பீப்பர் மினி செயலி மூலம் அனைத்து குறுஞ்செய்தி செயலிகளுக்கும் செய்தி அனுப்ப முடியும்!

 











ஆப்பிளோடு மல்லுக்கட்டும் பீப்பர்!



அண்மையில், பீப்பர் என்ற செயலி  இணையத்தில் பிரபலமானது.  இதன் சிறப்பு, இதை ஒருவர் ஆண்ட்ராய்ட் போனில், தரவிறக்கி அதன் மூலம் பிற உரையாடல் செயலிகளுக்கு செய்திகளை அனுப்ப முடியும். குறிப்பாக, ஆப்பிளின் ஐபோனில் உள்ள ஐமெசேஜ் செயலிக்கு செய்திகளை அனுப்பலாம். உலக நாடுகளில் பயன்படுத்தும் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற உரையாடல் செயலிகளுக்கு வரம்புகள் உண்டு. அதாவது, அவற்றை தரவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்கள் மட்டுமே அவர்களுக்குள் குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொள்ள முடியும், வாட்ஸ்அப்பில் இருப்பவர் டெலிகிராம் அல்லது சிக்னல் செயலியைப் பயன்படுத்துபவர்களுக்கு செய்தியை அனுப்ப, பகிர முடியாது. ஆனால் பீப்பர் செயலி மூலம் பிற உரையாடல் செயலிகளைப் பயன்படுத்துபவர்களுக்குக் கூட செய்திகளை அனுப்ப முடியும். இதுவே பீப்பரை பிரபலப்படுத்திய முக்கிய அம்சம்.


ஆப்பிள் ஐபோன் அதன் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் சமூக அந்தஸ்துக்காகவும் விரும்பப்படுகிறது. தற்போதைய சூழலில், ஆண்ட்ராய்ட் இயக்கமுறைமையைப் பயன்படுத்துபவர் அனுப்பும் செய்தி, ஐபோனுக்கு வரும்போது பச்சை நிறத்தில் காட்டப்படும். பிற ஐபோன் பயனர்கள் அனுப்பும் செய்தி நீலநிறத்தில் தெரியும். அதேபோல, ஆப்பிள் பயனர் வீடியோ கிளிப் ஒன்றை ஆண்ட்ராய்ட் பயனருக்கு அனுப்பினால் அந்த வீடியோவை இயக்கி அவர் பார்க்க முடியாது. இதற்கு ஆப்பிள் கையாளும் என்கிரிப்ஷன் நுட்பமே முக்கிய காரணம். பச்சை நிறத்தில் உள்ள செய்தியை விட நீலநிறத்தில் உள்ள செய்தியைப் படிப்பது எளிது. எதற்கு இந்த நிற பிரிவினை என சில காலமாகவே டெக் வட்டாரத்தில் விவாதங்கள் எழுந்து வந்தன. இதற்கான தீர்வாக பீப்பர் செயலி உருவாகி வந்தது.   


கனடாவைச் சேர்ந்த பொறியாளர் எரிக் மிஜிகோவ்ஸ்கி, கட்டற்ற மென்பொருளை நம்பும் நபர். இவர், 2015ஆம் ஆண்டு பெபிள் என்ற ஸ்மார்ட் வாட்சை உருவாக்கி டெக் உலகில் பலரையும் கவனிக்க வைத்தார். இந்த நிறுவனத்தை, ஃபிட்பிட் நிறுவனம் அதற்கடுத்த ஆண்டே கையகப்படுத்தி தன்னோடு இணைத்துக்கொண்டது. எரிக், 2020ஆம் ஆண்டு, பெருந்தொற்று காலகட்டத்தில் உரையாடல் செயலி ஒன்றை உருவாக்குவதற்கான சிந்தனையில் இருந்தார். எனவே, முதலீடு திரட்டி, அலுவலகம் திறந்து இருபது தொழில்நுட்ப பணியாளர்களை நியமித்தார். பிற உரையாடல் செயலிகளோடு தொடர்புகொள்ளும் வகையில் எளிமையான உரையாடல் செயலி ஒன்றை உருவாக்குவதே லட்சியம். முக்கியமாக ஆண்ட்ராய்ட் பயனர்கள், ஐபோன் பயனர்களுக்கு செய்திகளை எளிதாக அனுப்பும் ஆப்பை உருவாக்க தொடங்கினார். அதுதான் பீப்பர் செயலி. 


