மனைவியை சாத்தானின் பிள்ளை என உலகமே சொல்ல, அவர்களை எதிர்த்து போராடும் நாயகன்!

 









எவர் நைட்


இரண்டாம் பாகம் 


சீன தொடர் 



முதல் பாகத்தில் இருந்த முக்கியமான நடிகர்களை மாற்றிவிட்டனர். அது முக்கியமான குறைபாடு. அதற்கடுத்து கதை எங்கே போகிறது. எதை நோக்கி நகர்கிறது என்றே தெரியாமல் செல்கிறது. முதல் பாகத்தில் நாயகன் நிங்க் சூவிற்கு பழிவாங்கும் லட்சியம் இருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் அவரும் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுகிறார். அவர் மனைவி சாங் சாங் சொர்க்கத்திற்கு சென்றுவிடுவதால், அவரை மீட்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அதற்கு என்ன செய்வது என தெரியவில்லை. அருகில் இருந்து உதவும் இங்க் பாண்ட் பெண்ணையும் காதலிக்கிறார். ஆனால் அதையும் வெளிப்படையாக கூறமுடியவில்லை. கூடவே நகரைக் காக்கும் வேலை வேறு இருக்கிறது. நகரைச் சுற்றி ஷிலிங் என்ற ஆன்மிக மூடநம்பிக்கை கொண்ட முட்டாள்கள் வேறு படையெடுத்து வருகிறார்கள். நாற்புறங்களிலும் எதிரிகள் சூழ்ந்துள்ள நிலையில் நிங்க் சூ எப்படி நகரைக் காக்கிறான், தனது மனைவியை மீட்க ஏதாவது செய்தானா என்பதை சலிக்க சலிக்க எரிச்சல் ஏற்படுத்தும் விதமாக காட்சி படுத்தியிருக்கிறார்கள். இதில் அடுத்த பாகம் வேறு வருகிறதாம். .... ஐயோடா சாமி. 


இரண்டாம் பாகம் முழுக்க போர்தான். ஆனால் போரைப்பற்றிய காட்சிகள் குறைவு. பெரும்பாலும் வெற்று உரையாடல்களுடன் முடித்துவிடுகிறார்கள். உள்நாட்டு சதிகள், அரசியல் பிரச்னைகளை மட்டுமே காட்சிபடுத்துகிறார்கள். முதல் பாகத்தில் நிங்க் சூவிற்கும், அரசிக்கும் இருந்த பகை நெருங்கிய நட்பாக மாறுகிறது. அரசரின் மூன்றாவது மகனைக் கொன்று ஆறாவது மகனை அரியணை ஏற்றுவது பதிமூன்றாவது ஆசிரியரான நிங்க் சூ தான். அதுமட்டுமில்லாமல், அரியணைக்கு பிரச்னை தரும் சதிகாரர்களை திட்டமிட்டு வாளால் வெட்டி களைகிறார். அதிலும், அரசரின் உதவாக்கரை பிள்ளையை இம்பீரியல் கோர்ட்டிலேயே கழுத்தை அறுத்துக் கொல்வது உச்சபட்சகாட்சி. 


இரண்டாம் பாகம் நாற்பத்து மூன்று எபிசோடுகள் என்றால் அதில் நாற்பது எபிசோடுகள் முழுக்க முதல்பாக காட்சிகளை ஃபிளாஷ்பேக்காகவே காட்டி சலிப்புத் தட்ட வைக்கிறார்கள். அடுத்து, கதையில் நாயகன் நிங்க் சூவுக்கு எந்த வேலையும் இல்லை. அங்கேயும் இங்கேயும் போகிறாரே ஒழிய பிரச்னைக்கான தீர்வைக் கண்டுபிடிப்பதேயில்லை. பார்வையாளர்களான நமக்கே எரிச்சலாகிறது. இவனை எதற்காக வயதான ஆட்கள் தங்களின் சீடனாக தேர்ந்தெடுத்தார்கள் என சபிக்க தோன்றுகிறது. அப்படியொரு உதவாக்கரை நாயகன்..... இவனுக்கு உதவ வேறு இன்னொரு நாயகி வருகிறாள். தாவோயிச மேனியாக் நாயகி, பூக்களை வளர்க்கும் நாயகிகளை மாற்றிவிட்டார்கள். அவர்கள் வரும் காட்சிகள் எல்லாமே சுமாராகவே இருக்கிறது. அதிலும் தாவோயிச மேனியாக் பெண் யே ஹோங்க்யூ பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார். ஆனால் அதை செய்தவர் யாரென அவருக்கு தெரியவில்லை. அதைக் கண்டுபிடித்து அவளுக்கு நிங்க்சூ சொல்லுகிறான். அதற்கு காரணமான கோவில் தலைவரை தண்டிக்க கூடாது என பிற தலைவர்களே தடுக்கிறார்கள் என்னவொறு தாவோயிச நீதி? அந்த பெண் முகம் கோபம் கொள்வதற்கு சரியாக இருக்கிறதே ஒழிய வெட்கத்தையோ, பணிவையோ, வேறு உணர்ச்சிகளையோ காட்ட ஏதுவாக இல்லை. அப்படி நடிக்க அவர் முயலவும் இல்லை. 


