சீனாவின் தொன்மைக்காலத்திற்கு சென்று மருத்துவராகி சாதனை புரியும் நவீனகால மருத்துவ மாணவன்!

 











இன்கார்னேடட் லெஜண்டரி சர்ஜன் 


சீன காமிக்ஸ் 


104 அத்தியாயங்கள் 



நவீன உலகில் மருத்துவராக உள்ளவர், தொன்மையான சீனாவின் காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார். அதாவது அவரது ஆன்மா செல்கிறது. அங்கு குவா என்ற வாழ்ந்து கெட்ட குடும்ப கடைசிப்பிள்ளையின் உடலில் புகுகிறது. 


குவாபு, வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றவர், ஊருக்கு வந்திருப்பார். அந்த நேரத்தில் கொள்ளையர்கள் அங்கு புகுந்து தாக்கி கிராமத்தினரை கொலை செய்து சென்றதில் குவாபு என்ற கடைசிப்பிள்ளையும் நெஞ்சில் வெட்டுபட்டு இறந்துபோயிருப்பார்.  படித்துவிட்டு வந்து அரசு தேர்வு எழுதினால் ஒரு வேலை கிடைக்கும் குவா குடும்பம் வறுமையில் வாடாது என்பதே அவர்களின் ஆசை. 


வழி வழியாக அரசு அதிகாரிகளாக வாழ்ந்த குடும்பம், இப்போது வறுமையில் தத்தளிக்கிறது. சாப்பிட சோறே இல்லாத கொடுமை எல்லாம் கிடையாது. உணவில் இறைச்சி வாங்கி சேர்க்க முடியாத வறுமை. குவாபுக்கு இரண்டு அண்ணன்கள். ஒருவர், அரசு தேர்வை எழுதி லஞ்சம் கொடுத்து வேலைக்கு போகமாட்டேன் என உறுதியாக இருக்கிறார். அடுத்தவர், தற்காப்புக் கலை கற்று ராணுவத்தில் சேரவிருக்கிறார். மூன்றாவதாக உள்ள குவாபு, புதிய ஆன்மா காரணமாக மருத்துவ அறிவுடன் இருக்கிறார். தனது அறிவைப் பயன்படுத்தி உயிர் வந்தவுடன் அந்த கிராமத்தில் உள்ளவர்களை உடனே சிகிச்சை செய்து காப்பாற்றுகிறார். பலரும் வயிறு, நெஞ்சு கிழிந்து, கை, கால் உடைந்து கிடக்கிறார்கள். 


அவர்கள் அனைவருக்கும் முடிந்தவரை கிடைக்கும் கருவிகளை வைத்து கிழிந்த உடல் உறுப்புகளை தைத்து காப்பாற்றுகிறார். அதுதான் குவாபுவுக்கு முதல் பெருமையாக அமைகிறது. வீட்டில் அண்ணன்களுக்கு வேலை இல்லை. அதேசமயம் அம்மாவுக்கு கல்லீரலில் பிரச்னை இருக்கிறது. அதை அறுவை சிகிச்சை செய்ய குவாபு நினைத்தாலும் அண்ணன்கள் அதை அனுமதிப்பதில்லை. தம்பி மருத்துவம் எப்படி பார்ப்பான், அவன் அரசு அதிகாரி படிப்பைத்தானே படித்தான் என அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். 


குவாபு வாழ்வது சீனாவின் மூன்று அரசுகள் ஆண்டுகொண்டிருந்த காலகட்டம். அந்த காலகட்டத்தில் காலரா, டெட்டனஸ், புற்றுநோய், குடல்வால் ஆகியவற்றுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என தெரியாது. அதாவது, அறுவை சிகிச்சையை செய்து நோயாளியை பிழைக்க வைப்பது அவர்கள் அறியாத ஒன்று. ஆனால் குவாபு, அறுவை சிகிச்சைக்கான கருவிகளை வரைந்து கொடுத்து, கொல்லரிடம் செய்யச் சொல்கிறான். இதற்கான பணத்தை சகோதரர்களிடம் வாங்கிக்கொள்கிறான். விபச்சாரம் நடக்கும் இடத்தில் வீரருக்கு கன்னத்தில் வாள் வெட்டு விழ அதற்கு அக்குபஞ்சரில் மருத்துவர் போங் சிகிச்சை செய்கிறார். ஆனாலும் ரத்தம் முழுமையாக நிற்கவில்லை. நரம்பு வெட்டப்பட்டதை போங்கிற்கு எப்படி தைப்பது என்று தெரியவில்லை. அதை குவாபு சவாலாக ஏற்று செய்கிறான். அதைப் பார்த்து போங் அதிர்ச்சியாகிறார். தனக்கு ரத்தக்குழாய்களை தைப்பது பற்றி சொல்லிக்கொடுக்க கேட்கிறார். அவரிடம் குவாபு தனக்கு அக்குபஞ்சர் பற்றி சொல்லிக் கொடுக்க கேட்கிறான். இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். 


