பிறரின் பசியைப் பற்றி கவலைப்படுகிறார் குற்றாலிங்கம். இவரது வயிற்றுப்பசி என்றால், ராமலிங்கத்துடையது உடல் பசி. அதன் விளைவாக யானைக்கால் வியாதி வர, அதன் வழியாக நேர்மையான வாழ்க்கையை பற்றிக்கொண்டு வாழ்கிறார். 


இப்படி ஏராளமான மனிதர்களின் வாழ்க்கை முன்னும் பின்னுமாக கூறப்படுகிறது. இத்தனைக்கும் இந்த கதை கூறப்படும் காலத்தில் குரு வேதமூர்த்தி ஜீவசமாதி அடைவதற்கான முயற்சியில் இருக்கிறார். தனது மனைவிக்கு உதவிகளைச் செய்த சாமியாரை எப்படியாவது பார்க்கவேண்டும் என நினைக்கிறார் கணபதி. அவரது கதையின் வழியாகவே சந்தானத்திற்கு வேதாவை யாரென தெரிந்துகொள்ளும் ஆர்வம் கூடுகிறது. அதுவே கதையை மெல்ல நகர்த்திச் செல்கிறது. 


இந்தக் கதை தொடக்கத்தில் படிக்க சற்று சிரமமோ என்று எண்ணும்படி இருந்தாலும் படிக்கத் தொடங்கிவிட்டால் நிறுத்தமுடியாது. அந்தளவு நூலின் வாக்கிய அமைப்புகள், பொதிந்துள்ள அர்த்தம் நம்மைக் கட்டிப்போடுகிறது. அதிலும் நூலின் இறுதிப்பகுதி காசியில் நிறைவு பெறுகிறது. குரு ஜீவசமாதி அடைவதை சிறப்பாக விவரித்துள்ளார் ஆசிரியர். நூல் முடிந்தபிறகு பின்னுரையில் சாமியார் ஜீவசமாதி அடைந்ததை நேரில் சென்று தரிசித்ததைக்கூட குறிப்பிட்டிருக்கிறா். 


எல்ஐசி முகவராக சந்தானம் நன்றாக சம்பாதிக்கிறார். குறிப்பிட்ட காலத்தில் அவரின் வருமானம் கூட நிலையாகிவிடுகிறது. பெரிதாக முன்னும் போகவில்லை. பின்னும் போகவில்லை. அந்த நேரத்தில் அவர் தனது வாழ்க்கை, மனைவி சித்ரா பற்றி யோசிக்கிறார். தான் எப்படி அவர்களிடம் நடந்துகொள்கிறோம் என்றெல்லாம் நினைவுகள் ஓடுகின்றன. இருவருமே சம்பாதிப்பவர்கள்தான். ஆண், பெண் என இருகுழந்தைகள் இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அவரது வாழ்க்கையிலிருந்து மெல்ல வெளியேறுகிறார். இருபது நாட்கள் வீட்டுக்கு வராமல் வெளியிலேயே சுற்றுகிறார். பல்வேறு மனிதர்களை சந்திக்கிறார். இதனால் சந்தானத்தின் மனைவி சித்ரா அலண்டுபோகிறார். தான் ஏதாவது தவறு செய்துவிட்டோமோ என பீதியாகிறார். பெண் பிள்ளை வேறு வளர்ந்துகொண்டிருக்கிறாள் என பயம் கொள்கிறாள். எப்படி சமாளிக்கப்போகிறோம் என காவல்நிலையம் போய் புகார் கொடுக்கிறாள். உறவினர் மூலம் அரசியல்வாதி ஒருவரைச் சென்று பார்க்கிறாள். கோவிலுக்குப் போகிறாள். கணவன் இல்லாத வாழ்க்கை அவளை நடுக்குற வைக்கிறது. அவனின் அருமை புரிகிறது. 