அடிப்படை கதையைப் பார்ப்போம். முந்தைய பாகத்தில் ஷியா ஹூவு என்ற படைத்தளபதியை நிங்க் சூ போரிட்டு கொல்கிறான். அதில் அவனுக்கு சாங்சாங் உதவுகிறாள். ஆனால் இதன் விளைவாக அவளுக்கு உள்ள குளிர்காய்ச்சல் நோய் தீவிரமடைகிறது. அதை டேங்க் அகாடமி தலைவரும் கூட தீர்க்கமுடிவதில்லை. எனவே, அவளை க்யூ ஷான் எனும் தலைவரிடம் அழைத்து செல்லக்கூறுகிறார்கள். அவர் ஷிலிங் என்ற நாட்டில் உள்ள மலைப்பகுதி குகையில் இருக்கிறார். 


அங்கு சென்றால்தான் சாங்சாங்கைக் காப்பாற்ற முடியும் என்ற சூழலில் நிங்க் சூ அதை ஏற்கிறான். அப்படி போகும் பயணத்தில் நிறைய எதிரிகளை சந்திக்கிறான். லாங் குயினும் அங்கு வந்து தாக்குகிறான். ஆனால், நிங்க் சூவை அவனது குரு காப்பாற்றுகிறார். க்யூ ஷான் என்ற வயதான தலைவர் இறந்துபோக மிக குறைவான நாட்களே இருக்கிறது. அதற்குள் சென்றால்தான் வைத்தியம் செய்ய முடியும் நிலை. இந்த நிலையில்தான் நிங்க் சூவை எல்லோருமே சாத்தானின் பிள்ளை, அவனை கொல்லவேண்டும் என கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஹேடஸின் பிள்ளை என்று காரணம் கூறி அவனைக் கொன்றுவிட்டால் டேங்க் நாட்டை ஆக்கிரமித்து விடலாம் என்பதே அவனது எதிரிநாடுகளின் ஆசை. வேட்கை, பேராசை எல்லாமே. 


ஆனால் இறுதியாக நிங்க்சூவின் மனைவி சாங்சாங்தான் ஹேடஸின் பிள்ளை  என பேய் மணி வைத்து தீர்மானித்துவிடுகிறார்கள். ஆனால் நிங்க் சூ அதை ஏற்காமல் அனைவரிடமும் சண்டை போடுகிறான். அவனுக்கு இங்க் பாண்ட் இனக்குழுவைச் சேர்ந்த புக் மேனியாக் பெண்ணும் உதவுகிறாள். அதன் காரணமாக அவள் சிறையில் அடைக்கப்படுகிறாள். நிங்க் சூ, சாங் சாங்கை கூட்டிக்கொண்டு ஓராண்டு முழுக்க அலையோ அலையென்று அலைகிறான். எதற்கு உயிர் பிழைக்கத்தான். இந்த நேரத்தில் டேங்க் நாட்டில் உள்நாட்டு துரோகம் காரணமாக பலர் நோயுறுகிறார்கள். மன்னரும் போருக்கு புறப்பட்டு செல்கிறார். போரில் அவர் இறந்துவிடுவார் என்பதே ஜோதிட வாக்கு. ஆனால் அதை சிலர் மாற்றிச் சொல்ல மன்னரும் அதைக்கேட்டுவிட்டு வென்றுவிடலாம் என சண்டையிட சென்று இறந்துபோகிறார். நாட்டில் அரியணை சண்டை தொடங்குகிறது. 