பீப்பர் செயலியை உருவாக்கும் முயற்சி எளிதாக இல்லை. ஏனெனில் தான் மோதுவது ஆப்பிள் என்ற பெருநிறுவனத்துடன் என்பதை எரிக் மறந்துவிடவில்லை. அப்போது, டிஸ்கார்ட் எனும் சமூக வலைதளத்தில் உள்ள ஜேம்ஸ் கில் என்ற பள்ளிச்சிறுவன் உதவிக்கு வந்தான். அவன் எழுதிய நிரல் பீப்பரின் லட்சியத்திற்கு அருகே இருந்தது. ஜேம்ஸ், ஐபோனின் ஐமெசேஜ் செயல்படும் முறையை ரீஎஞ்சினியரிங் செய்து பைத்தான் மொழியில் நிரலாக எழுதியிருந்தான். நிரலை அதற்கான சான்றோடு, நிரலாளர்கள் பயன்படுத்தும் கிட்ஹப் வலைத்தளத்திலும் வெளியிட்டான். அதைப் பார்த்து எரிக்கிற்கு பெரும் சந்தோஷம். துள்ளிக் குதித்தவர், ஜேம்ஸ் கில்லின் பெற்றோர் அனுமதியோடு அவனை பகுதி நேர ஊழியராக தனது நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக்கொண்டார். அவன் எழுதிய நிரலை மேம்படுத்தி புகைப்படம், வீடியோ அனுப்புமாறு மாற்றினார். கடந்த டிசம்பர் ஐந்தாம்தேதி பீப்பர் மினி செயலி வெளியிடப்பட்டது. இரு நாட்களில் ஒரு லட்சம் பேர்களுக்கும் மேல் செயலியை தரவிறக்கினர். இதைப் பயன்படுத்த மாதம்தோறும் 2 டாலர்கள் என  சேவைக்கட்டணம் உண்டு. 


ஆண்ட்ராய்ட் பயனர்களை தனது குறுஞ்செய்தி ஆப்பில் தனியாக பச்சை நிறத்தில் பிரித்து காட்டுவதை ஆப்பிள் கவனத்தோடு செய்கிறது. இதன் வழியாக, பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறுகிறது. அதேசமயம் ஐபோனில் வாட்ஸ்அப் போன்ற மூன்றாவது நிறுவன உரையாடல் செயலிகளைப் பயன்படுத்துவதை தடை செய்யவில்லை. இதன் வழியாக பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படாதா என ஆப்பிள் நிறுவனம்தான் பதில் கூறவேண்டும். தற்போது பீப்பர் மினியைப் பயன்படுத்துபவர், அதாவது ஆண்ட்ராய்ட் பயனர்  ஐபோனுக்கு அனுப்பும் குறுஞ்செய்திகள் தடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பீப்பர் மினி செயலி, இலவசமாக பயனர் பயன்படுத்திக்கொள்ளக்கூட அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஐபோனுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பும் செயல்பாட்டில் ஆப்பிள் நிறுவனத்தை, பீப்பர் வெல்வதற்கு வாய்ப்பு மிக குறைவு. பீப்பர் மினி செயலி, கட்டற்ற மென்பொருள் வகையில் நிரலாக வடிவமைக்கப்படுவதால் யார் வேண்டுமானாலும் அதை மேம்படுத்தி பயன்படுத்தலாம் என்பது சிறந்த அம்சம். ''நாங்கள் சிறந்த சாட்டிங் ஆப்பாக எதிர்காலத்தில் இருப்போம்'' என நம்பிக்கையுடன் பேசினார் எரிக் மிஜிகோவ்ஸ்கி.




வயர்ட் இதழின் கட்டுரையை (மார்ச்/ஏப்ரல் 2024) மூலாதாரமாக கொண்டது

கருத்துகள்