அதுவரை வாழ்ந்த வாழ்க்கை, கிடைத்த சந்தோஷம், துக்கம் என அனைத்தையும் தேடி அலசிப் பார்க்கிறார். அதன் வழியாக வாழ்க்கையை புதுப்பித்துக்கொள்கிறார். ஒருகட்டத்தில் சந்தானம் மனைவிக்கு போனில் பேச, அவர் அதிர்ச்சியில் மூர்ச்சையடைந்து விழுந்துவிடுகிறார். சந்தானத்திற்கும் வீட்டுக்குப் போகவேண்டும் என்ற விருப்பம் எழுகிறது. ஆனால் அது சாதாரண வாழ்க்கை. ஆனால் இப்போது சாமியாரின் சீடர்களைப் பார்க்கவில்லை என்றால் எப்போது பார்ப்பது என யோசிக்கிறார். எனவே, தோன்றியதை செயல்படுத்துகிறார். ஒருகட்டத்தில் சந்தானத்தை காணவில்லை என்று கூட சித்ரா விளம்பரம் கொடுக்கிறாள். அதைக்கூட சந்தானம் பார்ப்பதில்லை. அவர் பாட்டிற்கு பயணம் செய்துகொண்டே இருக்கிறார். 


வெளியேற்றம் கதை, மனிதர்கள் வாழ்க்கையிலிருந்து எப்போது வெளியேறி வேறு ஒரு அம்சத்தை அடையாளம் கண்டு சமூகத்திற்கான மனிதர்களாக மாறுகிறார்கள் என்பதை அடையாளப்படுத்துகிறது. இதில் வரும் குருவின் சீடர்கள் அனைவருமே அவரவர் வாழ்க்கையில் ஒரு தேக்கத்தில் இருந்து தவிப்பில் இருந்து மீண்டு சமூகத்திற்கான மனிதர்களாக மாறுகிறார்கள். அப்படி மாறுபவர்களை குரு வேதமூர்த்தி பாதுகாத்து வழிகளை சொல்லிக்கொடுத்து குறிப்பிட்ட பகுதியில் அமர்த்துகிறார். இப்படி இருக்கும் சீடர்களில் சிலருக்கு மட்டுமே அவர்களைப் போல உள்ளவர்களைத் தெரிகிறது. மற்றவர்களுக்கு செயலே கருமம் என வேலைகளை செய்தபடி இருக்கிறார்கள். 


ராமலிங்கம் - விஜயகுமாரி கதை, நாவலில் சிறந்த காதல் கதை என்று கூறலாம். இந்த காதல் கூட நடக்க விலைமாதுவான விஜயகுமாரியின் பிடிவாதம்தான் காரணம். அவள், ராமலிங்கத்தை அந்தளவு நேசிக்கிறாள். உடல் அளவில் விலைமாது என்றாலும் மனம் என்ற அளவில் அது ராமலிங்கத்துக்கானதுதான் என உறுதியாக இருக்கிறாள். அதனால் ராமலிங்கம் அவளை ஊரிலேயே கல்யாணம் செய்துகொண்டு கூட்டி வருகிறான். திருமணத்தை விஜயகுமாரி கூட எதிர்பார்ப்பதில்லை. பெட்டிக்கடை வைத்துக்கொண்டு கூடுதலாக கட்டண கழிப்பறையை ஏலத்தில் எடுத்து நடத்துவதுதான் அவர்களது தொழிலாக மாறுகிறது. அதிலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். யானைக்கால் நோயைத் தீர்த்துக்கொள்வதோடு, தைப்பூசத்தில் தொலைந்துபோன சிறுவன் ரத்னவேலுவை எடுத்து பிள்ளையாக வளர்த்தும் வருகிறார்கள். அதைப்பற்றி விஜயகுமாரி பேசுவதும் அவரது மனதின் பெருந்தன்மையைக் காட்டுவது போல உள்ளது. 


வெளியேற்றம் நாவல், நம்மை நமக்கே புதிதாக மாற்றிக்காட்டும் நாவல் பிரதி.


கோமாளிமேடை டீம் 

https://play.google.com/store/books/details?id=75ldDwAAQBAJ&amp&rdid=book-75ldDwAAQBAJ&amp&rdot=1&amp&source=gbs_vpt_read&amp&pcampaignid=books_booksearch_viewport&pli=1

கருத்துகள்