இந்த நேரத்தில் சாங் சாங்கிற்கு நிங்க் சூ பற்றிய நினைவுகள் மறக்கத் தொடங்குகின்றன. அவளுடைய உடலில் தீயசக்தியின் அறிகுறிகள் தெரிகின்றன. ஒளி, இருள் என இரண்டுமே அவளுடைய உடலில் தெரிகின்றன. எதன் ஆதிக்கத்தில் இருக்கிறாள் என்று யாருக்கும் புரிவதில்லை. ஆன்மிகத்தன்மை இல்லை, சாத்தானின் பிள்ளை, மகள் என்று ஏதோ ஒரு பெயர் சொல்லி டேங்க் நாட்டை அழிக்க ஷிலிங் தேசம் முயல்கிறது. இந்த சதிவேலையை கோவில் தலைவர் செய்கிறார். இவர் ஒருங்கிணைக்கும் ஆட்கள் சிலருக்கு, மாறுபட்ட கருத்து இருந்தாலும் தற்காப்புக்கலை சக்தியை எண்ணி ஒப்புக்கொள்கிறார்கள்.


 யே ஹோங்கியு, அவளது அண்ணன் இருவருமே இந்த விவகாரத்தில் பலியாடுகள். அவளது அண்ணன். தேவையில்லாத தூண்டுதலால் பதினைந்து ஆண்டுகள் தவமிருந்து பெற்ற ஆற்றலை யுன்முவிடம் சண்டையிட்டு இழக்கிறார். யே ஹோங்கியு பலவீனமாக உள்ள காலகட்டத்தில் கோவில் தலைவரால் கூட்டு வல்லுறவு செய்யப்படுகிறாள். யேவின் அண்ணன் கூட ஒருமுறை சொல்கிறார். தாவோ என்ற பெயரில் நீ செய்வது சரியான விஷயங்களல்ல. தவறான வழியில் நடக்காதே என. ஆனால் அவளால் அதை புரிந்துகொள்ள முடிவதில்லை. இவளோடு ஒப்பிட்டால் புக் மேனியாக், பூக்களின் அரசி ஆகியோர் வெறுப்பை விட அன்பே முக்கியம் என சட்டென புரிந்துகொள்கிறார்கள். 


இந்த தொடரில் வாள் வீரர்களாக இருந்து போட்டியிட்டாலும் கூட ஒருவர் திறமை மேல் ஒருவர் வைத்திருக்கும் மதிப்பு, மரியாதையைக் காட்டியிருக்கிறார்கள். அதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பழங்குடிகளிடம் விருந்தினர்களை போற்றுவதும், பாதுகாப்பதுமான பழக்கவழக்கங்கள், துரோகம் செய்பவர்களை யோசிக்காமல் சட்டென கொல்வதைக் காட்டுகிறார்கள். இதை ஒப்பிடுகையில் டேங்க் அரண்மனையில் நடக்கும் அரசியல் சதிகள் மிகவும் கீழ்த்தரமானவை. 


இரண்டு குருக்களை கொண்டிருந்தாலும் நாயகன், தான் கற்றுக்கொண்ட கலைகளில் எதிலும் நிபுணத்துவம் பெறவில்லை. தடுமாறிக்கொண்டே இருக்கிறார். அடி வாங்கிக்கொண்டே இருக்கிறார். பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. இத்தனைக்கும் லே காரன் என்ற முன்னாள் ஆசிரியரின் ஆன்மா, நிங்க் சூவின் உடலில் இருந்தும் கூட அந்த கலையை அவரால் முழுமையாக எதிரிகளிடம் பயன்படுத்த முடியவில்லை. அப்படி காட்டியிருந்தால் கூட பார்க்க சண்டைக்காட்சிகள் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். நிறைய எபிசோடுகளில் நாயகனுக்குக் கூட காட்சிகள் இல்லை. 

  

ஜவ்வாய் இழுக்கப்பட்ட அரசியல் சதி

கோமாளிமேடை டீம் 













கருத்துகள்