அம்மாவைக் கொன்ற அரசியல்வாதியை, போலீஸ்காரர்களை பழிவாங்க முயலும் மகனின் சட்டப்போராட்டம்!








யூ ஆர் ஆல் சரவுண்டட்

கொரிய டிராமா

இருபது எபிசோடுகள்

ராக்குட்டன் விக்கி ஆப் 



நகரில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் அடித்துக் கொல்லப்படுகிறார். அதை அங்கு வேலை செய்யும் நர்ஸ் ஒருவர் பார்த்துவிடுகிறார். காவல்துறை அவரை சாட்சி சொல்ல அழைக்கிறது. ஆனால் அவரை பணக்கார தொழிலதிபர் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டுகிறார். நர்சிற்கு கணவர் இல்லை. ஒரே ஆளாக நின்று வேலை பார்த்து மகனை வளர்க்கிறார். மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். உங்கள் உயிருக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என போலீஸ் அதிகாரி சியோ பான் சியோக் உறுதிதருகிறார். 


இதனால் அந்த நர்சம்மாவும் சாட்சி சொல்ல ஒத்துக்கொள்கிறார். ஆனால் அதற்குப் பிறகு சில நாட்களிலேயே அவர் வீட்டில் கொலையாகி கிடக்கிறார். கொலையாளி விட்டுச்சென்ற டாலர் ஒன்றைப் பற்றி நர்சின் மகன் தகவல் சொல்கிறான். ஆனால் அவனையும் கொலையாளி கொல்ல முயல்கிறான். அந்த நேரத்தில் கொலையாளி போனில் பேசும்போது, சியோ என்ற உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்த அதிகாரியின் பெயரைக் கூறுகிறான். இதைக்கேட்ட சிறுவன், நம்பிய அதிகாரியே மோசம் செய்துவிட்டதாக நொந்துபோகிறான். இவர்களை பழிவாங்குவது என முடிவெடுத்து அந்த நகரில் இருந்து காணாமல் போகிறான். இந்த விவகாரம் அந்நாளில் பரபரப்பாக பேசப்படுகிறது. பிறகு மக்கள் அதை மறந்தே போகிறார்கள். வழக்கை விசாரித்த அதிகாரி சியோ பான்சியோக்கிற்கு பெரும் களங்கம் உருவாகிறது. அவர் வழக்கு விசாரணை வரலாற்றில் குற்றவாளி யாரென தெரியாமல் போன, பிடிக்கமுடியாமல் போன முதல் வழக்கு அதுவே. 


கிம் ஜி யாங், தங்கிப்படிக்க அனாதை ஆசிரமங்களில் சேர அலைகிறான். பலரும் காவல்நிலையத்தில் தகவல் கூறவேண்டும் என கூறுகிறார்கள். பெண் நிர்வாகியாக உள்ள ஆசிரமத்தில் நிறைய தகவல்களைக் கேட்காமல் சேர்த்துக்கொள்கிறார்கள். அங்கு படிக்கிறான். அவன் படிப்பு செலவை, முகம் தெரியாத பெண் காவல்துறை அதிகாரி ஒருவரே ஏற்கிறார். படித்து டிடெக்டிவாக ஆகி வன்முறை குற்றங்களை விசாரிக்கும் மூன்றாவது குழுவில் இடம்பிடிக்கிறான். அதை வழிநடத்துவது வேறு யாருமல்ல சியோதான். இப்போது நாயகன், தன் அம்மாவை கொலை செய்த குற்றவாளிக்கு உதவி செய்த அதிகாரி சியோவை எப்படி பழிவாங்கினான் என்பதே கதை. 


நாயகன் பெயர் டாகு. இயற்பெயர் கிம் ஜி யாங். ஆனால் அதை மறைத்து டாகு என்று பெயரை மாற்றிக்கொள்கிறான். அதை தொடரின் பாதிக்கும் மேல்தான் அதிகாரி சியோவும், எதிரிகளும் கூட கண்டுபிடிக்கின்றனர். 


வன்முறை குற்றங்களை விசாரிக்கும் மூன்றாவது குழு. இதில் டாகுவோடு சேர்த்து மொத்தம் நான்குபேர். டாகு பெரிதாக யாரிடமும் நெருங்கிப் பழகுவது இல்லை. அதிலும் அதிகாரி சியோ என்றால் எப்போதும் நேருக்கு நேர் நின்று வாக்குவாதம் செய்கிறான். சில நேரங்களில் கைகலப்பும் ஆகிறது. அதிகாரி சியோ பான் சியோக் , சிறப்பாக விசாரணை செய்பவர்தான். ஆனால் அவருடைய சொந்த வாழ்க்கை தொழிலால் நசிந்துபோகிறது. அவரது மனைவியும் காவல்துறை அதிகாரிதான். தொலைந்துபோன நபர்களை தேடும் பிரிவில் இருக்கிறார். சியோவை அவர் விவாகரத்து செய்து தனியாக வாழ்கிறார். அதற்கு காரணம், இருவருக்கும் பிறந்த சிறுவன் அடையாளம் தெரியாத காரில் அடிபட்டு இறந்துபோவதுதான். 