போங், குவாபு அருகில் இருந்து ரத்தக்குழாய்களை எப்படி தைக்கிறான் என்று கவனிக்கிறார். பின்னாளில் இன்னொரு மருத்துவரும் குவாபுடன் சேர்ந்துகொள்கிறார். அவருக்கு குவாபு எப்படி நின்றுபோன இதயத்தை இயங்கச் செய்தான் என அறிய ஆசைப்படுகிறார். இதற்காக அவர் காசு கொடுத்து கற்கவும் தயாராக இருக்கிறார். அந்த பணத்தை குவாபு வாங்கிக்கொள்கிறான். பிறகு அவனது குடும்பச் செலவுக்கு என்ன செய்வது? 


அதேநேரம் அவன் சேரிப்பகுதியில் போ என்ற சிறுவனின் உதவியால் காலியாக உள்ள வீட்டை மருத்துவமனையாக மாற்றிக்கொள்கிறான். அங்குள்ள ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கிறான். காசு இருந்தால் காசு, இல்லையா வேறு ஏதாவது மருத்துவ மூலிகை என வாங்கிக்கொள்கிறான். பெரும்பாலும் இலவசம்தான். சாப்பிடவே அரிசி இல்லாதபோது அவர்களிடம் மருத்துவத்திற்கு கொடுக்க என்ன இருக்கும்? 


குவாபு தன்னிடம் உள்ள காசைக் கூட எடுத்து கொடுத்து உதவுகிறான். சிறுவன் போவை தன்னுடைய உதவியாளராக சம்பளம் கொடுத்து வைத்துக்கொள்கிறான். அவனது அப்பா கால் உடைந்து கிடந்தபோது அதை குவாபுதான் சரி செய்கிறான். அதைப் பார்த்து சிறுவன் போ, தானும் குவாபு போல மக்களுக்கு உதவி செய்யவேண்டுமென உறுதி எடுத்துக்கொள்கிறான். பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவன் என்பதால், குவாபு என்றாலே அனைவருக்கும் அடையாளம் தெரியும் அளவுக்கு புகழ் பெறுகிறான். 


இந்த நேரத்தில்தான் போங்கை ராணுவ வீரர்கள் சிகிச்சைக்கென அழைக்கிறார்கள். அவர்களுடன் குவாபு செல்கிறான். உயிருக்கு போராடும் வீரர்கள் உள்ள இடத்திற்கு சென்று உதவுகிறான். இரும்பு கருவிகளால் தாக்கப்பட்டு வயிறு கிழிந்தவர்களை அங்கேயே அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றுகிறான். அது போங், இன்னொரு மருத்துவர் என இருவருக்குமே அதிர்ச்சியாகிறது. அப்போது ராணுவ அதிகாரியொருவர் வந்தாலும் அவருக்கு குவாபு உடனே சிகிச்சை அளிக்கவில்லை. உயிருக்கு ஆபத்தில்லை எனவே மற்ற வீரர்களைக் கவனிப்போம் என்கிறான். அவனது இந்த குணமே நண்பர்களையும் பகைவர்களையும் உருவாக்கித் தருகிறது. ஆனால் குவாபுவுக்கு நோயாளிகளை குணப்படுத்துவதே முக்கியம். அவ்வளவுதான். அதில் அவனுக்கு திருப்தி கிடைக்கிறது. காசு, பணம், செல்வாக்கு, அதிகாரம் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. 