அன்றைய நாள், சியோ அவனை காரில் கூட்டிவரவேண்டிய முறை. ஆனால் வேலை காரணமாக மகனை பள்ளியில் இருந்து கூட்டிவர தவறிவிட,மகன் சாலையில் நடந்துவரும்போது விபத்தில் சிக்கி இறந்துபோகிறான். சியோவின் மகன் இறந்துபோன அன்றுதான் டாகுவைக் கொல்லும் முயற்சியும் நடக்கிறது. அதிகாரி சியோ இதனால் மனம் தளர்ந்துபோகிறார். 


அவரது குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென தனி வாழ்க்கைக் கதை உள்ளது. அதை கதையின் போக்கில் மெல்ல சொல்கிறார்கள். எல்லாமே சுவாரசியமானதுதான். இதில் மிகவும் வேதனையானது நாயகன் டாகுவின் கதைதான். அரசியல்வாதி யூன் பாவின் சுயநலத்திற்காக அவனது அம்மா உயிர் பறிபோகிறது. அதை அவன் புரிந்துகொண்டு அவரை எப்படி கைது செய்து சிறையில் அடைக்கிறான் என்பதே இறுதி எபிசோட்டின் மையம். 


கொரியாவில் வழக்குரைஞர்களுக்கு அதிக அதிகாரம் உள்ளது. அவர்களின் அடிமைகள் போலவே காவல்துறை அதிகாரிகள் நடக்கவேண்டியுள்ளது. அப்படி நடக்காதவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். வழக்குரைஞர்கள், பணக்காரர்களிடம் காசு வாங்கிக்கொண்டு அவர்களின் மகன் செய்யும் தவறுகளைக் கூட வழக்கு பதியாமல் விடுகிறார்கள். இந்த இடத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கும் வழக்குரைஞர்களுக்கும் முட்டிக்கொள்கிறது.


 குறிப்பாக அதிகாரி சியோ, வழக்குரைஞர் ஹான் என இருவருமே எதிரெதிராக நிற்கிறார்கள். ஒருகட்டத்தில் சியோ கோபம் வந்து அடிக்க ஹானுக்கு தலையில் பதினேழு தையல் போடுகிறார்கள். காவல்துறை அதிகாரிகள் ஆதாரங்களைக் கொடுத்தால் வழக்குரைஞர்கள் பிடியாணை தரவேண்டும். ஆனால் ஊழல் பேர்வழிகளான அவர்கள் அதை வாய்ப்பாக பயன்படுத்தி பணக்கார வாரிசுகளுடன் குற்றவாளிகளுடன் டீல் பேசி பணம் சம்பாதிக்கிறார்கள். இதை மாற்ற காவல்துறை தலைவர் காங் முயல்கிறார். ஆனால் அதற்கான மசோதா நினைத்தபடி வெற்றிபெறுவதில்லை. மசோதா வெற்றி பெற யூன் பா என்ற அரசியல்வாதியை நம்பியிருக்கிறார். இவரோ, காங்கை பல்வேறு குற்றங்களை செய்ய பயன்படுத்திக்கொள்கிறார். 


டாகு, அதிகாரி சியோ பான் சியோக்கின் கீழ் வேலை செய்கிறார். தனது அம்மா பற்றிய வழக்கை ரகசியமாக விசாரிக்கிறான். முதலில், அதற்கென அதிகாரி சியோவின் வீட்டில் கேமரா ஒன்றைப் பொருத்துகிறார். அவரது போனை டேப் செய்கிறான். முழுமையாக அவரைக் கண்காணித்து அதன் வழியாக குற்றவாளியை அடையாளம் காண முயல்கிறான். டாகுவின் கல்விக்காக காவல்துறை தலைவர் காங் எதற்கு பண உதவி செய்கிறார், அரசியல்வாதி யூன் பே எதற்கு டாகுவைக் கொல்லத் துடிக்கிறார், டிடெக்டிவ் சியோ என்ற பெயர் உண்மையில் யாரைக் குறிக்கிறது என்பதெல்லாம் இறுதியாக சொல்கிறார்கள். சீன தொடர் போல வளவளவென இழுக்கவில்லை. இருபது எபிசோடுகளில் தொடரை முடித்துவிட்டார்கள். 