சோ என்ற ராணுவ அதிகாரியின் அண்ணனுக்கு டெட்டனஸ் பாதிப்பு ஏற்பட்டு அழுகிய காலை வெட்டி எடுக்கிறார்கள். ஆனாலும், நோய்க்கிருமி பரவி அவர் இறந்துபோகிறார். அவரைக் காப்பாற்ற குவாபு முயல்கிறான். ஆனால் நோயாளியின் அம்மா அதை அனுமதிப்பதில்லை. அதற்கு அவனது பதினாறு வயது என்பதும் ஒரு காரணம். மயக்கமருந்தை கஞ்சா செடியில் இருந்து எதேச்சையாக கண்டுபிடிக்கிறான். அதை நோயாளிகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறான். இதனால் அறுவைசிகிச்சை வலி சற்று குறைகிறது. அதேசமயம், பென்சிலினை ராணுவ வீரர்களுக்கு பல்வேறு விதமாக தயாரித்துக் கொடுத்து அவர்களது உயிரைக் காப்பாற்றுகிறான். சோ என்ற அதிகாரியே ஆச்சரியப்பட்டு போகிறார். ஆனாலும் அவருக்கு ஈகோ இருப்பதால் தொடக்கத்தில் தனக்கு வந்த டெட்டனஸை வெளியே கூற மாட்டேன்கிறார். பிறகு அவருக்கும் டெட்டனஸ் நோயை அறுவை சிகிச்சை செய்து சரி செய்கிறான். இந்த உதவி மூலம், அவனுக்கு சிறந்த கொல்லர் மூலம் அறுவை சிகிச்சை கருவிகள் கிடைக்கின்றன. 


கொல்லர் பியோன் புகழ்பெற்ற தொழிலாளி. பெரிய ஆட்களுக்கு கருவிகளை செய்து கொடுப்பவர். அவருக்கு குவாபு என்ற மருத்துவர் செய்யக்கூறும் கருவிகள் புதுமையானதாக தெரிகின்றன. அவரை நேரில் பார்த்தபோது, தன்னுடைய நண்பர்களுக்கு நீண்டகால நோய் உள்ளது. அதை சரிசெய்யக்கோருகிறார். பதிலுக்கு குவாபு, சிகிச்சைக்கு காசு வேண்டாம். கருவிகளை செய்துகொடுங்கள் என்கிறான். பியோனும் மக்களுக்கு இலவச வைத்தியம் பார்க்கும் மருத்துவனுக்கு உதவுவோம் என கருவிகளை செய்து கொடுக்கிறார் கூடவே, தனது அன்புப் பரிசாக இலகுரக வாள் ஒன்றையும் வழங்குகிறார். குவாபுவின் சகோதரர்களுக்கே தனது தம்பியின் செல்வாக்கு புதுமையாக இருக்கிறது. 


சைபிளிஸ் எனும் பால்வினை நோயையும் பென்சிலின் மூலம் குவாபு தீர்க்கிறான். இதனால் சியோசோல் என்ற விலைமாதுவின் நட்பு கிடைக்கிறது. அவள் ஹாவோ செக்டைச் சேர்ந்தவள். ஏறத்தாழ விலைமாதுக்கள் எல்லோருமே மருத்துவர் குவாபுவை மதிக்கிறார்கள். ஏனெனில் பிறர் விலக்கி ஒதுக்கும் பெண்களை அவன், வேறுபாடு இல்லாமல் சிகிச்சை அளித்து காப்பாற்றுவதோடு, தொடர்ச்சியாக நேரம் கிடைக்கும்போது வந்து அவர்களின் நோய் நிலையையும் கண்காணிக்கிறான். 


அவள் செலவாக்கு மூலம், ராணுவ அதிகாரி சோ எப்படி கொள்ளைக்காரர்களிடம் மாட்டிக்கொ்ண்டார், அவர் பற்றிய தகவல்கள் வெளியே கசிந்தன என்பதைக் கூறுகிறாள். அதை குவாபு சோவுக்கு தெரிவிக்கிறான். அவருக்கு அப்போதுதான் ஊழல் அரசியல்வாதிகள் மீது சந்தேகம் வருகிறது. இவருக்கு மேல்நிலையில் உள்ள அதிகாரி கோ. அவருக்கு பால்வினைநோய் உள்ளது. விலைமாதுவை குவாபு குணப்படுத்திய செய்தி தெரிந்தவுடன் அவர், நேராக குதிரைவண்டி பூட்டி சேரிக்கு குவாபுவை சந்திக்க வந்துவிடுகிறார். குவாபுவுக்கும் கோவுக்கு இடையில் வாக்குவாதம் நடக்கிறது. ஆனாலும் குவாபுவின் திறமையைப் பார்த்து கோ மெல்ல கோபத்தை கைவிடுகிறார். சிலமணிநேரம் காத்திருந்து மருத்துவம் செய்துகொள்கிறார். சிகிச்சை முடிந்தபிறகு, குவாபு, அவனது கிராமத்தை அழிக்கவே நினைக்கிறார். ஆனால் குவாபு ஒரு சிறுவனுக்கு வயிற்றை அறுத்து செய்யும் அறுவை சிகிச்சையை பார்ப்பவர் மனம் மாறிவிடுகிறார். பால்வினைநோய், புரட்சிக்காரர்களின் தாக்குதல் இரண்டிலும் குவாபு கோவை காப்பாற்றுகிறான். இதனால் அவர் அவனுக்கு நன்றிக்கடன்பட்டவராக மாறுகிறார். 


ஒருமுறை பட்டினி கிடக்கும் பெண்மணியைப் பார்த்தபிறகு, சேரி மக்களுக்கு தானியங்கள் இருந்தால் கொடுக்கமுடியுமா என்ற குவாபு கேட்டவுடன் தாராளமாக என்று கூறி அக்கோரிக்கையை நிறைவேற்றுகிறார். குவாபுவின் மருத்துவ சிகிச்சை அவரை அந்தளவு கவர்ந்துவிடுகிறது. அவனது புகழ் மெல்ல பல்வேறு இடங்களில் பரவுகிறது. அதேநேரம் ராணுவ வீரர்களைக் கொலை செய்ய தைபுன் கல்ட் எனும் இனக்குழு முயல்கிறது. இந்த இனக்குழுவைச் சேரந்தவர்கள் ராணுவ அதிகாரி சோவைக் கொல்ல முயல்கின்றனர். ஆனால் குவாபு அவரைக் காப்பாற்றியதால், கோபம் கொள்கிறார்கள். குவாபைக் கொல்லவேண்டும் என முடிவெடுக்கிறார்கள். அந்த முயற்சிகளில் குவாபு அரும்பாடுபட்டு தப்பிக்கிறான். தன்னைக் கொல்ல முயல்பவர்களைப் பற்றி தெரிந்துகொள்கிறான். 


குவா பாரம்பரியமாக அரசு வேலையில் இருப்பவர்களைக் கொண்ட குடும்பம். குவாபுவின் தந்தை இறந்தபிறகு குடும்பம் மெல்ல பெருமை, செல்வம், வலிமை, அதிகாரம் என அனைத்தையும் இழந்துவிடுகிறது. குவாபுவின் மருத்துவத் திறமை மூலமாக மெல்ல அனைவருக்கும் அந்த குடும்பத்தின் பெயர் வெளித்தெரிகிறது. மருத்துவக் கடவுள் குவாபு என இருபது வயதிற்குள்ளாகவே பெயர் பெற்றுவிடுகிறான். 


நவீன உலகில் மருத்துவராக உள்ள குவாபுவின் கதை சற்று சோகமானது. அவனை சீனத்தின் தொன்மைக் காலத்திற்குள் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது போலவே இருக்கும். பணம் என்பதை அடைவதை பெரிதாக நினைக்கமாட்டான். அவனிடம் மருத்துவ சிகிச்சை பெற்றவர்கள் கொடுத்தால் வாங்கிக்கொள்வான். கொடுக்கவில்லையா சரி பரவாயில்லை என நகர்ந்துவிடுகிறான். 


பணத்தின் மீது குவாபுக்கு ஆசை இல்லை என்பதில்லை. அதை உறுதியான விதியாக அவன் கேட்பதில்லை. உதவி அல்லது பணம் என கிடைக்கிறது. நிறைய இடங்களில் அவனது மருத்துவ அறிவைப் பார்த்து தலைமை மருத்துவர் பதவியைக் கூட அளிக்க நினைக்கிறார்கள். ஆனால் அதை மறுத்துவிடுகிறான். நாடோடி மருத்துவராக இருந்தால் நோயாளிகளை குணப்படுத்தலாம் என கண்ணியமாக கூறி மறுத்துவிடுகிறான். அவனது இந்த முடிவு காரணமாக காலரா காரணமாக பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களைக் காப்பாற்றுகிறான். அந்த காட்சிகளை சிறப்பாக சித்திரித்திருக்கிறார்கள். 


மருத்துவம் சார்ந்த காமிக்ஸ். வாசிக்க சிறப்பாக உள்ளது. 


கோமாளிமேடை டீம் 




  







கருத்துகள்