டாகுவை இசோ காதலிக்கிறார். இசோ மூத்தவர், டாகு இளையவன். இந்த வேறுபாடு அல்லது வேறு விஷயமா என்று தெரியவில்லை. இருவரும் முத்தம் கொடுக்கும் காட்சி வரும்போது நாயகி தர்ம சங்கடத்தில் இருப்பது போலவே முகத்தை வைத்துக்கொள்கிறார். நான்கு பேரில் நாயகன்தான் புத்திசாலி. சமயோசித ஆள். ஆனால் அவரே நண்பன் கத்திக்குத்து பட்டு கிடக்க, உள்ளே சென்று போனை எடுத்து வந்தவர் ஆம்புலன்சைக் கூப்பிடாமல் உதவிக்கு பிறரை அழைக்கிறார். அவரிடம்தான் போனே இருக்கிறதே, அழைத்து தகவல் சொல்லலாம்தானே?


அதிகாரி சியோவின் குழந்தை இறந்துபோன சமயம், அவர் டாகுவின் அம்மா பற்றிய விசாரணையில் இருக்கிறார். இந்த தகவல் தனது மனைவிக்கு தெரிந்தால், அவள் டாகுவை திட்டுவாள் என சியோ பயப்படுகிறார். ஆனால் இந்த உண்மை தெரியவரும்போது அவர் இயல்பாக எடுத்துக்கொள்கிறார். பெரிதாக அதை நினைப்பதில்லை. கங்ணம் காவல்நிலையத்திற்கு சியோவின் மனைவி வருவதே, விவாகரத்து செய்த கணவனுடன் மீண்டும் சேருவதற்குத்தானோ என்று தோன்றுகிறது. அந்தளவுக்கு ஒருவருக்கொருவர் இணக்கம் இருக்கிறது. காதலில் முந்துவது மனைவி அல்ல கணவனான சியோதான். 


உண்மையில் காவல்துறை தலைவர் காங்கின் கதையும் வருத்தம் தரக்கூடியதுதான். அவர் நன்றாக நடித்திருக்கிறார். அந்த பாத்திரம் நிறைய இடங்களில் உணர்ச்சிகளை அடக்கியே நடிக்கவேண்டிய நிர்பந்தம். அதையும் சிறப்பாக புரிந்துகொண்டு நடிகை பிரதிபலித்திருக்கிறார். நல்லது நடக்க கெட்டதை செய்யும் பாத்திரம். கெட்டதைச் செய்வதன் மூலம் நல்ல விஷயங்களை அடையலாம் என நினைக்கிறார். ஆனால் அப்படி நடப்பதில்லை. அவருக்கு வாழ்க்கையில் கிடைத்த பெரிய பொக்கிஷம். டாகுவின் அன்புதான். திருமணமாகாத அவருக்கு வளர்ப்பு பிள்ளை போல பெறாத பிள்ளை போல அன்பை டாகு கொடுக்கிறான். அவன், காங்கை சந்தேகப்படும்போதுதான் அவர் பெரும் பதற்றமடைகிறார். சங்கடப்படுகிறார். 


நர்சம்மா சென்று சாட்சி கூறவேண்டிய வழக்கு என்னவானது என கடைசிவரை தெரியவில்லை. இறுதியாக நர்சம்மாவே கொலையாகிறார். அந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். ஓகே. ஆனால் பள்ளிச்சிறுமி வழக்கில் என்னவானது என்ற உண்மை தெரியவரவில்லை. 


புகார் வருகிறது. காவல்துறை விசாரிக்கிறது. தகவல் சேகரிக்கிறது. ஆதாரங்களை தேடுகிறது. கிடைத்த விஷயங்களை வழக்குரைஞருக்கு அனுப்பிவைக்கிறது. அடுத்த வழக்குக்கு செல்கிறது. நீதிமன்றம் தொடர்பான காட்சிகளுக்கு செல்லவே இல்லை. 


இந்த தொடரில் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் படும் சங்கடங்களை, வலியை, வேதனையை பதிவுசெய்திருக்கிறார்கள். 


கோமாளிமேடை டீம்

You're All Surrounded (Korean: 너희들은 포위됐다; Hanja: 너희들은 包圍됐다; RR: Neohuideureun Powidwaetda) is a 2014 South Korean television series starring Lee Seung-gi, Cha Seung-won, Go Ara, Ahn Jae-hyun, Park Jung-min, Oh Yoon-ah, and Sung Ji-ru. Wikipedia

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்